பாதாளக் கரண்டி

நாகப்பட்டினத்தில் இருந்த போது, ஒரு நாள் வாசல் திண்ணையில் உட்கார்ந்து படித்துக் கொண்டிருந்தேன்.

சோமாஸ்கந்தைய்யர் வீட்டு ரேவதி இடுப்பை வெட்டி வெட்டி நடந்து என்னை நோக்கி வந்தாள். அவளைப் பார்த்ததும் ‘வென் காந்தி ஸ்டார்ட்டட் ஹிஸ் லைப் இன் சவுத் ஆப்ரிக்கா…’ என்று ஆல் இந்தியா ரேடியோவின் ஆங்கிலச் செய்தி மாதிரி வாசித்து பீட்டர் விட ஆரம்பித்தேன்.

கிட்டே வந்து “பாதாளக் கரண்டி இருக்கா?” என்று கேட்டாள்.

அந்த வார்த்தையை அதற்கு முன் நான் கேள்விப்பட்டதே இல்லை. ஒரு வேளை பாதாளக் கரண்டி என்றால் சேதுராமய்யர் மனைவி காபிப் பொடி கடன் வாங்கக் கொண்டு வருவாளே, அது மாதிரி பெரிய கரண்டியோ?

என்ன இழவோ, ஆனால் ஒரு பெண்ணுக்கு முன்னால் அது எனக்குத் தெரியாத விஷயம் என்று காட்டிக் கொள்ள என் ஈகோ இடம் தரவில்லை.

“பாதாளக் கரண்டியாவது ஆகாசக் கரண்டியாவது. எனக்குப் பரீட்சை, படிக்கணும்” என்று விறைத்தேன்.

“சரி, நா உங்க அம்மா கிட்ட கேட்டுக்கறேன்” என்று உள்ளே போய் விட்டாள்.

“ராவ் ஆத்துல இருக்கும் பாரு” என்று அம்மா சொன்னது என் காதில் விழுந்தது.

பாதாளக் கரண்டி என்றால் என்ன என்று தெரிந்து கொள்கிற ஆர்வம் பரிட்சையை மறக்க வைத்தது. அவள் பின்னாலேயே போய் பார்த்தேன்.

பல்வேறு சைசில் ஏறக்குறைய நூறு கொக்கிகள் இணைக்கப் பட்ட ஒரு ஜல புள ஜிங்க்ஸ்தான் பாதாளக் கரண்டி. கிணற்றில் எதாவது விழுந்து விட்டால் ஒரு கயிற்றில் அதைக் கட்டி கிணற்றுக்குள் பிராண்டிக் கொண்டே இருப்பார்கள். ஒரு ஸ்டேஜில் பொருள் அதில் சிக்கிக் கொள்ளும்.

பாதாளக் கரண்டியை கிணற்றில் விட்டு தேவும் போது சில எதிர்பாராத பொருட்கள் கிடைக்கும். நமக்கு முன்னால் குடியிருந்தவர்கள் போட்டு விட்டு எடுக்க மறந்த பொருட்கள் எல்லாம் கிடைக்கும். அப்படிக் கிடைத்த பித்தளை செம்பில் பேரீச்சம் பழம் வாங்கித் தின்றிருக்கிறோம்.

இந்த பாதாளக் கரண்டியை இரவல் தருகிறவர்கள் கிணற்று ஜகடையையோ, வாளியையோ கொண்டு வைத்தால்தான் தருவார்கள். தாத்பர்யம் என்னவென்றால் இது என்றைக்கோ பிரயோஜனப் படுகிற பொருள். கொடுத்தவர்கள், வாங்கினவர்கள் இரு சாராரும் மறந்து விடுவார்கள். அதனால் ஞாபகமாக உடனே திருப்பிக் கொடுக்க வைக்க இந்த ஏற்பாடு.

பாதாளக் கரண்டி இல்லாத ஏரியாக்களில் ‘கெணத்துல வாளிஈஈ சொம்பூஊஊ’ என்று கூவியபடி வாசலில் வருகிற ஆசாமிகளை வைத்து எடுப்பார்கள்.

விழுந்த பொருளின் மதிப்பை உங்கள் பதட்டம் காட்டிக் கொடுத்து விடும்.

அது போன்ற சந்தர்ப்பங்களில் ஏடாகூடமாக பேரம் செய்வார்கள்.

வாலாம்பா பாட்டி ‘சொம்பு விழுந்துடுத்துடா’ என்று சொல்லி ‘எட்டணா தரேன்’ என்று இறக்கி விடுவாள். விழுந்தது ஒரு தவலையாக இருக்கும்.

