Month: ஜூலை 2009

கலைஞரின் பஞ்ச்

கலைஞர் முதல் முறை முதலமைச்சராகப் பதவி ஏற்றிருந்த நேரம்.

எதிர்க்கட்சித் தலைவர் திரு.பி.ஜி.கருத்திருமன் சட்டசபையில் கேட்டார்.

“நீங்கள் நாடார் சமூகத்தினருக்கு உதவி செய்வதில்லை என்கிற குற்றச்சாட்டுக்கு என்ன பதில் சொல்கிறீர்கள்?”

இக்கட்டான இந்தக் கேள்விக்கு கலைஞர் சொன்ன பதில் கருத்திருமன் உள்பட எல்லாரையும் சிரிக்க வைத்தது.

“என்னை நாடியோர்க்கு எல்லா உதவியும் செய்வேன் என்று சொன்னேன். அதற்கு அர்த்தம் நாடார்க்கு செய்ய மாட்டேன் என்பதல்ல”

சிவபெருமானும் சாலை மறியலும்

பெங்களூர் – சென்னை கட்டணச் சாலையில் பள்ளிகொண்டா என்று ஒரு இடம் வரும். பிரதான சாலையிலிருந்து இடப்புறம் திரும்பும் சாலையில் ஒரு பர்லாங் தூரத்தில் இருக்கிறது அந்தக் கோயில்.

“மார்க்க பந்தீஸ்வரர் கோயில், வா பார்க்கலாம்” என்றார்கள்.

“மார்க்கத்தை பந்த் பண்ணாமல் தள்ளித்தானே இருக்கிறது?” என்றேன்.

“மார்க்க பந்து என்றால் வழித் துணைன்னு அர்த்தம்”

வழித்துணை ஆயிரம் வருஷமாக இருந்தாலும் வழியை இப்போதுதான் அமைத்திருக்கிறார்கள்!

எல்லா சிவன் கோயிலும் ஒரே மாதிரிதான் இருக்கிறது. எல்லாமே லிங்கம்தானே! பெருமாள் என்றால் நின்றான்,நடந்தான்,கிடந்தான் என்று வெரைட்டி வெரைட்டியாக கலக்குகிறார். அவர் சிவன் மாதிரி பித்தன் இல்லை-காசுக்கார மனுஷன். தங்கமும் வைரமுமாக ஜொலிப்பார்.

மார்க்க பந்த் ஈஸ்வரர் கோயிலில் பிரகாரத்தில் சில திருவாசகப் பாசுரங்கள் எழுதப் பட்டிருந்தன.

திருவாசகத்துக்கு உருகாதார் ஒருவாசகத்துக்கும் உருகார் என்பார்கள். இசைஞானி வேறு அதில் கவரப்பட்டு ஒரு ஆல்பம் வெளியிட்டிருக்கிறார். படித்துத்தான் பார்ப்போமே என்று பக்கத்தில் போனேன்.

அங்கே எழுதியிருந்த பாசுரத்தை பிசகில்லாமல் வாசித்து விட வேண்டும் என்று கஜ கரணம் போட்டுப் பார்த்தேன்.

ம்ம்ம் ஹூம்..

நீங்கள் முயன்று பாருங்கள்.

பிரிவறியாவன்பர் நின்னருட்பெய் கழற்றாநினைக்கீழ்
மறிவரியாச்செல்வம் வந்துபெற்றாருன்னை வந்திப்பதோர்
நெறியறியேநின்னை யேயறியே னின்னையேயறியு
மறிவறியேனுடை யாயடியேனுன் னடைக்கலமே

அம்மாடி, இதுதான் காதலா!

இந்திய விடலைக் காதல் கிடைக்கலைங்க!

இந்திய விடலைக் காதல் கிடைக்கலைங்க!

காதல் பற்றி நான் எழுதியிருந்த பக்கத்துக்கு நிறைய பாராட்டுக்கள்,சில எதிர்ப்புக்கள்,சில விவாதத்துக்குரிய காமெண்ட்கள்.

விவரம் புரியாத வயசில் வருகிற காதல்(?) கள் எத்தனை வருஷமானாலும் மறக்க முடியாதவை.

கொஞ்சம் யோசியுங்கள்.

ஒன்பதாம் கிளாஸ் படிக்கும் பொது நீங்கள் சைட் அடித்த உஷா/பிரேமா/கீதா/….. அல்லது யாரோ…

அவள் இன்னும் உங்கள் மனசில் பசுமையாக இருக்கிறாளா இல்லையா?

பரவாயில்லை, சொல்லுங்கள், உங்கள் மனைவியிடம் சொல்ல மாட்டேன்.

