அவுட் ஆப் சிலபஸ்

என் பள்ளி நாட்களில் மறக்க முடியாத நாட்கள் இன்ஸ்பெக்டர் வரும் நாட்கள்.

என் வகுப்பில் பென்சில்,சிலேட்டுக் குச்சி எல்லாம் திருடுகிற பையன் ஒருத்தன் இருந்தான். ‘அடுத்த வாரம் இன்ஸ்பெக்டர் வராரு’ என்று டீச்சர் சொன்னதும் வெல வெலத்துப் போய் விட்டான்.

“ஐயய்யோ இனிமே பென்சில் திருட மாட்டேன் டீச்சர்” என்று காலில் விழுந்து கதற ஆரம்பித்தான்.

போலீஸ் இன்ஸ்பெக்டருக்கும், பள்ளிக்கூட இன்ஸ்பெக்டருக்கும் இருக்கும் வித்யாசத்தைப் புரிய வைப்பதற்குள் டீச்சர் பாடு நாயறிந்ததாகப் போயிற்று.

இன்ஸ்பெக்டர் வருகிறார் என்கிற சேதி (மற்ற) மாணவர்களுக்கு தீபாவளியாகவும், ஆசிரியர்கள் மற்றும் தலைமை ஆசிரியருக்கு காலரா பரவுவது போலவும் தோற்றமளிக்கும்.

ஆண் ஆசிரியர்கள் சிகரெட் பெட்டியில் கூண்டு, ஜிகிநாத் தாளில் கொடி, க்ரூப் லீடர்கள் மற்றும் உறுப்பினர்கள் பலகைகள் என்று ஒரு ரூட்டில் போவார்கள். பெண் ஆசிரியைகள் பழைய துணியில் பத்திக், பருப்பில் தேசியக்கொடி, எலந்தக் கொட்டையில் எல்லோரா சிற்பங்கள் என்று தங்கள் இன்னோவேஷன்களை அரங்கேற்றுவார்கள்.

தலைமை ஆசிரியர்கள் தேர்ந்த கிரிமினல்கள்.

நன்றாகப் படிக்கிற மாணவர்களை சீட் மாற்றி அங்கொன்றும் இங்கொன்றுமாக உட்கார வைப்பார்கள். இன்ஸ்பெக்டர் கேள்வி கேட்கிற போது ராண்டம் ஆக கேட்பது போல் ‘கலியபெருமாள் நீ சொல்லு’, ‘மோகன் நீ சொல்லு’ என்று இடமும் வலமுமாக கையை நீட்டிக் கேட்பார்கள்.

இன்ஸ்பெக்டர் ரவியையோ, முருகையனையோ கேட்டால் கதை கந்தல்.

அன்றொரு நாள் செப்டம்பர் மாதத்தில் நடந்த நிகழ்ச்சி எனக்கு இன்னும் நினைவிருக்கிறது.

“சுவாசித்தல் என்றால் என்ன?” என்று இன்ஸ்பெக்டர் கேள்வி கேட்டார்.

ராதாக்ரிஷ்ணய்யர் “ஜவஹர், நீ சொல்லு” என்று கேட்பதற்குள் முன் வரிசையிலிருந்த ரவியைக் காட்டி “நீ சொல்லுப்பா” என்றார் இன்ஸ்பெக்டர்.

இதை முற்றிலும் எதிர் பார்க்காத அவனுக்கு சுவாசமே நின்று விட்டது.

“நாம் கா…கா…கா…” என்று எழுந்து திக்க ஆரம்பித்தான்.

“ம்ம்ம்ம் சொல்லு, நாம் காற்றை என்ன செய்கிறோம்?” என்று வாத்தியார் க்ளூ கொடுத்தார்.

அவன் சற்று யோசித்து “வெளி விடுகிறோம்” என்றான்.

“வெளி விடுவதற்கு முன் என்ன செய்கிறோம்?”

“……………………………….”

“எதை உள்ளே இழுக்கிறோம்?”

ரவிக்கு மண்டையில் ஏதேதோ ஓடி, தாவரங்கள் சுவாசிப்பதும், மனிதர்கள் சுவாசிப்பதும் குளறுபடியாகி,

“வேலம்பாசி” என்றான்.

இன்ஸ்பெக்டர் திகைத்து, “வேலம்பாசியை ஏன் உள்ளே இழுக்கணும்…அதிலே என்ன இருக்கு” என்றார்.

“கார்பன் டை ஆக்சைடு”

“அது என்ன ஆகும்?”

“அதைத்தான் உள்ளே இழுக்கும்”

“கார்பன் டை ஆக்சைடை உள்ளே இழுத்தா என்ன ஆகும் தெரியுமா?”

“தெளிந்த சுண்ணாம்பு நீர் பால் போல மாறும்”

“சுண்ணாம்பு நீரா…”

“தாற்காலிக கடினத் தன்மையை சுண்ணாம்பு நீர் சேர்த்துக் கொதிக்க வெச்சா நீங்கிடும்”

“எது?”

