இதயம் பேத்துகிறது – 1

நான் முதன் முதலில் வெளிநாட்டுப் பயணம் போன போது, வந்ததும் ஒரு பயணத் தொடர் எழுதினேன்.
 
நமக்குத் தெரிந்து பயணக் கட்டுரை வித்தகர் மறைந்த திரு.மணியன் அவர்கள்தான்.
 
அவரே பயணத் தொடருக்கு ‘இதயம் பேசுகிறது’ என்றுதான் தலைப்புக் கொடுத்தார். என் மாதிரி கற்றுக் குட்டிகள் என்ன செய்வது? அதனால் ‘இதயம் பேத்துகிறது’ என்று தலைப்பு வைத்தேன்.
 
சுமார் இருநூறு அங்கத்தினர்கள் அடங்கிய எங்கள் குடும்ப யாகூ குழுவிலும், (முதல்லே எங்க அப்பாவும் அவரோட சகோதரர்களும் அஞ்சு பேர் பஞ்ச பாண்டவர்கள் மாதிரி இருந்தாங்க. அவங்க இரவும் பகலும் உழைச்சி இந்திய மக்கள் தொகையையும் ஏற்றி, குடும்பத்தையும் கௌரவர்கள் நிலைக்குக் கொண்டு வந்து விட்டார்கள்!) அலுவலகத்தில் நானூறு அங்கத்தினர்களும் இந்தக் கட்டுரையை ரொம்ப ரசித்தார்கள். புகழ் பெற்ற தன்னோட நாடகத்தோட பெயரையே பத்திரிகைக்கு பெயரா வெச்ச சோ அவர்களும், புகழ் பெற்ற பயணக் கட்டுரைத் தலைப்பை பத்திரிகைக்கு வெச்ச மணியன் அவர்களும் ஞாபகத்துக்கு வர, என் பதிவுக்கும் ‘இதயம் பேத்துகிறது’ ன்னு பேர் வெச்சேன்.
 
நாம யாருன்னு ஓரளவு பதிவாளர்களுக்கும், பதிவு வாசகர்களுக்கும் தெரியட்டும். அப்புறமா அந்தக் கட்டுரையை வலையிலே எழுதலாம்ன்னு காத்திருந்தேன்.
 
இப்ப கொஞ்சம் தெரிஞ்சவனா ஆகியிருக்கேன் என்கிற குருட்டு நம்பிக்கையில் பயணத் தொடரை ஆரம்பிக்கறேன்.
 
முன்னுரை போதும், இதோ முதல் அத்தியாயம்.
 
இதயம் பேத்துகிறது – 1

 

“அடுத்த மாசம் நீ ஜப்பான் போக வேண்டியிருக்கும்” என்று என் பாஸ் சொன்ன போது என் காதில் கேட்டது சரிதானா என்கிற சந்தேகம் ஏற்பட்டது.

ஜப்பான் என்றா சொன்னார்?

ஒரு வேளை ஜட்காவில் போக வேண்டியிருக்கும் என்றாரோ?

ஏனென்றால் யமுனா நகரில் இருக்கும் சப்ளையர் ஒருத்தரைப் பார்க்க கார், போட், சைக்கிள் என்று பலதிறப்பட்ட வாகனங்களில் போக வேண்டியிருந்தது. இப்போது பரிதாபாத்தில் எவனையாவது ஜட்காவில் போய்ப் பார்க்க வேண்டுமோ?

எழுந்து அவர் கேபினுக்குப் போய் “அடுத்த மாசம் எங்கியோ போகணும்ன்னு…” என்று சந்தேகமாக இழுத்தேன்.

“ஆமாமாம், உன் பாஸ்போர்ட்டை ஸ்கேன் பண்ணி கார்பொரேட் ஆபிசுக்கு மெயில் பண்ணு” என்றார்.

கையை உயர்த்திக் கொண்டு ‘ய்ய்யெய்’ என்று குதிக்க வேண்டும் போல இருந்ததை அடக்கிக் கொண்டு,

“ஜப்பான்லே என்ன விஷயமா…” என்று தேய்ந்து மறைந்தேன்.

“ரோபாட்டிக் பெயின்ட்டிங் ப்ராசஸ் நீதானே டிசைன் பண்ணே? ரோபாட்டை இன்ஸ்பெக்ட் பண்ணனும், ட்ரையல் பார்க்கணும், போக முடியும்தானே?”

என்ன கேள்வி இது? அதெல்லாம் முடியாது அதே சமயத்தில் ஊர்லே களை புடுங்குகிற வேளை இருக்கிறது என்றா சொல்வேன்!

“ஸ்யூர் சார்”

அந்த நிமிஷத்திலிருந்து தீபாவளிக்குக் காத்திருக்கும் குழந்தை மாதிரி கவுண்ட் டவுனை ஆரம்பித்தேன்.

