திருக்கழுக்குன்றத்தில் நீ சிரித்தால்…

சோத்து வேளைக்கு சரியாக வருகிறவர்களை ‘திருக்கழுக்குன்றம் கழுகு மாதிரி வந்து நிக்கறான்’ என்று சொல்வது வாடிக்கையாகி இன்னமும் அது மாறவில்லை.

ஆனால் திருக்கழுக்குன்றத்தில் இப்போது கழுகு வருவதில்லையாம். அது அங்கே போன பிறகுதான் எனக்குத் தெரிந்தது.

பல வருஷங்களாக சென்னையில் இருந்தும் நான் பார்க்காத இடங்களில் இதுவும் ஒன்று. (இன்னொன்று திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில்!).

கடந்த இரண்டு மாதங்களாக டிவிஎஸ் லாஜிஸ்டிக்ஸ் ஜனங்களுக்கு ஒவ்வொரு சனிக்கிழமையும் ஞாயிற்றுக் கிழமையும் பயிற்சி வகுப்புகள் எடுக்க வேண்டியிருந்தது. இந்த வாரம் பெரிய மனசு பண்ணி ஞாயிற்றுக் கிழமை வேண்டாம் என்று சொல்லி விட்டார்கள்.

இது ஒரு இன்ப அதிர்ச்சி.

படிக்கிற காலத்தில் அப்பா தருகிற அஞ்சு பைசா தந்த குழப்பங்களை இந்த ஞாயிற்றுக் கிழமை மனசில் தந்தது. எலந்த வடை வாங்குவதா, சிப்பாய் மிட்டாயா, மயிர் மிட்டாய் என்று அன்பாக அழைக்கப்படும் சோன் பாப்படியா, மிட்டாய் ரோஸ் கலரில் புரசிலையில் ஓலை ஸ்பூன் குத்தித் தரும் ஐஸ் கிரீமா, அரிசி மிட்டாயா என்ன வாங்குவது என்று பெரிய குழப்பத்தில் ஆழ்ந்து விடுவேன்.

அரிசி மிட்டாய் வாங்கலாம். கை நிறைய கிடைக்கும் என்று திருமுடிச்செட்டியார் கடைக்குப் போனால்

 “செட்டியாரே எலிப் புளுக்க மிட்டாய் குடுங்க” என்று அதே மிட்டாயை வேறொரு பையன் வாங்கும் போது குமட்டிக் கொண்டு வந்து ஐடியாவை டிராப் செய்து விடுவேன்.

எங்கே போகலாம், எங்கே போகலாம் என்று சனிக்கிழமை மதியத்திலிருந்தே யோசிப்பதே ஒரு ஜாலியான அனுபவமாக இருந்தது.

முட்டுக்காடு போட்டிங் போகலாமா? ஏற்கனவே போயாகி விட்டது. மேலும் கடல் போட்டிங்கில் சுவாரஸ்யம் இல்லை. நாம் ஓட்டுகிற சுகம் கிடைக்காது. பிச்சாவரம் போட்டிங் போல சப்பென்று இருக்கும்.

வேடந்தாங்கல் கூட போனதில்லை. அங்கிருந்து வருகிற டிவிஎஸ் ஊழியர்களைக் கேட்ட போது

“இப்ப வந்தா ஏரிய வேணா பாக்கலாம் சார். பறவைங்க நம்ம ஊர் தவிட்டுக் குருவி, கொக்கு, காக்கா, குயில்தான் இருக்கும். நவம்பர்ல வாங்க” என்றார்கள்.

எங்கேயாவது போய்த்தான் ஆக வேண்டும். செங்கல்பட்டு ரோடு எனக்கு ரொம்பவும் பிடித்திருக்கிறது. விடியற்காலையில் அந்த ரோடில் டிரைவ் செய்வது ஒரு சுகமான அனுபவம். நிறைய மரங்கள். ஒரு கிராமத்துச் சூழல். ஒரே ஒரு பிரச்சினை, செங்கல்பட்டு போகும் வரை ஒரு ஹோட்டல் கூட கிடையாது. (போனப்புறமும் இல்லை என்பது இப்போது தெரிந்தது). முன்னே ஜூவிலிருந்து போய் யு டர்ன் போடும் இடத்தில் ஒரு ஹோட்டல் இருந்தது.

கூடுவாஞ்சேரி தாண்டினதும் எஸ்.ஆர்.எம். ஹோட்டல் இருக்கிறது. ஆனால் அது நம் மாதிரி ஆசாமிகளுக்கு சரிப்படாது. அம்பானி பிரதர்ஸ், மாறன் பிரதர்ஸ் எல்லாம் போகலாம். ஆனால் அந்த ஹோட்டலுக்கு வெளியில் இருக்கும் ஏரி அழகாக இருக்கிறது.

