கெட்டும் பட்டணம் சேர்

வீடு மாற்றுவது எப்படி என்று பயிற்சி வகுப்பு நடத்துகிற அளவுக்கு அனுபவம் எனக்கு.

என் ஞாபகத்தில் பிசகில்லை என்றால் சுமார் 23 தரம் மாறியிருப்போம் இதுவரை. வீடு மாற்றல்களுக்கு செலவு செய்த பணத்தில் முப்பதாயிரம் கிலோமீட்டர் மட்டும் ஓடிய ஒரு ஆல்ட்டோ கார் வாங்கியிருக்கலாம்!

வழக்கமாக மூட்டை முடிச்சு கட்டுவது, ஏற்றல் இறக்கல் எல்லாம் ஆட்களை வைத்து நாங்களே செய்து விடுவோம்.

இந்த முறை, நண்பர், ப்ளாக்கர் விஜயசங்கர் ஒரு யோசனை சொன்னார்.

“ஏன் சார் வீணா கஷ்டப்படறீங்க, பாக்கர்ஸ் அண்ட் மூவர்ஸ்ல கூப்பிடுங்க. செளக்யமா பண்ணிக் குடுப்பாங்க. இன்ஷ்யூரன்ஸும் இருக்கு. ஏதாவது பிரச்சினை ஆனா கிளைம் இருக்கு” என்று ஆசை காட்டினார்.

சென்னையிலிருந்து காட்பாடி போகும் போது ஒரு டேப்ரிக்கார்டர் மற்றும் இரண்டு பட்டுப் புடவைகள் காணாமல் போனது, ஒசூர் வரும் போது எக்ச்ப்ளோரர் வண்டியில் கார்புரெட்டர் காணாமல் போனது உள்ளிட்ட சம்பவங்கள் நினைவு வந்தன.

முயற்சித்து விடுவது என்கிற முடிவுக்கு வந்தேன்.

பெங்களூரிலும், சென்னையிலும் அலுவலகம் இருக்கிற ஒரு கம்பெனியைப் பிடித்தேன்.

போனை எடுத்த ஆள் ஹிந்தியில் பேச ஆரம்பித்தார்.

ஆத்திர அவசரத்துக்குப் பயன்படுகிற அளவுதான் என் ஹிந்தி ஞானம். இந்த ஆள் பேசினதில் நிறைய குஜராத்தி வாசனை இருந்தது.

சுத்தம்.

ஹிந்தியில் தெள்ளத் தெளிவாக பரத நாட்டிய முத்திரைகளோடு பேசினாலே அவுட்லைன்தான் புரியும்.

இதிலே குஜராத்தி கலப்படம் வேறு!

“அங்ரேசி மாலும்?”

“ஹாங்… க்யூன் நை…. மாலும் சாப்” என்று ஆங்கிலத்தில் அவர் ஆரம்பித்ததும் ஏற்கனவே கொஞ்ச நஞ்சம் புரிந்ததும் சுத்த ஷவரம்.

“மெஹர்பானிசே கர்க்கே ஆப் ஹிந்திமே போலியே ஹம்கோ சமஜ் ஹோஜாயேகா” என்றேன் அவசரமாக. இது அவருக்கு சமஜ் ஆயிற்றா தெரியவில்லை.

‘எவ்வளவு ஆகும்?’ என்று நான் கேட்டதற்கு அவர் சொன்ன பதில்

‘ஒரு லட்சத்தி எழுபத்தாறாயிரத்தி இருநூற்றி ஆறு’ என்கிற மாதிரி புரிந்து தலை சுற்றியது.

என்ன இது, இங்கே நம்முடைய சாமான்களை வாங்கிக் கொண்டு மெட்ராசில் வந்து எல்லாம் புதுசாக வாங்கித் தந்து விடுவார்களோ?

“க்யூங் இத்துனா சியாதா?” என்றதும்

அதுக்கு இவ்வளவு, இதுக்கு இவ்வளவு என்று ஒவ்வொன்றாகச் சொல்ல ஆரம்பித்தார். கூட்டிப் பார்த்தால் பதினேழாயிரத்தி இருநூற்றி ஆறு வந்தது.

என்றைக்கு வருவது என்ன சைஸ் வண்டி என்பதெல்லாம் தீர்மானமாயிற்று.

காலி பன்ணுகிற அன்றைக்கு தீவிரவாதிகள் மாதிரி இருக்கிற நாலு பீஹார் ஆசாமிகளை அனுப்பி விட்டு அந்த ஆள் செளக்யமாக ஆபிசில் உட்கார்ந்து கொண்டு விட்டார்.