‘கொன்னி சிவா’, ‘தொ மரியாத்தோ’ என்று ஜப்பானிய மொழியை தப்பும் தவறுமாகக் கற்க ஆரம்பித்தேன். நான் வாங்க விரும்பும் எலேக்ரானிக் பொருட்கள் இந்தியா, இலங்கை, மலேஷியா, சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளில் என்ன விலை விற்கிறது என்று ஆய்வு செய்தேன். ஜப்பானின் சரித்திரம், பூகோளம், விஞ்ஞானம், பொருளாதாரம் எல்லாவற்றையும் படித்தேன். மானசீகமாக ஜப்பானிலேயே வாழ்ந்தேன்.

விசாவுக்காக ஆறு மாச சம்பளத் தாள், வங்கி அறிக்கை, வருமான வரி பாரங்கள் என்று ஏதேதோ கேட்டிருந்தார்கள். சிலரிடம் வங்கி அறிக்கை A4 சைசில் இல்லை, சிலரிடம் பாரம் 16 இல்லை……

ஆனால் மெர்குரி டிராவல்ஸ் யூசூப் எது இல்லை என்றாலும் ‘ப்ச் இட்ஸ் ஓக்கே’ என்றார். பாஸ்போர்ட்டே இல்லை என்றால் கூட விசா வாங்கி விடுவார் போலிருந்தது. நல்ல மனிதர். ‘சிங்கப்பூர் விசா வாங்கிக் கொள்ளுங்கள். வரும் போது ஒரு முழு நாள் இருக்கிறது’ என்று ஐடியா கொடுத்தார். வெள்ளைப் பின்புலத்தில் சொர சொரா பிநிஷில் பனங்கொட்டை மாதிரி தலை மட்டும் இருக்கிற மாதிரி போட்டோ எடுக்க வேண்டும் என்று கைட் செய்தார்.

கம்பெனி கொடுத்த முன் பணத்தில் கோட்-சூட் தைத்தோம். நாலடி பீரோ சைசில் பெட்டி வாங்கினோம். நூடுல்ஸ், ஊறுகாய், புளியோதரைப் பொடி, பருப்புப் பொடி என்று உணவுப் பொருட்களை வாங்கி நிரப்பினோம்.

எங்கள் கூட வந்த நண்பர் அட அற்பர்களே என்கிற மாதிரி பார்வையுடன் எங்களைப் பார்த்துக் கொண்டிருந்தார்.
 
வெள்ளி வாயில் சாவடிக்கு போவதை விட ப்ரீக்வேன்ட்டாக வெளிநாடு போகிற அவரது பார்வைக்கு அர்த்தம் எங்களுக்குப் புரிய வில்லை.
 
விமானம் ஏறுகிற அன்று தம் அடிக்க பெட்டிக் கடைக்குப் போகிறவர் மாதிரி அழுக்கு ஜீன்சும், அடாசு டி ஷர்ட்டும் போட்டுக் கொண்டு வந்தார். நாங்கள் மட்டும் விஜிபி சகோதரர்கள் மாதிரி கோட் சூட் போட்டுக் கொண்டு ஆட மென் அவுட்டாக இருந்தோம்!
 
(தொடரும்)
Advertisements

20 comments

 1. வரிக்கு வரி நல்ல நகைச்சுவை. மேலும்
  பேத்தல்களக் காணக் காத்திருக்கிறோம்.

  அப்படியே நம்ம ஜப்பான் அனுபவங்களையும் பார்க்கிறது..

  http://simulationpadaippugal.blogspot.com/2006/02/blog-post_114070616439670960.html

  – சிமுலேஷன்

 2. ம‌ணிய‌னுக்குப் பிற‌கு நிறைய‌ சுத்தி [ ரீல் இல்லை :)], அதை எழுதின‌வ‌ர் லேனா த‌மிழ்வாணன். பாஸ்போர்ட் தொலைய‌ற‌தும், ஃப்ளைட் மிஸ் ஆக‌ற‌தும் க‌ண்டிப்பா இருக்கும் :).இந்த‌ தொட‌ர் ரொம்ப‌ ந‌ல்லா ஆர‌ம்பிச்சிருக்கு.. தொட‌ருங்க‌ள் ஸார்.

  -Toto
  http://www.pixmonk.com

  1. நன்றி தீபாஜி, இப்போதைக்கு தினம் ஒரு அத்தியாயம் எழுதணும்ன்னு ஆசை. எனவே இரண்டாம் அத்தியாயம் இந்திய நேரப்படி திங்கட் கிழமை காலை ஏழே முக்காலுக்கு!

 3. உங்க பல பதிவுகளையும் படித்திருக்கிறேன்.

  சுட்ட,ஒண்டுக்குடித்தன மாமிக்கான தாம்பத்ய பிரச்னைகள் பற்றி ஒன்று எழுதி இருந்தீர்களே..

  நகைச்சுவைக்கும் விரசத்திற்குமான ஃபைன் லைனை அழகாகக் காட்டியது அது..

  பின்னூட்டம் இல்லாவிட்டால் படிப்பதில்லை என்று அர்த்தமில்லை..

  🙂

எதுவா இருந்தாலும் எழுதுங்க!

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s