சீர்திருத்தவாதிகள் என்பதெல்லாம் ஹம்பக்

மாற்றங்கள் தாமாக நிகழ்கின்றனவா, அல்லது அவைகளை நிகழ்த்த யாராவது புரட்சிச் சிந்தனை உள்ளவர்கள் தேவையா?

ஒவ்வொரு சமூக மாற்றத்துக்கும் யார் யாரையோ காரணகர்த்தாவாகச் சொல்லி மேடைகளில் கைதட்டல் வாங்குகிறார்கள். சினிமா இசை 1940 களிலிருந்து சந்தித்த மாற்றங்களை யோசித்துப் பாருங்கள்.

அப்போதெல்லாம் பாடல் வரிகளைப் பற்றி யாரும் கவலைப் பட்டதில்லை. பிரேமயில் என்று ஜி.என்.பி யும் எம்.எஸ் ஸும் பாடின பாட்டை ரசித்துக் கேட்ட பல பா(ர்)ட்டிகளுக்கு அதற்கு அர்த்தமே தெரியாது. பிரேமயில் என்றால் அது ஏதோ ஒரு வகை மயில் என்று நினைத்தவர்கள் உண்டு.

லட்சுமிப் பாட்டியிடம், “அது என்ன மயில் பாட்டி?” என்று கேட்டால்

“காதல் பாட்டு அப்டித்தாண்டா இருக்கும். மயிலே குயிலேன்னு எல்லாந்தான் வரும். ஜி.என்.பி பாடறது எவ்வளவு நன்னா இருக்கு பாரு” என்பாள்.

ஜி.என்.பி. என்பதற்கு அப்பால் அந்தப் பாட்டு எந்தத் தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை பாருங்கள். திரையில் படம் ஆடுவதே ஒரு ஆச்சரியமாக இருக்கும் போது சங்கீதத்தில் ஒரு லெவலுக்கு மேல் ஈடுபட முடியாதது ஆச்சரியமில்லை. விஸ்வநாதன் காலம் வரை இதில் அதிக மாற்றமில்லை. அவர், சினிமா சங்கீதம் எங்கே இருந்ததோ அதே இடத்தில் சேர்ந்து கொண்டு மெதுவாகப் பயணம் செய்தார். சில வருஷங்கள் கழித்துப் பார்த்தால் ஆச்சரியமாக இருந்தது.

ஒரு கிளாரினட், ஒரு வயலின், ஒரு வீணை அப்புறம் ஒரு செட் தப்லா. அவ்வளவே என்று இருந்த ஆர்க்கெஸ்ட்ரேஷனில் கருவிகள் மாறியிருந்தன. கித்தார், சாக்ஸ், டிரம்ப்பட், டிரம்ஸ் எல்லாம் வந்தன. பாட்டுக்களில் அழுத்தமான அர்த்தம் இருந்தது. பாடகர்கள் டிக்கியில் ரத்தம் வருகிற சுருதியில் பாடுவதில்லை. ஏகப்பட்ட புதுப் பாடகர்கள் வந்தார்கள். காதல் பாட்டுக்களில் கவிஞர்களின் சில்மிஷம் தெரிந்தது. ’காதலன் கேட்டிட மாதுளம் பூவினில் தேன் துளி சேர்த்ததும் நீயல்லவோ’ என்பது மாதிரி வரிகளில் இருந்த சிருங்காரம் பெருசுகளை முகம் சுளிக்க வைக்கவில்லை. ஆனால் சிறிசுகள் அர்த்தபுஷ்டியான பார்வைப் பரிமாற்றங்களோடு அதை ரசித்தார்கள்.

இளையராஜா காலத்தில் தொழிற்நுட்பம் தீட்டப்பட்டது.

