காக்கா கறியும் கருவாடும் சைவர்களும்

வைதீஸ்வரன் கோயிலில் மிஸ்டர் முத்துக் குமாரஸ்வாமியைப் பார்க்கப் போயிருந்தேன்.

அதனால்தான் மீண்டும் தலை மறைவு.

மயிலாடுதுறை போகிற போதே மாலை மணி ஆறாகி விட்டது. (பனிரெண்டு மணி நேரம்!)

சீமாச்சுவின் (http://seemachu.blogspot.com/) நண்பர் திரு மூர்த்தி அன்போடு வரவேற்றார். சீமாச்சுவைப் பொறுத்தவரை இவர் (உடன்பிறவா என்கிற பதத்தைப் பயன்படுத்தினால் அனர்த்தம் ஆகி விடும் என்கிற பயம் இருப்பதால்,) சகோதரர். பள்ளிகளுக்கும் கோயில்களுக்கும் சீமாச்சு செய்து வரும் நற்பணிகளில் அவரோடு கைகோர்த்திருப்பவர்.

சீமாச்சுவின் தகப்பனாரும், திரு. மூர்த்தி அவர்களும்

மூர்த்தி அவர்களுக்கு ஊரில் எப்படிப்பட்ட மதிப்பு இருக்கிறது என்பது தெரிய வேண்டுமானால் ஒரு உதாரணம் சொல்கிறேன்.

மூர்த்தி அவர்கள் வீட்டிலிருந்து வெளியே வந்து சாலையைக் கடக்கிற போது சுர்ர்ரென்று வேகமாக வந்த புல்லட் ஒன்றில் ஒரு கறுப்புத் துண்டு பிரமுகர் கடந்தார். சட்டென்று வண்டியை நிறுத்தி விட்டு “வணக்கம்,போங்க” என்றார்.

மூர்த்தி, “நீங்க போங்கண்ணே” என்றார்.

மூர்த்தி கோயில், குளம் என்று பணி செய்து கொண்டு இருக்கிற ஒரு பக்தர். வந்தவரோ கறுப்புக் கட்சி பிரமுகர். இரண்டு பேரும் செய்து கொண்ட புன்னகையும், வணக்கமும், வயசுக்கு தந்த மரியாதையும்……. கொள்கைகளுக்கு அப்பாற்பட்ட அவர்களின் நட்பைக் காட்டிற்று.

வாசன் (சீமாச்சுவின் நிஜப் பெயர்) என்பது மயிலாடுதுறை ஏரியாவில் ஒரு மந்திரச்சொல்.

ஏறக்குறைய எல்லாருக்கும் தெரிந்திருக்கிறது, முக்கியமாக பள்ளிகளிலும் கோயில்களிலும். தெரிந்திருப்பது மட்டுமில்லை, அந்த வார்த்தை சொன்ன இடங்களில் ராஜ மரியாதை கிடைக்கிறது. தகரக் கொட்டகையாக இருந்த ஒரு பள்ளிக்கு கட்டிடம் கட்டிக் கொடுத்திருக்கிறார். கோயில்களில் ஏகப்பட்ட திருப்பணிகள். எல்லாவற்றையும் பட்டியலிட்டால் விளம்பரத்துக்காக வெளியிடப்பட்ட சாதனைப் பட்டியல் மாதிரி இருக்கும்.

தொண்ணூற்றி இரண்டு வயதான முன்னாள் ராணுவ அதிகாரியான அவரது தகப்பனாரும் தொலைகாட்சி வாங்கித் தருவது, டிவிடி ப்ளேயர் வாங்கித் தருவது என்று பள்ளிகளுக்கு ஏதேதோ செய்து கொண்டிருக்கிறார். பள்ளிப் பிள்ளைகளிடம் பேரப்பிள்ளைகள் மாதிரி பிரியமாக இருக்கிறார். பிள்ளைகளும் ‘தாத்தா, தாத்தா’ என்று மொய்க்கிறார்கள்.

இன்னொரு பள்ளிக்கு (அவர் படித்தது)  சீர்திருத்தம் செய்ய பெரிய திட்டம் வைத்திருக்கிறார். அது இந்த வருஷம் நிறைவேற்றப் பட இருக்கிறது.

