சூப்பர் ஸ்டாரு யாருன்னு கேட்டா…

நட்சத்திர ஹோட்டல்களில் சாப்பாட்டைத் தவிர மீதி எல்லாமே நன்றாக இருக்கின்றன.

ரிசப்ஷனில் ஸ்லீவ்லெஸ் அணிந்து சிரிக்கிற இளம் பெண்கள். கோட்,சூட்,டை எல்லாம் அணிந்து வாயில் சிகரெட்டைக் கவ்வியதும் பற்ற வைக்கிற பேரர்கள். தரையளவு தாழ்ந்து ஆர்டர் எடுக்கிற அவர்களது மரியாதை. தும்மல் வருகிற மாதிரி முகத்தை வைத்துக் கொண்டு வயலினில் வெஸ்டர்ன் க்ளாசிகல் வாசிக்கிற கிழவர்கள். நீச்சல் குளத்தில் ஈரமான செல்வச் செழிப்பு மனைவிகள்…

ஏனோ மனம் பள்ளிக் காலத்து ஹோட்டல்களை எண்ணிப் பார்க்கிறது.

‘பெரும் வியாதிஸ்தர்கள் உள்ளே பிரவேசிக்கக் கூடாது’ என்கிற போர்டைத் தாண்டி

உள்ளே நுழைந்ததும் உயரமான மேடை அமைத்து வெள்ளை சட்டை வேட்டியும் நெற்றியில் பளீரென்று விபூதியுமாக சிரிக்கிற முதலாளி. அவர் மேசை மேல் ஹார்லிக்ஸ்,போன்விட்டா,ஓவல் போன்ற லக்சுரி பானங்கள். மேசை டிராயரில் கிளிப்புகளில் கவ்வி வைக்கப்பட்ட பத்து,ஐந்து,இரண்டு மற்றும் ஒரு ரூபாய் நோட்டுக்கள் தனித் தனியே.(ஹோட்டலில் நூறு ரூபாய் தருகிறவர்கள் வீட்டுக்கு வருமான வரி அதிகாரிகள் வந்து விடுவார்கள்). எவர்சில்வர் கிண்ணங்களில் ஐம்பது,இருபத்தைந்து,பத்து,ஐந்து,இரண்டு மற்றும் ஒரு பைசா நாணயங்கள்.(தாமிர ஒரு பைசா பார்த்திருக்கிறீர்களா?)

கூடத்தின் மேல் கோடியில் கண்ணாடிப் பெட்டியில் இட்லி,பூரி,வடை உள்ளிட்ட பாஸ்ட் மூவிங் ஐட்டங்கள் தாம்பாளங்களில் குவிக்கப் பட்டிருக்கும். விழாமல் நூல் கட்டி பாதுகாக்கப்பட்ட மைசூர்பாகு கட்டிகள். ஒரு கட்டு புரசிலை. மேலே தொங்கும் நூல்கண்டு.

நாம் போகிற போது முதுகில் “அண்ணாவை கவனிடா” என்கிற கட்டளை கேட்கும்.

உட்காரப் பெரும்பாலும் பெஞ்சிதான்.

போய் உட்கார்ந்ததும் அண்டாவிற்குள் முழங்கை வரை ஜளக் என்று நுழைத்து தண்ணீரை மொள்ளுகிற சர்வர். முதுகு வரை தூக்கி மடித்துக் கட்டிய அழுக்கு வேட்டி, பித்தான்கள் அவிழ்க்கப்பட்டு கழுத்தில் காலர் படாமல் இழத்து விடப்பட்ட சட்டை, காதில் புழுக்கை பென்சில் இவையே சர்வரின் அடையாளங்கள்.

பளிச்சென்ற வேட்டியும். வண்ணான் மடிப்பு சட்டையும் அணிந்து வேலைக்குப் போனால் “என்ன, தாசில்தார் உத்தியோகமா?” என்று முதலாளிகள் விரட்டி அடிப்பதைப் பார்த்திருக்கிறேன். அதிலிருக்கும் பிசினஸ் சைக்காலஜி புரிய எனக்கு ரொம்ப நாளாயிற்று.

“சூடா என்ன இருக்கு?” என்கிற உங்கள் கேள்வி நீங்கள் வாயைத் திறக்குமுன் அவருக்குப் போய் சேர்ந்து விடும்.

மோட்டுவளையைப் பார்த்தபடி “சாதா,ஸ்பெஷல்,மசாலா,பிளெயின் ரவா,ஆனியன் ரவா,ஊத்தப்பம்…” என்று சொல்லிவிட்டு உங்கள் ஆர்டரை காதில் மட்டும் வாங்கிக் கொள்வார். வாங்கியதும் அங்கிருந்தபடியே உரக்க “ரவா ஒண்ணு” என்று மாஸ்டருக்கு கம்யூனிகேட் செய்வார்.

ஹோட்டல் உட்சுவற்றில் ‘கெட்டி சட்னி கண்டிப்பாக பார்சலுக்கு மட்டும்’,’இட்லிக்கு சர்க்கரை கிடையாது’, ‘அடைக்கு வெண்ணை கிடையாது’ என்கிற மாதிரி ஹோட்டல் சட்ட திட்டங்களின் ஷரத்துக்கள் எழுதப் பட்டிருக்கும். பிரதி மாதம் 7 ம் தேதி சம்பளம் என்று ஒரு துருப்பிடித்த போர்டு இருக்கும்.

