குரும்பூர் குப்புசாமி முதல் சிட்னி ஷெல்டன் வரை

என் இலக்கிய ஆர்வத்துக்கு வித்திட்டது எஸ்.பி.சாமி முடி திருத்தகம்.

தினத்தந்தி, மாலை முரசு, ராணி மூன்றும் இருக்கும்.

உண்மையில் பக்கிரிக்கு (பக்கிரிசாமி) வரும் வருமானத்தில் இந்த பத்திரிகைகளுக்கு அவரால் பில் கட்ட முடியாது. ஏஜென்ட் இதையெல்லாம் போட்டு விட்டு மொத்தக் குடும்பத்துக்கும் (மொத்தக் குடும்பம் என்பது அவரது சகோதர சகோதரிகள் குடும்பத்தையும் உள்ளடக்கியது) இலவசமாக முடி திருத்தம் மற்றும் முக சவரம் செய்து கொண்டு விடுவார். சரியாகக் கணக்கிட்டால் பக்கிரிக்கு இதில் நஷ்டம்தான். ஆனால் வேகன்சி இல்லை என்று ஓடி விடாமல் கஸ்டமர்களை தக்க வைத்துக் கொள்ள முடிந்ததால் பொறுத்துக் கொண்டார்.

தந்தியில் ஆண்டிப்பண்டாரம் பாடுகிறார், குருவியார் பதில்கள், கடல் கன்னி மூன்றும் படிப்பேன்.

பரிதாபமாக செத்தார், துடிதுடித்து செத்தார், பலே ஆசாமி முதலான பிரயோகங்களும், அழகி கைது செய்திகளும் என்னை ரொம்பவும் கவரும். குருவியார் பதில்களில் மார்கட்டு சரிந்தால் மார்கெட்டு சரியும் ரக சிலேடைகளுக்கு அர்த்தம் புரியாமல் அசந்தர்ப்பமாக பெரியவர்களுக்கு மத்தியில் கேட்டு வைத்தது இன்னும் ஞாபகம் இருக்கிறது.

அன்புள்ள அல்லியில் நடிகை சோ அண்ட் சோ வின் முகவரி என்ன, இன்னாரை நான் காதலிக்கிறேன் கல்யாணம் செய்து கொள்வாரா, இன்னார் நீச்சல் உடையில் நடிப்பாரா, இன்னாரின் அடுத்த படம் என்ன என்கிற மாதிரி ஐந்தாறு வகை கேள்விகளே சைக்ளிக்காக ரிப்பீட் ஆகும்.

இலக்கிய வளர்ச்சியில் அடுத்த படி படிப்பகங்கள்.

புதுக் காங்கிரஸ் அலுவலகத்தில் நேரு படிப்பகம், தி.மு.க. அலுவலகத்தில் அண்ணா படிப்பகம், பழைய காங்கிரஸ் அலுவலகத்தில் காமராஜ் படிப்பகம், கம்யூனிஸ்ட் அலுவலகத்தில் ஜீவா படிப்பகம்.

வேலை நாட்களில் இந்தப் படிப்பகங்கள் பக்கம் போனால் ஊரில் வெட்டி ஆபிசர்கள் எத்தனை பேர், யார் யார் என்பதெல்லாம் தெரிந்து விடும். ஞாயிற்றுக் கிழமைகளில் போனால், கிழிந்த அழுக்கான பழைய பேப்பர்கள் தவிர மற்ற எல்லாவற்றையும் யாராவது வாசித்துக் கொண்டிருப்பார்கள்.

அரசாங்க லைப்ரரிகளின் கதையும் இதுதான்.

உண்மை, மஞ்சரி, கூரியர், அமெரிக்கன் ரிப்போர்ட்டர், கலைக்கதிர் இவையெல்லாம் கேட்பாரற்று கிடக்கும். குமுதம், விகடன், கல்கி எல்லாம் பிசியாக இருப்பதுடன் அடுத்து ஒரு ஆள் புக்கிங் செய்து விட்டு அவர் தோள்பட்டையில் முகவாயை தேய்த்த படி உட்கார்ந்திருப்பார்.

இரண்டு ரூபாய் கட்டினால் தினம் ஒரு புஸ்தகம் எடுக்கலாம் என்பதுதான் பெரிய கவர்ச்சி.

அங்கே நான் எடுத்துப் படித்தவை பெரும்பாலும் தமிழ்வாணன் மர்ம நாவல்கள்.

மலர்க்கொடி, ஒளிக்கொடி, நச்சன், நெடுங்கிள்ளி, நலங்கிள்ளி என்கிற மாதிரி பாத்திரங்களுடன் டிடக்டிவ் நாவல் என்றால் அதுவே ஒரு புதுமை. மேலும், மின்பொறி விளக்கு, விசையைப் பொருத்தினான், தொலைபேசி, ஒலிவாங்கி, குழல் விளக்கு என்கிற மாதிரி பிரயோகங்கள் ஒரு சுவாரஸ்யம். தமிழ்வாணன் நாவல்களில் பெரும்பாலும் இருபத்தி மூன்றாவது அத்தியாயத்தில் அறிமுகமாகிற காரக்டர்தான் குற்றவாளியாக இருப்பார். இருபத்தைந்தாவது அத்தியாயத்தில் கதை முடிந்து விடும்.

