சங்கரிப் பாட்டி உஷார் பார்ட்டி

சங்கரிப் பாட்டி தலைக்கு உசரமான மனைப் பலகை வைத்துக் கொண்டு திண்ணையில் படுத்திருந்தாள். கையில் ஆனந்த விகடன்.

பாட்டி வாஷிங்கடனில் திருமணம் தொடருக்கு ரசிகை.

அவ்வப்போது புத்தகத்தை மூடி வைத்துக் கொண்டு கண் மூடி உரக்க சிரித்தாள்.

எதிர் வீட்டு முதலியாருக்கு இதைப் பார்த்து உதறல் எடுத்தது. பாட்டியை நாய் கீய் கடித்திருக்குமோ என்கிற சந்தேகம் ஏற்பட்டது. பாட்டியின் வீட்டை நோக்கி வந்து கொண்டிருந்த அந்தப் பெண்ணை இந்த சிரிப்பு அச்சுறுத்தியிருக்க வேண்டும். ஒரு வினாடி யோசித்தாள்.

வீட்டு வாசலில் தயங்கி நின்ற அந்தப் பெண்ணை தலையை உயர்த்தி பாட்டி பார்த்தாள். மூக்குக் கண்ணாடியை எடுத்துப் போட்டுக் கொண்டு,

“யார்றீம்மா அது?” என்றாள்.

“பாட்டி… வீட்லே உங்களைத் தவிர யாருமில்லையா?”

“நீ யாரு… சென்சஸ் எடுக்க வந்திருக்கியா?”

“இல்லை”

“ஆனைக் காலுக்கு ஊசி போடவா?”

“இல்லை.. இல்லை..”

“பின்னே, பையிலே தேங்காய் கீங்காய் வெச்சிருக்கியோ.. தேங்கா விக்கற பொம்மனாட்டி இப்படி நைலக்ஸ் புடவையும், குதிகால் ஒசந்த செருப்பும் போட மாட்டாளே?”

“விக்க வரல்லை, புதுசா வந்திருக்கிற பொருளை டெமான்ஸ்ட்ரெட்…. உபயோகப் படுத்திக் காட்ட வந்திருக்கேன்”

“நீ எப்படி உபயோகப் படுத்திக் காட்டுவே?” பாட்டி அவளை ஏற இறங்கப் பார்த்தாள். அப்புறம் புரிந்த மாதிரி,

“ஓ… அதான் வீட்லே யாருமே இல்லையான்னு கேட்டியா? நீ ஊக்கு வெச்ச பாடி விக்கறவளா?நான் பாடியே போடறதில்லடிம்மா.. கண்ணை உறுத்தறதோ?”பாட்டி
ஒருதரம் குனிந்து பார்த்துக் கொண்டாள்.

அந்தப் பெண் முகம் சிவந்து தலை குனிந்தாள்.

“இல்லை பாட்டி, நான் விக்கறது சோப் பவுடர்”

“சோப்பா பவுடரா?”

“பவுடர் பண்ணின சோப்பு”

“ஓஹோ.. சீக்காப் பொடி மாதிரி பூசிக்கணுமோ? அதை நீ எப்டி பண்ணிக் காட்டுவே? ஆம்பிளைகள் இருக்கிற இடம், ஏதாவது எகிடு தகிடா ஆயிடப் போறது”

“ஐயோ.. பாட்டி… இது குளிக்கிற சோப்பு இல்லை. துவைக்கிற சோப்பு”

“பொடியா வெச்சிண்டு எப்படித் துவைக்கிறது? துணியை எல்லாம் கொட்டி அது மேலே மசாலாப் பொடி மாதிரி தூவணுமோ”

“கொஞ்சம் வெந்நீர் கொண்டாங்க”

பாட்டி உள்ளே போய் ஒரு டம்ளரில் வெந்நீர் கொண்டு வந்தாள்.

“குடிக்க இல்லை பாட்டி. ஒரு பக்கெட்ல அரை வாசி கொண்டாங்க”

“மித்தத்த்த்திலே ராவ் குளிக்க போட்டிருப்பான், எடுத்துண்டு வரேன்”

பாட்டி கொண்டு வந்த வெந்நீரில் இரண்டு ஸ்பூன் பவுடரைப் போட்டு அந்தப் பெண் கச்சா கச்சாவென்று குலுக்க வாளியிலிருந்து நுரை பொங்கி வழிந்தது.

பாட்டி ஆச்சரியத்தில் கையிரண்டையும் கன்னத்தில் வைத்துக் கொண்டு,

“ஏய்.. பர்வதம். இங்க வந்து பாருடி. ஆடி மாசம் காவேரில வர்ற மாதிரி நுரை”

“கொஞ்சம் அழுக்குத் துணி கொண்டாங்கோ”

“அதுக்கென்ன… ஆம் பூரா அழுக்குத் துணிதான்”

பாட்டி ஒரு குவியல் துணியை கொண்டு வந்து வண்ணான் துறை மாதிரி போட்டாள். ஒரு நிமிஷம் பிரமித்த அந்தப் பெண் துணிகளை எடுத்து வாளியில் அமுக்கினாள்.

“ஒரு பதினஞ்சு நிமிஷம் விட்டாப் போதும்”

“நன்னாப் பொறுமையாப் பண்றே. எவ்ளோ தரானுக?”

அந்தப் பெண் சில வினாடி தயங்கி,

“அம்பது ரூபா சம்பளம். அப்பறம் வித்ததுக்கு கமிஷன்”

“போறும்… ஆத்தில சும்மா இருக்கறதுக்கு அம்பது ரூபா வருமானம் வரதே.. என்ன படிச்சிருக்கே?”

