தமன்னா பக்கத்தில் உட்கார ஆசையா?

சினிமா தியேட்டர்கள் குறித்து கேபிள் சங்கரின் இடுகை படித்த போது என் சிந்தனை உசுப்பேறியது.

வியாபாரத்தில் நிலைத்திருக்க அப்டேஷனும், தொடர்ச்சியான மேம்பாடுகளும் முக்கியம். பிட் படங்கள் ஓட்டுவதும் ஒரு வகையில் தொடர் மேம்பாட்டு நோக்கில் செய்யப் படுபவைதான்… survival!

கொஞ்சம் கவனித்துப் பார்த்தால் சினிமா தியேட்டர்கள் எங்கிருந்து எங்கே வந்திருக்கின்றன என்பது தெரியும். ஒரு காலத்தில் சினிமாக் கொட்டகை என்று அழைக்கப் பட்டன. சிறிய கீற்றுக் கொட்டகையில் ஆரம்பிக்கப் பட்டவை என்பது இதிலேயே புரியும்.

ஒற்றைப் புரொஜக்டர் இருக்கிற தியேட்டர்கள் அரைமணிக்கொரு தரம் பிரேக் செய்து ரீலை லோட் செய்வார்கள். இரண்டு புரொஜக்டர்கள் வைத்து அசத்துவது முதலில் வந்த முன்னேற்றம்.

இடைவேளையின் போது விளம்பர சிலைட்கள் போடுவார்கள். அப்போது மின்சாரம் தடைப்பட்டாலோ, மெஷின் பழுதுபட்டாலோ டிக்கட் பணம் வாபஸ் தரப்படமாட்டாது என்று தியேட்டர் நிர்வாகத்தினர் சிலைடு போடுவார்கள். இது ஜனங்களை கொஞ்சம் அசௌகர்யப் படுத்தியதால் கூட்டம் குறைந்தது. அதற்கப்புறம்தான் தியேட்டர்களில் ஜெனரேட்டர்கள் வந்தன.

76-77 இல் சென்னைப் புறநகர் தியேட்டர்கள் ஒரே டிக்கட்டுக்கு இரண்டு படங்கள் காட்டினார்கள். இது ஒரு யுக்தி.

எங்கள் ஊர் தியேட்டர் ஒன்றில் ஆங்கில ஏ சர்டிபிகேட் படங்களின் கல்பஜா காட்சிகளை ட்ரைலர் என்கிற பெயரில் ஓட்டி கூட்டம் சேர்ப்பார்கள்!

குளிர்சாதனம் என்பதை முதலில் நான் அனுபவித்ததே சினிமா தியேட்டரில்தான்.(எனக்கு மூத்தவர்கள் மின் விசிறியையே தியேட்டரில்தான் பார்த்திருக்கிறார்கள். கல்யாண வீட்டில் மின் விசிறியைப் பார்த்து விட்டு ‘ஹை சினிமா’ என்று கூவிய முன்னோர்கள் எனக்கு உண்டு!) குளிர்சாதன சௌகர்யத்தில் மூன்று மணி நேரம் இருக்கிற திருப்திக்காக ஏகப்பட்ட திராபைப் படங்களைப் பார்த்திருக்கிறேன்.

தியேட்டருக்கு வந்து டிக்கட் கிடைக்காமல் போகிறவர்களின் ஏமாற்றத்தைப் போக்க மாடியில் ஒரு மினி தியேட்டர் கட்டி அதன் காட்சி நேரங்களை அரை மணி தள்ளி வைக்கிற உபாயங்கள் வந்தன.

இன்றோ, பதினெட்டு திரைகள், ஷாப்பிங் சென்டர்கள், ஹோட்டல்கள், வீடியோ கேம்கள், பார்க்குகள் எல்லாம் தியேட்டருக்கு வந்து விட்டன.