அதற்குப் பெரிய அளவில் அவரும், திரு மூர்த்தி அவர்களும் பொருளுதவி செய்ய இருந்தாலும், இன்னும் நிறையப் பேரின் உதவிகள் தேவைப் படும்.(இதை அவர் சொல்லவில்லை. தனிப்பட்ட முறையில் பழைய மாணவர்களிடம் பேசி வருகிறார். எல்லாருக்கும் தெரிந்திருந்தால் பயன்படுமே என்கிற உந்துதலில் நானாகச் செய்கிற அதிகப் பிரசிங்கித்தனம் இது. அவர் மன்னிக்கட்டும்)

DBTRNHSS (திவான் பகதூர் திரு ரங்காச்சாரி நேஷனல் ஹையர் செகண்டரி ஸ்கூல்) என்று அழைக்கப் படும் அந்தப் பள்ளிக்குப் போனது ஒரு மறக்க முடியாத அனுபவம்.

அங்கே தலைமை ஆசிரியராக இருக்கும் திரு.ராஜேந்திரன் ஒரு அபூர்வ மனிதர்.

அருமையான டீம் பில்டர்.

சக ஆசிரியர்கள் மனப்பூர்வமாக சேவை செய்கிற மாதிரி ஒரு டீம் ஐ உருவாக்கி இருக்கிறார். ஏகப்பட்ட சாதனைகளைச் செய்து விட்டு “நான் எதுவுமே பண்ணல்லைங்க. எல்லாம் என் கல்லீக்ஸ் பண்ணது. எல்லாத்துக்கும் தனித் தனி டீம் இருக்குங்க.” என்று பணிவோடு சொல்கிறார்.

பள்ளி பெற்றுக் கொண்டிருக்கும் விருதுகளின் ஒரு பகுதி

சக ஆசிரியர்கள் மற்றும், மாணவ மாணவியரின் சாதனைகளைச் சொல்கிற போது அவர் குரலிலும், தோற்றத்திலும் பிரியமும் பெருமையும் தெரிகிறது.

படிக்க வசதியில்லாத மாணவர்களை தன வீட்டில் மாடியில் தங்க வைத்து உணவளித்து கல்வி தருகிறார். அன்ன யாவினும் புண்ணியம் கோடி ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல் என்கிற பாரதியின் சொற்களை மதிக்கிறார், ஒரு ஏழை அல்ல… பல.

பள்ளிக்கு வந்த அவரது ஆசிரியரை காலணிகளைக் கழற்றி வைத்து விட்டு போய் வணங்கி உரையாடுகிறார். (என்னைப் பார்க்கிற போது கூட சிலர் செருப்பைக் கழற்றுவார்கள். வெறுங்காலோடு ஓடினால் சௌகர்யம் என்பதால்)

தன் ஆசிரியரோடு உரையாடும் தலைமை ஆசிரியர்

பெற்றிருக்கும் நல்லாசிரியர் பட்டத்துக்கு பெருமை சேர்க்கிறார்.

அடிப்படையில் ஒரு சுவாலாஜி பட்டதாரியாக இருந்தாலும் தமிழ் இலக்கியத்தில் ஆர்வமும், நுணுக்கமான அறிவும் பெற்றவர்.

காக்கா கறியும் கருவாடும் மென்று தின்னும் சைவர்கள் என்று சைவர்களை நக்கலடிக்கிற பழமொழி ஒன்று உண்டு. அதற்கு அருமையான விளக்கம் தருகிறார்.

கரு வாடுமென்று காக்கா கறியும் தின்னும் சைவர்கள் என்று அதை ரீ ச்டிரக்ச்சர் செய்து விட்டு சொன்னார்.

கரு என்றால் விதை. விதையில் உயிர் இருக்கிறதென்று அதை எடுத்து விட்டு, காம்பையும் கிள்ளி விட்டு எஞ்சியிருக்கிற காய் கால் காய்தானே? அந்தக் கால் காயில் கறி சமைத்துச் சாப்பிடுகிறவர்கள் சைவர்கள். இதுவரை யாரும் சொல்லாத புது விளக்கம் இது. இது மாதிரி நிறைய பேசுகிறார்.

வாசன், (சீமாச்சு) எப்படிப்பட்ட மனிதர்களை நண்பர்களாக வைத்திருக்கிறார் என்று பார்த்த போது, அந்தப் பட்டியலில் என்னைச் சேர்த்துக் கொண்டிருப்பது ஆஸ்கார் விருது கிடைத்த மாதிரி இருக்கிறது.

சிலிர்ப்பான அனுபவங்களைத் தந்த வாசனுக்கு நன்றி மட்டும் சொன்னால் போதாது.

வேறே ஏதாவது செய்ய வேண்டும்.