அந்தப் பையன்கள் வந்ததும் வராததுமாக கிடைக்கிற ஐட்டங்களை எல்லாம் எடுத்து டப்பாவில் போட்டு மூட ஆரம்பித்தார்கள்.

என்ன நடக்கிறது என்று தெரிவதற்குள் ஒரு ரூமையே காலி செய்து விட்டார்கள்.

அந்த ரூமில் என்ன எல்லாம் இருந்தது என்று எவ்வளவு யோசித்தாலும் ஞாபகம் வரவில்லை.

எனக்கோ சென்னைக்குப் போய் பாக்கிங்களை இப்போது பிரிக்கிற உத்தேசமே இல்லை. அடுத்த மூன்று மாதங்களில் இன்னொரு மாற்றல் வென்ச்சர் இருக்கிறது.

அவர்கள் செய்வதைப் பார்த்தால் விளக்குமாற்றைத் தேடுவதாக இருந்தால் கூட எல்லாப் பெட்டிகளையும் கிழித்துத் தேடுகிற மாதிரி ஆகி விடும் போல இருந்தது.

“பாக் கர்னேக்கி பாத் நாம் லிக்கோ” என்றேன்.

தலையை ஆட்டினான்.

என் வாக்கியத்தில் இருந்த குழப்பம் அப்போது புரியவில்லை.

கொஞ்ச நேரம் கழித்து ஐந்தாறு பெட்டிகளைக் கட்டி வைத்திருந்தான். என்ன எழுதியிருக்கிறான் என்று எட்டிப் பார்த்தேன்.

போய்ப் பார்த்தால் எல்லாவற்றிலும் ‘மனோஜ் சின்ஹா’ என்று எழுதியிருந்தான்.

அவன் பேராம்!

மேல் வீட்டு நாய் வந்து அவர்கள் வேலை செய்வதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தது.

“ஏ ஆப்கா குத்தா ஹே?” என்றான் ஒரு பையன்.

விட்டால் அதையும் உதறி மடித்து ஒரு பெட்டியில் வைத்து விடுவார்கள் போலிருந்தது.

“நை.. நை… ஓ ஊப்பர் கர் சே ஆயா” என்றேன் அவசரமாக.

மனைவியின் அலுவலகத்திலிருந்து வந்திருந்த பெண்ணொருத்தி அருகில் இருந்தவளிடம்,

“ஊப்பர் கர்சே ஆயான்னா என்னப்பா?” என்றாள்.

”மேல் வீட்டு ஆயான்னு அர்த்தம்” என்றாள் அவள் பதினாறு வயதினிலே படம் மாதிரி.

டாங்க்கில் தண்ணீர் இல்லை என்று போய் பம்ப்பை ஆன் செய்து மேலே போய் வால்வைத் திறந்து விட்டு வருவதற்குள்,

“காம் கதம் ஹோகயா” என்று அறிவித்தார்கள்.

அதற்குள் முடிந்து விட்டதா!

சரிதான் புறப்படலாம் என்று டிரஸ்ஸைத் தேடினால் ஒரு டிரஸ் கூட இல்லை!

கட்டியிருந்த அழுக்கு வேஷ்டியையும், கிழிந்த பனியனையும் தவிர ஒரு பிடிதுணி கூட இல்லை.

எல்லாவற்றையும் மூட்டை கட்டி லாரியில் ஏற்றி விட்டார்கள்.

வீட்டுக்குள் காஸ் ஸ்டவ், டைனிங் சேர், டிவி, ஃப்ரிஜ் எல்லாம் அப்படியே இருந்தன.

ஆனால், பர்ஸ், கார் சாவி எல்லாம் வைத்திருந்த பிரீஃப் கேசை வண்டியில் ஏற்றி விட்டார்கள்!

ஏற்கனவே மூஞ்சி கள்ளச்சாராயம் கடத்துகிறவன் மாதிரி இருக்கிறது. இதில் பனியனோடு வண்டியை ஓட்டினால் சந்தேகக் கேசில் உள்ளே தள்ளி லாடம் கட்டி விடுவார்களே என்கிற பயம் ஏற்பட்டது.

அலமாரியில் தவறுதலாக ஒரு டையை விட்டிருந்தார்கள்.

“இந்த டையை கட்டிக்குங்க சார். மார்க்கர் பென்னாலே சட்டை மாதிரி வரைஞ்சி விட்டுடறேன்” என்று ஜோக் அடித்தார் எதிர் வீட்டுக்காரர்.