என்னுடைய விடலைக் காதல் நினைவுகளை எழுதியிருக்கிறேன்.

கீழே இருக்கும் கோப்பை படித்து விட்டு உங்கள் கருத்துக்களை சொல்லுங்கள்…

Ammadi Idhuthan Kadhala

வயாகராவுக்கு ஒரு புது உபயோகம்

எழுபத்தைந்து வயதான ஒரு பெண்மணி ஒரு மருந்துக் கடையில் வயாகரா வாங்கப் போனார்.

கடைக்காரருக்கு ஆச்சரியம் தாங்கவில்லை.

“மேடம், வயாகரா யாருக்காக வாங்குகிறீர்கள்? என்று கேட்டார்.

“என் கணவருக்குத்தான்”

“மேடம், நீங்க கோபப்படாம இருந்தா ஒரு கேள்வி கேட்க ஆர்வமாயிருக்கிறேன்”

“கேளுங்க”

“உங்களுக்கே எழுபது வயசுக்கு மேலே ஆச்சு. உங்க கணவருக்கு இன்னும் அதிகம் இருக்கும். இந்த வயசிலே வயாகரா வாங்கி…”

“புரியுது. என் கணவர் ராத்திரி தூங்கும் போது புரண்டு கட்டிலிலிருந்து விழுந்து விடுகிறார். அதைத் தடுக்கத்தான் இது”

காதலிக்கப் போகிறீர்களா? வெய்ட்…

ம்ம்ம் ஹூம் அப்டிப் பாக்காதே

ம்ம்ம் ஹூம் அப்டிப் பாக்காதே

ஒன்று : காதலிக்காதீர்கள். அது நேர விரயம்

இரண்டு : ஒருவேளை காதலிக்கத் தொடங்கி விட்டால் அதற்காக எதையும் தியாகம் செய்யாதீர்கள்

மூன்று : காதல்தான் வெற்றி. கல்யாணம் தோல்வி.

நான்கு : காதலிக்கிறவர் உங்களிடம் எதையுமே மறைப்பதில்லை என்று நினைத்து ஏமாறாதீர்கள்.(மறைக்க வேண்டியதை மறைக்காமல் இருக்கிற எல்லாரும், மறைக்கக் கூடாததை மறைக்காதவர்கள் அல்ல)

ஐந்து : நீங்கள் காதலிக்கிறவரிடம் எதையுமே மறைக்கக் கூடாது என்றெண்ணி ஏமாற்றிக் கொள்ளாதீர்கள்.

ஆறு : காதல் தெய்வீகமானதோ, புனிதமானதோ அல்ல. ஒரு கேளிக்கை. அவ்வளவுதான்.

ஏழு : காமமும் காதலும் வெவ்வேறு அல்ல. காதல் பொட்டேன்ஷியல் எனர்ஜி காமம் கைனடிக். சட்டியில் இருப்பதுதான் அகப்பையில் வரும்.

எட்டு : நெருக்கமாகப் பழகும் ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையே பரிசுத்தமான நட்பைத் தவிர வேறொன்றுமில்லை என்பது மாதிரி உலக ஏமாற்று வேறே கிடையாது.

ஒன்பது : காதலர்கள் செத்தால் மட்டுமே காதல் வாழும். காதலர்கள் வாழ்ந்தால் காதல் செத்துப் போகும்.

பத்து : காதலித்துக் கல்யாணம் செய்த எல்லாருக்குமே இரண்டாவது காதல் வரும் (சில சமயம் மூன்றாவது கூட!)

ஷாரூக்கானின் ரூ.136 கோடி வீடு

ஒரு கோடி என்றாலே தெருக்கோடி வரை அதிர்கிற மாதிரி அலறுவோம் நீங்களும் நானும்.

ரூ.136 கோடிக்கு (20 மில்லியன் யூரோ என்றால் அத்தனைதானே? நான் கொஞ்சம் கணக்கிலே வீக்குங்க) ஷா ருக் கான் லண்டனில் வீடு வாங்கி இருக்கிறாராம்!

பார்க்க : ஹிந்து 27-07-09 கடைசி பக்கம்.

அதுவும் மத்திய லண்டனில் இருக்கும் பார்க் லேன் ஏரியாவில்!

ஹூம்.. நானும் படப்பையிலே ஒரு கிரவுண்டு வளைச்சிடனும்ன்னு ரொம்ப நாளா பாக்கறேன். எங்கே..

அடகு வைக்க அண்டர்வேர் தவிர்த்து ஒண்ணுமே இல்லைங்க.

வயசுக் கோளாறு

தொண்ணூறு வயசைக் கடந்த மூன்று தாத்தாக்கள் பேசிக் கொண்டிருந்தார்கள்.

