மது, மங்கை, மார்கழி

என் நாகப்பட்டினத்து மார்கழி மாதங்கள் தங்கர் பச்சனால் படமாக எடுக்கப்படுகிற அளவு கவிதையானவை.

 பொதுவாக நாகப்பட்டினத்தில் மூச்சா போனால் லேண்ட் ஆவதற்குள் ஸ்டீமாக மாறிவிடும். மார்கழி மாசம் மட்டும்தான் விதிவிலக்கு.

 காலையில் சொஸைட்டி பால் கொண்டுவருகிற பிச்சை சைக்கிள் மணி அடித்தால் அவர் எங்கே நிற்கிறார் என்றே தெரியாது. மணிரத்னம் படம் மாதிரி இருக்கும். காலத்துக்கும் தூரத்துக்கும் தொடர்பின்றி பொருத்தமில்லாத வேகத்தில் நடக்க வேண்டியிருக்கும். பால் வாங்கிக் கொண்டு போகிற பக்கத்து வீட்டு சின்னக்குட்டி (பெயர்தான் சின்னக்குட்டி. உண்மையில் ஷகிலா சைஸில் ரொம்பப் பெரிய குட்டி) மேல் இடித்துக் கொண்டு,

 “சனியனே, பீடை, கழிச்சல்ல போக” என்று இன்னா நாற்பது கேட்க வேண்டியிருக்கும்.

 புஸ்ஸ்ஸென்று கிராமஃபோன் ரெக்கார்டில் ஊசி தேய்க்கிற சப்தம் காலை ஐந்து மணிக்கே கேட்கும், செளந்தரராஜப் பெருமாள் கோயிலில் தொடங்கி, ஒவ்வொரு கோயிலாக எம்.எல்.வி யின் திருப்பாவை ஒலிக்கும். என் அண்ணன் ஹீட்பவர் எஞ்சிநியரிங் பரிட்சைக்குப் புறப்படும் போது, கூடாரை வெல்லும் ஸ்ரீ கோவிந்தாவில் கீறல் விழுந்து

 ‘கோவிந்தா….. கோவிந்தா’ என்று ஃபோர்காஸ்ட் சொல்லும்.

 ’முப்பத்து மூவர் அமரர்க்கு முன் சென்று’ பாட்டு வந்ததும் போனால் எல்லாக் கோயிலிலும் உள்ளங்கை சுடுகிற வெண்பொங்கல் கிடைக்கும். கேப்பூ என்று அழைக்கப்பட்ட கே.புண்ணியமூர்த்தி பெருமாள் கோவில், பெரிய கோயில், சட்டையப்பர் கோயில் என்று சரியாக சீக்வன்ஸ் செய்து கொண்டு ஒரு சட்டிப் பொங்கல் தின்கிற எமகாதகர்களில் ஒருவன்.

 விவசாயத் துறையில் டிஏஓ வாக இருந்த அகோரம் அய்யர் (வாட் எ நேம்!) உள்ளிட்ட சில விஐபிக்கள் உஞ்ச்சவிர்த்திக்காக ஜால்ரா கஞ்சிரா சகிதம் வருவார்கள். சைக்கிள் டைனமோ லைட் மாதிரி மஞ்சள் துணியை தலையில் கட்டிக் கொண்டு தியாகய்யர் கெட்டப்பில் இருப்பார்கள்.

 பக்கத்து வீட்டு ’கண்ணா’,

 “ஏன் இந்த மாமாவெல்லாம் பிச்சை எடுக்கறா?” என்று கேட்டு எம்பாரஸ் செய்வான்.

 அரைப் பரிட்சை லீவ் மார்கழி மாச சந்தோஷங்களில் தலையாயது.

