’உண்மய சொன்னேன்’

என் காலத்துக் குழந்தைகளுக்கு வாத்தியார் வேலை என்றதும் பாடம், படிப்பு, மார்க்கு, பாஸ் என்பதெல்லாம் தோன்றாது. பிரம்பு, அடி, உதை, பெஞ்சி மேல் நிற்க வைப்பது இவைதான் மனசில் டாமினண்ட்டாக இருக்கும். பள்ளிக்கூட விளையாட்டில் வாத்தியார் ரோல் செய்யும் பிள்ளைகள் கையில் குச்சியுடன் மேசையை டொக் டொக் என்று தட்டி ”பேசினா உரிச்சிடுவேன்” என்று சொல்லும்.

என்னுடைய பள்ளிப் பருவத்தில் மாணவர்களைக் கொடுங்கோல் ஆட்சி செய்த பிரும்ம ராட்சசர்கள் நிறையப் பேர் வாத்யாராக இருந்தார்கள். என்னுடைய ஏழாங்கிளாஸ் வாத்தியார் அதுமாதிரிப் பேர்வழிகளில் ஒருவர்.

 மூக்கும் சொட்டைத் தலையும் அடக்கின குரூரத்தைக் காட்டும் சிரிப்புமாக முசோலினி ஜாடையில் இருப்பார். விரல்கள் மேல் பென்சிலை அப்பளம் இடுவது மாதிரி உருட்டுவது, முஷ்டியின் இரண்டாம் குழியில் கட்டை விரலை அழுத்துவது (செய்து பாருங்கள்!), டிரவுசரைக் கழற்றி விட்டு டிக்கியில் பிரம்பால் அடிப்பது, மூக்கைப் பிடித்து முன்னும் பின்னும் இழுத்து பின் மண்டையை சுவற்றில் இடிப்பது என்று அவர் தருகிற தண்டனைகள் எல்லாம் புரட்சிக்காரர்களுக்கு சர்வாதிகாரிகள் தரும் தண்டனைகள் மாதிரி இருக்கும். அவர் பேரைக் கேட்கிற போதே வயிற்றில் களேபரம் உண்டாகி கக்கூஸ் போக வேண்டும் போல இருக்கும்.

 ஒருதரம், ”வீட்டுப்பாடம் எழுதாதவங்க எல்லாம் எழுந்து நில்லுங்க” என்று அவர் சொல்லும் போது துரதிஷ்டவசமாக நானும் நிற்கவேண்டியதாய்ப் போயிற்று. முதல் நாள் ஒரு கல்யாணத்துக்குப் போவதற்காக மட்டம் போட்டிருந்ததால் என்ன வீட்டுப்பாடம் என்பதே தெரியாது.

 “முன்னூறு தோப்புக்கரணம் போடு” என்பது எனக்குத் தரப்பட்ட தண்டனை.

 தோப்புக்கரனம் என்றால் முட்டுச் சந்துப் பிள்ளயாருக்குப் போடுவது மாதிரி பஜனையான தோப்புக்கரனம் இல்லை. இடது கையால் வலது காதையும், வலது கையால் இடது காதையும் பிடித்துக் கொண்டு முட்டிக்கால் தரையில் டங் டங் என்று இடிக்கிற மாதிரி வலது முட்டியையும் இடது முட்டியையும் மாற்றி மாற்றி தரையில் இடித்துப் போடுகிற தோப்புக்கரணம். (இதை இன்றைக்குக் கேட்கிற போது கூட என் மனைவியும் மகன்களும் கப்பர் சிங்கைப் பழி வாங்கப் புறப்படும் தர்மேந்திரா மாதிரிக் கொந்தளிக்கிறார்கள்!)

 போட்டு விட்டு வந்து உட்கார்ந்து விட்டேன். அப்போது எதுவும் தெரியவில்லை.

 சாப்பாட்டு இடைவேளைக்கு மணி அடித்தார்கள்.

 பென்ச்சிலிருந்து எழுந்திருக்கவே முடியவில்லை. கஷ்டப்பட்டு எழுந்து இரண்டடி வைத்தால் தங்கப்பதக்கம் படத்தில் மனைவி மரணத்தைக் கேட்ட சிவாஜி மாதிரி ஜெர்க் ஆகிறது.

