இதயம் பேத்துகிறது – 12

சிங்கப்பூரில் ராத்திரி ரெண்டு மணிக்குப் போய் இறங்கினோம்.

இமிக்ரேஷனில் சட் சட்டென்று கிளியர் செய்கிறார்கள். ஜப்பானிலும் சரி இங்கேயும் சரி, உள்நாட்டு பாஸ்போர்ட்டுக்கும், வெளிநாட்டு பாஸ்போர்ட்டுக்கும் தனித் தனியாக ஏகப்பட்ட கவுன்டர்கள். ஐந்தைந்து நிமிஷத்தில் கிளியர் செய்கிறார்கள்.

எங்கள் குடும்ப நண்பர் சுகுமார்-கலாவதி சுகுமார் தம்பதிகள் வீட்டில் உரிமையோடு போய் தொந்தரவு செய்தோம். தாம்பினி ஸ்ட்ரீட்டில் அவர்களின் சொந்த பிளாட். இதை நாங்கள் தாம்பின் என்றுதான் முதலில் உச்சரித்தோம். எங்களுக்கு டாக்சி ஒட்டிய சீனர் பயங்கர லொட லொடா. தாம்பினி என்பது ஒரு மரம். இந்த இடத்தில் நிறைய தாம்பினி மரங்கள் என்று அந்த அர்த்த ராத்திரியில் பேசி சிங்கப்பூரின் அமைதியை டாராகக் கிழித்துக் கொண்டு வந்தார்.

விமான நிலையத்திலிருந்து அங்கே போய்ச் சேர பனிரெண்டு சிங்கை டாலர்கள்.

மொத்த சிங்கப்பூரையே அக்ராஸ் டாக்சியில் போனாலும் நாற்பத்தைந்து டாலர்கள்தான் ஆகும் என்றார் மிஸ்டர் லொட லொடா.

ஒரு தூக்கம் போட்டு எழுந்ததோம். சூடாக இட்லி-கொத்சு, மசால் தோசை என்று பதினைந்து நாளாக மறந்து போயிருந்த ஐட்டங்களை கலா அவர்கள் கொண்டு வர, வாசனையை மட்டும் அஞ்சு நிமிஷம் ரசித்து விட்டு அப்புறமாக சாப்பிட ஆரம்பித்தோம்.

“எத்தனை மணிக்கு சென்னை பிளைட்?” என்றார் சுகுமார்.

“ராத்திரி எட்டேகால்”

“மணி இப்போ காலை எட்டேகால். முஸ்தபாவிலே ரெண்டு மூணு மணி நேரம் ஆகும். சாப்பிட அரை மணி. செக் இன்னுக்கு ஒரு மணி நேரம் முன்னே போகணும். உங்களுக்கு சென்தொசாதான் சரி” என்றார்.

“அய்யய்யே வேணாங்க. சாப்ட்ட இட்லி, மசாலா தோசையே சாயந்திரம் வரை போதும். செட் தோசை வேறேயா?”

“செட் தோசை இல்லை. செந்தோசா. அருமையான சுற்றுலா பிளேஸ். கச்சா முச்சான்னு போகாதீங்க. செலேக்டடா நான் சொல்ற ரெண்டு இடம் பாருங்க. அனேகமா இதுக்கே நேரம் சரியாய்டும். அண்டர் வாட்டர் வோர்ல்ட் பாருங்க. டால்பின் ஷோ பாருங்க.”

வெளிநாட்டு பயணிகளுக்காகவே அழகாக வடிவமைக்கப்பட்ட இடம் செந்தோசா.

இங்கே கேபிள் கார் பிரயாணம் ஜப்பானை விட த்ரில் அதிகம். 

உசிரைக் கையில் பிடித்துக் கொண்டு கந்த சஷ்டி கவசம் எல்லாம் சொல்ல வேண்டும் போல இருந்தது.

உள்ளே போய் விட்டால் பஸ்ஸில் எங்கே போனாலும் இலவசம். திறந்த மொட்டை மாடி பஸ்கள். சிங்கப்பூரை ரசித்துக் கொண்டே போகலாம். ஜானவாசம் மாதிரி திறந்த பஸ்ஸில் போவது ஜாலியாக இருந்தது.(ஹும்ம்ம்… என்னை ஜானவாசத்தில் நடத்தியே அழைத்து ஏமாற்றி விட்டார்கள்)

அண்டர் வாட்டர் வோர்ல்டில் எல்லாரும் நகராமல் அழும்பு பண்ணினால் என்ன செய்வது என்று ஒரு கன்வேயர் அமைத்திருக்கிறார்கள். ஆகவே யாரும் ‘ஜருகண்டி’ சொல்லாமலே கூட்டம் நகர்ந்து கொண்டே இருக்கிறது.