டிரம்மோடு பாஸும் சேர்ந்து கொண்டது. ஸ்டீரியோவை மிகச் சாமர்த்தியமாகப் பயன்படுத்தினார். ஒவ்வொரு இசைக் கருவிக்கும் முக்கியத்துவம் தரப்பட்டது. எலெக்ட்ரானிக் கருவிகள் நிறைய இடம் பெற்றன. கீ போர்டு வெகுவாகப் பயன்படுத்தப் பட்டது. சூப்பர் இம்ப்போசிங் மாதிரி ஒலிப்பதிவு நுட்பங்கள் நிறைய புதுமை செய்தன.

அதற்கடுத்த தலைமுறையில் சங்கீதம் பாதி, தொழிற்நுட்பம் பாதி என்று ஆயிற்று.

இப்போது?

மென்பொருளை உபயோகிக்கத் தெரிந்தால் உங்களாலும் இசையமைக்க முடியும் என்று ஆகிவிட்டது.

அளக்க முடிந்தவை எல்லாம் தொழிற்நுட்பம், முடியாதவை கலை என்று இருந்தது ரொம்பவே மாறிவிட்டது. பெயிண்ட்டிங் பல ஆண்டுகளுக்கு ஒரு கலையாகத்தான் இருந்தது. ஆனால் இன்றைக்கு, பெயிண்ட்டின் விஸ்காசிட்டி, அதிலிருக்கும் திடப் பொருட்களின் அளவு, என்ன மாதிரி சால்வெண்ட், என்ன ரெசின், என்ன பிக்மெண்ட் என்பதையெல்லாம் பொறுத்து தரத்தை நிர்ணயிக்க முடிகிறது. கோட்டிங்கின் கனத்தை அளக்க, எவ்வளவு ஷைன் அடிக்கிறது என்பதை அளக்க, எவ்வளவு ஹார்டாக இருக்கிறது என்பதை அளக்க, எத்தனைக் காலம் தாக்குப் பிடிக்கும் என்று அளக்க எல்லாவற்றுக்கும் கருவி வந்து அது தொழிற்நுட்பமாகி விட்டது.

சங்கீதமும் அப்படியே.

‘இந்தப்பாட்டு சி யில நல்லா இருக்காது. பிட்ச்சை பாயிண்ட் ஃபைவ் ஏத்து’

‘எமோஷனல் சாங்குய்யா, 120 பீட் பர் மினிட்சரியில்லை, எய்ட்டிதான் பொருத்தமா இருக்கும்’

‘பெரிய்ய பிரகாரத்தில நின்னு பாடற மாதிரி சீன்ய்யா, 3டி யிலே ரூம் ஹைட்டை ஜாஸ்தி பண்ணு’

‘ட்ரான்ஸ்போஸ் பண்ணு, வேறே மெட்டு கிடைக்கும்’

‘அரேஞ்மெண்ட்டை ஷஃபிள் பண்ணு. கித்தார் எஃப்.எல் க்கு வரட்டும். டிரம்ஸை சரெளண்ட் லெஃப்ட்டுக்கு மாத்து, டிரம்ஸுக்கு எக்கோ வேண்டாம், டெம்ப்போவே மார்ர மாதிரி இருக்கும். வயலினுக்கு ரிவர்ப் குடு’

என்கிற மாதிரி பேச்சுக்களை கம்போசிங் அறையில் கேட்கலாம். இந்த மாற்றங்கள் எப்படி வந்தன? யாராவது பத்திரிகை ஆரம்பித்து ஜி.என்.பி யையும், எம்.கே.டி யையும் தரக்குறைவாக விமரிசித்தார்களா? மெல்லிசை முன்னேற்றக் கழகம் ஆரம்பித்து வித்வான்களின் தம்பூராவை விரட்டி விரட்டி உடைத்தார்களா? மேடையில்

வித்துவான் வித்துவான் என்கிறிரே-அவன் சும்மா

கத்துவான் என்றிட்டேன்

மொத்துவான் என்று அஞ்சாதீர்

அத்துவானத்தில் இருக்கும் இசையை…..

