நீ டிரைவர், டிரைவர்….. டிரைவர்!

”இன்னைக்காவது என்னை ஆஃபிஸ்ல டிராப் பண்றீங்களா இல்லை இன்னைக்கும் ஃபோர்ட்ல கிளாசு, நோக்கியால மிட்டிங்ன்னு கதை சொல்லப் போறீங்களா?”

’டிராப் பண்ண முடியுமான்னு கேட்டு நிறுத்திக்கக் கூடாதா?’ என்று கேட்க நினைத்து நாக்கைக் கடித்துக் கொண்டு நிறுத்திக் கொண்டேன். ஆஃபிஸ் போகிற அவசரத்தில் என்ன மாதிரி பதில் வரும் என்று சொல்ல முடியாது. ‘எல்லாரையும் நிறுத்த சொல்லு, நான் நிறுத்திக்கறேன்’ என்று ஆரம்பித்து விட்டால் கஷ்டம்.

“வரேன்” என்றேன் மணிரத்னம் பட ஹீரோ மாதிரி.

“டவாலி மாதிரி இங்கேயே ஏன் நிக்கறீங்க. போய் வண்டியை எடுத்து வெளியில வெச்சா டைம் மிச்சமாகுமில்லே?”

‘போற அவசரத்தில வீட்டையும் நாந்தான் பூட்டணுமா?’ என்கிற வசனத்தைத் தவிர்ப்பதற்காக நின்றது தப்பாகப் போயிற்று. டிரைவர் வேலையை ஒழுங்காக செய்யாததால் டவாலிப் பட்டம்!

ஓடிப்போய் வண்டியை எடுக்கலாம் என்று பார்த்தால் ஒரு அதி மேதாவி மிகச் சரியாக கேட்டுக்கு எதிரில் டூரிஸ்ட் டாக்சியை நிறுத்தி விட்டு எங்கேயோ …………………………… ப் போய் விட்டான். கையைப் பிசைந்து கொண்டு டாக்சி பக்கத்தில் கேனப் பயல் மாதிரி நின்று கொண்டிருந்தேன்.

வேஷ்டியும் துண்டும் வியர்வையுமாக ஒரு ஆள் ஓடி வந்து “டிரைவர், வண்டியை எடு. சாம்பார் இன்னும் வரல்லை” என்று அதட்டினார்.

அடுத்த பிளாக்கில் ஒரு கிரஹப் பிரவேசம்.

திரும்பிப் பார்த்து முறைத்தேன்.

 “என்னாப்பா லுக்கு? ராஜாமணி கிட்ட சொல்லியாச்சு. அவர் வந்தாத்தான் வண்டியை எடுப்பியா?”

 “அந்த ராஜாமணி தலையில் இடிவிழட்டும். நான் டிரைவர் இல்லைய்யா”

கீழ் வீட்டுக்காரருக்கு சிரிப்பு தாங்கவில்லை.

”சாரி சார்…. டூரிஸ்ட் டாக்ஸி பக்கத்தில நின்னதாலே டிரைவர்ன்னு நினைச்சிட்டேன்”

“கார்ப்பரேஷன் வண்டி பக்கத்தில போலீஸ்காரர் நின்னா குப்பை அள்ளச் சொல்வீங்களா? செவிட்ல அறைஞ்சி ஜெயில்ல போட்டுடுவாரு. அப்புறம் டூரிஸ்ட் டாக்சி டிரைவரை வக்கீல்ன்னு நினைச்சி பெயில்ல எடுக்கச் சொல்வீங்க”

“என்ன ஒரு சாதாரண மேட்டருக்கு இப்படி கொந்தளிக்கறாரு?” என்று வடிவேலு மாதிரி அவர் வியந்து கொண்டிருந்த போது இல்லத்தரசி வந்து,

“ம்ம்ம்…. வண்டியை எடுங்க. டயமாச்சு” என்றதும்

“ஓ… வேறே வண்டி டிரைவரா….. அதுக்கு ஏன் இந்த கொந்தளிப்பு? நான் கூட ஏதோ செக்ரட்டேரியட்ல வேலை பார்க்கிறாராக்கும்ன்னு பயந்துட்டேன்” என்றார் சாம்பார்.

அவரை என்ன செய்யலாம் என்று யோசித்துக் கொண்டிருந்த போது நிஜம் டிரைவர் வந்து வண்டியை எடுத்து விட்டார்.

புறப்பட்டோம்.