‘என்ன பாட்டி, ஏமாத்திட்டீங்களே’ என்று அவன் கம்ப்லைநிங் ஆக சொல்லும் போது

‘கொஞ்சம் பெரிய சொம்பு. அவ்ளோதாநேடா’ என்பாள்.

என் அப்பா வேறே மாதிரி டெக்னிக் வைத்திருந்தார்.

‘கெணத்துல வாளி சொம்பூ’ என்று அந்த ஆசாமி வரும் போது கையிலிருக்கும் பேப்பரை மடித்து விட்டு அவனை ஒரு தரம் பார்ப்பார்.

“என்ன சாமீ, கெணத்துல ஏதானும் விளுந்திடுச்சா?” என்று அவனாகவே வந்து கேட்பான்.

“ஆமாம்… ஆனா…” என்று அசுவாரஸ்யமாக பேப்பரைப் பார்த்தபடி சொல்வார்.

“என்ன சாமீ ஆனா… என்ன விளுந்திச்சு?”

“விழுந்தது ஒரு குடம். நீ என்ன கேக்கறே?”

“ரெண்ட் ரூபா குடு சாமீ”

ரெண்டு ரூபாய் என்பது அப்போதெல்லாம் மிகப் பெரிய தொகை. அளவு சாப்பாடே ஐம்பது பைசாவுக்குக் கிடைக்கும்.

“வேணாம்ப்பா.. குடம் கிணத்துலையே இருக்கட்டும், நீ போயிட்டு வா”

“எவ்ளோ தருவே சாமீ?”

“நாலணா தர்றேன்”

“நாலணாவா, என்ன சாமீ இது. நாலணாவை வச்சிக்கிட்டு நான் என்ன பண்றது?”

“அஞ்சு இட்லி சாப்பிடலாமே?”

“எம் புள்ளைங்களுக்கு யாரு சோறு போடுவாங்க சாமீ”

“ஒண்ணு பண்றியா?”

“என்ன சாமீ?”

“உன் புள்ளைங்களையும் கூட்டிட்டு வா, நான் சோறு போடறேன். நீ குடத்தை எடுத்துடு”

“நெசமாவா சாமீ?”

அந்த ஆளும் ரெண்டு குழந்தைகளும் பழையதையும் வெங்காயத்தையும் ரசித்து ருசித்துச் சாப்பிடுவார்கள். எங்களுக்கும் வேலை ஆகி விடும்.

இப்போதெல்லாம் பிச்சைக்காரன் கூட சோறு வேணாம், காசு குடு என்கிறான்!

Advertisements

18 comments

 1. தலைவா, ரேவதிக்கு இப்ப 35 வயசாவது ஆயிருக்கும் போல. அவங்கப்பா எந்த தெருன்னு கேக்குறீங்களே!

  பைதிவே அந்தப் படம் போட்டிருக்கலாம்… நீங்கள் பிடித்திருப்பது போல் இருந்தால் சிறப்பு. ரேவதி பிடித்திருப்பது போல் இருந்தால் மார்க்கெட்டிங்க்கு வசதி! 🙂

 2. //அந்த ஆளும் ரெண்டு குழந்தைகளும் பழையதையும் வெங்காயத்தையும் ரசித்து ருசித்துச் சாப்பிடுவார்கள்.//

  அப்பவும் பழசை தான் போட்டிருக்கேள்….
  நீங்கள் ரொம்ப கெட்டிகார சாமி….

 3. “இப்போதெல்லாம் பிச்சைக்காரன் கூட சோறு வேணாம், காசு குடு என்கிறான்”

  சமீபத்தில் சைதாபேட்டையில் எலெக்ட்ரிக் ட்ரெயின் ஏற நின்றிருந்த சமயம் டீ குடிக்க காசு கேட்டு வந்தவனிடம் பையைத் துழாவி, பையில் இருந்து இரண்டு ரூபாய் நாணயத்தை எடுத்துப் போட்டால், “சார், டீ அஞ்சு ரூபா சார், இன்னும் மூன்று ரூவா குடு..” என்றான் ஏதோ என்னிடம் விற்றவன் போல…

 4. நீங்கள் ரேவதியின் வளையலை தேட பாதாளக்கரண்டி போட்டிருப்பது பற்றிய சரசமான பதிவு என்று படித்தேன்.

  ரேவதியின் வளையல் கிணற்றில் விழுந்திருந்தால், நீங்களே பாதாள கரண்டியாகியிருப்பீர்கள் தானே?

