சரோஜா ஸர்காஸ்ஸம் நிகாலோ – 3

மாமிக்கு குழந்தைகள் கிடையாது.

“டாக்டரண்டை செக் பண்ணிக்கிறதுதானே?” என்று கேட்டால் போதும்.

“டாக்டர் ஏன் செக் பண்ணனும். இருக்கிற குடித்தனக்காரா செக் பண்ணாம இருந்தா போறாதா” என்பாள்.

கூடப் பேசுகிற மாமி இதை சட்டென்று புரிந்து கொள்கிற அளவு ஸ்ரூட் கிடையாது.

“என்னடி சொல்றே சரோஜா?” என்று கேட்டு வைப்பாள்.

“மாமி, இருக்கிறது ஒரு கிச்சனும், தட்டி அடைச்ச ரூமும். வீடு எப்பப் பார்த்தாலும் செடில் உற்சவம் மாதிரி களேபரமா இருக்கு. வீடு கொஞ்சம் அடங்கினா ‘ஒரை மோர் இருக்காடி’ ன்னு அபயம் மாமி வந்துடறா. எல்லாப் போர்ஷன்லையும் விளக்கு அணைக்கற வரைக்கும் காத்துண்டிருக்க வேண்டியதா இருக்கு. விளக்கை அணைச்சிட்டாலும் ஆயிடறதா… வாலாம்பா பாட்டியும், லஷ்மிப் பாட்டியும் மாத்தி மாத்தி சொம்பை எடுத்துண்டு முத்தத்திலே வந்து உட்கார்ந்துடறா. இதெல்லாம் அடங்கினாலும் மாமாவுக்கு தைரியம் வரமாட்டேங்கறது. பெருச்சாளி அடிக்கிறேன் பேர்வழின்னு ஸ்ரீனிவாச ராவ் அசந்தர்ப்பமா ரேழி லைட்டை போட்டுடறார்”

பேச்சு ரசவந்தி பத்திரிகையில் வருகிற கதை மாதிரி போனப்புறம்தான் கூடப் பேசும் மாமிக்கு உறைக்கும். சட்டென்று,

“ஆமாண்டிம்மா ஒண்டுக் குடித்தனம்ன்னாலே பிடுங்கல்தான்” என்று முற்றுப்புள்ளி வைக்க முற்படுவாள்.

ஆனால் சரோஜா மாமி காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் மாதிரி மேலும் தீவிரமடைந்து,

“நம்மாம் தேவைல்லை. பத்துக் குடியார் ஆத்திலே கரண்ட்டும் கிடையாது. முத்தத்தை சுத்திதான் எல்லாம் படுத்துக் கிடக்கும். அன்னைக்கு லலிதா மாமி சொல்றா, ஒரு நா காலம்பர அவ ஆத்துக்காரர் சொல்றாராம், ‘ஏண்டி, அசடு, ஜாடை மாடையா சீண்டினா புரியாதா? எதுக்கு அத்தனை உச்சு கொட்டறே, கையை எடுத்து எடுத்து விடறே… ஒவ்வொரு தரமும் இப்படிப் போராடித்தான் உன்னை சம்மதிக்க வெக்கணுமா’ ன்னு.”

“வாஸ்தவம்தானே”

“நானும் அப்படித்தான் கேட்டேன். லலிதா மாமி என்ன சொன்னா தெரியுமா?”

“என்ன சொன்னா?”

“அன்னைக்கு நான் செகண்ட் ஷோ போயிட்டு ராத்திரி ஒரு மணிக்குத்தான் வந்தேன், யாரையும் தொந்தரவு பண்ண வேண்டாம்ன்னு திண்ணையிலேயே படுத்துண்டுட்டேன். இவர் கம்பல் பண்ணதும் சம்மதிச்ச குச்சிகாரி யாருன்னு தெரியல்லையேடி சரோஜாங்கிறா”

“ஐயய்யோ.. அப்பறம்?”

