ரெண்டு இட்லி மூணு லிட்டர் சாம்பார்

காலைலே ஆறு மணிக்கு மெரினா பீச் போகணும்ன்னு ஒரு திடீர் அரிப்பு.

 குரோம்பேட்டைல இருந்துகிட்டு ஆறு மணிக்கு மெரீனான்னா ஏறக்குறைய நடுராத்திரியே கிளம்பினாத்தான் முடியும். காலைலே மூணே முக்கால் மணிக்கு எழுந்தோம்.

 ஆட்டோ-மின்சார வண்டி-ஆட்டோ.

 எக்மோர்லயிருந்து பத்து நிமிஷம். அம்பது ரூபா. உழைப்பாளர் சிலை கிட்டே இறங்கினோம். விடிகாலையில மெரீனா போனா விஐபீக்கள் வாக்கிங்க் போறதைப் பார்க்கலாம்ன்னு சுஜாதா எழுதியிருந்தது ஞாபகம் வந்தது. கண்ணில விளக்கெண்ணை ஊத்திகிட்டுத் தேடினோம். ஒருத்தரும் வரல்லை.

 “ராத்திரி வந்த பேய் பிசாசுங்களே இன்னும் ரிட்டர்ன் ஆகியிருக்காது. அதுக்குள்ள வீஐபீயாவது வீஜீபியாவது”

 கடற்கரை மணலில் நூற்றுக் கணக்கான ஜனங்கள் தூங்குகிறார்கள். எல்லாருமே பிச்சைக்காரர்கள் இல்லை. சிலர் அங்கே வியாபாரம் செய்கிறவர்கள், சிலர் சரக்கடித்து விட்டு பெண்டாட்டியின் விளக்குமாற்றடிக்கு பயந்து அங்கேயே ஃபிளாட் ஆனவர்கள், விடிகாலை ரயிலைப் பிடிக்க வேண்டிய வடநாட்டுக்காரர்கள் என்று பலரகம். ஆங்காங்கே நைந்து போன ஆணுறைகளைப் பார்க்கும் போது ஆச்சரியமாக இருந்தது. இவ்வளவு கூட்டத்திலா!

 சூர்யோதயம் ஆகியிருக்காத வானமும் கடலும் சேர்வதைப் பார்ப்பது ஒரு த்ரில்தான். சூர்யோதயத்தையும் பார்க்க வேண்டும் என்பது அஜண்ட்டாவில் இருந்தது. ஆனால் கொஞ்சம் மூட்டமான வாநிலையாக இருந்ததால் ‘பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம்’

____________________________________________________________________________________________ 

பார்த்தாச்சு….. டிரைவர் சாமியைப் பார்த்தாச்சு.

 என்ன முழிக்கறீங்க? சாரதின்னா டிரைவர். பார்த்தன்னா அர்ச்சுணன். அர்ச்சுணனுக்கு டிரைவரா இருந்தவன் பார்த்தசாரதி! இப்பப் புரியும்ன்னு நினைக்கிறேன். கரீட்டுங்கோ! தில்லக்கேணி பாத்சார்திய பாத்தாச்சு.

 மீசை வெச்சிருக்கிற பெருமாளை இங்க மட்டும்தான் பார்க்கலாம்.

 காலைல சன்னதி திறக்கிறதுக்கு முன்னாலயே போயாச்சு. (ஆனா அதுக்கு முன்னாலயே பிரசாதம் விற்கிற ஸ்டால் திறந்திருக்கு!) வாளால் அறுத்துச் சுடினும் மருத்துவன்பால் மாளாக் காதல் நோயாளன் போல்ன்னு மங்கையாழ்வார் பாடினதாலேயோ என்னவோ ஒரு மணிநேரம் நிற்க வெச்சிட்டார்.

 இப்பவெல்லாம் சாமியைப் பார்த்தா எதுவும் கேட்கிறதில்லை.

 எல்லாத்துக்கும் நன்றின்னு மட்டும்தான் சொல்றது. பின்னாலயே ’இத அப்டியே மைண்டன் பண்ணு’ன்னு சொல்வேன்!