மாயாஜாலுக்குப் போகும் போதெல்லாம் கொலஸ்ட்ரால்காரன் பஜ்ஜியைப் பார்ப்பது போல ஒருத்தரை ஒருத்தர் பார்த்துக் கொண்டு உட்கார்ந்திருக்கும் ஜோடிகளைப் பார்க்கிறேன். கொஞ்சம் ஜன நடமாட்டம் இல்லாத சமயமாக இருந்தால் நமுட்டு விஷமம் பண்ணிக் கொள்கிறார்கள். போகிற போக்கில் இதற்காக சில அறைகளை ஒதுக்கினாலும் ஆச்சரியப் படுவதற்கில்லை.

வேகமாக முன்னேறி வரும் மின்னணுத் துறையில் அடுத்த கண்டுபிடிப்பு ஹோலோகிராம் புரொஜக்டர் என்று மின்னணு பொறியாளரான என் மகன் நம்பிக்கை தெரிவிக்கிறான்.

திரையில்லாத முப்பரிமாண உருவமாக நமிதா ‘அர்ஜுனா அர்ஜுனா’ பாடினால் எப்படி இருக்கும் என்று யோசித்துப் பாருங்கள்!

அது மட்டுமில்லை, காட்சியிலிருந்து தமன்னா இறங்கி வந்து உங்கள் பக்கத்து சீட்டில் உட்கார்கிற மாதிரி எடுப்பது கூட ஹோலோகிராம் ப்ரோஜக்ஷன்களில் சாத்தியம்.

என்ன, அட்வான்ஸ் புக்கிங் பண்ணி வைத்து விடுவோமா?

Advertisements

6 comments

 1. உங்கள் புகைப்படத்தில் மட்டுமல்ல, எழுத்திலும் கொஞ்சம் சுஜாதா தெரிகிறார். வாழ்த்துக்கள் நண்பா!

  1. மகேஷ், இயன்றவரை தமிழ்ச் சொற்கள் பயன்படுத்த வேண்டும் என்கிற ஆசை, வாக்கியங்களின் நீளத்தைக் குறைப்பதில் இருக்கும் தீவிரம் இவை சுஜாதாவை ஞாபகப் படுத்துகின்றன என்று நினைக்கிறேன். மற்றபடி அவர் மாதிரி எழுத நினைத்தால் நான் கான மயிலாடக் கண்டிருந்த வான்கோழியாக ஆகி விடுவேன்.

   ஆனாலும் பெருமையாக இருக்கிறது. நன்றி.

 2. //போகிற போக்கில் இதற்காக சில அறைகளை ஒதுக்கினாலும் ஆச்சரியப் படுவதற்கில்லை//
  few years ago, mumbai theatres in association with closeup toothpaste introduced “closeup corners”, where some corner seats had no partitions between them.
  in present thou we do not have closeup corners, we do have “Couple Recliners” in many multiplex halls through out the country.

 3. மகேஷை வழி மொழிகிறேன். நான் தினமும் படித்து ரசிக்கும் மிகச் சில பதிவுகளில் உங்களுடையது முக்கியமான ஒன்று.

  விஞ்ஞான பூர்வ விவரங்களைப் பற்றி இன்னும் அதிகமா உங்களிடமிருந்து பெற்றுக் கொள்ள ஆசை. தொடரவும்!

 4. உங்கள் பதிவைப் படித்ததும் ஹோலோக்ராம் ப்ரொஜெக்டரைப் பற்றி இணையத்தில் தேடிப் படித்தேன். இந்தத் திரைவடிவம் வந்தால் ஒரு பெரிய சாதனையாகவே இருக்கும். அந்தக் காலகட்டத்தில் தமிழ் சினிமா கதாநாயகர்கள் பத்து பேரைப் பறந்தடிக்க மாட்டார்கள் என நம்புவோமாக. ஹோ.பு’வில் அடி நம் மேல் விழுவது போலல்லவா இருக்கும், மக்கள் விழுந்தடித்து திரையரங்கை விட்டு ஓடிடுவாங்க 🙂

எதுவா இருந்தாலும் எழுதுங்க!

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s