எப்படி மாட்டிக்கிட்டேன்?

ஒரு சின்ன கவனப் பிசகுதான் என்னைக் காட்டிக் கொடுத்தது.

இல்லாவிட்டால் நான் செய்த கொலை யாருக்குமே தெரிந்திருக்காது.

தற்கொலை செய்து கொள்ளப் போன நான் தண்டவாளத்துக்கு இடையே ஒரு பர்ஸ் கிடந்ததைப் பார்த்தேன். அதை எடுத்தால் டெல்லி போக ஒரு டிக்கெட்டும், நானூறு ரூபாய் பணமும் இருந்தது. சாவை சில மணி நேரங்கள் ஒத்திப் போட்டேன். குறிப்பிட்ட கம்பார்ட்மென்ட் போய் டிக்கெட்டை தொலைத்தவன் வருகிறானா என்று கவனித்தபடி காத்திருந்தேன். ரயில் நகர்ந்து வேகம் எடுக்கிற வரை சீட்டுக்குப் போகவில்லை.

டிக்கெட் பரிசோதகர் வந்ததும் கூட டிக்கெட்டை உடனே நீட்டவில்லை. எல்லாரும் பன்ச் செய்யக் காத்திருந்தேன். வைட்டிங் லிஸ்ட், ஆர் எ சி ஆசாமிகள் அவரிடம் ரிக்வெஸ்ட் செய்தபோது என்ன செய்கிறார் என்று கவனித்தேன். என் சீட் நம்பரை அவர்களில் யாருக்காவது அல்லாட் செய்கிறாரா என்று பார்த்தேன். இல்லை என்று நிச்சயித்த பின் தந்தேன்.

என் பிரச்சினை ரொம்ப சிம்பிள்.

பி ஈ பாதி படிக்கும் போது அப்பா செத்துப் போய் விட்டார். படிப்பை நிறுத்தும் படி ஆனது. அதற்கப்புறம் ஏதேதோ ரெண்டுங்கெட்டான் வேலைகள் செய்து பிழைத்தேன். பாழாய்ப்போன ரிசெஷன் வந்ததில் இருந்த ஒண்ணரையணா வேலையும் போச்சு.

போதாது என்று காதல் வேறே.

உஷாவின் அப்பா கறாராகச் சொல்லி விட்டார். ஒரு பர்மனன்ட் வேலை இருந்தால் கல்யாணம். இல்லாவிட்டால் மறந்து விடு என்று. மூன்று மாசம் டைம் கொடுத்தார். அது முடிய இன்னும் நாலு நாளே பாக்கி. நம்பிக்கை மொத்தமும் போய் விட்டது. செத்துப் போகலாம் என்று தண்டவாளத்தில் தலையை வைக்கப் போன போது இந்தத் திருப்பம்.

சரி, ஆட்டத்தை இந்த வழியில் ஆடிப் பார்ப்போம் என்று வந்தேன்.

உடனேயே அடுத்த அதிர்ஷ்டம்.

எதிர் சீட்காரன் டெல்லியில் ஒரு வேலைக்கு நேர்முகத் தேர்வுக்காகப் போய்க் கொண்டிருந்தான். அந்த வேலைக்கு அவர்கள் கேட்டிருந்த தகுதி மொத்தமும் எனக்கிருந்தது-ஒன்றே ஒன்றைத்தவிர. அது பி ஈ சான்றிதழ்.

அவனிடம் மெல்லப் பேச்சுக் கொடுத்தேன்.

விண்ணப்பத்தில் என்னென்ன எழுதியிருந்தான் என்று விவரமாகத் தெரிந்து கொண்டேன். முக்கியமாக போட்டோ அனுப்பியிருக்கிறானா என்று கேட்டு இல்லை என்று நிச்சயித்துக் கொண்டேன். ஹிந்தி தெரியும் என்று பொய்யாக எழுதி இருந்ததையும் தெரிந்து கொண்டேன்.(எனக்கு நிஜமாகவே ஹிந்தி தெரியும்).என் திட்டத்தில் எந்தக் குழப்பமும் வராமல் இருக்க ஆனதையும் அவனே செய்தான்.

ராத்திரி பர்சோடு டிக்கெட்டை எடுத்து பெட்டியில் வைத்தான். பெட்டியைப் பூட்டவில்லை. ஒரு லுங்கியும் சட்டையும் மட்டும் போட்டுக் கொண்டு

“வாங்க ஸ்டெப்ஸ் கிட்டே உக்காந்து பேசலாம். எனக்கு ரொம்பப் பிடிக்கும்” என்றான்.

எனக்கு திட்டமிடுகிற கஷ்டமே வைக்கவில்லை அவன்.

