கற்பனையின் விற்பன்னர் வைரமுத்து

கலைஞரும், ரஜினிகாந்த் அவர்களும் அருகருகே உட்கார்ந்திருப்பதைப் பார்த்தால் நமக்கு என்ன தோன்றும்?

அண்ணா அறிவாலயத்தில் நடந்த ஒரு விழாவில், அவர்கள் இருவரும் அருகருகே அமர்ந்திருப்பதைப் பார்த்த கவிஞர் வைரமுத்து சொல்கிறார் :

“சூரியனும் (சூப்பர்) ஸ்டாரும் ஒரே இடத்தில் இருக்கும் அதிசயத்தைப் பார்க்க முடிகிறது..”

வைரமுத்துவின் இந்த thinking out of the box நான் ரொம்ப ரசிக்கிற விஷயங்களில் ஒன்று. நயாகரா நீர் வீழ்ச்சி பற்றி எழுதியிருந்த ஒரு கவிதையில் “அடடா இங்கே நெருப்பில்லாமலே புகைகிறதே” என்று எழுதியிருந்தார்.

காதல் ஓவியம் படத்தில் கதாநாயகன் கண்பார்வையற்றவன். அவனுக்குப் பார்வை திரும்பக் கிடைக்கும் போது தான் நேசிக்கும் பெண்ணைத் தேடுகிறான். அவளைக் காண முடியாமல், அவன் பாடுகிற பாட்டு :

கண்கள் வந்தும் பார்வை இல்லை-பாவை இல்லை.

பாவை என்பதற்குப் pupil என்று ஒரு அர்த்தம் இருப்பதை ரொம்ப சாமார்த்தியமாகப் பயன் படுத்தி இருக்கிறார்.

சிவப்பு மல்லி என்கிற படத்தில் உழைப்பாளர்கள் பாடுவது போல வரும் பாட்டில்,

அசையும் கொடிகள் உயரும் உயரும்
நிலவின் முதுகை உரசும்

என்று எழுதியிருப்பார்.

எட்டாத உயரத்தைக் கூட எட்ட முடியும் என்பதற்கு எழுதப்பட்ட வரிகள் இவை. நிலவை உரசும் என்று சொன்னாலே பொருள் வந்து விடுகிறதே, நிலவின் முதுகை என்று ஏன் சொல்ல வேண்டும்?

சூரியனின் ஒளி பட்டு நிலவின் ஒரு புறம் ஒளிர்கிற போது அதன் மறுபக்கம் இருண்டுதானே இருக்கிறது? ஒளிர்வது முகம் என்றால் எதிர்ப்புறம் முதுகுதானே? உழைக்கிறவர்கள் எத்தனை உயர்ந்தாலும் விளக்குக்குப் பின்புறம் நிற்கிறார்கள் என்கிறார். அதாவது ஊருக்கு வெளிச்சம் காட்டும் தன்னலமற்றவர்கள் என்கிறார்.

முரடனாக இருந்த கதாநாயகன் சாதுவான போது

அடங்காத காளை ஒண்ணு
அடிமாடாப் போச்சுடி கண்மணி

என்கிறார்.

இதே போன்ற இன்னொரு சூழ்நிலையில்,

கட்டுத்தறிக் காளை நானே
கன்னுக்குட்டி ஆனேனே 

என்று எதுகை கெடாது சொல்கிறார்.

பொன் மாலைப் பொழுது பாடலில், சரணத்தில்

வானம் எனக்கொரு போதிமரம்
நாளும் எனக்கது சேதி தரும்

என்கிறார். இந்த இடத்தில் ஒரு மிகப்பெரிய தன்னம்பிக்கைத் தத்துவத்தை அவர் சொல்கிறார்.

போதிமரம் மாதிரி restricted locations அவசியமில்லை. புத்திசாலிக்கு வானத்தின் கீழ் எல்லா இடமுமே ஞானம் தருகிற இடங்கள்தான் என்பதே அது.

பலபேர் மத்தியில் நீ இருந்தாலும் பளிச்சென்று வித்யாசமாகத் தெரிவாய் என்று அவள் சொல்ல நினைக்கிறாள். அவளோ படிக்காதவள். கிராமத்துக்காரி. அவளுக்குத் தெரிந்ததெல்லாம், கிராமம், திருவிழா, கோயில், தேர், சந்தை….

அவளுக்குள் இருந்து எப்படி சிந்திக்கிறார் பாருங்கள் :

அட சந்தையிலே நின்ன போதும் நீ
வீரபாண்டித் தேரு

அவன் காதலியின் விரல்கள் பளபளப்பாக இருக்கின்றன. இந்தக் கதாநாயகன் படித்தவன். வித்யாசமாகச் சொல்ல எண்ணுகிறான்,

இருபது நிலவுகள்
நகமெங்கும் ஒளிவிடும்

என்று கை கால் விரல்களில் நிலவின் பிரதிபலிப்பு தெரிவதை சொல்கிறான்.

காதலியின் விரல்களை வர்ணிக்க நினைக்கும் பட்டிக்காட்டுக் கதாநாயகன்,

அஞ்சு விரலும் பஞ்சு மிட்டாயீ என்கிறான்.

வைரமுத்துவின் வார்த்தைகளில் அவ்வப்போது கொஞ்சம் குறும்பும் வெளிப்படும். வரிகளைச் சொல்கிறேன், அதற்குப் பொழிப்புரை சொல்லப் போவதில்லை. முரளி கதாநாயகனாக அறிமுகமான படத்தில்,

இது என்ன கூத்து அதிசயமோ
இளநீர் காய்க்கும் கொடியிதுவோ

என்று எழுதியிருக்கிறார்.