 வெளிப்பாளையத்திலிருந்து வரும் பையன்கள் சைக்கிளில் வருவார்கள். அப்படிப்பட்டவர்களில் ஒரு தியாகச் செம்மல் சைக்கிள் காரியரில் உட்கார்த்தி வைத்து வீட்டு வாசலில் இறக்கி விட்டான். இடப்புறம் ஈ செக்‌ஷன் ரேவதியும், வலப்புறம் உஷாவும் தோள் கொடுக்க  வெள்ளிக்கிழமை பிரார்த்தனைக் கூட்டத்துக்குப் போகும் காந்தி மாதிரி வீட்டுக்குள் பிரவேசித்தேன்.

 “என்னடா இது, பொம்பளைகள் மேலே கையைப் போட்டுகிட்டு…” என்று செவிட்டில் அறைய வந்த அப்பா என் ஜெர்க்கைப் பார்த்துப் புரையேறி நின்றார்.

 “என்ன ஆச்சு?” என்று அவர் கேட்டதே ‘அவையில் நடந்ததைக் கூறு’ என்கிற சிவாஜியின் சிம்மக் குரலாக ஒலித்தது.

 “……………………………. வாத்யார் முன்னூறு தோப்பிக்கரணம் போடச் சொன்னார். அதனாலதான் நிக்கவே முடியல்லை அவனுக்கு” என்றாள் உஷா.

 “எந்த ………………………………….? பெரிய கடத்தெருவில ரொட்டிக்கடை வச்சிருக்கானே அவனா?”

 “அவரேதான்”

 அப்பா துண்டை உதறித் தொளில் போட்டுக் கொண்டார்.

 டண்டர… டண்டர…. டண்டர என்று கேவி மஹாதேவன் கோஷ்டி உச்சஸ்தாயியில் பின்னணி வாசிக்க நேஷனல் ஹை ஸ்கூலுக்கு விரைந்தார்.

 அங்கே என்ன ஆயிற்று என்பது தெரியாது.

 இரண்டு நாளைக்குப் பள்ளிக்கூடம் போக முடியவில்லை. அதனால் வீட்டுப்பாடம் என்ன என்பது தெரியாது. மூன்றாம் நாள் வீட்டுப்பாடம் எழுதாதவர்கள் நிற்கிற போது மறுபடி எழுந்து நின்றேன்.

 “நீ உக்காரு… கால் சரியாயிடுச்சா?” என்று கேட்கிற போது அவர் குரல் லேசாகக் கம்மியது. கண் ஓரத்தில் கண்ணீர் ஒளிர்ந்தது.

 வீட்டுக்கு வந்து, “……………………………… வாத்யார் கிட்ட என்னப்பா சொன்னே?” என்று கேட்ட போது,

 “சொல்ல வேண்டியதைச் சொன்னேன்” என்றார், ‘உண்மய சொன்னேன்’ என்கிற பாட்ஷா மாதிரி.

 அது என்ன என்பதை வேறொரு சந்தர்ப்பத்தில் எழுதுகிறேன்.

Advertisements

26 comments

 1. // “சொல்ல வேண்டியதைச் சொன்னேன்” என்றார், ‘உண்மய சொன்னேன்’ என்கிற பாட்ஷா மாதிரி.

  அது என்ன என்பதை வேறொரு சந்தர்ப்பத்தில் எழுதுகிறேன்//

  அதையே இப்ப எழுதியிருக்கலாமோன்னு கிளைமேக்ஸை படிக்கறச்ச தோன்றது 🙂

 2. Jawaharji
  Reminded me of a similar corporal punishment incident in my school days 1985 to be exact. Already I had fever so was feeling drowsy in the class. A PT master came on substitution to the class and he was as such irritated with it. He threw a duster on me with chalk powder and called me and thrashed me like anything saying you were sleeping. Fever increased by evening and I remember one of my friend Valli accompanied me home (we had to walk a km home).
  It is another story, my dad called the school and filed a complaint with the Principal stating the reason and after that that PT master became sort of calmed down atleast to me.

