சிந்திப்பது தாய் மொழியிலா?

தாய் மொழிக்கு நான் எழுதியிருந்த விளக்கம் பல்வேறு கருத்துக்களை எழுப்பியிருக்கிறது.

பரவாயில்லை, நம் எழுத்துக்கள் சிந்தனையை எழுப்பவல்லதாக இருக்கிறது என்பதில் சந்தோஷம்.

நண்பர்கள் மிக அதிகமாக பதிவு செய்த கருத்து “அப்போ எழுதப் படிக்கத் தெரியாதவனுக்கு தாய் மொழி கிடையாதா?” என்பது.

எழுதப் படிக்கத் தெரியாதவர்கள் எந்த மொழியின் துணையுடன் உலகத்தை அறிந்தார்களோ, அது அவர்களின் தாய் மொழி. அவ்வளவே.

எல்லாரும் அடுத்த தகராறுக்கு தயாராகுங்கள்.

சிந்திப்பது எந்த மொழியில் என்று யோசனை செய்து கொண்டிருந்தேன். சில சுவாரஸ்யமான சிந்தனைகள் கிடைத்தன. அதையும் உங்களுடன் பகிர்ந்து கொள்ளவே இந்தப் பதிவு.

ஒரு சிலர், சிந்திக்கிற மொழிதான் தாய் மொழி என்கிற கருத்தில் கூட இருக்கிறார்கள்.

சிந்தனைக்கு மொழி உண்டா?

Jerry A Fodor கருத்துப்படி சிந்திக்கிற மொழி, பேசுகிற எந்த மொழியோடும் தொடர்புடையது அல்ல. அந்த மொழிக்கு mentalese என்று பெயராம். (ஒரு வேளை mental கள் தான் அதிகமாக சிந்திப்பார்கள் என்பதால் இந்தப் பேர் வந்திருக்குமோ?)

அதெப்புடி, ஒரு ஆளையோ, பொருளையோ பார்க்கிற போது அந்தப் பெயர் நம் மனசில் ஒலிக்கிறதே என்கிற கேள்வி தவறாமல் உங்கள் மனதில் எழும்.

இது வரைக்கும் பார்க்காத ஆளையோ, என்னவென்றே தெரியாத ஒரு பொருளையோ பார்க்கிற போது என்ன வார்த்தை ஒலிக்கிறது? I bet, அந்த சொல் அகராதியில் இல்லாததாகத்தான் இருக்கும்.

தெரிந்த விஷயங்கள் எப்போதுமே நமக்கொரு bias ஐ உண்டாக்கி விடும்.

மரத்தைப் பார்க்கிற போது மரம் என்று ஒலிப்பதும், ரயிலைப் பார்க்கிற போது ரயில் என்று ஒலிப்பதும் நமக்கு மொழி தெரிந்திருப்பதால் வருகிற bias தான்.

Edward Sapir மற்றும் Benjamin Whorf சொல்கிறார்கள்,

உலகத்தை நாம் மொழி வாயிலாகத்தான் பார்க்கிறோம். உலகத்தைப் பற்றி நாம் மனதில் உருவாக்கியிருக்கிற உருவம் மொழி என்கிற வடிகட்டியின் ஊடே உருவானது.

மர்பிஸ் லா வில் தமாஷாக ஒரு விஷயம் சொல்லப்பட்டிருக்கிறது.

கையில் இருக்கிற கருவி சுத்தி மட்டுமே என்றால் எல்லாப் பிரச்சினைகளும் ஆணியாகவே தெரியுமாம்.

அவ்வளவு பெரிதாக பருமனாக, கிளைகளும் இலைகளுமாய் வளர்ந்து நிற்கிற ஒன்றை மரம் என்கிற சொல்லுக்குள் அடக்கி திருப்தி அடைந்து விடுகிறோம்.