Advertisements

24 comments

 1. சீமாச்சுவின் சேவைகள் புல்லரிக்க வைக்கிறது. அந்தப்பள்ளியில் மிகப்பெரிய பொறுப்பை ஏற்று வழிநடத்தவேண்டும் என்ற சீமாச்சுவின் ஆசையை நீங்கள் நிறைவேற்றும் நாளை எதிர்பார்க்கிறோம்.

  1. குடுகுடுப்பை : அந்தத் தகுதி எனக்கு இருக்கிறதா என்கிற சந்தேகத்தில்தான் இன்னும் யோசனையில் இருந்து மீளாமல் இருக்கிறேன்.

 2. பல பதிவுகளாக வந்த தங்களுடைய ஜப்பான் பயண கட்டுரைவிட இந்த பதிவு அதிக தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. பதிவில் கொண்டு வந்ததுக்கு வாழ்த்துக்கள்.
  நித்தில்

  1. நன்றி நித்தில், சந்தடி இல்லாமல் நல்லது நிறைய நடை பெறுகிறது. நாலு பேருக்குத் தெரிந்தால் நிறைய பேர் இன்ஸ்பயர் ஆவார்கள் என்பதே என் அவா….

 3. எங்கள் ஊரை பற்றி,பள்ளியினை பற்றி சீமாச்சு அண்ணாவினை பற்றி பகிர்ந்த தகவல்கள் மனதுக்கு மிகுந்த மகிழ்ச்சியினை தருகின்றது !

  நன்றிகளுடன்…

  அன்புடன் ஆயில்யன் 🙂

  1. பாராட்டி எழுதுவது அவருக்கு பிடிக்கிறதில்லை. பாராட்டின் நோக்கம் வேறு. இன்னும் நாலு பேர் நல்லது செய்ய ஆசைப் பட வேண்டும் என்கிற நைப்பாசையில்தான் இதைச் செய்திருக்கிறேன் என்று புரிந்து கொண்டு அவர் என்னை மன்னிக்க வேண்டும்.

 4. ஐயா, உங்கள் விஜயத்துக்கும் என்னைப் பற்றிய அறிமுகத்துக்கும் நன்றி..

  என் பள்ளியில் படித்த ஒவ்வொரு மாணவனுக்குமே எங்கள் பள்ளியின் மேல் தீராக் காதல் உண்டு.. அபிஅப்பா, ஆயில்யன், மயிலாடுதுறை சிவா, மூக்கு சுந்தர், மாயவரத்தான்… என்ற பல பதிவர்கள் எங்கள் பள்ளிதான்..

  அந்தக் காதல் அடிப்படையில் (அனுமன் அறிமுகப் படுத்திக் கொண்ட பாணியில் ) நான் தான் கடைசி குரங்கு…

  மாணவர்கள் மட்டுமல்ல… நான் சமீபத்தில் சந்தித்த மாணவிகளும் கூட (விசாலம், சரஸ்வதி, ரமா..மற்றும் பலர்).. அதில் வீட்டுக்காரருக்குத் தெரியாமல் சேமித்து வைத்து.. “என் பேர் சொல்லாமல் ஸ்கூல் பில்டிங் பண்டுல சேர்த்திருங்க சார்.. “ என்று கையொ ரூபாய்ய் 20,000 வைத்து அழுத்திய அந்த முன்னாள் மாணவியின் பெயர் தவிர்த்திருக்கிறேன்… “ என் கணவர் அனுமதியுடன் இன்னும் தருகிறேன்.. உங்களைப் பார்த்தவுடன் என் சார்பாகத் தரத் தோன்றியது” என்று சொன்ன அந்த மாணவியின் காதலுக்கு என் சாஷ்டாங்கமான நமஸ்காரங்கள் கோடி..

  நீங்க ஊரில் போய்ப்பார்த்தது ரொம்ப குறைச்சல்.. எங்க மாணவர்கள் நிறைய்ய பேரை நீங்க பார்க்கத்தான் போறீங்க .. அவங்களைப் பத்தியும் எழுதத்தான் போறீங்க.. என்று என் உள் மனதில் எப்பொழுதும் குடி கொண்டிருக்கும் முத்துக்குமரன் சொல்கிறான்…

  அன்புடன்,
  சீமாச்சு…

  1. சீமாச்சு, அந்த முத்துக் குமரன்தான் நம்மை இணைத்து வைத்திருக்கிறான்! நீ இன்னும் தெரிந்து கொள்ளவும், செய்யவும் நிறைய விஷயங்கள் இருக்கின்றன என்று எனக்கு உணர்த்த நினைத்திருக்கிறான்!