“அப்பறம் என்ன… எந்தக் குழந்தையை பார்த்தாலும் அவ ஆத்துக்காரர் ஜாடையாவே தோண்றதாம்”

“பாத்துடீ சரோஜா நீ இருக்கிறதும் ஒண்டுக் குடித்தனம்தான்”

“எங்க ஸ்டோர்லே எல்லா ஆம்பிளைகளும் தசரதர் மாதிரி. ஒண்ணும் கவலை இல்லே”

“அப்டீன்னா?”

“அறுபதினாயிரம் பொண்டாட்டிகள் இருந்தும் பாயசம் குடிச்சவாதானே புள்ளையாண்டா!”

பல வருஷங்கள் கழித்து நாகப்பட்டினம் போன போது கடைத் தெருவில் மாமியைப் பார்த்தேன். அதே உற்சாகம். விட்ட இடத்திலிருந்து பேச்சை தொடர்கிற மாதிரி பேசினாள்.

“ஏண்டா, லைபிரரி புஸ்தகத்தை ரிடர்ன் பண்ணாம போயட்டியாமே… அந்த நாகராஜன் வந்து என் பிராணனை வாங்கறான்”

அருகிலிருந்த நீலா மாமி என்னை தேசத் துரோகி போலப் பார்க்க, சட்டென்று டாபிக்கை மாற்றினேன்.

“மாமா ரிடையர் ஆயிட்டாரா?”

“ரிடையர் ஆறத்துக்கும், பென்ஷன் வாங்கறத்துக்கும் அவர் என்ன தாசில்தார் உத்தியோகமா பார்த்தார். அதே வீராச்சாமி ஐயர் கடையிலே அதே சர்வர் உத்தியோகம். அதே அழுக்கு வேஷ்டி அதே புழுக்கை பென்சில்”

“நீங்க எப்டி இருக்கேள்?”

“எனக்கென்ன வீராச்சாமி ஐயர் கடைலே மீர்ற டிபனை எல்லாம் சாப்டதுண்டு திருவாரூர் கல் தேர் மாதிரி இருக்கேன்”

“ஸ்ரீனிவாச ராவ் ஆத்திலேதானே இருக்கேள்?”

“இல்லே. ராவ் பையனுக்கு கல்யாணம் ஆச்சு. வந்த ராட்சசி பிரைவசி, இன்டிமசி, வண்டிமசின்னு என்னென்னமோ சொல்லி என் போர்ஷனை காலி பண்ணச் சொல்லிட்டா. இப்போ தர்மபுர மடத் தெருவிலே நீலா மாமி இருக்கிற ஸ்டோர்லே ஒரு போர்ஷன்லே இருக்கேன்”

“போர்ஷன் நல்லா இருக்கா?”

“ஓ… ரொம்ப சௌரியம். அந்தாத்திலே தாப்பாதான் இல்லே. இங்கே கதவே இல்லே. அடுத்தது செவர் இல்லாத ஆத்துக்குதான் குடி போகணும்” சிரித்தாள்

Advertisements

15 comments

 1. //பெருச்சாளி அடிக்கிறேன் பேர்வழின்னு ஸ்ரீனிவாச ராவ் அசந்தர்ப்பமா ரேழி லைட்டை போட்டுடறார்”//

  ஒண்டுக் குடித்தனங்களின் சங்கடத்தை ரொம்ப நகைச்சுவையா
  ரெஜிஸ்டர் பண்ணியிருக்கீங்க

 2. //பேச்சு ரசவந்தி பத்திரிகையில் வருகிற கதை மாதிரி போனப்புறம்தான் கூடப் பேசும் மாமிக்கு உறைக்கும்.//

  ரசவந்தி, அனுராதா எல்லாம் படிச்சிருக்கீங்களா!

 3. //ஆனால் சரோஜா மாமி காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் மாதிரி மேலும் தீவிரமடைந்து,//

  உங்க ப்ளாக்கை தொடர்ந்து படிக்கறேன். இந்த மாதிரி எழுதறது உங்க unique style. வாழ்த்துக்கள்.

 4. கலக்கல் மாமி சரோஜா … தொடருங்கள்.. //செவர் இல்லாத ஆத்துக்குதான் குடி போகணும்”//இம்மாதிரி மாமிகள் எதையும் இயல்பாக எடுத்துக்கொள்கிறார்கள்..

எதுவா இருந்தாலும் எழுதுங்க!

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s