தாரமங்கலத்தில் வாலி வதம்

கோயில்களில் கடவுளைத் தவிரவும் பார்க்கவும், கற்கவும் நிறைய விஷயங்கள் இருக்கின்றன.

சேலத்துக்கு ஒரு திருமணத்துக்காகப் போயிருந்தேன். என்னைச் சுற்றி ஒரு கூட்டம் உட்கார்ந்து நேயர் விருப்பம் கேட்க, பாட்டுப் பாடிக் கொண்டிருந்தேன். பல்கலைக்கழக நூற்றாண்டு விழா மண்டபத்தில் மெல்லிசைக் கச்சேரிக்கு சான்ஸ் கிடைத்த மாதிரி உற்சாகமாகப் பாடிக் கொண்டிருந்தேன்.

சம்பந்தி வீட்டுக்காரர் ஒருவர் கக்கத்தில் இடுக்கிய தோல் பையோடு வேகமாக வந்தார்.

“என்னதான் நாட்டுப்பாடலாக இருந்தாலும் ஒப்பாரி எல்லாம் கல்யாண வீட்டில வேண்டாம் சார்” என்றார் பதட்டமாக.

என் சங்கீதத்தை இவ்வளவு சுருக்கமாகவும் தெளிவாகவும் யாரும் விமர்சித்ததே இல்லை.

அவரை அலட்சியம் செய்து விட்டு தொடர்ந்தேன்.

கொஞ்ச நேரம் கழித்து மறுபடி வந்தார்.

“பக்கத்திலே இருபது கிலோமீட்டர் தூரத்திலே தாரமங்கலம்ன்னு ஒரு இடம் இருக்கு. அங்கே கைலாசநாதர் கோயில் நல்லா இருக்கும். பார்த்துட்டு வாங்க” என்றார்.

பொதுவாகவே என் சங்கீதம் எல்லாரையும் ரத்தக் கொதிப்புக்கு உள்ளாக்கும். எப்படியாவது என்னை அங்கிருந்து அப்புறப் படுத்த ஆசைப்படுகிறார் என்பது புரிந்தது.
 
புறப்பட்டோம்.
 
சேலத்தில் குழந்தைகள் உட்பட எல்லாப் பெண்களும் ஏகத்தாருக்கு வெட்கப்படுகிறார்கள். ‘தாரமங்கலம் போகிற ரோடு இதானே’ என்று கேட்டதற்கே ஒரு சிறுமி முகம் சிவந்து, உடல் குழைந்து, தலை குனிந்து “ஆமாங்க” என்றதும் ‘சரியாத்தான இருக்கேன்?’ என்கிற மாதிரி ஒருதரம் குனிந்து பார்த்துக் கொண்டேன். அதற்கும் வாயைப் பொத்திக் கொண்டு ‘புர்ர்ர்ர்’ என்று சிரித்தாள்.
 
சேலத்திலிருந்து தாரமங்கலம் சாலை செம்மையாக இருக்கிறது. வழியில் செவ்விளநீரும் கிடைக்கிறது. ஆளுக்கு ரெண்டு மொந்தை அடித்தோம்.
 
கோயில் நன்றாகவே இருக்கிறது.

முழு கோபுரம் தெரிகிற மாதிரி எடுத்து நான் வெற்றி பெற்ற முதல் இடம்!

 
கோயில் பற்றி ப்ளாக்கில் எழுதுகிற ஆர்வம் இருப்பது தெரிந்ததும் குருக்களின் உதவியாளர் உற்சாகமாக நிறைய தகவல்கள் சொன்னார்.
 
கோயில் மேற்கு பார்த்து இருப்பதால், மாசி மாதம் 9,10௦,11 தேதிகளில் சூரிய ஒளி மாலையில் நந்தியின் கொம்பு வழியாக லிங்கத்தின் நெற்றியில் மூன்றாம் பிறை மாதிரி பிம்பத்தை ஏற்படுத்தும் என்றார். அந்த நாட்களில் கோயிலில் ராணுவத்துக்கு ஆள் எடுக்கிற மாதிரி கூட்டம் இருக்குமாம்.
 
ஒற்றைக் கல்லில் கோர்க்கப்பட்ட மாதிரி செதுக்கப்பட்ட சங்கிலிகளைக் காட்டினார்.

கூரையில் தொங்கும் சங்கிலிகள் தெரிகின்றனவா?

 
மன்மதன் சிலையிலிருந்து ஒற்றைக்கண் மூடி பார்க்கிற போது ரதி சிலை தெரிகிறது. ரதி சிலையிலிருந்து டிட்டோ. ரகசியமானது காதல் என்கிற அரும் பெரும் தத்துவத்தை(!) இந்த சிற்ப வேலைப்பாடு விளக்குகிறது.
 
பாதாள லிங்கம் ஒன்று இருக்கிறது. காசியில் போலவே எல்லாரும் கையில் பிடித்தபடி பிரார்த்திக்கிறார்கள். அப்படிப் பிரார்த்திக்கிற விஷயங்கள் முக்கியமாக கல்யாணம் மற்றும் குழந்தைப் பேறு காரண்டியாக பலிக்கும் என்றார்கள். ஏற்கனவே கல்யாணம் ஆயிருந்தாலுமா? என்று கேட்க நினைத்தேன். தப்பாகப் பிரார்த்தித்தால் உம்மாச்சி கண்ணைக் குத்தி விடும் என்கிற பயத்தில் வாயை மூடிக் கொண்டேன்.
கோயில் பொதுவான தரைமட்டத்திலிருந்து ஐந்தடி இறக்கமாக இருக்கிறது. அதனால் கோயிலுக்கு வந்துவிட்டுப் போகும் போது எல்லாரும் உயர்ந்து போவார்கள் என்று வியாக்யானம் செய்தார். 
 