 3. பரவாயில்லை சார்…உங்கப்பா போய் உண் மய்ய சொல்லிட்டு வந்திட்டார்…எங்க விட்டில் எல்லாம் வாத்தியாரு அடியை கூட தாங்கிக்கலாம்…அடியாடா வாங்கிட்டு வர்ற…இருன்னு சொல்லி தாங்கற தாங்கு வாத்தியரு அடியே பரவாயில்ல மாதிரி இருக்கும்..பத்தாக்குறைக்கு அடுத்த நாள் பள்ளிக்கு போய் வாத்தியாருக்கு அட்வைஸ்…கண் ண மட்டும் விட்டுட்டு தோல் உரிச்சிருங்க… அதுக்கப்புறம்…அடிதான் வாங்குவோமா.. அப்படி வாங்கினாலும் வெளிய சொல்லுவோமா……

  1. பத்மனாபன்: //கண் ண மட்டும் விட்டுட்டு தோல் உரிச்சிருங்க…// இது ஒரு பாப்புலர் ஃப்ரெஸ் இல்லே அப்போ? அதுதான் வாத்யார்களை கொம்பு சீவி விட்டிருக்கு!

 4. //இடப்புறம் ஈ செக்‌ஷன் ரேவதியும், வலப்புறம் உஷாவும் தோள் கொடுக்க //

  அப்பயே வா??? சரி நடக்கட்டும் நடக்கட்டும்
  ஓ… உங்களால தான் அப்ப நடக்க முடியாதுல???? 🙂

  சூப்பர் வர்ணனை ஜி

 5. அப்போதெல்லாம் ஆசிரியர்கள் அடியையும் உதையையும் கொடுத்தார்கள்.

  இப்போதெல்லாம் குழந்தைகளைக் கொடுப்பதாக செய்திகள் அடிபடுகின்றன,.

  மலரும் நினைவுகள்!…

  – ஜெகதீஸ்வரன்.
  http://sagotharan.wordpress.com

 6. Sir,
  இங்க இன்னும் கொஞ்சம் டெக்னிகலா!!?? இருக்கும்,

  ௧> ஒரு கால்ல நின்னுகிட்டு இன்னொரு கால மடக்கி முட்டிக்கு மேல வச்சிக்கணும் – இந்த நிலைமல மடக்கின உள்ளங்கால்ல வீறு வீறுனு வீருவார் – நான் செய்யற வேலைங்களும் அதுக்கு தகுந்த மாதிரிதான் இருக்கும்கறது வேற விஷயம்!!! இதுல வேடிக்கை என்னன்னா இவர் மட்டும்தான் சாத்துவார் – காரணம் நீயும் அவங்கள மாதிரியே கெளம்பிடத – ஏன்னா அவர் பையனும் எங்க சித்தப்பாவும் நண்பர்கள் !!!??? – (:-)
  மத்தவங்களுக்கு – பயம் – முனிசிபல் கவுன்சிலர் சித்தப்பா கிட்ட வாங்கிகட்ட. இது நாலாவது வரைக்கும் குத்தாலத்துல!

  வந்த கோவத்துல அவருக்கு இருந்தா பேர (கொடமொளகா) இன்னும் கொஞ்சம் பிரபலபடுத்த நான் எடுத்த முயற்சிகள பார்த்துட்டு இங்க இருந்தா இவன் உருப்பட மாட்டான் அப்டின்னு எங்க அப்பாக்கிட்ட ரெகமென்ட்??!! வேற பண்ணி தஞ்சாவூர் அனுப்பி வச்சார்

  அப்புறம் ???? ஹையர் ??!! ஸ்டடீஸ் இல்லையா??!! அது மோர் டெக்னிகல் ???!!!!
  ௨> மர நாற்காலியோட மட்டத்துக்கும் முதுகு தாங்கிக்கும் இருக்கிற இடைவெளில தலைய விட்டு நெஞ்சை மட்டத்துல சப்போர்ட் பண்ணிக்கணும் (கிட்டத்தட்ட கில்லட்டின் மாதிரி) இந்த கன்டிஷன்ல பின் பக்கம் பழுக்கும் !!! நகர முடியாது, துள்ளி குதிக்க முடியாது எல்லாம் முடிஞ்சப்பறம் உட்கார கூட முடியாது!!!! அடிச்ச வாத்தியார் பேர சொல்லி கத்திட்டு ஸ்கூல் காம்பவுண்டு சுவத்து மேலயே ஓடி ஸ்கூல ஒரு ரௌண்டு வந்த திறமைய கண்டு பள்ளிக்கூடம் வியந்தது!!???

