பாட்டில் இருக்கா?

என் ஆரம்பப் பள்ளி நாட்களில் எந்த சீக்குக்கும் டாக்டரிடமே போனது கிடையாது.

ஜுரம் என்றால் மிளகு கஷாயம். தொண்டைக்கட்டு என்றால் ஆடாதொடை கஷாயம். தலைவலி என்றால் சுக்குப் பத்து. எங்கேயாவது புண்ணோ காயமோ என்றால் மஞ்சப் பத்து.

ஸ்ரீஹரியின் பாட்டி வைத்தியம் புத்தகத்தை வைத்துக் கொண்டு கேன்சர், தொழு நோய் தவிர பாக்கி எல்லாவற்றுக்கும் கை மருந்து முயற்சிப்பாள் அம்மா.

எங்கள் வீடு இருந்த தெருக் கோடியில் டாக்டர் சீனிவாசன் இருந்தார். ஐந்து ரூபாய் கன்சல்டேஷன் பீஸ் வாங்குவார். அப்போது எங்கள் குடும்பத்து மாத வருமானம் நூற்றி முப்பது ரூபாய். ஆகவே சீனிவாசன் வீட்டை தூரத்திலிருந்து பார்த்து அவர் மகளை சைட் அடிப்பதோடு சரி. என்னை விட பெரிய செட் பையன்கள் அவர் மனைவியையே சைட் அடிப்பார்கள்.

ஒரு தரம் அம்மா ஊரிலில்லாத போது எனக்கு தொண்டைக்கட்டு, இருமல், ஜுரம். எனக்கும் அப்பாவுக்கும் சமைத்து போட்டு உதவி செய்ய ஒரு தூரத்து உறவுக்காரப் பெண் தாற்காலிகமாக வந்து போய்க் கொண்டிருந்தாள். அவளிடம் கஷாயம் வைக்கச் சொல்லலாம் என்கிற ஐடியாவில் அப்பா சமையற்கட்டுப் பக்கம் எட்டிப் பார்த்தார்.

அவள், இங்கதானே வெச்சேன் என்று கரியடுப்பில் இருந்த கரியை துழாவி தேடிக் கொண்டிருந்தாள்.

கொஞ்சம் விசாரித்ததில் காலி ஈயச்சொம்பை கரியடுப்பில் வைத்து விட்டு கக்கூஸ் போய் விட்டாள் என்பது தெரிந்தது. ஈயம்தான் கிடைத்தது, சொம்பு கிடைக்கவில்லை.

இவளிடம் கஷாயம் வைக்கச் சொன்னால் அரளி விதையை காய்ச்சிக் கொடுத்து விடுவாள் என்கிற பயம் அப்பாவுக்கு ஏற்பட்டிருக்க வேண்டும்.

“நீ ஆஸ்பத்திரிக்குப் போய் காட்டிட்டு வந்துடு” என்று என்னை அனுப்பினார்.

“ஏண்டா கண்ணா, ஆஸ்பத்திரிக்குதானே போறே, அப்படியே பரசுராமன் கடைலே இந்த ரெண்டு ஐட்டம் வாங்கிண்டு வந்துடேன்” என்று ஒரு சீட்டைக் கொடுத்தாள் சரோஜா மாமி. அதில் பிரம்மனுக்குக் கூட புரியாத எழுத்தில் இரண்டு ஐட்டங்கள் எழுதியிருந்தன. ஆறு, கால் என்கிற மாதிரி நம்பர்கள் மட்டும் ஓரளவு புரிந்தது. ஒரு சின்ன பாட்டிலை வேறு கொடுத்தாள்.

நாங்கள் அரசாங்க ஆஸ்பத்திரியை தர்மாஸ்பத்திரி என்று அன்பாக அழைப்போம்.

தர்மாஸ்பத்திரி இரண்டு வகை. ஒன்று சின்னாஸ்பத்திரி. அங்கே அவுட் பேஷன்ட்டுகளை மட்டும் ட்ரீட் செய்வார்கள். பெரியாஸ்பத்திரியில் தான் பேஷன்ட்டுகளை அட்மிட் செய்து ட்ரீட் செய்வார்கள். நாங்கள் எல்லோரும் சின்னாஸ்பத்திரின்னா அவுட் பேஷன்ட், பெரியாஸ்பத்திரின்னா பேஷன்ட் அவுட் என்று சொல்வதுண்டு.

தர்மாஸ்பத்திரியில் ஓப்பி சீட்டு போடுவது என்பது முதல் பார்மாலிட்டி.

ராட்சசி மாதிரி இருக்கிற ஒரு பொம்பிளை முத்திரை அடித்த சீட்டு ஒன்றில் நம்பர் எழுதித் தருவாள். ஒரு ரூபாயோ எட்டணாவோ கொடுக்கிறவர்களுக்கு முதல் பத்து நம்பர்கள் எழுதித் தருவாள். என் மாதிரி அன்னக் காவடிகளுக்கு இருபத்தி மூணு, முப்பத்தி நாலு என்று இஷ்டத்துக்கு நம்பர் எழுதுவாள்.

டாக்டரிடம் போனால்,

“என்ன சாப்ட்டே?”

“வெளிக்கி போச்சா?”

“வாந்தி வருதா?”

