எடுக்கல்லைன்னா நாறிடாதா?

ஏப்ரல் மாதம் வரும்போதெல்லாம் எதேச்சையாக ஆன அந்த ஏப்ரல் ஃபூல் சம்பவம் நினைவு வரும் எனக்கு.

அன்றைக்கு ஏப்ரல் முதல் தேதி.

தண்டு என்று ஒரு வாத்தியார் இருந்தார்.

“தண்டு வாத்யார் செத்துப் போய்ட்டாராம்” என்று யாரோ ஒரு பையன் சொல்ல அது மெல்ல மெல்ல பள்ளிக் கூடம் பூரா பரவ ஆரம்பித்தது.

விஷயம் தலைமை ஆசிரியர் வரைக்கும் பரவியது.

எல்லாரும் ரெண்டு நிமிஷம் மெளனம் செலுத்தினோம்.

“தண்டு வீடு யாருக்குத் தெரியும்?” என்று கேட்டார் தலைமை ஆசிரியர்.

யாருமே பதில் சொல்லவில்லை.

ஒரே ஒரு பையன் “எனக்கு தெரு மட்டும் தெரியும்” என்றான்.

ஒரு சாவு நடந்த தெருவில் வீட்டைக் கண்டு பிடிப்பது கஷ்டமில்லை. தலைமை ஆசிரியரும் ஒரு சில ஆசிரியர்களும் முதலில் புறப்பட்டர்கள். மெல்ல மெல்ல ஆள் சேர்ந்து ஒரு ஊர்வலம் மாதிரி ஆகி விட்டது.

எனக்கு தண்டு வாத்தியார் யார் என்றே தெரியாது. அவர் ஒன்பதாம் வகுப்புக்கு மேற்பட்ட வகுப்புகளுக்கு மட்டும் வருபவர். நானும் கூட்டத்தில் சேர்ந்து கொண்டேன்.

எங்கள் ஊர்வலத்தைப் பார்த்து நாகபட்டினமே ஸ்தம்பித்தது.

“வர வர பிள்ளைங்களோட வாத்தியார்களும் சேந்து ஸ்டிரைக் பண்ண ஆரம்பிச்சிட்டாங்கய்யா” என்று சிலர் காமண்ட் அடித்தார்கள்.

புண்டரிகுளம் மேல் கரை போகும் போது வாசன் கடை வாசலில் தம் அடித்துக் கொண்டிருந்த ஆள் என்னருகே வந்தார்.

“என்னடா தம்பி கூட்டமாப் போறீங்க?” என்றார்.

“தண்டு வாத்தியார் செத்துட்டாராம்” என்றேன்.

அவர் வாயிலிருந்த சிகரட் நழுவி வேட்டி ஓட்டையானது.

கூட்டத்தின் வாலில் அவரும் சேர்ந்து கொண்டார்.

திருமேனி செட்டித் தெருவை அடைந்து திரும்பினோம்.

“தண்டபாணி வாத்தியார் வீடு எது?” என்று விசாரித்தார்கள் சில ஆசிரியர்கள்.

“அதோ” என்று அந்த ஆள் கையைக் காட்டிய திசையில்,

ஒரு வீட்டு வாசலில் தென்ன மட்டை கிடந்தது. குப்பைத் தொட்டி அருகே ஒரு நெருப்புக் குவியல் புகைந்து கொண்டிருந்தது. வீட்டில் கூட்டமே இல்லை. வாசலில் ஒரே ஒரு அம்மாள் உட்கார்ந்து சீவல் நறுக்கிக் கொண்டிருந்தாள்.

தயங்கித் தயங்கி அருகே போன தலைமை ஆசிரியர்,

“நாங்க தண்டபாணி வாத்தியார் வேலை பார்க்கிற பள்ளிக்கூடத்திலேருந்து வர்றோம்” என்றார்.

அந்த அம்மாள் எதுவும் பேசவில்லை.

“விஷயம் கேள்விப்பட்டோம்” என்றார் தொடர்ந்து.

“இந்த இளவு சேதி உங்க வரைக்கும் வந்திரிச்சா?”

“வராம இருக்குமா பின்ன… எத்தனை வருஷமா பழக்கம் எங்களுக்கு”

“அது என்னா எளவு பளக்கமோ, மித்த நாள்ள வராதிங்க. இதை மட்டும் பாக்க வந்தீங்களாக்கும்”

“யார் எதிர்பார்த்தாங்க இப்படி நடக்கும்ன்னு”

“நா எதிர்பார்த்தேன், ஒரு நா இப்பிடி நடக்குமுன்னு நா எதிர்பார்த்தேன்”

“ரொம்ப விரக்தியில இருக்கீங்க”

“பின்னே, திரெளபதி அம்மனுக்கு நேந்துகிட்டா இப்படி நடக்கும். விரக்திதான்”

“எடுத்தாச்சா?”

“எடுக்காம, இன்னமுமா விட்டு வெச்சிருப்பாங்க? நாறிடாதா?”

“என்ன இப்டியெல்லாம் பேசறீங்க?”

“வேறே எப்டி பேசுவாங்க?”

“பழகினவங்க, ஒருதரம் பார்க்க ஆசை இருக்காதா? நாங்களும் சேர்ந்தே எடுத்திருப்போம்”

“என்னய்யா அறிவு கெட்ட தனமாப் பேசிகிட்டு இருக்கீங்க? குடிச்சிட்டு சாக்கடைல விழுந்த மனுஷனை மூணாம் பேருக்குத் தெரியாம எடுப்பாங்களா, ஊரைகூட்டி வேடிக்கை காட்டிகிட்டு இருப்பாங்களா?”

“குடிச்சிட்டு…. மை காட்! தண்டுவுக்கு குடிக்கிற பழக்கமெல்லாம் உண்டா?”

“யார் தண்டு?”

“நீங்க தண்டு வைஃப்தானே?”

“அடக் கண்றாவியே… அந்தாளுதான் தெனம் குடிச்சிட்டு வந்து அவனோட படுத்தே இவனோட படுத்தேன்னு தெருவுல நின்னு கத்தறான்னா, நீங்க ஏதோ ஒரு தண்டுவுக்கு பொண்டாட்டியே ஆக்கிட்டீங்களா?”

அப்போது பின்னாலிருந்து ஒரு குரல்,

“சார், நா இங்க இருக்கேன்” என்றது.

திரும்பிப் பார்த்தால் பொட்டிக் கடையில் தம் அடித்த பார்ட்டி.

“யோவ்.. நீ செத்துட்டேன்னு சொன்னாங்க?”

“சாவுக்குப் போய்ட்டேன்னு சொல்லுன்னு சொல்லி அனுப்பினேன். செத்துப் போய்ட்டேன்னே சொல்லிட்டாங்களா!”

“இது யார் வீடு, குடி சாக்கடைன்னு அசிங்கமா இருக்கு”

“அது எதிர் வீடு சார், அந்தாளு குடிச்சிட்டு நேத்து தெற்கு வீதியில ஜெல்ஜாரியில விழுந்துட்டான்”

Advertisements

8 comments

  1. தூள் சார்! தலைமை ஆசிரியர் மூஞ்சி எக்ஸ்ப்பிரஷன் பத்தியும் சொல்லி இருக்கலாம். மத்தபடி பசங்களுக்கு ஜாலி தானே?

  2. எதிர் பார்த்த முடிவுதான் என்றாலும் சம்பவமும், அதைச் சொன்ன விதமும், எழுத்து நடையும் இயல்பான வசனங்களும் சுவாரஸ்யமாக இருக்கிறது.

எதுவா இருந்தாலும் எழுதுங்க!

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s