 5. இந்தப் பதிவைப் படித்த பின் சீமாச்சுவைப் பற்றி தெறிந்து கொள்ள அப்பதிவிற்குப் போனேன். பாராட்டப்பட வேண்டிய மனிதர். நீங்களும் அருமையாக எழுதியுள்ளீர்கள். காக்காய்
  கருவாட்டு அர்த்தம் அதிசயத் தக்கதாய் மனதில் பதிந்தது.
  மாயவரத்தில் அதே ஸ்கூலில்தான்
  வெங்கட ரமணய்யா காலத்தில்
  என் தகப்பனார் வி…சுப்பிரமணிய அய்யர் தமிழ்ப் பண்டிதராக பத்து வருடங்கள் பணியாற்றி இருக்கிரார்.
  அதாவது 100 வருஷக் கதையாகக் கூட இருக்கலாம். பழைய கதைகள் கேட்டது மறப்பதில்லை. இடுகையைப்
  படித்த பின் மனதில் ஏற்பட்ட நினைவலைகளிது.

 6. என்ன சொல்வது என்றே தெரியவில்லை. பாராட்டுக்கள் என்று சொல்லலாம். அவர்கள் பாராட்டுக்களை எதிர்பார்த்து இவற்றைச் செய்வதில்லை.
  இங்கேயும் மனிதர்கள்…..நல்ல மனங்கள். அவர்கள் மென்மேலும் இந்த மாதிரி நல்ல காரியங்கள் செய்ய ஆண்டவன் அவர்களுக்கு எல்லா நலமும் அருளட்டும்.

 7. ஆகா, ஆகா என்ன அருமையான பதிவு. தொண்டு தான் உயர்ந்தது என்று தொண்டருக்கு செய்யும் தொண்டை பற்றி தொகுத்த பெரியபுராணம் சேக்கிலார் தான் நினைவுக்கு வருகிறார்.

  மக்கள் தொண்டே மகேசன் தொண்டென இருக்கும் எல்லோருக்கும் எந்தன் வணக்கங்கள்.

  பகிர்ந்தமைக்கு நன்றி!.

 8. உடன் இருந்து அவதானிக்கும் எமக்கு, இது புதிதானது இல்லைதான்….

  சித்தப்பா குடுகுடுப்பையார் சொன்னது போல, சீமாச்சுவைப் போல உங்கள் சேவையும் நாட்டுக்குத் தேவை!

 9. பதிவு பிரமாதம்! நெகிழ வைக்கிறது.

  //(என்னைப் பார்க்கிற போது கூட சிலர் செருப்பைக் கழற்றுவார்கள். வெறுங்காலோடு ஓடினால் சௌகர்யம் என்பதால்)//

  அது எப்படிங்க, இவ்வளவு சீரியசான பதிவுலயும் உங்க ஹாஸ்யங்கள சரியான இடத்துல நுழைச்சிடுறீங்க?
  தொடரட்டும்…..
  http://www.padmahari.wordpress.com

 10. \\அடேடே, ராம்கி… நீங்களும் DBTR Product ஆ? நிறைய ப்ளாக்கர்கள் இருக்கீங்க போலிருக்கே!\\
  அடடே!! இன்னும் எத்தனை முக்கியமான பதிவர்கள் எங்க பள்ளி தெரியுமா ஜவகர்! எல்லேராம், முகமூடி உட்பட இன்னும்பலர்.

  ***************

  நான் எப்படி இந்த பதிவை படிக்க விட்டேன். மன்னிக்கவும். எங்க ஊருக்கு வந்ததுக்கும், எங்க பள்ளிக்கு வந்ததுக்கும், முக்கியமா மூர்த்தி அண்ணனை பத்தி எழுதினதுக்கும், சீமாச்சு அண்ணாவின் தந்தையாரை பார்த்து வந்ததுக்கும் மிக்க நன்றி மிக்க நன்றி!! உங்களுக்கு எங்கள் செல்வ முத்து குமரன் பூரண அருள் கொடுக்கட்டும்.

  **************
  @ ராம்கி!
  தலை நிறைத்தாலும் சிங்கம் சிங்கம் தானே!

  **************

  வந்துட்டு என்னை பார்க்காமல் போயிட்டீங்களே ஜவகர்! அடுத்த தடவை நம்ம வீட்டுக்கும் வந்து போங்க!

எதுவா இருந்தாலும் எழுதுங்க!

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s