 பரிட்சை முடிந்ததா, லீவ் விட்டார்களா என்பதெல்லாம் இப்போதுதான். அப்போதெல்லாம் லீவு சொல்வது என்று ஒரு சம்பிரதாயம் உண்டு. வாதா மரத்தின் அடியில் மொத்த ஸ்கூலையும் கூட்டி, வருஷம் தவறாமல் ஹெட் மாஸ்டர் ராதாகிருஷ்ணய்யர் அலுக்காமல் போடும் மொக்கை,

 “எல்லாருக்கும் ஒரு வருஷம் லீவ். அடுத்த வருஷம் வந்தாப் போறும். ஜாலியாப் போய்ட்டு வாங்க”

 இத்தோடு நிறுத்தினால் தேவலை.

 “அரைப் பரிட்சை கொஸ்ஸின் பேப்பர்ல இருக்கிற கேள்விகளை எழுதி, பதிலை கோடு போட்ட ஃபுல்ஸ்கேப் பேப்பர்ல எல்லாரும் எழுதிகிட்டு வரணும். பள்ளிக்கூடம் திறக்கிற அன்னைக்கு தவறாம கொண்டு வரணும்” என்கிற அதிர்ச்சித் தகவல் பின்னாலேயே வரும்.

 லீவ் சொல்கிற சாங்கியம் முடிந்ததும் “ஹேய்ய்ய்ய்” என்று உச்ச ஸ்ருதியில் கத்திக் கொண்டு எல்லாரும் ஓடுவோம்.

 இந்த கொஸ்ஸின் ஆன்ஸர் டார்ச்சர் எங்களுக்கு மட்டும்தானா அல்லது எல்லாப் பள்ளிக்கூடத்திலும் உண்டா தெரியவில்லை. பலபேர் எழுதாமல் வந்துவிடுவார்கள். கோவிந்தராஜுலு மாதிரி பிரம்ம ராட்சச வாத்தியார்கள் கருட புராணம் மாதிரி தினுசு தினுசாக தண்டனை கொடுப்பார்கள்.

 என் மாதிரி அசமந்தங்கள் தலைப் பொறுப்பாக எழுதிக் கொண்டு போவோம். கன்னியப்பச் செட்டியார் வீட்டு பாலகங்காதரன் மாதிரி கேடிகள் இது வெறும் ஸாடிஸம் என்பதைப் புரிந்து கொண்டு விடுவார்கள்.

 “மார்க்கு கம்மியா வாங்கறவந்தான், ஆனா எத்தனை பொறுப்பா எழுதிகிட்டு வந்திருக்கான் பாருங்க” என்று அவனுடைய பேப்பரை தலைமேல் உயர்த்தி எல்லாருக்கும் காட்டுவார் பஞ்சவர்ணம் டீச்சர்.

 முதல் பக்கம் முழுக்க அழகாக கேள்வி பதில்களை எழுதியிருப்பான். ரெண்டாவது பக்கத்திலிருந்து ஜுரத்தில் பிதற்றுகிறவன் மாதிரி வாய்க்கு வந்ததை எழுதியிருப்பான். எந்த டீச்சரும் இரண்டாம் பக்கத்தைப் பார்த்ததாக சரித்திரம் இல்லை. பல வாத்தியார்கள் ‘ப்ச்’ என்று பேப்பரைப் பார்க்காமலே திருப்பித் தந்து விடுவார்கள்.

 கொஞ்சம் வளர்ந்து ஹைஸ்கூல் பையனாக ஆனபிறகு வந்த மார்கழிகள் இன்னும் ரசனையானவை. ஜில்லென்ற அரையிருட்டில் கோலம் போடும் சாக்கில் வாசலுக்கு வரும் எஞ்சோட்டுப் பெண்கள்,

 யான் நோக்குங்கால் நிலம்நோக்கி நோக்காக்கால்

தான்நோக்கி மெல்ல நகுவார்கள்!