 5. பாதாள கரண்டி என்பதை எங்களூரில்
  பாதாள கொலுஸு என்று சொல்லுவோம். ஜல்ஜல் என்று ஓசை அதை எடுத்து வரும்போது உண்டாவதால் இருக்கும் என்று நினைக்கிறேன்.

 6. சில சமயம் உச்சி வெய்யில் வரும் வரை காத்திருப்போம்; தண்ணீர் தெளிவாக, சில சமயம் விழுந்த பொருள் எங்கே இருக்கிறது என்று தெரியும். மெதுவாக கரண்டியை இறக்கி தண்ணீர் குழம்பி விடாமல், அந்த பொருளில் மாட்டி அசையாமல் மெதுவாக தண்ணீருக்கு மேலே கொண்டு வரும்போது மீண்டும் நழுவி விழுந்ததும்உண்டு.

 7. அப்பப்ப இந்த மாதிரி உங்க மனசுக்குள்ளேயும் பாதாளக் கரண்டி போட்டு (ஆண்ட்டிகள் பற்றிய) பழைய நியாபகங்களை சொல்லுங்க சார்…. 🙂

 8. // தெரிந்து கொள்கிற ஆர்வம் பரிட்சையை மறக்க வைத்தது. அவள் பின்னாலேயே போய் பார்த்தேன் // எதை? உடனே சொல்லவந்ததை இமேஜ் காரணங்களுக்காக மறைத்து சபை நாகரீகம் கருதி சொல்லப்படும் பொய்யை ரேவதியின் பேரன் கூட நம்பமாட்டான்.

  // ரேவதிக்கு இப்ப 35 வயசாவது ஆயிருக்கும் // ரேவதியை தலைவர் சைட் அடிக்கும்போது பரீட்சைக்கு படிப்பது போல் பாவ்லா காட்டியிருக்கிறார். ஒரு ஃபிகரிடம் பீட்டர் விட வேண்டும் என்றெல்லாம் அந்த காலத்திலேயே, அதுவும் நாகப்பட்டிணம் மாதிரி ஒரு கிராமத்தில், தோன்றியிருந்தால் குறைந்த பட்சம் அது காலேஜ் மெச்சூர்டு வயசு என்று கொள்ளலாம். சைட் அடிக்கப்படும் வயசு என்பது தலைவர் வயதுக்கு சில பல வருடங்கள் கூட (இது addition என்பதாக அர்த்தப்படும் கூட) குறைச்சல் என்று கொண்டால் ரேவதிக்கு இன்றைய தேதிக்கு 55-60 வயசு என்பதை சுட்டிக்காட்ட விரும்புகிறேன் யுவர் ஆனர்.

  1. யுவர் ஹானர், அரசாங்க வக்கீல் இதில் வேண்டுமென்றே தேவையில்லாத ஆராய்ச்சிகளில் ஈடுபட்டு என் இளமைக்கு பங்கம் விளைவிக்கும் நோக்கத்துடன் செயல் படுகிறார். வழக்குக்குத் தேவையான விஷயங்களை மட்டும் வாதிட அவருக்கு நீதிமன்றம் அறிவுறுத்த வேண்டுகிறேன்.

 9. எங்க ஊரில் “தாடி” என்றொரு பெரியவர் இருந்தார். நல்ல உயரம் .. மாதக்கண்க்கில் ஷேவ் செய்யப்படாத தாடி.. இடையில் கோவணத்தை விடப் பெரிய சைஸில் வேஷ்டி.. வாரப்படாத தலையில் கொத்து முடி.. தோளில் கத்து தாம்புக்கயிறு.. இவ்வளவுதான் “தாடி”.. சிறிது மனவள்ர்ச்சி குன்றியவர்.. சிறு வயதுக் காதல் தோல்வியென்று நினைக்கிறேன்.. அவர் பாணி ரொம்ப பிரபலம்.. கிண்ற்றில் இறங்கி கையில் பொருள் எடுத்தவுடன்.. கிணற்றிலிருந்தே பேரம் பேசுவார்.. சீதாப்பாட்டியிடம்.. பாட்டி 2 ரூபா கீழ போடு.. இல்லேன்னா “கிணற்றிலேயே மூச்சாப் போயிடுவேன்” என்று ப்டுத்துவார்.. பாட்டி “கட்டேல் போறவனே” என்று சொல்லி கோவப்படுவது மாயவரம் பிரசித்தம்.. கடைசியில் தாடி கிணற்றில் மூச்சாப் போனாரா இல்லயா என்பது தேவரகசியம்.. கடவுளுக்கும் இந்நேரம் மறந்து விட்டிருக்கும்…

எதுவா இருந்தாலும் எழுதுங்க!

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s