ஒட்டகத்தை கட்டி வை..

கோபம் இருக்கிற இடத்தில் குணம் இருக்கிறதோ இல்லையோ நகைச்சுவை உணர்வு இருக்கும்.

எனக்கு பொதுவாள் என்றொரு பாஸ் இருந்தார் என்று ஏற்கனவே வேறொரு இடுகையில் சொல்லியிருக்கிறேன். பிரகாஷ்ராஜை நினைவு படுத்தும் பார்வையும் குரலுமாக மலையாளத்தில் நனைத்து ஆங்கிலமும் தமிழும் பேசுவார். மகா கடுப்பெடுத்த ஆசாமி. இல்லை, முடியாது என்கிற வார்த்தைகளைக் கேட்டாலே சாமி வந்து விடும்.

அம்மோனியம் குளோரைடு தயாரிக்கிற பிரிவில் வேலை செய்து கொண்டிருந்தேன்.

உற்பத்தி தடைப்பட்டிருந்ததைப் பற்றிக் கவலைப் படாமல் வழக்கமாக உதவிக்கு எடுக்கும் காண்டிராக்ட் ஆட்களை அன்றைக்கும் எடுத்திருந்தேன். வேலை இல்லாத அந்தப் பயல்கள் சும்மா இருந்திருக்கலாம்.

மிகச் சரியாக அந்தப் பக்கம் பொதுவாள் போகிற போது உடைந்த ப்யூரெட்டை கத்தி மாதிரி கையில் வைத்துக் கொண்டு ‘மர்த்கா தர்த் நஹீ’ என்று வீர வசனம் பேசி நடித்துக் கொண்டிருந்திருக்கிறார்கள்.

அவருக்கு ரத்த அழுத்தம் ஜிவ்வென்று நூற்றி எண்பதுக்கு ஏறியது.

‘என் பாட்டில் குற்றம் கண்டவன் எவன்?’ என்று கேட்க சிவாஜி வருவது போல நடை போட்டு மேலேறி வந்தார்.

“காலையிலிருந்து எத்தனை மூட்டை உற்பத்தி பண்ணியிருக்கிறாய்?”

“ஒன்றுமில்லை சார்”

“ஏன்?”

“ரியாக்டரில் பிரச்சினை”

“எப்போதிலிருந்து?”

“நேற்று ராத்திரியிலிருந்து”

இதற்கு அவர் சொன்னதை அப்படியே ஆங்கிலத்தில் சொன்னால்தான் சிறப்பாக இருக்கும்,

“Then why the hell these two camels are religiously taken and allowed to loiter around?”

இதை அவர் கேட்டது அவர் மூக்கு என் மூக்கில் உராய்கிற தூரத்தில் நின்று எட்டு கட்டை சுருதியில் மூன்றாவது ஸ்தாயியில்.

பயத்தில் சகலமும் ஒடுங்கினாலும் அதற்கு என்ன அர்த்தம் என்று தெரிந்து கொள்கிற ஆர்வம் என்னைப் பாடாய்ப் படுத்தியது.

அவரிடம் ஒரு விசேஷம்.

இவ்வளவு கோபத்திலிருந்து விடுபட அவருக்கு சில விநாடிகள்தான் ஆகும். ‘பதினாலாம் ராவுதிச்சது மானத்தோ கல்லாய் கடபத்தோ’ என்கிற மாதிரி எதோ ஒரு பாட்டை முணுமுணுத்த படி சிகரெட்டை பற்ற வைத்தார். என்னை ஒருதரம் ஏற இறங்கப் பார்த்தார்.

“ஏன் இப்படி நன்ஸ் ஹாஸ்டலில் சிக்கின பிரம்மச்சாரி போல இருக்கிறாய்?” என்றார். அதுவும் எனக்குப் புரியவில்லை. ஆனால் முதலில் சொன்னது என்ன என்று கேட்கிற தைரியம் இப்போது வந்தது.

ராஜஸ்தானில் பழங்காலத்தில் மாப்பிள்ளையை ஒட்டகத்தில் அழைக்கிற பழக்கம் இருந்ததாம். நாளா வட்டத்தில் அந்தப் பழக்கம் மறைந்து என்னவென்றே தெரியாமல் இரண்டு ஒட்டகங்களை வாசலில் கட்டி வைக்கிற சாங்கியமாகப் போய் விட்டதாம்.

அந்த மாதிரி விதி ……………………க்கு இரண்டு ஆட்களை நான் எடுத்து வைத்திருக்கிறேனாம்.

Advertisements

7 comments

  1. இதை நான் வேற மாதிரி குரு பாடம் நடத்தும் இடத்துக் கதையாய் படித்திருக்கிறேன்…!

    இத்தனை வரிகள் மேலே படித்தாலும் விட்டுப் போன அந்த ஒரு வார்த்தையை மனம் தேடுகிறதே…இதுதான் கத்துக்கற ஆர்வமா அல்லது மனித பலவீனமா?!!

    1. மணி, ஏற்கனவே சென்ஷிக்கு ஒரு சந்தர்ப்பத்திலே சொன்ன பதிலை மறு ஒலிபரப்பு செய்கிறேன் : ‘கெட்ட வார்த்தைன்னு எதுவும் இல்லைங்க, எல்லாம் கேட்ட வார்த்தைதான்’. இதற்கு சென்ஷி சொன்ன பதில் சுவாரஸ்யமாக இருந்தது, ‘குறிலா இருந்தா என்ன (காம) நெடிலா இருந்தா என்ன?’

  2. நன்ஸ் ஹாஸ்டலில் சிக்கின பிரம்மசாரி போல உபமானம் எனக்கு புதுசு. கிராமங்களில் ஜானவாஸ ஊர்வலம் என்ற பேரில் தள்ளுவண்டி மாதிரி ஒருகார். கயிறுகட்டி இழுக்காத குறைதான். ஒட்டகத்தை கட்டி வைக்கும் கதைதான். இப்போது எப்படியோ தெரியாது.

எதுவா இருந்தாலும் எழுதுங்க!

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s