சென்னை வந்த பிறகும் அவஸ்தை தொடர்ந்தது.

மறுபடியும் ஹிந்தி.

இரண்டு நாட்களாக இவர்களிடம் ஹிந்தி பேசிப் பேசி ஆனந்த் பக்‌ஷி, குல்சாரை விட சிறப்பாக கவிதை எழுதுகிற அளவு புலமை வந்து விட்டது.

ஒரு வழியாக எல்லாவற்றையும் இறக்கி விட்டு சூடாக மூச்சு விட்டபடி உட்கார்ந்திருந்த போது போன் அடித்தது.

நாங்கள் வருவதற்கு சில மாதங்களுக்கு முன்னால் சென்னைக்கு மாற்றலாகி வந்த எங்கள் எதிர் ஃப்ளாட் நண்பரின் மனைவி.

“எங்க வீட்டுக் கல்லோரலைக் கொண்டு வரச் சொல்லியிருந்தேனே, வந்திடுச்சா?”

Advertisements

26 comments

 1. //போய்ப் பார்த்தால் எல்லாவற்றிலும் ‘மனோஜ் சின்ஹா’ என்று எழுதியிருந்தான்.

  அவன் பேராம்!//

  //ஊப்பர் கர்சே ஆயான்னா என்னப்பா?” என்றாள்.

  ”மேல் வீட்டு ஆயான்னு அர்த்தம்” என்றாள் அவள் பதினாறு வயதினிலே படம் மாதிரி.//

  சிரிச்சு முடியலை சார்…. 🙂 🙂 🙂

 2. இந்த டையை கட்டிக்குங்க சார். மார்க்கர் பென்னாலே சட்டை மாதிரி வரைஞ்சி விட்டுடறேன்” என்று ஜோக் அடித்தார் எதிர் வீட்டுக்காரர்//

  LOL:))))))))))

  கலக்கல் சாரே ! பிரிச்சு பார்த்தாத்தான் தெரியும் என்னவெல்லாம் வந்து இறங்கியிருக்கோன்னு 🙂

 3. அட்டஹாஸ்யம்:-)

  3-4 முறை நானும் வீடு மாத்தியிருக்கிறேன். 27 வருடம் கழித்து வீட்டை மாற்றினோம்…பரணில் எட்டிப்பார்த்தால் எள்ளுப்பாட்டி அவர் பிள்ளையை, “பெத்த வயித்துல பெரண்டையத்தான் கட்டிக்கணும்”, என்று வாழ்த்திக் கொண்டிருந்தார்.

  சமீபத்திய பேக்கர்ஸ் அண்ட் மூவர்ஸ் அனுபவம் சுமூகமாகவே அமைந்தது. முதல் முறை மாற்றிய போது, பேக் செய்த்தை எல்லாம் அன்பேக் செய்து , நடு வீட்டில் கடை பரப்பி, பெட்டிகளை எடுத்துக் கொண்டும் போய் விடுவார்கள் என்பதை அறிந்திருக்கவில்லை.

  இரவு 10.30 மணிக்கு சாமானை எலலாம் ஏறக் கட்டிய சூப்பர் மார்கெட்டுக்குள் தாண்டித் தாண்டி சென்று தயிர் பாக்கெட் வாங்குவது போல வீட்டில் எங்கள் நடமாட்டம் மாறிப் போனது.

 4. //மேல் வீட்டு நாய் வந்து அவர்கள் வேலை செய்வதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தது.

  “ஏ ஆப்கா குத்தா ஹே?” என்றான் ஒரு பையன்.

  விட்டால் அதையும் உதறி மடித்து ஒரு பெட்டியில் வைத்து விடுவார்கள் போலிருந்தது.

  “நை.. நை… ஓ ஊப்பர் கர் சே ஆயா” என்றேன் அவசரமாக.//

  ////ஊப்பர் கர்சே ஆயான்னா என்னப்பா?” என்றாள்.

  ”மேல் வீட்டு ஆயான்னு அர்த்தம்” என்றாள் அவள் பதினாறு வயதினிலே படம் மாதிரி.//

  சிரிச்ச சிரிப்பில்.. எல்லோரும் ஒரு மாதிரியாக பார்ப்பதை உணர்ந்தும் அடக்கமுடியவில்லை.

  சரளமான நடை.

  :)))

  வாழ்துகள்..