சிவனுக்கு பார்வதியை தாரை வார்த்துக் கொடுத்த இடம் என்பதால் தாரைமங்கலம் என்று பெயர் வந்ததாகச் சொன்னார்.
 
ஆனால் சன்னதியில் வாலி வதம் சிற்பங்கள் இருந்தன. ராமனிடமிருந்து வாலி தெரிகிறார், வாலியிடமிருந்து ராமர் தெரியவில்லை. அந்த ஆங்கிளை அழகாக மெய்டைன் செய்திருக்கிறார் சிற்பி. வாலி மனைவி பெயர் கூட தாரைதானே, அந்தத் தாரைக்கும் ஊர்ப்பெயருக்கும் ஏதாவது தொடர்பு இருக்குமோ?

ராமரிடமிருந்து....

 
சுவாமி ஓம்கார் என்ன சொல்வார்?
Advertisements

16 comments

 1. தாரமங்கலம் சிற்ப வேலைபடுகளிலும் சரி, ஆடை உற்பத்திகள், கிழக்கே கைலாசநாதர் கோவில், மேற்கே முருகர் கோவில், வடக்கே பத்ரகாளி அம்மன் கோவில், தெற்கே மாரி அம்மன் கோவில் என்று அழகாக வடிவமைக்கப்பட்டு, கிராநிட் கல் பதித்த மேற்கூரைகளில் ஆமை, மீன், குரங்கு, முதலை போன்ற சிற்பங்கள் கற்களில் செதுக்கப்பட்டு, கல்லினால் ஆன சுழலும் தாமரை மேற்கூரையில் மேலும் அதிசயக்கத்தக்க வாறு வடிவமைக்கப்பட்டு மேலும் நீங்கள் குறிப்பிட்டு இருப்பது போல் இராமாயண கால சிற்பங்கள், ரதி மன்மதன், மற்றும் சூரியன் நிழல் போன்ற அதிசயங்களும் பெற்றுமேலும் அனேக சுதந்திர போராட்ட தியாகிகள் தோன்றியதும் இந்த ஊரில் தான். மக்கள் விருந்தோம்பலிலும் மற்றவர்களை மதிப்பதிலும் முன்னோடியாக இருந்ததும் இந்த ஊர் தான். இத்தகைய அனைத்து “தரங்களும்” பெற்று “தரமான” மங்கலம் பின்பு தாரமங்கலம் ஆனது. மற்றபடி தாரைக்கு சம்பந்தம் இருப்பதாக தெரியவில்லை. .

 2. அடேடே நான் போனபோது மிஸ் பண்ணிவிட்டேனே என்று எண்ணவைத்த எழுத்துக்கள், படங்கள். விவரங்கள் சுவாரஸ்யமாக அறிந்து சொல்லி இருக்கிறீர்கள். அதற்கு வந்துள்ள என்சியின் பதிலும் தகவல் களஞ்சியம். அறிந்து கொண்டேன். அருமை.

 3. அவர் என்ன சொல்லுவார்…:) ?

  ஸ்ரீராமர் வணங்குவது சிவனை.. சிவன் உச்சரிப்பது ராம நாமத்தை.. அதனால் இராமேஸ்வரம் என்ற இடத்தில் சிவனுண்டு… ஸ்ரீ ராமனும் உண்டு.

  அது போல சிவன் கோவிலுக்கும் ஸ்ரீ ராமனுக்கும் தொடர்பு உண்டு. தாராமங்கலம், தாரா புரம் என பல ஊர்கள் சேலம் அருகில் உண்டு.

  தாரசுரம் உங்க ஊரின் பக்கம் தானே? அது போல சிற்பத்தால் சிறந்த கோவில்கள் கொண்டது நம் ஊர்.
  ஆனால் நம் மக்கள் அதில் கெமிக்கல் விபூதி கொட்டியும், பொங்கல் தின்ற கையை துடைத்தும் மெருகேற்றுகிறார்கள்.

  உங்க பெயர் சுக்ரீவனா? ஏன்னா தாரா மேல ஒரே கண்ணா இருக்கேளே?

 4. அன்பின் ஜவஹர்

  அருமை அருமை – ஒரு கோவிலுக்குச் சென்றால் இப்படி எல்லாம் விபரங்கள் படங்களுடன் சேகரித்து இடுகை இட இயலும் என்பதனை நிரூபித்திருக்கிறீர்கள். நலல் பயணக்கட்டுரை – ஆன்மீக விஜயமா கோவிலுக்கு – நல்வாழ்த்துகள் ஜவஹர்

 5. நல்ல பதிவு ஜவஹர். உ.வே.சா கூட ‘என் சரித்திரத்தில்’ தாரமங்கலம் பற்றி எழுதியிருக்கிறார்.

  காஞ்சி கைலாசநாதரைக் கண்ட பின் தாரமங்கலம் கைலாசநாதர் ஏனோ என் மனதைக் கவரவில்லை. (Kஉற்றமாகச் சொல்லவில்லை. புதுவாகச் சொல்லி வைக்கிறேன்)

 6. வாலி வதைப் படலத்தை அதன் முழு வீச்சில் பார்க்க வேண்டுமானால் தஞ்சை கும்பகோணம் சாலையில் இருக்கும் புள்ளமங்கைக்குச் செல்லுங்கள்.

 7. தார மங்கலம் க்ஷேத்ராடனம் போய்வந்த உணர்வு.கார்த்திகைத் திருநாள். கைலாஸநாதர் தரிசித்த திருப்தி. நிறைய விஷயங்கள் அறிய முடிந்ததில் ஜோக்கும் ரஸிக்க முடிந்தது.

எதுவா இருந்தாலும் எழுதுங்க!

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s