”திருக்கழுக்குன்றம் எப்படிய்யா போறது?” என்று அதே டிவிஎஸ் ஆசாமிகளைக் கேட்டேன்.

“மஹேந்த்ரா சிடி தாண்டினதும் லெஃப்ட்டுல செங்கல்பட்டுக்குள்ள போற ரோடுல திரும்புங்க. முதல்ல பளைய பஸ் ஸ்டாண்டு, அப்புறம் புது பஸ் ஸ்டாண்டு, அப்புறம் ராட்ணம் கடை (ராட்ணம் கடையா! நூற்கிற ராட்ணமா, தண்ணீர் இறைக்கிற ராட்ணமா? ரெண்டுமே இப்போ கிடையாதே?) ஐசிஐசிஐ பாங்கு வரும், ராஜிவ் காந்தி சிலை வரும் அங்கே லெஃப்ட் எடுங்க. பதினெட்டு கிலோமீட்டர்ல திருக்கழுக்குன்றம்”

எட்டு மணிக்கே போய் சேர்ந்து விட்டோம். ஒன்பது மணிக்குத்தான் மேல்க் கோயில் திறப்பார்களாம். வயிறு வேறு கவ்வாங் கவ்வாங் என்றது. நாகப்பட்டினம் கஸ்தூரி பவன் ஹோட்டலை நினைவு படுத்திய சங்கர் கேஃப் என்னைக் கவர்ந்தது.

முதலில் ஒரு பொங்கல் வடை. அப்புறம் ஒரு இட்லி வடை. ரெண்டுமே நன்றாக இருந்ததால் ஒரு பூரி வடகறி. (பீச் ஸ்டேஷனில் பூரி வடகறி சாப்பிட்டு எத்தனை வருஷம் ஆயிற்று!) “இது போக உப்புமா மட்டும்தான் இருக்கு சார். அதையும் ஒரு ப்ளேட் சாப்ட்டுடுங்களேன்” என்றார் பாதி முகத்துக்கு விபூதிப்பட்டை அணிந்த சர்வர்.

கீழ்க்கோயிலை ஒரு ரவுண்டு வந்ததும் நேரம் சரியாக இருந்தது.

மலைக் கோயிலைக் கீழிருந்து பார்க்கும் போது கொஞ்சம் தயக்கமாக இருந்தது. வேண்டாத வென்ச்சரில் இறங்கி விட்டோமோ?

ஐயய்யோ இவ்வளவு உசரமா!

எங்கள் தயக்கத்தைப் பார்த்த ஒரு பெரியவர், “ஏறிடலாம். ஐநூத்தி இருபத்தாறு படிதான்” என்றார்.

“ஐநூத்தி இருபத்தாறா!” என்று வடிவேலு மாதிரி ரியாக்‌ஷன் கொடுத்து விட்டு “வா போயிட்லாம். இது வேண்டாத வென்ச்சர்” என்று சொல்ல இல்லத்தரசியைத் தேடினேன்.

“மலையேற டிக்கெட் டிக்கெட் வாங்கியாச்சு” என்று தூரத்திலிருந்து குரல் வந்தது.

“எதுக்கு மலையேற டிக்கெட்டு? எனக்கென்ன சாமியா வந்திருக்கு?”

“சாமி வந்தப்புறம் மலையேறரது ஊர்ல. இங்கே மலையேறினாத்தான் சாமி”

வழக்கப்படி ஷண்ட் செய்த கரிவண்டி எஞ்சின் மாதிரி மூச்சு விட்டுக் கொண்டு மலையேற ஆரம்பித்தோம். முதல் ஸ்ட்ரெட்ச் ஏறி ஓய்வெடுத்துக் கொண்டிருந்தோம்.

“அந்த ஆண்ட்டி மலையேறி வர்றதைப் படம் எடுத்தா நல்லா இருக்கும். காமிரா குடுங்க”

காமிராவைக் கொடுத்து விட்டு கண் மூடி மொபைலில் ‘ஓம் சிவோஹம்’ பாட்டைக் கேட்டுக் கொண்டிருந்தேன்.

வழியில் இரண்டு மாருதிகள் உட்கார்ந்து வழிப்பறி செய்து கொண்டிருந்தன. ரொம்ப சாதுர்யமாக குச்சியை ஒடித்துக் கொண்டு போன என் இல்லத்தரசியிடமிருந்து குச்சியை வாங்கிக் கீழே வைத்தது. எழுந்து நின்று தோளில் இருந்த பாக்கைப் பிடித்து இழுத்தது.

வயலன்ஸ் எதுவும் இல்லை. ‘அதுல என்னமோ வெச்சிருக்கே’ என்கிற மாதிரி முகபாவம்.