என்கிற மாதிரி ஸ்டான்டார்ட் கேள்விகளை வாயில் தர்மாமீட்டரை சொருகி விட்டு கேட்பார். தலையாட்டலிலும் கை அசைவிலும் நாம் பதில் சொல்லிக் கொண்டிருக்க, அதைக் கவனிக்காமல் ஒரு சீட்டில் எதையோ கிறுக்கி கையில் கொடுப்பார்.

எனக்கு அப்படி சீட்டு எதுவும் தராமல் “தொண்டைக்கு போடணும்” என்று சொல்லி அனுப்பி விட்டார்.

தொண்டைக்குப் போடுவது என்பது மகா பிராணாவஸ்தையான விஷயம்.

வயலட் நிறத்தில் எதோ ஒன்றை துடைப்பக் குச்சியில் சுற்றின பஞ்சில் நனைத்து தொண்டையில் விடுவாள் ஒரு ராட்சசி. அவள் எங்கேயோ பார்த்தபடி வாயில் நுழைக்கிற குச்சி குடல் வரை போகும்.

உவ்வேக் என்றால் ‘என்ன உவ்வேக்கு?’ என்று மண்டையில் குட்டுவாள்.

ஒன்றும் தெரியாத மாதிரி போய் மருந்து வாங்கும் க்யூவில் நின்று விட்டேன்.

என் முறை வந்த போது கம்பவுண்டர்,

“சீட்டு எங்கே?” என்று மிரட்டினார்.

பையில் சரோஜா மாமி கொடுத்த காகிதம் இருந்தது. எடுத்து பவ்யமாக நீட்டினேன்.

த/அ என்று போட்ட ஆறு மாத்திரைகளை ஒரு காகிதத்தில் மடித்து நீட்டிக் கொண்டே,

“பாட்டில் இருக்கா?” என்றார்.

மாமி கொடுத்த பாட்டில் இருந்தது. எடுத்து நீட்டினேன்.

ரத்தச் சிவப்பான ஒரு திரவத்தை அதில் கால் லிட்டர் நிரப்பி நீட்டிக் கொண்டே,

“ம்ம்ம்… அடுத்தது யாரு?” என்றார்.

திரும்பி வந்த போது சரோஜா மாமி,

“ஏண்டா காபி வில்லையும், மண்ணெண்ணையும் வாங்கிண்டு வந்தியா?” என்றாள்.

Advertisements

15 comments

 1. செம்ம ரவுசு…

  பழைய நினைவுகளை கிளறி விட்டீர்கள்.. எங்கள் வீட்டிற்கு அருகாமையில் ஊரின் அரசு மருத்துவமனை…. ஹ்ம்ம். அது ஒரு அழகிய நிலாக்காலமாத்தான் இருக்குது! 🙂

 2. கலக்கல்.
  //வயலட் நிறத்தில் எதோ ஒன்றை துடைப்பக் குச்சியில் சுற்றின பஞ்சில் நனைத்து தொண்டையில் விடு..//
  பழைய நினைவுகளை கிளறி விட்டீர்கள், எனக்கும்.

  அந்த வயலட் பெயர், Gentian violet.
  fungal மற்றும் bacteria infection க்கு
  ஒரு காலத்தில் சிறந்த மருந்து, அது.

 3. அருமை…சாதாரண நிகழ்வு…மிகவும் சுவாரஸ்யமாக உள்ளது நீங்கள் படைக்கும் விதம் …நீங்க சினிமா வில் திரைக்கதை ஏதும் எழுதி இருகிறீர்களா …

  1. நிலாப்ரியன், எழுதணும்ன்னு ஆசைதான். என்னைக்காவது ஒரு நாள் நம்ம ப்ளாக்கர்ஸ் எல்லாரும் சேர்ந்து ஒரு படம் எடுக்க தீர்மானிக்கிறப்போ அதுக்கு திரைக்கதை, வசனம், இசை எல்லாப் பொறுப்பையும் எடுத்துக்க ஆசை.

 4. எனக்கு நினைவு தெரிஞ்ச நாளா, தர்ம ஆஸ்பத்திரிகளில் எல்லா ப்ரிஸ்க்ரிப்ஷன் களுக்கும் ஒரு pink நிற மருந்து- ஒரு ஹெக்சகன் வடிவ பாட்டிலில் நிரப்பி கார்க் வைத்து அடைத்து கொடுப்பார்கள். சிவப்பு நிற மருந்து இதுவரை பார்த்ததே இல்லை. அதோடு தர்ம ஆஸ்பத்திரி என்றாலே காய்ந்த ரொட்டியும் கொய்னா மருந்தும் தான் ஞாபகம்.

 5. சில பேர் சொன்னதுதான். கொஞ்சம் வாத்தியார் நடையை நினைவு படுத்தும் ஸ்டைல் உங்களுக்கு. நல்லா இருக்கு. ஹாஸ்யம் மிக மிக முக்கியம். உங்களுக்கு இயல்பாக வருகிறது. இப்படியே தொடருங்கள்.

  மீசையில்லாத உங்கள் புகைப்படத்திலும் சுஜாதா ஞாபகம் வருகிறது 🙂

  அனுஜன்யா

எதுவா இருந்தாலும் எழுதுங்க!

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s