என்று பேசவில்லை. தலைமுறைகள் மாற மாறத் தானாக நிறைய மாற்றங்கள் நிகழ்கின்றன. நிகழ்ந்து கொண்டிருக்கின்றன. அதைத் தடுக்க யாராவது முயன்றிருந்தாலும் முடிந்திருக்காது. அவைகளில் இதுவும் ஒன்று. நிகழ்ந்திருக்கும், நிகழ்ந்து கொண்டிருக்கும் எல்லா சமூக மாற்றங்களுக்கும் தலைமுறைகளின் ஜீன்ஸ்தான் காரணம். அந்த மாற்றங்களை யாருக்கும் அட்ரிப்யூட் செய்ய முடியாது.

Advertisements

9 comments

  1. அந்நாளில் தொழில் நுட்பம் கிடைத்தாலும் அதைப் பயன்படுத்தத் தயங்கியதும் தமிழ் இசையில் நுட்பங்கள் அத்தனை விரைவாக வராததன் காரணம் என்று தோன்றுகிறது. எம்எஸ்வி ஸ்டெரியோவில் ஏன் ரெகார்டிங் செய்யவில்லை என்று நிறைய நினைத்திருக்கிறேன். ரெகார்டிங் ஸ்டுடெயோக்களும் இப்ப அதிக வசதியோடு கிடைப்பதும் ஒரு காரணமோ? சிவாஜி எம்ஜிஆர் வந்தாலே போதும் ரசிகர்களுக்கு வேறே எதுவும் தேவையில்லை என்ற நிலை மாறியதற்கு இளையராஜா முக்கிய காரணம். தமிழ் நாட்டில் சினிமாவுக்கு வெளியே தனியிசை பாப் குழுக்கள் வளர்ந்தால் இசையும் இசை நுட்பங்களின் உபயோகமும் இன்னும் வளரும் என்று தோன்றுகிறது.

  2. பதிவு அருமை. இளையராஜாவுக்கு சற்று அதிகப்பதிகள் ஒதுக்கியிருக்கலாம். தமிழ் திரையிசையில் அவரது பங்கு அளவிட முடியாதது என்பது நிதர்சனம். பதிவுக்கு நன்றி.

  3. //மாற்றங்கள் தாமாக நிகழ்கின்றனவா// அப்படிதான் எனக்குதோணுது, காந்தி இல்லையென்றால், வேறு ஒருவர் தலைமையில் சுதந்திர போராட்டம் நடந்திருக்கும். ஆகவே, சீர்திருத்தவாதிகள் தோன்றுவதும் மாற்றத்தின் விளைவே.

  4. முழு உடன்பாடில்லை. எல்லா நிலத்திலும் விழுந்த விதைகள் தானாக முளைப்பதில்லை. சில நிலங்கள் மட்டுமே தயாராக இருக்கும். பெருவாரியான நிலங்களில் உழுது, விதைத்து, நீர் இறைத்து, களை எடுத்து என்று உழைப்பை கொடுக்க வேண்டும். இசையில் நாம் நல்ல நிலமாக இருக்கலாம். அரசியலில் களைகள் மண்டிய புதர் கூட்டம் தான். பயிர்களும் களைகளாக மாறிய கொடுமை தான் இங்கு உள்ளது. ஊழலை ஒழிப்பதற்கு பதில் ஊழலை ஜீரணிக்கவும், அதனுடன் வாழவுமே இன்றைய தலைமுறை பழகி உள்ளது

  5. ஒரு சீர்திருத்தவாதி அல்ல. இன்றைக்கு ஒரு கூட்டமே இருந்தாலும் போதாது. மேலும் காந்தியை சீர்திருத்தவாதி கூட்டத்தில் சேர்க்காதீர்கள். அவர் ஹிம்சையை ஆதரிக்கும் அஹிம்சாவாதி என்று சொல்லலாம்.

எதுவா இருந்தாலும் எழுதுங்க!

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s