எங்களோடு ரெண்டு ஸ்ரீலங்காப் பெண்கள் நட்பாக இருந்தார்கள். அவர்கள் தமிழும் பேசினார்கள், சிங்களமும் பேசினார்கள். டால்பின் ஷோ எத்தனை மணிக்கு, அதுவரை என்ன பண்ணலாம் என்றெல்லாம் ஐடியா கொடுத்தார்கள்.

அவர்கள் சொற்படி பாண்டியன் பீச் போனோம்.

அங்கேயும் கடலில் அலை இல்லை. பெரிய்ய ஏரி மாதிரிதான் இருந்தது.

டால்பின் ஷோவில் டால்பின்களுக்கு அப்பாற்பட்டும் ரசனையான காட்சிகள் கிடைத்தன.

டால்பின்கள் டிரைனர்கள் பேசுவதைப் புரிந்து கொண்டு மனிதர்கள் மாதிரியே செய்தது வியப்பாகவும். ரசனையாகவும் இருந்தது. டிரம் பீட்டுக்கு ஏற்றாற்போல் மார்ச் செய்கின்றன. பந்தை கொண்டு வந்து கையில் தருகின்றன. வளையத்துக்குள் குதிக்கின்றன. அந்தர் பல்டி அடிக்கின்றன. உயரக் குதித்து வேர்டிக்கல் ஆக்சிசில் சுழல்கின்றன. வளைந்து குட் பை சொல்கின்றன.

உள்ளே என்ன சாப்பிட்டாலும் பகல் கொள்ளை.

அஞ்சு டாலருக்கு குறைவாக சாப்பிடவோ குடிக்கவோ எதுவும் இல்லை. வெளியே சாப்பிட்டால் மட்டும் என்ன என்கிறீர்களா? அது ஜஸ்ட் கொள்ளை. அவ்வளவுதான்.

முஸ்தபாவுக்கு எதிரே அடையார் ஆனந்த பவன் சரவண பவன் ரெண்டுமே இருக்கின்றன. நாங்கள் அடையார் ஆனந்த பவனில் சாப்பாடு சாப்பிட்டோம். ஒவ்வொரு சாப்பாடும் மூன்று சிங்கை டாலர்கள்.

முஸ்தபாவில் ரொம்ப நேரம் வேடிக்கை பார்த்தோம்.

ஊருக்கு வந்த நினைவுக்கு ஏதாவது வாங்க வேண்டுமே! ஜப்பானில் ஹண்ட்ரட் yen ஷாப்களில் பீராய்ந்து நிறைய பொடிப் பொடிப் பொருட்கள் வாங்கியிருந்தோம்.

ஒரு போர்டபிள் டிவிடி ப்ளேயரும், 4 GB ஐபாடும் நான் வாங்கினேன். ரெண்டும் சேர்ந்தே நானூறு சிங்கை டாலர்தான்.

ஏர் போர்ட்டுக்குப் போய் சேர்ந்த போது முக்கால் மணி நேரமே இருந்தது.

விமானத்தில் பச்சைக் கிளி முத்துச் சரம் படம் பார்த்தேன். அந்த என்விரோன்மேன்ட்டுக்கு நன்றாகவே இருந்தது.

சென்னை விமான நிலையம் வந்த போது இன்டர்நேஷனல் டெர்மினல் விரிவாக்கம் நடந்து கொண்டிருந்தது.
 
சிங்கப்பூரில் எட்டேகாலுக்குப் புறப்பட்டு மூன்றரை மணி நேரம் பயணித்து சென்னைக்கு பத்தே காலுக்கு வந்தோம். போகும் போது தொலைந்து போன ஒன்னரை மணி நேரம் திரும்பக் கிடைத்தாலும் அதை மொத்தமாக விமான நிலையத்தினர் எடுத்துக் கொண்டு விட்டார்கள்.
 
சிங்கப்பூர் விமானத்திலிருந்து வந்த முன்னூறு பெரும் ஒரே கவுண்ட்டரில் ஒரே க்யூவில் நின்றோம். ஒரே ஒரு கிழவர் உட்கார்ந்து ஒவ்வொரு ஆளுக்கும் பதினைந்து நிமிஷம் எடுத்துக் கொண்டார். பனிரெண்டு மணிக்கு இமிக்ரேஷன் முடிந்து வெளியே வந்தால்,
 
லக்கேஜ் வருகிற கன்வேயரில் ‘எங்கப்பன கண்டியோ’ என்று எங்கள் பெட்டிகளுக்காக காத்திருந்தோம்.
 