சங்கர்லாலை வர்ணிக்கிற போது கலைந்த தலைமுடி, தளர்ந்த கழுத்துப்பட்டை என்று படிக்கிற போது ஏனோ மனதுக்குள் கிழிந்த ஜட்டி, அழுக்கு பனியன் என்று சேர்த்துக் கொள்ளத் தோன்றும்! ஒருதரம் வீட்டிலிருந்த மேசையை தூக்கி நகர்த்தும் போது மேசையின் காலுக்கடியில் என் கால் மாட்டிக் கொண்டது. ஐயோ அம்மா என்று நான் அலற, அப்பா ‘அங்கே என்னடா சத்தம்?’ என்று கேட்ட போது என் சகோதரர் ‘சங்கர்லாலா இருந்தா மேசை மேல் காலைத் தூக்கிப் போடுவார். இவர் ஜவர்லால் இல்லையா, கால் மேலே மேசையைத் தூக்கி போட்டுகிட்டாரு’ என்றார்.

அதற்கப்புறம் இலக்கிய ரசனை வளர்ந்தது வேலைக்குச் சேர்ந்த பிறகு.

தினமும் குரோம்பேட்டையில் இருந்து பீச் ஸ்டேஷன் வரை ரயிலில் போக வேண்டியிருக்கும்.

அது ஒரு பத்திரிகைகளின் பொற்காலம். விகடன், ஜூனியர் விகடன், குமுதம், மாலைமதி, குங்குமம், தாய், பாக்யா, உயிருள்ளவரை உஷா, இதயம் பேசுகிறது, சாவி, திசைகள், துக்ளக், கணையாழி, கலைமகள், கல்கி, கல்கண்டு, முத்தாரம், பொம்மை, பேசும்படம் என்று ஏகப்பட்ட தமிழ் இதழ்கள். எல்லாவற்றையும் வாங்கி விடுவேன் அட்டைக்கு அட்டை படித்து விடுவேன். இதையெல்லாம் படித்தும் பசி தீராது. பிளாட்பாரத்தில் விற்கிற பழைய பெர்ரி மேசன் புஸ்தகங்களை வாங்கி படிக்க ஆரம்பித்தேன்.

வேலூர் போன பிறகு சாரதி மேன்ஷனில் ஒரு லெண்டிங் லைப்ரரியில் மெம்பராகி சிட்னி ஷெல்டன், பிரெட்ரிக் போர்சித், ஜெப்ரி ஆர்ச்சர் எல்லாரையும் படித்தேன்.

அதற்கப்புறம் கதை படிக்கிற ஆர்வம் குறைந்து விட்டது.

எட்வர்ட் டி போனோ, ஸ்டீபன் கோவே ரக புத்தகங்கள் வாசித்தேன்.

இப்போது அதுவும் அலுத்து நான் படிக்கிற ஒரே புஸ்தகம், ஞாயிற்றுக் கிழமைகளில் தினமலரின் வாரமலர் மட்டுமே! அதில் வரும் கறுப்புப் பூனை கிசு-கிசு, குறுக்கெழுத்துப் போட்டி படித்துதான் என்னுடைய ஜெனெரல் நாலெட்ஜை வளர்த்துக் கொள்கிறேன்.

Advertisements

17 comments

 1. // அதில் வரும் கறுப்புப் பூனை கிசு-கிசு, குறுக்கெழுத்துப் போட்டி படித்துதான் என்னுடைய ஜெனெரல் நாலெட்ஜை வளர்த்துக் கொள்கிறேன். //

  இன்னும் வளர வேண்டியிருக்கா என்ன…?

 2. நானும் முடி திருத்தகத்தில் இருந்து தான் இலக்கிய ( ? ) அறிவை வளர்க்க ஆரம்பித்தேன். நீங்க எடுத்தோன தேர்ட் கியரில் போயிருகிங்க. நான் சிறுவர் மலர், அம்புலிமாமா, கோகுலம் ( இதெல்லாம் லைப்ரரி தான் ), ராணி காமிக்ஸ் என்று ஆரம்பித்தேன். இப்பவும் பழைய சிறுவர்மலர், அம்புலிமாமா பார்த்தால் படிக்க முடிகிறது. இந்த வாரமலர் -ஐ கண்டாலே பிடிக்கமாட்டேன்கிறது

 3. /
  வேலூர் போன பிறகு சாரதி மேன்ஷனில் ஒரு லெண்டிங் லைப்ரரியில் மெம்பராகி சிட்னி ஷெல்டன், பிரெட்ரிக் போர்சித், ஜெப்ரி ஆர்ச்சர் எல்லாரையும் படித்தேன்.