வண்டி ஜியெஸ்டி ரோடு வந்ததும்,

“நீங்க ஒரு வேலை பண்ணுங்க. நான் பஸ்ல போயிக்கறேன். போய் டெலிஃபோன் பில்லைக் கட்டிடுங்க”

“பில்லு?”

“அதெல்லாம் தேவையில்லை. டெலிஃபோன் நம்பரைச் சொன்னாப் போதும்”

“சரி”

வெற்றி தியேட்டர் அருகே ஒரு யு டர்ண், சானட்டோரியம் அருகே ஒரு யு டர்ண். போய் எக்ஸ்சேஞ் வாசலில் வண்டியை நிறுத்தினேன்.

இறங்குவதற்குள் கதவை யாரோ டொக் டொக் என்று தட்டினார்கள்.

“யெஸ் கமின்” என்றேன்.

“கம் இன்னா, உன்னை உள்ளே போட்டுடுவேன்” என்றார், டிராஃபிக் இன்ஸ்பெக்டர்.

“பக்கத்தில இருக்கிற போர்டுல என்ன எழுதியிருக்கு பாத்தியா? இந்த சிம்பிள் இங்கிலீஷ் கூடப் படிக்கத் தெரியாது. உனக்கெல்லாம் லைசன்ஸ் குடுத்துடறாங்க. வண்டியை எடுய்யா”

ஏற்கனவே நிகழ்ந்திருந்த விஷயங்கள் கடுப்பை ஏற்றியிருந்தது.

“வாட் டூ யூ மீன் இன்ஸ்பெக்டர்…. இஃப் ஐ டிரைவ் தெ கார் ஐயம் டிரைவர் இஸ் இட்? யு ப்யூப்பிள் ஆர் புட்டிங் நோ பார்க்கிங் சைன்ஸ் எவெரி வேர். வேர் டு பார்க் தெ கார்? டூ யு எக்ஸ்பெக்ட் மீ டு பார்க் அட் செங்கல்பட் அண்ட் வாக் டவுன் டு குரோம்பேட் எக்ஸ்சேஞ்?”

“அப்படியா சங்கதி? இந்தா ஐநூறு ரூபாயைக் கட்டிட்டு அப்புறமா வண்டியை எடுத்துக்க” என்று ரசீதைக் கிழித்தார்.

எக்ஸ்சேஞ்சுக்குள் போனால் எல்லாக் கவுண்டரிலும் என்கவுண்ட்டர் செய்தார்கள்.

ஜோதிகா ஜாடையில் இருந்த ஒரு பெண்ணிடம் “டெலிஃபோன் பில் கட்டணும்” என்றேன்.

“கட்டுங்க”

சட்டென்று ஆயிரம் ரூபாய் நோட்டை எடுத்து நீட்டினேன்.

பார்க்கத்தான் ஜோதிகா. வாயைத் திறந்தால் காந்திமதி.

“கட்டுங்கன்னா என் தலையிலயா கட்டச் சொன்னேன்? கவுண்ட்டர்ல கட்டுங்க”

“இதுவும் கவுண்ட்டர்தானே?”

“இது வேறே. டெலிஃபோன் பில் எதிர் கவுண்ட்டர்ல”

எதிர்க்கவுண்டரில் போய் நீட்டினேன்.

“பில்லு எங்கே?”

“டபிள் டூ த்ரீ எய்ட்…..”

“சும்மா ரத்னா ஃபேன் ஹவுஸ் விளம்பரம் மாதிரி நம்பரைச் சொல்லிகிட்டு இருக்காதீங்க. பில் எங்கே?”

“நம்பர் சொன்னாலே கட்டலாம்ன்னு……..”

“எதித்த வீட்ல சொன்னாங்களா?”

“இல்லைங்க, எங்க வீட்டம்மா சொன்னாங்க”

“யாரு அவங்க? பிஎஸென்னெல் அக்கவுண்ட்ஸ் ஆஃபிசரா?”

“இல்லைங்க டிவிஷனல் எஞ்சினீயர்”

“எங்கே?”

“ஆஃபிஸ் போய்ட்டாங்க”

“அடச்சீ…. எங்கே டிஈ ந்னு கேட்டேன்”

“பிஎஸென்னெல்தான்”

“சர்வீஸ் கனக்‌ஷனுக்கு நீங்க ஏன் வந்து பில் கட்டறீங்க? அது த்ரூ டிப்பார்ட்மெண்ட் போய்டுமே?”