 5. //எல்லாவற்றிலும் ‘மனோஜ் சின்ஹா’ என்று எழுதியிருந்தான்.// ஹைய்யோ, சிரிச்சு முடியலை!

  //இரண்டு நாட்களாக இவர்களிடம் ஹிந்தி பேசிப் பேசி ஆனந்த் பக்‌ஷி, குல்சாரை விட சிறப்பாக கவிதை எழுதுகிற அளவு புலமை வந்து விட்டது.// எப்படிசார் இப்படி எல்லாம்?
  அஸாத்ய காமெடி!

 6. //மேல் வீட்டு நாய் வந்து அவர்கள் வேலை செய்வதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தது.

  “ஏ ஆப்கா குத்தா ஹே?” என்றான் ஒரு பையன்.

  விட்டால் அதையும் உதறி மடித்து ஒரு பெட்டியில் வைத்து விடுவார்கள் போலிருந்தது.

  “நை.. நை… ஓ ஊப்பர் கர் சே ஆயா” என்றேன் அவசரமாக.//

  ////ஊப்பர் கர்சே ஆயான்னா என்னப்பா?” என்றாள்.

  ”மேல் வீட்டு ஆயான்னு அர்த்தம்” என்றாள் அவள் பதினாறு வயதினிலே படம் மாதிரி.//

  சிரிச்ச சிரிப்பில்.. எல்லோரும் ஒரு மாதிரியாக பார்ப்பதை உணர்ந்தும் அடக்கமுடியவில்லை.

  சரளமான நடை
  அண்ணன் உங்கட வாசகர்கள் இந்தியாவில மட்டும்மில்லை இங்கயும் (இலங்கையிலும் ) இருக்கம் ஹிந்தியில போட்டத தமிழில விளக்கினா நல்லா சிரிச்சிருப்போமிள்ளே !!

 7. அதே அனுபவம் எனக்கும் , இந்த இரண்டு வருடத்தில் மூன்று வீடுகள் .. இந்தி நண்பர்களோடு பட்ட கஷ்டங்களை மிக நகைச்சுவையோடு சொல்லியுள்ளீர்கள் ..மொழி தெரிந்தவர்களை அனுப்பினால் திட்டிவிடுவோம் என்பதற்காகவே , பாண் பராக் இந்தி மக்களை அனுப்பிவிடுகிறார்கள் . அசந்தால் நம்மையும் பெட்டிக்குள் போட்டு அந்த மஞ்ச பேக்கிங் டேப்பை போட்டுவிட்டுவிடுவார்கள் … வரிக்கு வரி உண்மை….கொல் சிரிப்பு பதிவு …..

 8. ஆஹா..!
  பெரிய தலைவர் பெங்களூர் – ஆழ்வார்பேட்டை
  சின்ன தலைவர் ஹொசுர் – குரொம்பேட்டை.

  பட்டைய கிளப்புங்க.
  -விபின்

 9. தலைப்பு ஒரு பழமொழி. என்ன பொருள்?

  பதிவு நகைச்சுவை.

  17206 என்பது மலிவான தொகை. கோசூரிலிருந்து சென்னைக்கு குறைந்தது 50000 கேட்பார்கள் என நினைத்திருந்தேன்.

 10. தர்மாவுக்கு.

  அங்க்ரேசி மாலும் ?

  (ஆங்கிலம் தெரியுமா?)

  ஹாங்க்….சாப்

  (தெரியாது சார்)

  மெஹர்பானிசே….யேகா

  (தயவுசெய்து இந்தியிலே சொல்லுங்கள். எனக்கு புரியும்)

  க்யுன் …சியாதா

  (இவ்வளவு அதிகமா?)

  பாக்….லிக்கோ

  (கட்டியவுடன் பெட்டிகளில் பேரை எழுதிக்கொள்ளுங்கள்)

  ஏ..ஆப்கா…ஹை

  (இது உங்கள் நாயா?)

  நை…நை….ஆயா

  (இல்லை. இது மேல் வீட்டு நாய் – அல்லது..இல்லை இது மேல் வீட்டிலிருந்து வருகிறது)

  காம் கதம் ஹோகயா

  (எல்லா வேளைகளும் முடிந்துவிட்டன)

 11. இதுக்கு முன்னாடி 22 வீடு மாத்தின அனுபவத்தையும் கொஞ்சம் எழுதுங்க பாஸ்!…….இன்னும் கொஞ்சம் சிரிச்சிக்குறோம்!…….

எதுவா இருந்தாலும் எழுதுங்க!

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s