ஒரு பொருளை பொருளாகப் பார்க்கிற போது அதை மேலும் சிறப்பாகவோ, எளிமையாகவோ ஆக்குகிற சாத்தியங்கள் அடிபட்டுப் போய் விடும் என்பது தொழிற்நுட்பாளர்களின் சித்தாந்தம்.

உதாரணத்துக்கு ஒரு வால்வு இருக்கிறது என்று வைத்துக் கொள்ளுங்கள். (ரேடியோ வால்வு இல்லை) அதை வால்வு என்று சொல்கிற வரை நாலு கோட்டுக்குள் அடங்கிய ஒரு சின்ன உருவம்தான் கிடைக்கும். பழுதாகிப் போனால் அதுவே கிடைக்கிற வரை காத்திருப்போம்.

ஒவ்வொரு பொருளையும் அது செய்கிற வேலையாகப் பார்ப்பது தொடர்ச்சியான முன்னேற்றங்களுக்கு அடி கோலும்.

Control Flow என்பதுதான் வால்வுக்கு நாங்கள் வைத்திருக்கும் பெயர்.

அதாவது எல்லா விஷயங்களையும் ஒரு நௌன் ஒரு வெர்ப் கொண்டு வர்ணித்தல்.

பைப்புகளில் பழைய வேட்டியை திணித்து அடைத்திருப்பதைப் பார்த்திருப்பீர்கள்.

நீர் வருகிற ரப்பர் குழாயை போல்ட்டுகளால் இணைக்கப்பட்ட இரண்டு பைப் துண்டுகள் கொண்டு நீரோட்டத்தைக் குறைக்கப் பயன் படுத்துவதைப் பார்த்திருப்பீர்கள். இதெல்லாம் அவுட் ஆப் தி பாக்ஸ் திங்கிங்தான்.

ஏன், வாழைப் பழத்தை ஊதுபத்தி ஸ்டாண்டாக பயன் படுத்துவது கூட ஒரு இன்னோவேஷன்தான்.

அது சரி,

கீழ்க்காணும் விஷயங்களை ஒரு நௌன், ஒரு வெர்ப் கொண்டு வர்ணிக்க முயற்சிக்கிறீர்களா?

மனைவி
பணம்
சின்ன வீடு (ஆகு பெயர்!)
சாராயம்

8 comments

  1. மிக நீண்ட காலமாக என் மனத்தைக் குடைந்து கொண்டிருந்த விஷயம்.
    உங்கள் தலைப்பு சுட்டுவது போல் இல்லாமல் கொஞ்சம் வேறு படுகிறேன்.
    ஒரு விஷயத்தை எந்த மொழியில் முதலில் படித்து இருக்கிறோமோ, அல்லது கேட்டு இருக்கிறோமோ, அந்த மொழியிலேயே நாம் அதைப் புரிந்து கொள்கிறோம்; இன்னொருவருடன் விவாதிக்கும் பொது, விளக்கும் பொது அந்த மொழியையே பெரும் பாலும் பயன் படுத்துகிறோம். control flow என்று பொறியியல் சம்பந்தமான உதாரணம் கொடுத்து உள்ளீர்கள். வங்கி, பொருளாதார விஷயங்களை பெரும்பாலும் ஆங்கிலத்திலேயே பெரும்பாலும் படித்து, கேட்டு, எழுதி இருப்பதால் ஆங்கிலத்திலேயே தான் நினைக்க முடிகிறது.
    நான் விஞ்ஞான விஷயங்களை தமிழிலோ அல்லது ஆங்கிலத்திலோ நினைத்துப் பார்க்கிறேன்: சவ்வூடு பரவல் என்று எட்டாம் வகுப்பில் படித்து இருந்தாலும் சட்டேன்று osmosiis என்று தான் நினைக்கத் தோன்றுகிறது. விஞ்ஞான விஷயங்களில் கூட சில விஷயங்களை ஆங்கிலத்திலே மட்டுமே முதன் முறை படித்து இருப்போம்; உ-ம: calculus. அதை பற்றி என்ன நினைத்தாலும், ஆங்கிலத்திலேயே தான் இருக்கும்.
    வேற்று மாநிலங்களில் பல ஆண்டுகளாக இருக்கும் என்னைப் போன்றவர்களுக்கு வேறு மொழிகளிலும் நினைப்பது இயல்பே. சில சமூக வழக்கங்கள் அந்த பகுதியில் மிக அருகில், அல்லது முதல் முறையாக பார்த்த விஷயங்கள் அந்த மொழிகளிலேயே வருவது நான் அனுபவப்பட்டிருக்கிறேன். பார்த்த என்றால், படங்களையும் சேர்த்து தான்: ஹிந்தி படங்களிலே பல முறை கண்ட bhaaraath காணும் போது ஊர்வலம் என எண்ண தோன்றாது. (இதை நாம் தமிழில் பேசும் போது தவறி சொல்லிவிட்டாலும் போஸ் அடிக்கிறான் என கிண்டல் செய்வது இப்போது பழகி விட்டது. )
    உணர்ச்சிகள், உணர்வுகள் பெரும்பாலும் தாய் மொழியில் நினைத்தாலும், சில அயல் மொழிகளிலும் சமயங்களில் தோன்றுகிறது உண்டு.