 இடுப்பொடிய கலர்ப் பொடியைத் தூவிக் கோலம் போட்டுவிட்டுக் கடைசியில் நடுவில் சாணி ஃப்ளவர் வாசில் பரங்கிப் பூவை வைப்பது என்ன வால்யூ அடிஷனோ தெரியாது. ஆனால் கோபண்ணா, கண்ணப்பா உள்ளிட்ட பையன்களை,

 கோடிவீட்டு சக்கு

கோலப்பீயை நக்கு

 என்று கவிஞர்கள் ஆக்கியது!

Advertisements

14 comments

 1. //இந்த கொஸ்ஸின் ஆன்ஸர் டார்ச்சர் எங்களுக்கு மட்டும்தானா அல்லது எல்லாப் பள்ளிக்கூடத்திலும் உண்டா தெரியவில்லை. பலபேர் எழுதாமல் வந்துவிடுவார்கள். கோவிந்தராஜுலு மாதிரி பிரம்ம ராட்சச வாத்தியார்கள் கருட புராணம் மாதிரி தினுசு தினுசாக தண்டனை கொடுப்பார்கள்.//ரொம்ப கரெக்டு.. இது காலம் தொட்டு இருந்திருக்கிறது.. கரெக்டாக நான் படிச்சு முடிக்கிற வரைக்கும் இருந்திருக்கும் போல இருக்கு.. அதுக்கப்புறம் யாரும் கொஸ்டின் பேப்பர் எழுதினதா நான் கேள்விப்படவே இல்லை.. கஷ்டகாலம்! அதுவும் ரியோப்பனிங் டே சங்கடத்துல இந்த தொல்லைவேற! அடுத்தநாள் 8.45க்கு ஸ்கூல்ன்னா, முதல் நாள் ராத்திரி 8 மணிக்கு மூக்கால அழுதுண்டே எழுதறது! எல்லா பேப்பரும் என்னிக்கி எழுதி முடிக்க? சும்மா எல்லாம் ஒரு உடான்ஸ்! ரசனையா எழுதி இருக்கீங்க்!

 2. //“எல்லாருக்கும் ஒரு வருஷம் லீவ். அடுத்த வருஷம் வந்தாப் போறும். ஜாலியாப் போய்ட்டு வாங்க”//
  // விவசாயத் துறையில் டிஏஓ வாக இருந்த அகோரம் அய்யர் (வாட் எ நேம்!)//
  //பரிட்சைக்குப் புறப்படும் போது, கூடாரை வெல்லும் ஸ்ரீ கோவிந்தாவில் கீறல் விழுந்து
  ‘கோவிந்தா….. கோவிந்தா’ என்று ஃபோர்காஸ்ட் சொல்லும்//

  //கேப்பூ என்று அழைக்கப்பட்ட கே.புண்ணியமூர்த்தி பெருமாள் கோவில், பெரிய கோயில், சட்டையப்பர் கோயில் என்று சரியாக சீக்வன்ஸ் செய்து கொண்டு ஒரு சட்டிப் பொங்கல் தின்கிற எமகாதகர்களில் ஒருவன்//

  முடியல. சிரிச்சி சிரிச்சி சிரிச்சி சிரிச்சிக்கிட்டே இருக்க.

 3. இன்னா நாற்பதில் ஆரம்பித்து , அரை இருட்டு கோல மயில்கள் ரசனை வரை இனிய நாற்பதாக ஞாபகங்களை தாலாட்ட வைத்துவிட்டீர்கள்… வேப்ப மரத்தடி , தலைமை ஆசிரியரின் சேகுவாரா உரைக்கு எல்லா பள்ளிகளும் தப்பாது போல…

 4. //சைக்கிள் டைனமோ லைட் மாதிரி மஞ்சள் துணியை தலையில் கட்டிக் கொண்டு//

  அப்படியே KJV மாமாவின் சைக்கிள் டைனமோ லைட் நினைவுக்கு வந்தது.. உவமையில் உங்களை மிஞ்ச ஆள் கிடையாது..