  அடுத்த நாள்தான் அது எவ்ளோ பெரிய தீரசெயல்னும்??!! அதோட விளைவும் தெரிஞ்சுது ( அதாவது தஞ்சாவூர்ல சித்தப்பா முனிசிபல் கவுன்சிலர் இல்லைங்கற உண்மை)!!!

  இந்த மாதிரி வீராதி வீரர்கள் கல்பூர்னியா மேடம் கிளாஸ்க்கு தான் சரி வருவான்க “மேடம், உங்க கண்காணிப்புலயே இருக்கட்டும்” மீன்ஸ் : டீச்சர் மேஜை பக்கத்துலயே உட்கார வைக்கப்பட்டு எந்த விதமான மேலதிக நடவடிக்கைக்கும் உடனடி அடி கிடைக்கும். பெரிய ஸ்கூல் வாத்தியருங்களோட பசங்க ஒரு 3 பேரும் அதே ஏரியாயல தான்!!!
  மேடம் ரொம்ப தைரியமானவங்க. அப்புறம் சொல்ல மறந்துட்டனே மூக்கு பொடி போடுவாங்க !!!!(:-)

  ஆனால் அதோட நன்மைகளாகவும்??!! ஒரு சில விஷயங்கள் நடந்தது : விளையாடரதுக்கு காலி பொடி டப்பா கிடைக்கும்??!!. அத வச்சு ஒரு அகல் விளக்கு மாதிரி செஞ்சத பார்த்து பாராட்டினாங்க.
  ஒருக்கா பாடத்துல மனித உடலமைப்பு எலும்பு பற்றி வந்தத விளக்கறதுக்காக ஒரு மண்டை ஓடு இருந்தா நல்ல இருக்கும்னு சொன்னங்க – நானும் தர்மராஜனும் போய் தர்மு வீட்டுக்கிட்ட இருக்குற சுடு காட்டுலேருந்து ஒரு மண்டை ஓடு எடுத்து வந்து குடுத்தோம். அத எல்லாருக்கும் கைல குடுத்து observe பண்ண சொன்னாங்க. நான் சும்மா இருக்காம அதோட தலைல(!!!??) ரெண்டு தட்டு தட்டி பார்த்தா, கொஞ்சம் மண்ணு அதோட மூக்குலேருந்து(???!!!) விழுந்துது. இப்போ நாம விழுந்து விழுந்து சிரிச்சுட்டு என்னடானு கேட்ட மேடம் கிட்ட “உங்கள மாதிரியே இதுவும் (??!!) மூக்கு பொடி போட்ருக்கு” னு சொன்னதுக்கு அடி விழல (!!??). அதுக்கப்போறத்துலேருந்து பிரண்ட்ஸ் ஆகிட்டோம்??!!.
  சொந்தமா இங்கிலீஷ் சென்டன்ஸ் எழுத முயற்சி பண்ணாத பார்த்துட்டு ஊக்கப்படுத்தினாங்க. மனப்பாடம் பண்ண வணங்காம நாம சொந்தமா (தப்பா)எழுதினதுக்கு இப்படி ஒரு பாராட்டு. அப்புறம் அவங்க பாரட்டுரதுக்காக இன்னும் நல்லா எழுத முயற்சி எடுக்க வைத்தது. நிறைய படிக்கறதுக்கு தெரிஞ்சிக்கிறதுக்கு உதவியா இருந்தது. ஆறாவது நுழைவு தேர்வு (???!!!) எழுத – ஆமாம் 3 மணி நேர டெஸ்ட் உண்டு, தமிழ் மீடியமிலிருந்து போய் என்ஜினீரிங் படிக்கறப்ப எல்லாம் கஷ்டமில்லாம இருந்தது.

  ஸ்ரீ

   1. Sir,
    நன்றிக்கு நன்றி!! இந்த ” கீங்க” மரியாதை உங்ககிட்டேருந்து கேக்கரப்ப கூச்சமா இருக்கு. நான் உங்களுக்கு ரொம்ப சின்ன பையன். முடிஞ்சா ஒருமைலேயே அழையுங்கள், மகிழ்வேன்……இவ்ளோ பெருசா நான் பாட்டுக்கு யோசிக்காம ஒரு பதிவு அளவுக்கு மறுமொழில எழுதினதுக்கும் பொறுமையா பதில் சொன்னதுக்கு மறுபடியும் நன்றிகள் பல!!.