  2. முந்தைய பதிவு ஒரு நல்ல விவாதத்தை கிளப்பி இருக்கிறது. அதன் நீட்சியாக அடுத்த ஒரு அருமையான விவாதம். உங்கள் வலைப்பூ இலக்கியத்தரத்திற்கு மெருகேறி வருகிறது.

    என் பதில்
    மனைவி – ஏற்கனவே அருமையான பெயர் உள்ளது . Home Maker
    பணம் – பொருளாதார கடத்தி – Economical transporter
    சின்ன வீடு (ஆகு பெயர்!) – Problem maker, Peace maker
    சாராயம் – ஒரு இருமல் மருந்தின் பெயர் இதற்கும் பொருந்தும். Nivaran 90( கட்டிங் அளவை பொறுத்து நம்பர் மாறும் )

    1. நன்றி கார்த்தி, சாராயம் தவிர பாக்கி எல்லாவற்றுக்கும் முறைப்படி இரட்டை வார்த்தை சொல்லி விட்டீர்ர்கள். பாராட்டுக்கள்!

  3. என்னுடைய தாய் மொழி ” சௌராஷ்டிரா ” ஆனால் என் சிந்தனைகள் எல்லாம் தமிழில் தான் இருக்கும்..
    சிறு வயது முதல் தமிழிலே அனைத்து information கேட்டு , தமிழிலே படித்ததால் என் mind voice எப்போதும் தமிழில் தான் பேசும்.. பி.கு.: வீட்டில் அனைவரும் சௌராஷ்டிராவில் தான்பேசுவோம்..

  4. பேசிப் பழகிய மொழியில் தான் பொதுவாகச் சிந்தனைகள் உருவாகின்றன. உரையாடும் போது அதிகப் பழக்கம் உள்ள மொழியில் சிந்திக்கும் நாம், எழுதும் பொழுது எந்த மொழியில் எழுதுகிறோமோ அந்த மொழியில் சிந்திப்பதைக் கவனித்திருக்கிறீர்களா? இன்னும் பேச்சுத் திறன் வளராத ஒரு வயதுக்குட்பட்ட பல் வேறு நாட்டுக் குழந்தைகளின் சிந்தனைத்திறனைப் பற்றி Winifred Haas ஒரு குட்டிப் புத்தகம் எழுதியிருக்கிறார். படித்தால் சிந்தனைக்கும் மொழிக்கும் தொடர்பே இல்லை என்று தோன்றிவிடும்.

    1. அப்பாதுரை சார், புழக்கத்தில் இருக்கிற எந்த மொழியோடும் சிந்தனைக்குத் தொடர்பு கிடையாதுன்னுதான் எழுதியிருக்கேன்.

எதுவா இருந்தாலும் எழுதுங்க!