  அதற்கப்புறம் கதை படிக்கிற ஆர்வம் குறைந்து விட்டது.
  /

  இதுக்குதான் இங்கிலிஸ் பொஸ்தவம் எல்லாம் படிக்கப்பிடாதுங்கிறது. இல்லைனா எம்மாம் பெரிய இலக்கியவியாதி ஆகியிருக்கலாம் தெரியுமா?

  ஸ்கூல் படிக்கிற காலத்தில லைப்ரரில சங்கர்லால் கதை எல்லாம் நிறைய நானும் படிச்சிருக்கேன்.
  :))

 4. ரொம்ப‌ ந‌ல்லா எழுதியிருக்கீங்க‌..மாவ‌ட்ட‌ கிளை நூல‌க‌ப் ப‌திவேடும் அதோடு க‌ட்டிய‌ பென்ஸிலும், சிறுவ‌‌ர் ம‌ல‌ருக்கு க்யுவில் நின்ற‌தும் ஞாப‌க‌ம் வ‌ருது ஸார்.
  -Toto
  http://www.pixmonk.com

 5. எல்லா விஷயங்களைப் பற்றியும் நன்றாக எழுதுகிறீரகளே எப்படி என்று யோசித்து இருக்கிறேன். நல்ல அடிப்படையில் நிறைய பத்திரிக்கைகள் படித்து விஷயங்களை, உள்வாங்கி எல்லாவற்றிலும் கவனம் செலுத்தி தேர்ச்சி பெற்று விட்டீர்களென்று இப்பொழுது புறிகிரது. சாமான் கட்டி நியூஸ் பேப்பர் வந்தால் அந்த கிழிந்த பேப்பரையும் விடாது படிக்கும் பழக்கம் எனக்கு ஒருகாலத்தில் இருந்தது. கணினியில் படிப்பதைவிட இப்போது மும்பை வந்திருக்கும் எனக்கு வார, மாத, தினப்பதிப்புகளை அப்படியே படிக்கக் கிடைக்கும் போது ஏற்படும் சந்தோஷம் சொல்லி மாளாது.

  1. chollukireen : தேர்ச்சி பெற்றேனோ இல்லையோ, உங்கள் மாதிரி புத்திசாலி வாசகர்களைப் பெற்றிருக்கிறேன். அது ஆஸ்க்கார் விருதை விட பெரிய பரிசு!!

 6. தவறாமல் உங்கள் வலைப்பக்கத்தை படித்து வருகிறேன்.

  இனிமையான பழைய நினவுகளை கிளறி விட்டீர்கள்.

  தினமும் வீட்டிற்கு வரும் தினத்தந்தியுடன், சனிக்கிழமை தோறும் வரும் குமுதம் (55 காசு), கல்கண்டு (25காசு) வாங்க வீட்டில் தரும் ஒரு ரூபாயில் மீதமுள்ள 20காசுக்கு அணில் சிறுவர் புத்த்கம் வாங்கி படித்த அனுபவம் எனக்கும்.

  பின்னாளில் சங்கர்லாலுக்குப் பிறகு, தமிழ்வாணனே துப்பறிவதையும் படித்ததுண்டு.

  பழைய நினைவுகள் என்றும் இனிமையானவை.

  நன்றி.

 7. //என் சகோதரர் ‘சங்கர்லாலா இருந்தா மேசை மேல் காலைத் தூக்கிப் போடுவார். இவர் ஜவர்லால் இல்லையா, கால் மேலே மேசையைத் தூக்கி போட்டுகிட்டாரு’ //

  உங்கள் சகோதரருக்கும் நல்ல நகைச்சுவை உணர்ச்சி இருக்கும் போல இருக்கே.. அவர் ப்ளாக் எங்க இருக்கு?

  நல்ல இலக்கியத் தொகுப்பு… வாழ்த்துக்கள்..

 8. தெலுங்கு சம்பிரதாயத்தில் பூஜை முடிந்து வாயன தானம் கொடுக்கும்போது இச்சேனி வாயனம் என்று சொல்லிக் கொடுப்பார்கள் அதாவது நான் இந்தப் பொருளை அன்பாகக் கொடுத்திருக்கிரேன் என்று.
  வாங்கிக் கொள்பவர்கள் தீஸு கொண்டினி வாயனம் என்று பதில் சொல்ல வேண்டும். பெற்றுக் கொண்டேன் என்று அர்த்தம். நீங்கள் எனக்கே திருப்பி அதைச் சொல்ல வைத்து விட்டது போன்ற சமத்காரமான பதில். பாராட்டுகிறேன்.

  1. Abu Zuza : ஒரு படைப்பாளியின் பெருமை என்ன தெரியுமா? அவன் சொல்லும் விஷயங்கள் படிக்கிறவர்களை தம் அனுபவம் போல் நினைக்க வைப்பது! நன்றி… நன்றி… நன்றி அபு….

எதுவா இருந்தாலும் எழுதுங்க!

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s