    சீக்கிரமா இரண்டாவது பகுதியையும் எழுதி கலக்குங்க. சஸ்பென்ச தெரிஞ்சிக்க ஆவலுடன் வெய்ட்டிங்!!

    ஸ்ரீ

 7. ஜவகர் படித்த பள்ளியில் நான் ஆசிரியராக இருந்திருக்கவேண்டும்!

  ம்…ம்..ம்… இப்போது நினைத்து என்ன செய்ய?

  தப்பித்து விட்டார்…!

 8. //இதை இன்றைக்குக் கேட்கிற போது கூட என் மனைவியும் மகன்களும் கப்பர் சிங்கைப் பழி வாங்கப் புறப்படும் தர்மேந்திரா மாதிரிக் கொந்தளிக்கிறார்கள்!//

  My feeling is also same as a sister…andha vaadhiyaar yaenga irukkar-nu kandupudichu address anuppivainga…meethiya naanga paathukkarom

 9. நமக்கு அப்பா என்ற ஹிட்லர் வீட்டிலேயே இருந்ததால், வாத்தியார்கள் அடிப்பது பெரிதாக இருக்காது. அதிலும் நான் அடிவாங்குவதெல்லாம் என்னோட அவசர குடுக்கை தனத்திற்கு தான் இருக்கும். அடிவாங்கினாலும் வீட்டில் சொல்ல முடியாது. நீ என்ன தப்பு பண்ணின என்று இன்னும் நாலு மொத்து சேர்த்து கிடைக்கும். பத்மநாபன் சொன்ன அதே வசனம் ஒரு வரி சேர்த்து சொல்லுவார் எங்க அப்பா. “கண்ணையும் , காதையும் விட்டுடுங்க. அடிச்சு நொறுக்குங்க ” என்று சொல்லுவார்.
  பெரும்பாலும் வாத்தியார்களிடம் இருந்து தப்பித்து விடுவேன். அப்படி இருந்தும் சிவசுப்பிரமணி சார் கிள்ளிய நககிள்ளல் , முத்துலட்சுமி டீச்சர் விட்ட அறை ( காதில் ங்கொய்…னு ரெம்ப நேரம் சவுண்ட் கேட்டது ) , கோவிந்த் சார் விரல்களை திருப்பி வைத்து அடித்த அடி மறக்கவே முடியாது. தோப்புகரணம் எல்லாம் உடற்பயிற்சி மாதிரி . ஸ்கூல்க்கு லேட்டா வந்தால் 100 முறை போடணும். நான் நரம்பு மாதிரி இருப்பதால் பெரிதாக வலிக்காது. உங்களின் 300 ரெம்பவே அதிகம்.

  இதெல்லாம் எங்க அப்பா நான் செய்த சின்ன தவறுக்காக உப்புகல்லில் மொட்டிபோட வைத்ததிற்கு முன்னால் ஒண்ணுமே இல்லை.

  1. ம்ம்ம்ம் கார்த்திக்… உங்கப்பா நல்லாத்தான் வளர்த்திருக்காரு. இல்லைன்னா இப்படி ஏகப்பட்ட பேர் உங்களைப் படிக்கிற அளவு வந்திருப்பீங்களா?

 10. /
  “சொல்ல வேண்டியதைச் சொன்னேன்” என்றார், ‘உண்மய சொன்னேன்’ என்கிற பாட்ஷா மாதிரி.
  /

  சூப்பர்.

  300 too much.

 11. சார், R.K நாராயணனின் “சுவாமியும் நண்பர்களும்” சுஜாதாவின் “ஸ்ரீரங்கத்து தேவதைகள்” படித்தமாதிரி இருந்தது. நீங்கள் ஏன் அதைபோன்ற ஒரு தொடர் எழுதக்கூடாது. கொஞ்சம் ஓவராத்தான் போயிட்டேனோ 🙂

எதுவா இருந்தாலும் எழுதுங்க!

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s