____________________________________________________________________________________________

 காலை மூன்றே முக்காலுக்கே எழுந்திருந்ததால் பசி காது, கண், வாய் எல்லாவற்றையும் அடைத்தது. வெல்லூர் பாலஸ் கேஃப் போலவே சாம்பார்க் கடலில் மிதக்கும் இட்லித் தீவுகள் திருவல்லிக்கேணி ரத்னா கேஃபிலும் ஸ்பெஷல் என்று யாரோ எப்போதோ சொன்னது ஞாபகம் வந்தது.

 திருவல்லிக்கேணியில் யாரைக் கேட்டாலும் ரத்னா கேஃபுக்கு வழி சொல்கிறார்கள். (பைகிராஃப்ட்ஸ் ரோடுதானே அது? எப்போது பாரதி சாலை ஆயிற்று? என்று கேட்டேன். ‘லாங் எகோ மை டியர் ரிப்வான் விங்கிள்’ என்றார் அந்தத் தாத்தா)

 ரெண்டு இட்லி ஒரு வடைக்கு மூணு லிட்டர் சாம்பார்! சாப்பிடச் சாப்பிட கேட்காமலே குவளையில் சாம்பாரைக் கொண்டுவந்து கொட்டுகிறார்கள்! சாம்பார்ப் பிரியர்களே உடனே ஓடுங்கள்!

___________________________________________________________________________________________

 அங்கிருந்து சத்யம் தியேட்டருக்கு நடந்தே வருகிற தூரம் என்பது ஆட்டோக்காரருக்கு முப்பத்தைந்து ரூபாய் கொடுத்தப்புறம்தான் தெரிந்தது. அடாசு படங்கள் கூட ஃபுல்! ஞாயிற்றுக் கிழமை! கராத்தே கிட்டுக்கு மட்டும் டிக்கெட் இருந்தது. இரண்டாம் தரம் பார்க்கிற அளவுக்கு பொறுமை இல்லை. அந்தப் படத்தில் நான் ரசித்தது ‘வந்து விடிந்தும் விடியாத காலைப் பொழுதாக’ ஜாக்கி சேனுக்கும் அந்தப் பையனின் அம்மாவுக்கும் இருக்கும் காதல் தோய்ந்த நட்பு. தி. ஜானகிராமன் மாதிரி இதை சொல்லாமலே நம்மை உணர வைத்திருக்கிறார்கள்!

___________________________________________________________________________________________

 கட்டுசாதக் கூடை ஸ்டேஜில் இருக்கும் கல்யாண மண்டபம் மாதிரி அங்கொன்றும் இங்கொன்றுமாக மனிதர்களோடு மவுண்ட் ரோடைப் பார்த்ததும் ஒரு த்ரில்தான்.

 டிவிஎஸ் ஸ்டாப்புக்குப் போனதும் ஒன் பீ ஏஸி பஸ் காஆஆஆலியாக வந்தது.

 ஜப்பான் சகாமி-ஓனோவில் இருந்த நாட்கள் நினைவு வந்தது.

 கபூரு…. சென்னை வேலை நாட்களிலேயே இப்படி சொர்க்கமாக என்னிக்கு மாறும் கபூரு?

Advertisements

22 comments

 1. //குரோம்பேட்டைல இருந்துகிட்டு ஆறு மணிக்கு மெரீனான்னா ஏறக்குறைய நடுராத்திரியே கிளம்பினாத்தான் முடியும். காலைலே மூணே முக்கால் மணிக்கு எழுந்தோம்.//

  என்னா நைனா.. காலீலயே நம்ம யூனிட் ட்ரியின்ல குந்திக்கினு நேரா பீச்சுக்கு போறத வுட்டுட்டு… சும்மா சுத்தி சுத்தி ரவுண்டு வுட்டுக்குனுக்கீறியே…