  சென்னை வந்து நான் ஃபோனில் கூப்பிட்ட போது கால்ஷீட் கொடுக்காததால் நான் உங்கள் கூட இத்தனைநாள் டூ… இன்னீலேருந்து சேத்தி… 🙂

 5. அது என்ன ‘மது மங்கை மார்கழி’ ? சும்மா ரைமிங்கிற்கா ?
  சிக்ஸர் அடித்து விட்டீர்கள்….

  (சின்னக்குட்டி — பெயர்தான் சின்னக்குட்டி. உண்மையில் ஷகிலா சைஸில் ரொம்பப் பெரிய குட்டி,

  சைக்கிள் டைனமோ லைட் மாதிரி மஞ்சள் துணியை தலையில் கட்டிக் கொண்டு தியாகய்யர் கெட்டப்பில் இருப்பார்கள்.

  யான் நோக்குங்கால் நிலம்நோக்கி நோக்காக்கால் தான்நோக்கி மெல்ல நகுவார்கள்!)

  உங்களைப் பற்றி பா.ரா சொல்கிறார்….

  வேகமாக எழுதுவது, தரமான எழுத்துக்கு எந்த இடைஞ்சலும் தராது என்பதற்கு சமீபத்திய உதாரணம் ஜவார்லால். சரளமான, அழகான மொழி. சொல்ல வரும் விஷயத்தைச் சுற்றி வளைக்காமல் நேரடியாகச் சொல்லும் பாங்கு. முந்திரித் தூவலாக முறுவல் வரச்செய்யும் நகைச்சுவை.

 6. பிரமாதம் – அசத்துகிறீர்கள் ஜவர்லால் !
  சில சமயம் சுஜாதாவே மீண்டும்
  வந்து விட்டது போல் தோன்றுகிறது !

  vaazththukkaludan kavirimainthan

 7. //சைக்கிள் டைனமோ லைட் மாதிரி மஞ்சள் துணியை தலையில் கட்டிக் கொண்டு தியாகய்யர் கெட்டப்பில் இருப்பார்கள்.//

  1960 க்கு அப்புறம் பிறந்தவங்களுக்கு புரியாத, அதற்கு முன்னால் பிறந்தவங்களுக்கு சேரன் படம் ஓட்டுகிற ஒரு அருமையான உபமானம்.

  //ஹெட் மாஸ்டர் ராதாகிருஷ்ணய்யர் அலுக்காமல் போடும் மொக்கை, “எல்லாருக்கும் ஒரு வருஷம் லீவ். அடுத்த வருஷம் வந்தாப் போறும். ஜாலியாப் போய்ட்டு வாங்க”//

  இதை சொல்லிட்டு ஒரு Art Buchwald லுக் விடுவா ங்களே அது மிஸ்ஸிங்..

  A கிரேட் போஸ்ட்!

 8. ஜவஹர்ஜி, இதை இன்று மறுபடியும் படித்து, வயிறு புண்ணாகும் வரை மீண்டும் சிரித்திருக்கேன்.. டைனமோ மஞ்சள் துணி உபமானம் வெகு சிறப்பு! எல்லாமே முந்திரித்தூவலாதலால் இப்பதிவு முந்திரி கேக்! சான்ஸ்லெஸ்!

 9. அன்பின் ஜவர்லால் – அருமையான நகைச்சுவை – ரெண்டே ரெண்டு தடவை தான் படித்தேன் – சூப்பர் பதிவு – ஸ்கூல்ல்ல வருசக் கடசில ஹெட் மாஸ்டர் மீட்டிங்க் போட்டு ஹோம் ஒர்க் கொடுக்கறதெல்லாம் நாங்க படிச்ச காலத்துல இல்லப்பா ….- மார்கழி மாசப் பறங்கிப்பூ சாணச் சீம்மாசனம்- பாக்காதது மாதிரியே காலங்காத்துல பாத்துக்கிட்டே போன மலரும் நினைவுகள் – சூப்பர் பதிவு – நல்வாழ்த்துகள் – நட்புடன் சீனா

எதுவா இருந்தாலும் எழுதுங்க!

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s