‘இதுல ஒண்ணும் இல்லை’ என்று திறந்து காட்டிய போது உள்ளே எட்டிப் பார்த்தது. தண்ணீர் பாட்டிலை எடுத்துக் கொண்டு போய் விட்டது.(திரும்பி வரும் போது அதே பையை எடுத்துக் கொண்டு கையில் குச்சி இல்லாமல் நான் வந்தேன். கிட்டே வரவே இல்லை)

மலை மேல் சுவாமி வழக்கப்படி லிங்கம்தான். ஆனால் மலையிலிருந்து பார்த்த காட்சிகள் நன்றாக இருந்தன.

மொட்டை மரத்துக்கு என்றைக்குமே போட்டோஜினிக் உருவம். நேரில் பார்த்தால் இந்த கிக் இருக்காது.

ஓ... வாட் அ போட்டொஜெனிக் அப்பியரன்ஸ்!

மலை மேலிருந்து தெப்பக்குளமும் மத்தியில் நீராழி மண்டபமும் தெரிந்தது புகைப்படக் கலைஞர்களின் ஆதர்ஸம்.

நல்ல காத்து, தண்ணி வசதி... வாடகைக்கு விடுவாங்களா?

அதே போல கீழ்க்கோயிலின் நான்கு கோபுரங்களும் தெரிந்த காட்சியும் யார் காமிராவிலிருந்தும் தப்பாது.

வேதகிரீஸ்வரருக்கு நாலு வேதத்துக்கு நாலு கோபுரமா?

இறங்கி வந்த பிறகு ஒரு புளிய மரத்தடியில் இளைப்பாறும் போது நைஸாக மலையேறி வந்த ஆண்ட்டி படத்தை ரெவ்யூ மோடில் போட்டுப் பார்த்தேன். அப்போதுதான் தெரிந்தது அது இங்கிலீஷ் ஆண்(ட்)டி இல்லை என்பது.

ஆண்டி வ்யூ

பின்னாலிருந்து என் இல்லத்தரசி சிரித்தது திருப்பரங்குன்றம் வரைக்கும் கேட்டிருக்கும்!

Advertisements

24 comments

 1. அழகான ஊர், சுலபமான மலை, மலைமீதிருந்து தெரியும் அற்புதமான லேண்ட்ஸ்கேப், நல்ல கோயில், சென்னையில் இருந்து ஒன் ஹவர் ட்ரைவ் — எல்லாம் இருந்தும் இந்த ஊர் மட்டும் ஏன் டெவலப் ஆகவில்லை என்று பலமுறை நினைத்திருக்கிறேன். (ஆனால் நானே ஒருமுறைதான் மலை ஏறி இருக்கிறேன் :-))

  நல்ல பகிர்வுக்கு நன்றி

  1. வாங்க சுரேஷ்ஜி, சீவக சிந்தாமணிக்குப் பிறகு ஐடி மாறிடிச்சு! நிஜம்தான், உங்க புத்தகத்தைப் படிக்கிறவங்க உங்களைப் பினாத்தல் சுரேஷ்ன்னு கூப்பிட மாட்டாங்க….. பிரமாதம் சுரேஷ்ன்னு பாராட்டுவாங்க!

  2. ராம்சுரேஷ் ஜி, டெவலப் ஆனதுக்கு அப்புறமும் இதெல்லாம் – “அழகான ஊர், சுலபமான மலை, மலைமீதிருந்து தெரியும் அற்புதமான லேண்ட்ஸ்கேப், நல்ல கோயில், சென்னையில் இருந்து ஒன் ஹவர் ட்ரைவ்” – இருக்கும்கிறீங்க ?

  1. ஓ… வடுவூரா! வேளாங்கண்ணி போற ரூட்டா?

   கஸ்தூரி பவன் பெரிய கடைத்தெரு ஆரம்பிக்கிற இடத்தில இருந்தது. அடுத்தது மணிவண்ணன் ஸ்டோர்.

  1. வெரி குட் வெல்கம் கார்த்தி…… வந்தப்புறம் காண்டாக்ட் பண்ணுங்க…. இன்னும் நிறைய சொல்றேன்

 2. Sir,
  ரசனையான பயண கட்டுரை.. போட்டோஸ் சூப்பர்.
  ரிடர்ன் வரும் போதும் அதே ரூட்லயா வந்தீங்க.
  இந்த வண்டலூர் டு கேளம்பாக்கம் ரோடும் நல்லா இருக்கு – ரெண்டு பக்கமும் பச்சை பசேல்னு.

  ஸ்ரீ

 3. அருமை!