  //என்ன முழிக்கறீங்க? சாரதின்னா டிரைவர். பார்த்தன்னா அர்ச்சுணன். அர்ச்சுணனுக்கு டிரைவரா இருந்தவன் பார்த்தசாரதி!//

  இன்னாப்பா.. ஊருக்கு புச்சா நீ… நம்ம பார்த்தாவயே கலாய்க்கிற.. வாணாம்…

 2. இன்னாபா நீ… போர்ட் டிரஸ்ட்டு பீச் ஸ்டேஷன்ல்ந்து வேளச்சேரி டிரைன்ல் குந்திக்கினா சும்மா பத்து நிமிசத்துல ட்டிரிப்பிளிக்கேனு..
  ட்டிரிப்பிளிக்கேனு ஸ்டேஷன்ல நின்னுக்கினு சும்மா ஒரு தபா பீச்ச பாத்தினா.. பொண்டாட்டியவே நீ மறந்திடுவே..

 3. என்னது? காந்தித் தாத்தா செத்துட்டாரா?

  – சிமுலேஷன்

  //ரெண்டு இட்லி ஒரு வடைக்கு மூணு லிட்டர் சாம்பார்! சாப்பிடச் சாப்பிட கேட்காமலே குவளையில் சாம்பாரைக் கொண்டுவந்து கொட்டுகிறார்கள்! சாம்பார்ப் பிரியர்களே உடனே ஓடுங்கள்!//

 4. இன்னும் இரண்டே வாரம் தான் இருக்கு நான் சென்னையில் செட்டில் ஆக. இதையும் லிஸ்ட்-ல சேர்த்தாச்சு. அஞ்சு வருஷம் சென்னைல இருந்துருக்கேன் ( பாச்சிலர் ஆக ). ஒரு ஞாயிற்று கிழமைய கூட இப்படி என்ஜாய் பண்ணினதில்ல. ஞாயிற்று கிழமை நமக்கு விடிவதே 10 மணிக்கு தான்.

  // சூர்யோதயத்தையும் பார்க்க வேண்டும் என்பது அஜண்ட்டாவில் இருந்தது. ஆனால் கொஞ்சம் மூட்டமான வாநிலையாக இருந்ததால் ‘பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம்’ //

  பார்த்தீங்கள்ள sunday அன்னைக்கு sun கூட லீவ் என்று

 5. “இப்படி நாமளும் ஒரு நாள் போய் பார்க்கணும்“ ஒரு ஆசையை கிளப்பிவிட்டுள்ளீர்கள்… குறிப்பாக கடற்கரையில் சூரியன் எழுவதை பார்ப்பதற்கு..

 6. அடுத்த வாட்டி மெரீனா காந்தி சிலை பீச்சை ட்ரை பண்ணுங்க… நான் அங்கேதான் சுஜாதாவை சந்திச்சேன்… நீங்க போறப்ப விஐபி வராங்களோ இல்லியோ… இதே எண்ணத்தோட வந்தவங்களுக்கு உங்க தரிசனம் கிடைக்குமே….

 7. //ரெண்டு இட்லி ஒரு வடைக்கு மூணு லிட்டர் சாம்பார்! சாப்பிடச் சாப்பிட கேட்காமலே குவளையில் சாம்பாரைக் கொண்டுவந்து கொட்டுகிறார்கள்! சாம்பார்ப் பிரியர்களே உடனே ஓடுங்கள்!//..rathna cafe samabar pathi inga sollurathu ..
  kollan theruvila voosi vikirathu….
  *..perumal koilukku …ISO 9000:2008 certification vanga muyarchi nadakuratha solluranga ..nnengathan antha line la pisthavachey ..yeppadi koduthadalama?
  *…ambhu paaintha perumaal (vurchavar ) muga tharisanam kidachatha ..thorayama yethna ambhu panchi irukkum ?

 8. நானும் ஒரு நாலு வருசம் சென்னைல இருந்தேன்.!