சிங்கப்பூரிலும் ஜப்பானிலும் ஐந்தைந்து நிமிஷத்தில் கிளியராகி வெளியே வந்ததும், வந்து நிற்கிற போது கன்வேயரில் மிகச் சரியாக பெட்டி வந்ததும் ஏனோ ஞாபகத்துக்கு வந்து தொலைத்தது.
 
மேரா பாரத் மகான்!
 
(முற்றும்)
Advertisements

29 comments

 1. விறுவிறுப்பு கொஞ்சம் கூட குறையாம உக்கார வைச்சு சீக்கிரமா முடிச்சுட்டீங்களே ஜி.. அடுத்த தொடர் ஏதும் இருக்குதா?

  //.(ஹும்ம்ம்… என்னை ஜானவாசத்தில் நடத்தியே அழைத்து ஏமாற்றி விட்டார்கள்)//

  உங்களோட இந்தக்கவலை அந்த போட்டோவுல நல்லா தெரியுது சார் 🙂

 2. //போகும் போது தொலைந்து போன ஒன்னரை மணி நேரம் திரும்பக் கிடைத்தாலும் அதை மொத்தமாக விமான நிலையத்தினர் எடுத்துக் கொண்டு விட்டார்கள்.//

  “இங்கெல்லாம் இப்படித்தாங்க”

  கேட்டுக்கேட்டே மனப்பாடம் ஆகிப்போச்சு!

  டூர் அட்டகாசம். ரசித்தேன்.

  பயணக்கட்டுரையை போரடிக்காம எழுதணும். அதேசமயம் இண்ட்ரஸ்டிங் பாய்ண்ட்ஸ் விட்டுப்போகக்கூடாது.

  உங்களுக்கு 95 மார்க் கொடுக்கிறேன்.

  துளசி டீச்சர்.

 3. எங்களுக்கு இருக்கும் ஒரே பெரிய சுற்றுலாத்தலம் செந்தோஷாதான்..

  சந்தோஷமாகப் போய் பொழுதைக் கழித்து விட்டு வரலாம் என்றுதான் அப்படிப் பெயர் வைத்தார்களா என்று தெரிய வில்லை.

  ஆனால் செந்தோ’வின ஹை லைட் லேசர் ஷோ தான்;உங்களுக்கு விமான நேரக் கட்டுப் பாடுகளால் உங்கள் நண்பர் தவிர்த்து விட்டார் என்று நினைக்கிறேன்..அடுத்த முறை தவற விடாதீர்கள்!

  1. தகவலுக்கு நன்றி அறிவன். அடுத்த தரம் குறைந்தது மூன்று நாள் தங்கற மாதிரி வருவேன்.(ஒரு நாள் கண்டிப்பா சாப்பாடு உங்க வீட்லதான், ரெண்டு பேருக்கு ரெடி பண்ணிக்கங்க!)

 4. அப்புறம் சொல்ல மறந்து விட்டேன்..தொடர் கட்டுரை அசத்தலாக இருந்தது.

  ஒரே ஒரு பாயிண்ட் சொல்ல வேண்டும் என்றால்,நீங்கள் சுஜாதாவை மனதில் இருத்திக் கொண்டே எழுதுகிறீர்களோ என்று உணர்கிறேன்…டைலூட்டட் சுஜாதா மாதிரி பல இடங்கள் தோற்றம் தந்தன..நேச்சுரலாக எழுதும் போது இந்த நெருடல் மறைந்து அற்புதமான வாசிப்பனுபவம் கிடைக்கலாம்..உங்களுடைய அந்த ஒண்டுக் குடித்தனம் பற்றிய பத்தி போல..

  நன்றி,சுவாரசியமான வாசிப்புக்கு.

  1. அறிவன், அப்படியெல்லாம் நான் கஷ்டப் படுத்திக்கிறதே இல்லை. சுஜாதாவின் எழுத்தில் நிறைய கற்றுக் கொண்டிருக்கிறேன். அதில், இன்னொருத்தர் மாதிரி எழுத ட்ரை பண்ணக் கூடாதுங்கிறதும் அடக்கம்.

 5. //ஹும்ம்ம்… என்னை ஜானவாசத்தில் நடத்தியே அழைத்து ஏமாற்றி விட்டார்கள்//

  பலி கொடுக்கப்போற ஆட்ட கார்லவேற கூட்டிட்டு போவாங்களாக்கும்…

 6. ரொம்ப நல்லா இருந்தது சார் உங்க பயண அனுபவம்..
  ஜானவாசம் மேட்டர் மிகவும் ரசித்தேன்.. 🙂
  முடிச்சே ஆகனும்னு பிரயத்தனப் பட்டாப்’ல இருக்கு?