“கண்ணு சரியாத் தெரியுது, காது கேக்குது.. அதெல்லாம் ஒக்கே.ஒன் பாத் ரூம் போறது பெரிய டார்ச்சரா இருக்கு.” என்றார் முதல் தாத்தா.

“எனக்கும் மத்ததெல்லாம் பிரச்சினை இல்லே. டூ பாத ரூம் போகவே முடியல்லே” என்றார் ரெண்டாவது தாத்தா.

“எனக்கு காலைலே அஞ்சு மணிக்கே எந்தப் பிரச்சினையும் இல்லாம சுகமா ஒன் பாத் ரூம்,டூ பாத் ரூம் ரெண்டும் போய்டுது.” என்றார் மூன்றாவது தாத்தா.

“பின்னே உனக்கு என்னதான் பிரச்சினை?”

“எட்டரை மணி வரைக்கும் படுக்கைலேர்ந்து எழுந்திரிக்க முடியல்லே”

கண்ணதாசனின் கிராஸ் கம்யூனிகேஷன்

அப்போது கவிஞர் கண்ணதாசன் ஒரு தி.மு.க. அனுதாபி.

பெருந்தலைவர் காமராஜின் கொள்கைகளிலும்,நடவடிக்கைகளிலும் கவரப் பட்டு அவருடைய அணிக்கு மாற ஆசைப் பட்டார். எப்படிச் சொல்வது?

பட்டணத்தில் பூதம் என்கிற படத்துக்கு ஒரு பாட்டு எழுத வேண்டியிருந்தது. அதன் பல்லவியை இப்படி எழுதினார் :

அந்த சிவகாமி மகனிடம் சேதி சொல்லடி-என்னை
சேரும் நாள் பார்க்கச் சொல்லடி

(திரு.காமராஜ் அவர்களின் தாயார் பெயர் – சிவகாமி)

அதற்கப்புறம், அவர் திரு.காமராஜின் அணிக்கு வந்த பிறகு, பழைய அணியின் திரு. அண்ணாதுரை சுகவீனம் அடைந்தார். அமெரிக்காவுக்கு சிகிச்சைக்கு சென்று திரும்பிய அவரை நலம் விசாரித்தாக வேண்டும். எப்படி?

தில்லானா மோகனாம்பாள் படத்துக்கு ஒரு பாட்டு.

நலந்தானா… நலந்தானா..உடலும் உள்ளமும் நலந்தானா?

இந்த கம்யூனிகேஷன் வந்து சேர்ந்து விட்டது என்பதை திரு.அண்ணாதுரை எப்படி அங்கீகரித்தார் தெரியுமா?

இந்தப் பாட்டு வெளியான அடுத்த வாரம் ஆனந்த விகடன் பேட்டிக்கு அவர் புகைப் படத்துக்கு தந்த போஸில் நாதஸ்வரம் வாசிப்பது மாதிரி கையை வைத்துக் கொண்டு மந்தகாசமாக ஒரு சிரிப்பு சிரித்திருந்தார்.

அணிகளுக்கும் எதிர் அணிகளுக்கும் அன்று இருந்த நட்புணர்வு இன்று இல்லை!

கமலஹாசனை வைத்து ஒரு கதை

கமலஹாசனின் ஏக் தூஜே கேலியே சக்கைப் போடு போட்டு வடநாடு பூரா வெள்ளிவிழா கொண்டாடியிருந்த நேரம் அது.

நானும் என் நண்பன் மகாலிங்கமும் கடற்கரை ரயில் வண்டி நிலையத்தில் காபி குடித்துக் கொண்டிருந்தோம். அருகே உல்லாசப் பறவைகள் படத்தின் ஹிந்தி மொழிமாற்றப் படத்தின் சுவரொட்டி.

மகாலிங்கம் அலட்சியமாகச் சொன்ன ஒரு காமன்ட் ஒரு சிறுகதைக்கு விதையாக அமைந்தது.

“ஒருத்தன் படம் ஓடிடுச்சுன்னா எப்டியெல்லாம் காசு பண்றாங்க பாரு. புதுசா படம் எடுத்தா கூட டைம் ஆயிடும்ன்னு அவசரமா டப்பிங் பண்ணி ஓட்டறாங்க” என்றான்.

தமிழில் சரியாகப் போகாத அந்தப் படத்தை டப்பிங் செய்ய வேண்டும் என்றால் அதில் காசு சம்பாதிக்கிற ஆசையை விட வேறேதோ அஜெண்டா இருப்பதாகப் பட்டது எனக்கு.