முழு டம்ளர் காபி மேல் டபராவை கவிழ்த்து, அப்படியே டம்ளர் தலை கீழாகவும், டபரா நேராகவும் திருப்பி, காபியின் சூடு கெடாமல் இருக்க வாக்யூம் டெக்னாலஜியை பயன் படுத்தியவர்கள் நம் சர்வர்கள்!

பெரும்பாலான ஹோட்டல்களில் பில் கிடையாது. கல்லாவுக்கு அருகில் நீங்கள் போனதும் ‘மூணு எழுபத்தஞ்சு’ என்று சம்பந்தப்பட்ட சர்வர் உள்ளேயிருந்து இரைவார். கொஞ்சம் அடுத்த கிரேடு ஹோட்டல்களில் ஸ்டாம்ப் சைசில் இருக்கும் காகிதத்தில் பென்சிலால் எழுதித் தருவார்கள். மூலையில் எத்தனை பேர் சாப்பிட்டார்கள் என்று எழுதுவார்கள்.

இந்த ஹோட்டல்களை இன்றைக்கு நினைத்தாலும் கையில் கடப்பா வாசனை வருகிறது. எத்தனை ஸ்டார் ஹோட்டல்கள் வந்தாலும் சூப்பர் ஸ்டார் எங்க ஊர் ‘சங்கரய்யர் காபி கிளப்’ தான்!

Advertisements

27 comments

 1. எங்க ஊரில் “தட்டி விலாஸ்” இட்லி சாம்பாருக்காக தவமிருந்து அம்மாவின் “அந்த மூன்று நாட்களுக்காக” காத்திருந்தது ஞாபகம் வருதே….ஞாபகம் வருதே….

 2. பூரி கிழங்கு 2 அணா என்றால், பூரி சட்னி ஒண்ணரை அணாதான். அரை டிராயரில் 2 அணா இருப்பதை உறுதி செய்து விட்டு, அதே பூரிப்பில், பூரி சட்னியும் அரையணாவுக்கு ஐஸ் வாட்டரும் ஆர்டர் செய்தது நினைவுக்கு வருகிறது…

  1. அருண்… இப்போதான் எல்லா நாட்டிலேயும் அடையாறு ஆனந்த பவன், சரவண பவன் மற்றும் முருகன் இட்லி கடை எல்லாமே வந்து விட்டதே? டென்ஷன் எதுக்கு… போய் ஒரு கை பாக்க வேண்டியதுதானே?

 3. ஸ்டார் ஹோட்டல்களில் இருட்டில் துழாவி நடந்து ஒரு இருக்கையில் அமர்ந்து, அரை இருட்டில் மெனு கார்டில் துழாவி குத்து மதிப்பாக ஒரு ஐடெம் ஆர்டெர் பண்ண, கடைசியில் அது வீட்டில் வெறுத்து ஒதுக்கிய உப்புமாவாக அமைந்துவிடும். அது தனி சோகம். தண்டனை 300 ருபாய் வேறு.

 4. தாமிர ஒரு தம்பிடி நாணயம்கூட நான் பார்த்திருக்கிறேன்.மஸாலா தோசை ஒன்றறை அணா. பொத்தல் காலணா கூட உண்டு.

 5. இதை கவனித்திருப்பீர்கள்… பால்யத்தில் சாப்பிட்ட ஓட்டல்கள் சில இன்றும் உள்ளன. இன்று அங்கு சென்றால்… காலத்தின் கட்டாயமாக பல மாற்றங்கள். ஆனால் கல்லாவில் மட்டும் அன்று பார்த்த அதே உருவம்… தன் ஓட்டலில் சாப்பிட்டும் எப்படி இந்த ஆள் மட்டும் அன்று பார்த்தது போல் அப்படியே இருக்கிறார் என்ற ஆச்சரியத்துடன் சற்று தலையை நிமிர்த்திப் பார்த்தால் உண்மை விளங்கிவிடும்… முன்னாள் கல்லா மாலையின் நடுவே போட்டோவாகத் தொங்கிக் கொண்டிருப்பார்… இன்றைய கல்லா அவர் வார்த்த வாரிசு என்பது புலப்படும்….

 6. எனக்குக் கூட சங்கர ஐயர் ஹோட்டலில் – ஒரு நாள் நான் சாப்பிட்ட
  ஒரு செட் பூரியும், மசாலும் ஞாபகம் வந்தது – உதய பானுவோ – யாரோ
  ஒருவர் சர்வ் செய்தார் என்று நினைக்கிறேன். இருபத்தைந்து பைசா பில்!
  பூரி சாப்பிட்டு கை கழுவிய பின், வந்து என் பக்கத்து வீட்டு நண்பனிடம் சொல்ல, அவன் என் கையை மோப்பம் பிடித்தே ஒரு மணி நேரம் சந்தோசப் பட்டுக் கொண்டிருந்தான்!

 7. அதெல்லாம் பொற்காலமாக்கும். இப்பகூட எங்க ஊரிலெல்லம் 50% நீங்க சொன்ன விதத்தில் ஹோட்டல்கள் இருக்கின்றன.ஆனால் நீங்க எழுதிய விதம் வாய் விட்டு சிரிக்க வைத்தது. நன்றி!
  கமலா

 8. //காபியின் சூடு கெடாமல் இருக்க வாக்யூம் டெக்னாலஜியை பயன் படுத்தியவர்கள் நம் சர்வர்கள்!//

  i didn’t know about it then,…
  thanks for the information.

எதுவா இருந்தாலும் எழுதுங்க!

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s