“எஸ்.எஸ்.எல்.சி”

“எஸ்.எல்.சி. படிச்சுட்டு இப்படி ஏன் அழுக்கை நோன்டரே? சர்வீஸ் கமிஷன் எழுத வேண்டியதுதானே?”

“எழுதியிருக்கேன்”

அந்தப் பெண் துணிகளை எடுத்து குமுக்கி, அலசி பிழிந்து காட்டினாள்.

“இங்க பாத்தீங்களா… கஷ்டமே இல்லாம பளிச்சுன்னு ஆயிடுச்சு”

“எல்லாம் உன் கைப் பக்குவம்டிம்மா.. என் மருமகளுக்கு கொழந்தேளுக்கு ………………. கழுவக் கூட பொறுமை கிடையாது. அவ துணி துவைச்சான்னா ஈயம் பூசறவன் துருத்தி போடற மாதிரி நோகாம பண்ணுவா. அவளை மாதிரி ஆட்களுக்கு இது ரொம்ப சகாயம்”

“பின்ன ஒரு பாக்கெட் வாங்கிக்கொங்களேன். ஒண்ணே கால் ரூபாதான்”

“எனக்கேதுக்குடீம்மா.. இப்ப நீ தோய்ச்சிக் குடுத்ததே இன்னும் ஒரு மாசம் தாங்கும். ஒரு டம்ளர் மோர் சாப்பிடறயா?”

Advertisements

25 comments

 1. சமீபத்தில் அறுபதுகளின் துவக்கத்தில் ஆனந்த விகடனில் கேரக்டர் என்று ஒரு பகுதி வந்தது. சாவி அவர்கள் எழுதியது. அதை படித்த நினைவுதான் இப்பதிவை பார்க்கும்போது வந்தது.

  வாஷிங்டனில் திருமணமும் அதே காலகட்டத்தில்தான் வந்தது, அதுவும் சாவி எழுதியதே.

  உண்மையைச் சொல்லுங்கள். என்ன விஷயம்?

  அன்புடன்,
  டோண்டு ராகவன்

  1. டோண்டுஜி, நாகப்பட்டினத்தில் நான் பார்த்த காரக்டர்களை அப்பப்போ எழுதறேன். ஏற்கனவே சரோஜா மாமி பத்தி எழுதியிருந்தேன். இப்போ சங்கரிப் பாட்டி. ஆனா இன்ஸ்பிரேஷன் என்னமோ நீங்க சொன்ன சாவியோட தொடர்தான். ஆனா அவர் மாதிரி லெவலை என்னாலே ரீச் பண்ண முடியாது.

   அது சரி, அறுபதுகளின் துவக்கம் உங்களுக்கு சமீபமா?

 2. எப்பிடி இப்பிடி எல்லாம் உங்களால எழுத முடியுது? ஒரு வேளை நடந்ததை பார்த்துவிட்டு அதை அப்படியே கதை என்று எழுதி விடுகிறீர்களோ? I admire your style of narration. Simply superb.

 3. முத்துக்குமார் சொன்னது சரிதான். நானும் படிச்சிட்டு “எப்டி உங்களால இப்டி எழுத முடியுதுனு” கேக்கலாம்னு இருந்தேன். ரொம்ப நல்லாருக்கு. simply super னு சொல்வாங்களே, அது இதுதான்…ரொம்ப இழுக்காமா, short and sweet ஆ சொல்றீங்க….. hats off sir…..

 4. தொடர்ந்து உங்கள் பதிவுகள் படித்து வருகிறேன். ரசிக்க, நினைத்துப் பார்த்து, பின் புன்னகைக்க வைக்கும் எழுத்து. நன்று.

  அன்புடன்

  மதுரை சுப்பு

 5. இப்போதைக்கு, அப்பப்போ கேள்விப்படற, படிக்கிற விஷயங்களை வெச்சு வலைப்பூ-ல ஜல்லி அடிக்கறதோட சரி.

  19-ல் இருந்துதான் இசை விழா. அது வரை பெங்களூர்தான். வயிற்றுப் பிழைப்பையும் பார்க்க வேண்டியிருக்கே:-)

 6. உங்களது பலமே, கதை நகர்த்தும் பாணிதான். படிப்பவருக்கு சலிப்பு ஏற்படாமல், பதிவின் கடைசிவரை அவர்களை அழைத்துச் செல்வது அருமை.
  நிறைய Home work செய்வீர்களோ?

  1. பொன்.சீனி : ரொம்ப நன்றி சார். ராகி.ரங்கராஜன் மற்றும் சுஜாதா கதை எழுதறது எப்படின்னு சொல்றப்ப எல்லாம் அதை பைபிள் மாதிரி, பகவத் கீதை மாதிரி புடிச்சி வெச்சிக்குவேன். அதிலே ஒண்ணு ரெண்டு விதிமுறைகளை ரிலீஜியஸா பாலோ பண்ணுவேன். அம்புடுதேன்.

  1. சரிதான் டோண்டுஜி, அப்பறம், அண்மையிலே நீங்க வாஸ்கோடகாமா கிட்டே பேசிகிட்டு இருந்தீங்களே. அந்த அனுபவங்களை எழுதுங்க. சுவாரஸ்யமா இருக்கும். 🙂

 7. suprb, idudan nan paditha mudal kadai, innaki trainla en frnd manase relax pl book vechirunda, ok padikalamenu rate keten Rs.130/- nu sonna, month end mudiyadunu thonichu, ok online la search panalamenu dan poten, edechayadan padichen, simply suprb, enaku romba pidichiruku. inum padika time illa, becoz im in office. sorry. i il try to asap.

எதுவா இருந்தாலும் எழுதுங்க!

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s