கம்பார்ட்மென்ட்டில் எல்லாரும் தூங்கிய பிறகு படிக்கட்டில் உட்கார்ந்திருந்த அவனை முதுகில் கால் வைத்து பலமாக ஒரே எத்து. மடேரென்று தேங்காய் உடைகிற சத்தம். அவனுடைய அய்யோ வெளியே வருவதற்குள் ரயிலின் கடைசிப்பெட்டி கடந்து விட்டது.

காண்பவன் இல்லையேல் காட்சி இல்லை.

பெட்டியில் கால் லெட்டர், சான்றிதழ் கோப்பு எல்லாம் நீட்டாக வைத்திருந்தான்.

நான் அவனாகக் கூடு விட்டுக் கூடு பாய்ந்து வேலையும் வாங்கி விட்டேன்.

சான்றிதழ்களைச் சரி பார்க்க பைலை கொடுத்த போதுதான் அந்தத் தப்பு நிகழ்ந்தது. பைலுக்குள்ளிருந்து ஒரு பழுப்பு நிற கவர் கீழே விழுந்தது. அதை எடுத்து கேஷுவலாக மேசை டிராயருக்குள் வைத்துக் கொண்டார். ஒரு சில வினாடிகள் தாமதித்து என் எஸ் எஸ் எல் சி புத்தகத்தைப் பார்த்தார்.

என்னைப் பார்த்து, “நீங்க ரொம்ப அதிர்ஷ்டக்காரரா இருக்கணுமே கையைக் காட்டுங்க” என்றார்.

எனக்கு எதுவும் புரியவில்லை. பயமாக இருந்தது.

“என்ன சார்…?”

“உங்க வலது கைலே ஆறு விரலாமே, அப்படி இருந்தா ரொம்ப அதிர்ஷ்டம். கையைக் காட்டுங்க”

இதென்னடா வம்பாய்ப் போயிற்று… இந்தக் கண்றாவியை கவனிக்காமல் விட்டு விட்டோமே… அந்த சனியனுக்கு ஆறு விரலா!

“இ…. இல்லே… அ… அது… முதல்லே இருந்தது, இப்போ ஆபரேஷன் பண்ணி எடுத்தாச்சு” என்று சொல்லி முடிக்குமுன் எனக்கு வேர்த்தது.

“தழும்பு எதுவும் இல்லையே, எப்போ ஆபரேஷன் ஆச்சு?”

“இல்லை, அது லேசர் ஆபரேஷன், தழும்பே வராது”

“ஓ… எந்த ஆஸ்பத்திரி?”

“அ.. அது…. மல்லைய்யா ஆஸ்பத்திரி பெங்களூரிலே”

“எது, அந்த சொவ்டய்யா ரோடிலே பூட் வேர்ல்ட்க்கு எதிரே… அதுவா?”

“அதேதான் சார்”

“ஒக்கே, கொஞ்சம் வெளிலே வெயிட் பண்ணுங்க”

நான் காத்துக் கொண்டிருந்தேன்.

கொஞ்ச நேரத்தில் அவர் வெளியே வந்தார். எதிர்ப் புறத்திலிருந்து இன்ஸ்பெக்டர் வந்தார்.

“எப்படிக் கண்டு பிடிச்சீங்க மிஸ்டர் ருங்க்டா?”

“எல்லாம் சரியாத்தான் இருந்தது. பைல்லேர்ந்து விழுந்த கவர்லே இருந்த பாஸ்போர்ட் சைஸ் போட்டோவிலே வேறே ஆள் இருந்தான். சும்மாவாவது கையிலே ஆறு விரலான்னு கேட்டேன். ஆமாம் ஆபரேஷன் பண்ணியச்சுன்னான். அதுக்கப்புறம் நான் கேட்ட தப்பான தகவல் எல்லாத்தையும் ஆமோதிச்சான். நீங்க வேறே காலையிலே எங்க கம்பெனிக்கு சமீபத்திலே தமிழ்நாட்டிலேர்ந்து அப்ளை பண்ணவங்க விவரமெல்லாம் கேட்டிங்க. சட்டைப் பையிலே எங்க விளம்பரக் கட்டிங்கோட ஒரு பொணம் கண்டு பிடிச்சதா சொன்னீங்க. எல்லாத்தையும் கனெக்ட் பண்ணேன். அவ்வளவுதான்”

அடக் கடவுளே… அந்த போட்டோ மட்டும் இல்லாம இருந்திருக்கக் கூடாதா!

Advertisements

9 comments

  1. உங்கள் கதைகள் முன்பே படித்திருக்கிறேன். அபாரம்.
    என்னால் இக்கதையின் முடிவை யுகம் செய்யவே முடியவில்லை.
    கடைசியில் படித்து தான் தெரிந்து கொண்டேன்.

எதுவா இருந்தாலும் எழுதுங்க!

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s