Advertisements

12 comments

 1. சில சமயம் கவிஞர்கள் வசமாக சிக்கிக்கொண்டு வழிவதும் உண்டு. கண்ணதாசனின் ஒரு பாட்டில் “ மாமரத்துக் கிளைகளிலே மாடப்புறா கூடுகளாம்.. கூடுகளில் குடியிருக்கும்…” என்று வரும்.. ஒருவர் கவியரசரைக் கேட்டாராம்…” மாடப்புறான்னு சொல்லிட்டு அது எப்படிங்க மரத்துல குடியிருக்கும்னு… ” உடனே கவியரசு… ” அது அந்தப்படத்தில் வரும் ஏழைப் பணக்கார சிசுவேஷனுக்காக இப்படி எழுதப் பட்டது ” என்று சமாளித்தாராம்… உடனே சற்றும் தயங்காமல் கேள்வி கேட்டவர்… ” அதை விடுங்க…. இன்னொரு பாட்டில் கோட்டையிலே… ஒரு ஆலமரம்… அதில் குடியிருக்கும் ஒரு மாடப்புறா…” ன்னு வந்திருக்கே என்றாராம். கவியரசு எஸ்கேப்…!

  1. மூர்த்திஜி, முதலில் சொன்ன விளக்கத்தை தலைகீழ் செய்தால் இரண்டாவது சிச்சுவேஷனுக்கும் பொருந்துமே…

   அதிருக்கட்டும்.

   மாடப்புறா என்று அழைக்கப்படுவதால் அவை வேறே எங்கேயுமே குடியிருக்கா என்று பொருள் கொள்வது சரியாக இருக்காது என்பது என் தாழ்மையான கருத்து. ஏனெனில், ஒர்க்ஷாப்களின் கூரைகளில் ஏகப்பட்ட புறாக்களைப் பார்த்திருக்கிறேன். வெளிநாட்டிலோ, வேறு மாநிலங்களிலோ வாழும் தமிழர்களை அதெப்புடி? என்று கேட்கிறோமா? எங்கே வாழ்கிறோம் என்பது தேவைகளையும் விருப்பங்களையும் பொறுத்தது. புறாக்களுக்கு தேவைகளும் விருப்பங்களும் இருக்காவா?

 2. சூப்பர் வரிகள் சார்

  கவிதை வரியின் சுவை அர்த்தம் புரியும் வரை, கங்கை நீரின் சுவை கடலில் சேரும் வரை, காதல் பொய்யென்று சொன்னேன் உன்னைக்கானும் வரை என்று பின்னி எடுத்த வைர முத்து “விடியும் வரை பெண்ணழகு” என்று எழுதி வாங்கி கட்டிக்கொண்டதும் அதே படத்தில் தான்

  //வைரமுத்துவின் வார்த்தைகளில் அவ்வப்போது கொஞ்சம் குறும்பும் வெளிப்படும்.//

  இதற்கு நிறைய உதாரணம் இருக்கே

  சிந்திய வெண்மனி சிப்பியில் முத்தாச்சு 🙂 🙂 🙂 யார் எழுதியது

 3. சாகித்திய அகாடமி விருது பெற்ற பத்மஸ்ரீ வைரமுத்துவின் இன்றைய கவிதைகள் அவரின் வலிமைமிக்க விரல்களின் வழியே வழிந்தோடுபவை.தமிழின் மீதுள்ள இவரின் அழகியல் தாகத்தை தன் ஒவ்வொரு சொல்லிலும் விருந்து வைக்காமல் விடுவதில்லை. பழந்தமிழின் செழுமைகளை பிழிந்து எளிமையாக நவீன யுகத்துக்குள்
  ஊற்றும் முயற்சி இவருக்கு இயல்பாய் வாய்த்திருக்கிறது.
  அவருடைய பாடல் வரிகளில் மிகவும் பிடித்த வரிகள் என்று தேடத்துவங்கினால் அந்த தேடலில் நாம் அப்படியே தொலைந்து போய் விடுவது உறுதி.

 4. அது
  “மந்தையில நின்னாலும் நீ வீரபாண்டித்தேரு”

  நேற்றுதான் இவ்வரிகளை மேற்கோள் காட்டி ஒரு நூல்விமர்சனம் எழுதினேன்.இப்போது உங்கள் பதிவு. 🙂

  வைரமுத்துவின் வைர வரிகளை பதிவிட்டதற்கு மிக்க நன்றி.

 5. “பனித் துளியொன்று
  சிப்பியில் விழுந்து
  வந்தது முத்து
  மன்னவன் தொட்டு” – கண்ணதாசன்(கண்ணே பாப்பா)

  வைரமுத்துவின் கற்பனைப் புலமையை தாங்கள் வடித்துத் தந்தது.
  அருமை!

 6. இதே போல் சங்கர் குரு படத்தில்,
  “தென்பாண்டி மன்னவனோ மூழ்கித் தான் முத்தெடுத்தான்! – தேனே உன் அம்மாவோ
  முழுகாம முத்தெடுத்தா!…….
  நயமான வார்த்தை விளையாட்டு அல்லவா?.

 7. கவிதை காலப்பெருவெளியில் காத்திரப் படுத்த வேண்டிய இலக்கியத்தின் இதயம் அதன் துடிப்பே கவிஞனின் சிந்தையில் தான் தஞ்சம். அதை சிதைக்காத சிற்பி வைரமுத்து.

  ” வானம் எனக்கொரு போதிமரம்
  நாளும் எனக்கது சேதி தரும்”

  இதுவே அவன் சிந்தைக்குத் தக்க சான்று.

எதுவா இருந்தாலும் எழுதுங்க!

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s