“கார்பன் டை ஆக்சைடு”

“உனக்கு ஆக்சிஜன்னு ஒண்ணு இருக்கிறது தெரியுமா தெரியாதா?”

“தெரியும்”

“அது எங்கிருக்கு?”

“கார்பன் டை ஆக்சைடிலே”

இன்ஸ்பெக்டருக்கு தலை சுற்றியது.

“எப்படிப்பா?”

“சி ஒ டூ ன்னா கார்பன் டை ஆக்சைடு. ஒ டூ ன்னா ஆக்சிஜன்தானே?”

இன்ஸ்பெக்டர் சரணடைந்தார்.

“மிஸ்டர் ராதாக்ருஷ்ணன், சிலபஸ்லே இருக்கிறது மட்டும் சொல்லிக் குடுங்க. ரொம்ப அட்வான்சா போறிங்கன்னு நினைக்கிறேன்”

Advertisements

26 comments

 1. தல. நான் ஸ்கூல் படிக்கும் போது essay நடத்திட்டிருந்தார் ஆங்கில ஆசிரியர். அதில்
  he யாரை குறிப்பிடும் சொல் என்று கேட்டார். நான் தூங்கி எழுந்து பார்த்தால் அவர் பக்கத்தில் என் friend நின்னுட்டிருந்தான். he is ramkumar studing 10 standard இன்னு சொன்னேன்

 2. //“தாற்காலிக கடினத் தன்மையை சுண்ணாம்பு நீர் சேர்த்துக் கொதிக்க வெச்சா நீங்கிடும்”
  //

  அது அப்படித்தானே…, அப்படியில்லையென்றால் இப்படி ஆகிவிடாதா.., இப்படி ஆகும் போது வேறென்ன செய்ய முடியும். கடைசியில் அப்படி இப்படி என்று எப்படியில் அப்படித்தானே வரவேண்டும்.

 3. இன்ஸ்பெக்டர் ஒரு மாணவனை பார்த்து கேட்டார்: “பஞ்ச பாண்டவர்கள் எத்தனை பேர்?”
  வழக்கம் போல் நன்றாகப்படிக்கும் மாணவன் இடம் மாறியதால், அந்த மாணவன் பதில் சொல்லவேண்டிய நிலைமை. அவன் சொன்னான்: “மூணு சார்”.
  இன்ஸ்பெக்டர் கோவத்துடன் வகுப்பு ஆசிரியரை பார்த்து “என்ன இப்படி சொல்றான்?” என்றார். வகுப்பு ஆசிரியரும் அசடு வழிந்து, “ஹி..ஹி ….ராமன் லக்ஷ்மணன் காட்டுக்கு போய்ட்டாங்கள்ள, அதான் …ஹி .ஹி ..” என்றார்.

 4. // ரவிக்கு மண்டையில் ஏதேதோ ஓடி, தாவரங்கள் சுவாசிப்பதும், மனிதர்கள் சுவாசிப்பதும் குளறுபடியாகி,

  “வேலம்பாசி” என்றான்.///
  இந்த இடத்தில் வாய்விட்டுச் சிரித்தேன்.

  1. ஜெய், என் ஊர் காளமேகத்தால் பாராட்டப்பெற்ற தி கிரேட் நாகப்பட்டினம், பழைய தஞ்சை மாவட்டம். சீமாச்சு பக்கத்திலே மாயவரம்ன்னு நினைக்கிறேன்.

 5. //சீமாச்சு, ஏன் சார் ம்ம ஊர்க்காரராக இருந்துகிட்டு சிண்டு முடியறீங்க//

  சிண்டு முடியறதுக்காகக் கேக்கலீங்க….

  நாம யாருக்கும் இது வரை சிண்டு முடிஞ்சதில்லீங்க..

  வித்தியாசமான சிந்தனைக் கோணங்களுக்காகப் பாராட்டிச் சொன்னது..

  பரவாயில்லை.. விட்டுடுங்க…

 6. /
  “மிஸ்டர் ராதாக்ருஷ்ணன், சிலபஸ்லே இருக்கிறது மட்டும் சொல்லிக் குடுங்க. ரொம்ப அட்வான்சா போறிங்கன்னு நினைக்கிறேன்”
  /

  :)))))))))))))))))
  முழு பதிவும் செம ரகளைதான் இன்னும் சிரிச்சிகிட்டே இருக்கேன்.

  1. சிவா, பதினஞ்சு நிமிஷத்திலே பதினஞ்சு பின்னூட்டங்கள் ஒரு கின்னஸ் சாதனை. உங்களுக்கு பின்னூட்டத் திலகம்ன்னு பட்டம் தருகிறேன். ஆதரவுக்கு நன்றி, தொடருங்கள்.

எதுவா இருந்தாலும் எழுதுங்க!

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s