  ஆமா 6 மணில்லாம் காலைலயுமா வரும் நான் சாயந்திரம் மட்டும்தான் வரும்னு நினைச்சிகிட்டிருக்கேன் 🙂

 9. ரத்னா கபே பற்றிய மற்ற விவரங்கள்:

  1.அங்கு சாம்பார் செய்யப்படுவதில்லை.பின்னால் இருக்கும் ஒரு ஊற்றில், சுயம்புவாக கொதிக்க, கொதிக்க, வருகிறது.

  2.சில ஆண்டுகளுக்குமுன் அங்கிருந்து ஒரு பைப் லைன் ,T’Nagar வெங்கட்நாராயணா சாலை வரை போட்டு அங்கு ஒரு கிளை ஆரம்பித்தார்கள்.இதே சாம்பார் அங்கும் கிடைக்கும்

  3.இங்கு ஒரு சர்வர் வேலைக்கு சேர்ந்த உடன் அவருக்கு ஒரு அரை லிட்டர் mug உம்,ஒரு டவலும் வழங்கப்படும்.பிறகு service ஆனதும் அது ஒரு லிட்டர் mugஆக
  உயர்த்தப்படும்.

  4.சாம்பார் ஊற்றிய ஐந்தாவது நிமிடத்தில்,அந்த இட்லிகளை வெட்ட மயிலிறகே போதுமானது.

  5.சாம்பார ஊற்றப்பட்ட 10 நிமிடங்களுக்குள் அந்த இட்லிகளை
  சாப்பிட்டுவிடவேண்டும்.இல்லையேல் அது கரைந்து விடும்.

  6.Swiss Bank accts,Coca Cola formula இவற்றுக்கு இணையாக மிக ரகசியமாக பேணப்படுவது ,இந்த சாம்பாரின் recipie தான் ..

 10. சுரேந்திரன் சொன்ன வலி எளிது, குரோம்பேட்டை டு கடற்கரை ரயில் நிலையம், அங்கிருந்து வேளச்சேரி ரயிலில் திருவல்லிக்கேணி
  வேளச்சேரி ரயில் கிளம்ப நேரம் ஆகும் என்றால், கடற்கரை ரயில் நிலையத்தில் இருந்து பேருந்தில் வந்து விடலாம்.

  எம் ஆர் மூர்ர்த்தி, யாரு ஜூனியர் விகடன் பின்னூட்ட புயல் (மிஸ்டர் மியாவ்) மூர்த்தி சாரா.

 11. இப்படி காலியா வேலை நாட்கள்ல ஆனா சென்னை, பெருநகர அந்தஸ்த்தை இழந்துவிட்டது என்று அர்த்தம்.

  1. உதயகுமார், ஜப்பான்ல பல ஊர்கள் வேலை நாட்கள்ளயும் இப்டித்தான் இருக்கு! அலுவலக நேரங்கள்ள, ரயில்வே ஸ்டேஷன்கள் மட்டும் கூட்டமா இருக்கு.

 12. “கபினி அணையிலிருந்து பொங்கி வழியும் காவிரியைப் போல தட்டில் நுங்கும் நுரையுடனும் வந்து விழும் சாம்பாரை ஸ்பூனால் ஆசை தீரத் துழாவி விட்டு இட்லியின் சரிந்த பகுதியில் ஸ்பூனால் ஒரு இன்ஸிஷன் செய்து மேற்படி இட்லிய்த் துண்டைத் தண்ணீர்த் தொட்டியில் அமுக்கிக் கொலை செய்யும் வெறியனைப் போல் அல்லாது சாம்பாரில் மெல்ல மெல்ல முக்கி எடுத்து, கிண்ணென்றும் இல்லாமல் சொத சொதவென்றுமில்லாமல் இருக்கும் நடுநிலையில் அத்துண்டினை எடுத்து உச்சி மோந்து உண்ணுவது உத்தம முறையாகப் பரிந்துரைக்கப்படுகின்றது.”

  ஜே.எஸ்.ராகவனின் “வரி வரியாகச் சிரி”

  – சிமுலேஷன்

எதுவா இருந்தாலும் எழுதுங்க!

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s