அதை டெவலப் செய்து ஒரு சிறுகதை எழுதி அனுப்பினேன்.

அது சாவியில் பிரசுரமானதுடன், அடிக்கடி எழுதுங்கள் என்று சாவி கைப்பட எழுதிய கடிதமும் வந்தது. இப்போது ஒரு ஆசிரியராக அந்தக் கதையை மறுபடி படிக்கிற போது, மூன்று பக்கக் கதையை ஒரு பக்கமாக சுருக்க வேண்டியதாகி விட்டது!

அதைப் படிக்கிறீர்களா?

கீழே இருக்கும் கோப்பை வாசியுங்கள்.

Namakku Munnaal

மூர்த்தீஸ் கார்ட்டூன்ஸ் – ஆஸ்திரேலியா தாக்குதல்கள்

இந்திய மாணவர்கள் ஆஸ்திரேலியாவில்
தாக்கப்படுவதைத் தொடர்ந்து, நேற்று ஒரு
இந்தியப் பெண்ணும் தாக்கப்ப்பட்டிருக்கிறார்…
AUSTRALIA

மேலே இருக்கும் கார்ட்டூன் நம் கார்டூனிஸ்ட் மூர்த்தியின் சொந்தக் கருத்து.

போன வாரம் ஆஸ்த்திரேலியாவிலிருந்து வந்திருந்த என் நண்பன் பெனாய் குமாரிடமும், அங்கே வேலை பார்க்கிற என் நெருங்கிய உறவினரின் மகன் ஹரியிடமும் இது குறித்துப் பேசிக்கொண்டிருந்தேன். அவர்கள் சொன்னதையெல்லாம் விலாவரியாக எழுதினால் படிக்கிற பொறுமை உங்களுக்கு இருக்காது.

ஆகவே, ஆஸ்த்திரேலியாவில் இந்தியர்கள் தாக்கப்படுவது குறித்து சுருக்கி வரைக:

ஆஸ்திரேலியாவில்தான் படித்தாக வேண்டும் என்கிற மாதிரி படிப்புகள் எதுவும் அங்கே கிடையாது. உலக அரங்கில் ஆஸ்திரேலியப் படிப்புக்கு பெரிய அங்கீகாரமும் கிடையாது. பின் ஏன் அங்கே போய் படிக்கிறார்கள்?

அங்கே படிக்கும் இந்திய மாணவர்களில் தொண்ணூறு சதவீதம் பேர் பெரும் பணக்காரர்களின் பிள்ளைகள். பணக்கார வீட்டுப் பிள்ளைகளுக்கென்று சில கல்யாண குணங்கள் உண்டு. அது மாதிரி குணங்களால் லோக்கலில் தன பெயர் கெடக் கூடாது என்பதற்காக பிள்ளைகளை வெளிநாட்டுக்கு அனுப்புகிறவர்கள்,

இரண்டாம் தாரத்துப் பிள்ளைகளால் வரும் சக்களத்தி சண்டைகளை ஒத்திப் போட அனுப்புகிறவர்கள்

‘எம்புள் ள வெளிநாட்டுல படிக்குது’ என்கிற ஜபர்த்தச்த்துக்கு அனுப்புகிறவர்கள்

என்று சொல்லிக் கொண்டே போகலாம்.

இப்படி அனுப்பப்பட்ட பிள்ளைகள் பேரில் கோடிக் கணக்கில் பணத்தை டெபாசிட் செய்து விடுகிறார்கள்.

ஒழுங்கீனங்களுக்குக் குறையே இல்லை.

பொது இடங்களில் துப்புவது, பெண்களை கேலி செய்வது, அகாலங்களில் ரோட்டில் காச் மூச் என்று கத்திக் கொண்டு சுற்றுவது, பொதுப் போக்குவரத்துகளில் தாளம் போட்டுப் பாடுவது, குடித்து விட்டு ரோட்டில் கலாட்டா செய்வது என்று ஆஸ்திரேலிய்ர்களுக்குப் பிடிக்காத எல்லாவற்றையும் செய்து வருகிறார்கள்.

கண்டித்தால் இங்கே காட்ட வேண்டிய பெரிய இடத்துப் பிள்ளை ஜபர்தஸ்த்தை அங்கே காட்டுகிறார்கள்.

இவர்களோடு சேர்ந்து சுற்றுவதாலும், இந்திய மாணவர்களின் பொதுவான இமேஜ் பாதிக்கப் பட்டிருப்பதாலும், சில சமயம் அப்பாவி மாணவர்களும் தாக்கப் படுகிறார்கள்.

மாற்றுக் கருத்து இருப்பவர்கள் வரவேற்கப் படுகிறார்கள்.