“சர்வீஸ் கனெக்‌ஷன் இன்னும் அப்ளை பண்ணல்லை”

 “வேலைக்கு சேர்ந்து எத்தனை நாளாச்சு?”

 “முப்பது வருஷம்”

“முப்பது வருஷமாவா அப்ளை பண்ணல்லை?”

 “ஹோசூர்லேர்ந்து டிரான்ஸ்ஃபர் ஆகி வந்து கொஞ்ச நாள்தான் ஆச்சு”

“அப்ப இந்த ஃபோன் யாருது?”

 “இது என் பையனுது”

“அவரு எங்கே?”

“அவரு அமெரிக்கா போயிருக்காரு”

 “த்ஸொ…. த்ஸொ”

“என்னங்க ஃபீலிங்ஸ்?”

“வீட்டம்மா டிஈ, பையன் அமெரிக்காவில இருக்காரு. ஆனாலும் நீங்க டிரைவர் உத்யோகம் பார்க்கறிங்களே… அதை நினைச்சேன்”

”நான் டிரைவர் இல்லைங்க” என்றேன் பல்லைக் கடித்துக் கொண்டு.

“டிரைவர், டிஜிஎம் வண்டி வைக்கிற இடத்தில பார்க் பண்ணிட்டியேப்பா. சீக்கிரம் வா” என்றார் செக்யூரிட்டி பின்னாலிருந்து.

கவுண்ட்டரில் இருந்த கிழவி ‘புர்க்’ என்று சிரித்தாள்.

வீட்டுக்குள் நுழைகிற போது நண்பன் டாக்டர் மோகன் கனகசபை காத்திருந்தான்.

“அடேடே பார்த்து ரொம்ப நாளாச்சு. நாகப்பட்டினத்திலேர்ந்தா வர்ரே?” என்றபடி கதவைத் திறந்தேன்.

புறப்படும் போது கரண்ட் போய் விட்டது. டிவியை ஆஃப் பண்ணவில்லை.

“ஆமாம், அசோக் லைலண்டை விட்டுட்டியாமே…. இப்ப என்ன பண்றே?”

இதற்கு நான் பதில் சொல்லுமுன் டிவியில் கவுண்டமணி ஜெயராமிடம் சத்தமாக “நீ டிரைவர்… டிரைவர்…… டிரைவர்” என்றார்.

கே.பாலச்சந்தர், ஏவிஎம் சரவணன் இவர்களுக்கெல்லாம் கூட இந்தப் பிரச்சினை இருந்திருக்குமோ?

38 comments

  1. ///கம் இன்னா, உன்னை உள்ளே போட்டுடுவேன்” ” //

    //எல்லாக் கவுண்டரிலும் என்கவுண்ட்டர் //

    ///என் தலையிலயா கட்டச் சொன்னேன்…… //

    துரதிர்ஷ்டங்கள் ஒன்று மட்டும் தனியாக வருவதில்லை என்பதற்கிணங்க போட்டு தாக்கியிருக்கிறது …

    மேலே உள்ளது சாம்பிள் மட்டும் …. இருபக்கமும் டென்ஷன் வசனங்கள் குலுங்க வைத்தது …

    ( பை தி பை , குரோம்பேட்டை அலுவலகத்தில் சேவை சிறப்பாக இருக்கும் …. சென்ற முறை நான் தான் பில் கட்டினேன் ..ஜோதிகா கண்ணில் படவில்லையே ….புதிதாக வந்திருப்பார்களோ என்னோவோ …. இனி நோ சான்ஸ் …ஜாகை ஊரப்பாக்கத்துக்கு மாற்றியாச்சு )

  2. //”நான் டிரைவர் இல்லைங்க” என்றேன் பல்லைக் கடித்துக் கொண்டு.//

    ஜவகரின் பிரச்சினை எனக்கு விளங்கவில்லை; விளங்கவே இல்லை.

    எல்லாருமே `டிரைவர்’ என்று (மரியாதைப்) பன்மையில்தானே சொல்லி இருக்கிறார்கள்; யாருமே `டிரைவன்’ என்று ஒருமையில் சொல்லவில்லையே?

    என்ன ஐயா, ஏன் கோபம்?

  3. இந்தப் பக்கத்தைப் படித்துக்கொண்டிருக்கும்போதே இண்டெர்நெட் கட்டாயிடுச்சு… பி.எஸ்.என்.எல்லுக்குப் போன் பண்ணினேன்… டிரைவர் ப்ராப்ளமா இருக்கும் … ரீ இன்ஸ்டால் பண்ணிப்பாருங்கன்னு சொன்னாங்க….