  நீங்க எழுதியதை படித்தவுடன் தோன்றியது! “சென்னைக்கு ட்ரைவ் பண்ணி வரணும்.” 🙂 ( இன்னும் வேலை தேடும் படலம் தான்! எதோ ஒன்று மிஸ்ஸிங் வாழ்கையில். )

  நீங்க சொன்ன இடமெல்லாம் தாண்டி வரணும். மூணு வருஷம் மேலே ஆச்சு! ( இடையிலே வந்தது ட்ரெயினில் தான்! )

  நீங்க இன்னும் க்ரோம்பெட்டா வேற இடமா? கீழ்பாக் லேண்டன்ஸ் ரோடில் நண்பர் வீட்டில் தங்குவோம் (அவர்கள் இருந்தால் ).

  இன்னும் காளிகாம்பாள் கோவில் பார்த்தோமா இல்லையா என்பது டவுட்டு. ( வழி எப்படி? )

  1. விஜய், சென்னை வந்தா எதுக்கு யார் வீட்டுக்கோ போகணும். நம்ம வீட்ல ரெண்டு பேர்தானே….. வாங்க!

 4. திருக்கழுக்குன்றம் போய் (போயிருக்கிறேனோ?!) மாமாங்கம் ஆகிறது. அடுத்த சென்னை விசிட்டில் சேர்த்துக் கொள்கிறேன்.

  பார்த்தசாரதி கோவிலை அதற்குள் பார்த்து முடித்து விடுங்கள். திருவல்லிக்கேணியின் அழகு சொல்லி மாளாது!

 5. ஜவஹர்ஜி,
  அருமையான ஊருங்க அது.பலமுறை போயுள்ளேன்,அங்கே நிறைய வீடுகளுக்கு பிளான் போட்டுள்ளேன்,மேலும் நண்பனின் ஊர்,அவன் இப்போது அமரராயிட்டான். நல்ல ஊர்,இங்கு காஸ்ட் ஆஃப் லிவிங் மிக குறைவாம்,ஒரு தனி வீடு 2500க்கு கிடைக்கிறதாம்,என் எளிய நண்பன் ஒருவன் 10000 சம்பளத்தில் அருமையாக குடும்பம் நடத்தி இரண்டு மகன்களை மெட்ரிகுலேஷனிலும் படிக்க வைப்பதாய் சொன்னான்,6-00 மணிக்கு மாம்பலம் ஃபாஸ்ட் பிடித்தால் 8-00 மணிக்கு ஊருக்குள் போய்விடுவானாம்,பெருமிதமாய் சொன்னான். எளிமை தான் எவ்வலவு அழகு,நல்ல பதிவுங்க ஜி.

 6. நல்ல பயண்க்கட்டுரை.சுஜாதா ரொம்ப படீப்பீங்களோ? :)- நல்லா தமிழில் எழுதுகிறீர்கள் .அப்புறம் ஏன் சார் “ஜீ..ஜீ னு இந்தி ஓட்றீங்க?

 7. அருமையான பயணக் கட்டுரை. திருவண்ணாமலை தீபம் பார்த்தால் மோட்சம் – திருக்கழுக்குன்றம் பற்றி நினைத்தாலே மோட்சம் கிடைக்கும் என்பது ஐதீகம்.

 8. செங்கல்பட்டிலிருந்து கல்பாக்கம் வரை நூற்றுக்கணக்கான ட்ரிப் அடித்திருந்தாலும் வழியில் பத்து நிமிடம் பொறுத்து இந்தக் கோவிலைப் பார்த்ததில்லை; உங்க கட்டுரையைப் படிச்சதும் இதுக்காகவே இன்டியா ட்ரிப் அடிக்கணும் போல இருக்கு. நல்ல புகைப்படங்கள். ஆமா…ஆண்டி படம்னு ஆசை காட்டி இப்டி ஏமாத்திட்டியே அய்யா!

  (நான் கூட மெட்ராஸ் வந்தா எங்கே தங்குறதுனு யோசிச்சுக்கிட்டிருக்கேன்… 🙂

  1. அப்பாதுரைஜி, நீங்களும் நம்ம வீட்ல தங்கலாம், அவசியம் வாங்க. செப்டம்பருக்கு அப்புறம்ன்னா உங்களுக்கு தனியா ஒரு ரூமே கூடத் தந்துடுவேன்…. என் இல்லத்தரசி எனக்காக ஒரு வசந்த மாளிகை கட்டிகிட்டு இருக்காங்க!

 9. ஒரு ரோல் மாடல் பயணக் கட்டுரை.

  நன்னா வந்துருக்கு.

  அடிச்சி ஆடுங்கோ.

  ஒரு வாரம் சென்னையிலதான் இருந்தேன் சொல்லியிருந்தா திருக்கழுக்குன்றத்திற்கு போயிருக்கலாம்.

  நான் மிகத்தொலைவு என நினைத்திருந்தேன்

  அப்படியே எனக்கும் ஒரு துண்டு போடவும்

எதுவா இருந்தாலும் எழுதுங்க!

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s