 7. அனைத்து படங்களும் அருமை. அந்த மொட்டைமாடி பஸ்ல போகும்போது ஜானவாசத்துல ஏமாந்தது நினைச்சு
  ஃபீல் பண்ணது உங்க முகத்திலெ நல்லா தெரியுது. 🙂

  மணி சொன்னாப்புல பொசுக்குன்னு முடிச்சாப்புல இருக்கு சார். விடுபட்ட தகவல்கள் ஏதும் இருந்தா இன்னும் ரெண்டு பதிவா எழுதிடுங்க.

  மேலும் வேறெதுவும் வெளிநாட்டு பயணபகிர்வுகள் இருந்தா கொடுங்க. இல்லைன்னாலும் இந்தியாவினுள் நீங்கள் சென்ற இடங்களை பற்றி எழுதுங்கள். சென்னை,பெங்களூரு குறித்தும் உங்கள் அனுபவங்களை உங்கள் பாணியில் எதிர்பார்க்கிறோம்.

  எங்களை மகிழ்விக்க தொடர்ந்து எழுதிகிட்டே இருங்க சார்…. 🙂

  1. நன்றி ராஜா, நிறையப் படியுங்கள், கொஞ்சமாக எழுதுங்கள் என்றார் சுஜாதா. அதே மாதிரி நிறையப் பார்த்து கொஞ்சமாக எழுத வேண்டும் என்று நினைத்தேன். உங்கள் சஜெஷனுக்கு நன்றி. எங்கே போனாலும் என்ன எழுதலாம்கிற கண்ணோட்டத்திலேதான் பார்க்கிறேன் இப்பல்லாம்.

 8. ஜவஹர்ஜியின் இதயம் மேன்மேலும் பேத்த வாழ்த்துக்கள்… உங்கள் இதயம் ஜப்பான் சென்றால்தான் பேத்தும் என்றில்லை… ஜார்கண்டுக்கோ ஜலகண்டாபுரத்துக்கோ சென்றாலும் பேத்தும்… அடுத்த தொடரை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்… புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்…!

  1. நன்றி மூர்த்திஜி, புதுசா வர்ற சூரியக் கதிர் பத்திரிகைல உங்க பங்களிப்பும் பெரிய அளவில இருக்குன்னு பேசிக்கறாங்க. வாழ்த்துக்கள். என் மாதிரி தேங்கா மூடி எழுத்தாளர்களை கொஞ்சம் ஊக்குவிக்கப் பாருங்க!

 9. சிங்கப்பூர் டூரை எவ்வளவு வேகமா முடிச்சிருக்கீங்கங்குறது தெரியுது….ஒரே அத்தியாயம் தானா?……கொஞ்சம் பாத்து செய்யுங்க தல!……

  1. MGR : பதினஞ்சு நாள் இருந்த ஜப்பானுக்கு பதினோரு அத்தியாயம்ன்னா ஒரு நாள் கூட இல்லாத சிங்கப்பூருக்கு ஒரு அத்தியாயம் நியாயம்தானே! உங்கள் அன்புக்கு நன்றி. ராஜாவும், மூர்த்தியும் சொன்ன மாதிரி அமெரிக்காவோ அனகாபுத்தூரோ புதுப் புது இடம் போயி எழுதிகிட்டே இருப்போம்!

 10. அதுக்குள்ளே முடிஞ்சிடிச்சா? இன்னும் 10 அத்தியாயமாச்சும் வரும்னு நெனச்சேனே…

  அடுத்த பயணக்கட்டுரை ஆரம்பிச்சிருங்க.. கூடிய விரைவில் எங்க ஊருக்கும் ஒரு நடை வந்துட்டுப் போங்க..

  புத்தாண்டு வாழ்த்துக்கள்…

  1. நன்றி சீமாச்சு, உங்களுக்கும் உங்க குடும்பத்தாருக்கும் என் புத்தாண்டு வாழ்த்துக்கள். உங்கள் நல்லெண்ணப் ப்ராஜக்ட்டுகள் வெற்றியடைய வாழ்த்துக்கள். இந்த வருஷம் இன்னும் நிறைய குழந்தைகளுக்கு உதவுவீங்க… நிறைய பள்ளிக்கூடங்கள் கட்டுவீங்க.

  1. நன்றி கார்த்திக், உங்கள் அனைவரின் ஆதரவும் என் எழுத்துக்களை மென்மேலும் பட்டை தீட்டிக் கொண்டிருக்கிறது.

எதுவா இருந்தாலும் எழுதுங்க!

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s