  4. நல்ல வேளை ஞாபகப் படுத்திணீங்க. ஓட்டுனர் உரிமம் வாங்கி அரை டஜன் ஆண்டுகளுக்கு மேலே ஆகிவிட்டது. சீக்கிரம் கார் ஓட்டக் கற்றுக் கொள்ளவேண்டும்.

  5. //“வீட்டம்மா டிஈ, பையன் அமெரிக்காவில இருக்காரு. ஆனாலும் நீங்க டிரைவர் உத்யோகம் பார்க்கறிங்களே… அதை நினைச்சேன்”//

    I think something is missing here. She neither see you driving the car nor heard from anyone that you were driving a car

  6. Would hav lost my job for laughing loudly in office reading the line “ஓ… வேறே வண்டி டிரைவரா….. அதுக்கு ஏன் இந்த கொந்தளிப்பு? …….

    Thanks for taking away our job stress by ur funny way of writing!

  7. ///“வாட் டூ யூ மீன் இன்ஸ்பெக்டர்…. இஃப் ஐ டிரைவ் தெ கார் ஐயம் டிரைவர் இஸ் இட்? யு ப்யூப்பிள் ஆர் புட்டிங் நோ பார்க்கிங் சைன்ஸ் எவெரி வேர். வேர் டு பார்க் தெ கார்? டூ யு எக்ஸ்பெக்ட் மீ டு பார்க் அட் செங்கல்பட் அண்ட் வாக் டவுன் டு குரோம்பேட் எக்ஸ்சே…..///
    இந்த இடத்துல பீட்டர் கூடுதேன்னு பார்த்தேன் …..
    ///பக்கத்தில இருக்கிற போர்டுல என்ன எழுதியிருக்கு பாத்தியா? இந்த சிம்பிள் இங்கிலீஷ் கூடப் படிக்கத் தெரியாது.///
    இப்படி இன்ஸ்பெக்டர் சீண்டுனா , சும்மாவா இருப்போம் ஆக்ஸ்போர்டு , கேம்ப்ரிட்சு எல்லாத்தையும் இறக்கி விட்டிருவோம்ல ..

  8. //‘போற அவசரத்தில வீட்டையும் நாந்தான் பூட்டணுமா?’ என்கிற வசனத்தைத் தவிர்ப்பதற்காக நின்றது தப்பாகப் போயிற்று. டிரைவர் வேலையை ஒழுங்காக செய்யாததால் டவாலிப் பட்டம்!//

    Enjoyed reading!
    First time hearing the word “tavali”… meaning?

    1. ஹீனாஜீ, டவாலீங்கிற காரெக்டர் நீதிபதி கலெக்டர் மாதிரி ஆளுங்கெல்லாம் வர்ரதுக்கு முன்னால அறிவிப்பு பண்ற ஆள்!!

  9. ரிட்டயர் ஆன முதுநிலை மேலாளர்,மனைவி டிஇ,மகன் அமெரிக்காவில்!……..அப்போ நீங்க டிரைவர் தான்!…….

  10. அருமையான எண்ண ஒட்டம், ஒவ்வொரு சிறு நிகழ்வுகளையும் அருமையாக விவரத்துள்ளீர். கதை அருமை…. அருமை…. அருமை!

    1. ம்ம்க்கும்… குவைத்ல உக்காந்துகிட்டு நீங்க ஜொள்ளு விட்டுகிட்டே இருக்க வேண்டியதுதான்! பிஎஸெனெல் ரொம்ப மாறிடிச்சு. போன வாரம் தமன்னா மாதிரி கூட ஒரு கேரக்டரை கஸ்டமர் சர்வீஸ் செல்லில பார்த்தேன்!

  11. இதான வேணாங்கறது. குவைத் ஆடையில ரொம்ம்ம்ப முன்னேறிய ஊருங்கோ! லெபனான், சிரியா, ஜோர்டானிலிருந்தெல்லாம் இங்கே இறக்குமதி சரக்கு இருக்கு!

    தமன்னா மாதிரி ஒரு கேரக்டர் கஸ்டர் சர்வீஸ் “செல்லுல” பாத்தீங்களா? வீடியோ எனக்கும் அனுப்புங்க!

M.R. MURTHI -க்கு பதில் அளிக்கவும் மறுமொழியை நிராகரி