மெல்ல டமில் இனிச் சாகும்

இன்றைய தினமலரில் ’Draft Voters’ List’ என்பதை ’வரைவு வாக்காளர் பட்டியல்’ என்று மொழி பெயர்த்திருந்தார்கள்.

Draftsman என்றால் வரைவாளர் என்கிற சூத்திரத்தைப் பயன்படுத்தியிருப்பது புரிகிறது. அதாவது ’ஆனைக்கு அர்ரம் என்றால் குதிரைக்கு குர்ரம்’ (இதில் கூட ஒரு தப்பு இருக்கிறது) மொழிபெயர்ப்பு, சொல்லளவில் இருந்தால் இதுமாதிரி பரிதாபங்கள் நிகழ்வது தவிர்க்க முடியாதது.

முகமது பின் துக்ளக் நாடகத்தை இசைத்தட்டாக வெளியிட்டபோது, அப்போதைய முதல்வர் ’ரெகார்ட்’ என்கிற ஆங்கிலப் பதத்தை ’தஸ்தாவேஜு’ என்றே பலமுறை குறிப்பிட்டுக் கொண்டிருந்தாராம் (அதுவும் தமிழ்ச்சொல் அல்ல!). அதிர்ஷ்டம் தந்த அனுபவங்கள் நூலில் சோ இதைக் குறிப்பிட்டிருக்கிறார்.

அதேபோல, சமீபத்தில் தமிழன்பன், தமிழ்ச் சொற்கள் பயன்படுத்தாதவர்களுக்கு அபராதம் விதிக்க வேண்டும் என்று சொன்னதையும் சோ குறிப்பிட்டு, அபராதம் வடமொழிச் சொல் என்பதைச் சுட்டிக் காட்டியிருந்தார்.

தங்களைத் தமிழ்க் காவலர்களாகக் காட்டிக் கொள்பவர்கள் அடுத்தவனுக்கு ஆப்பு வைப்பதில் இருக்கிற கவனத்தில் ஒன்றிரண்டு சதவீதம் தங்கள் தமிழறிவைத் தீட்டிக் கொள்ளக் காட்டுவது அவர்களுக்கும் தமிழுக்கும் நல்லது.

தொலைக்காட்சி செய்திகளில் தமிழ் படும் பாடு பரிதாபத்துக்குரியது.

’கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு’ என்பது எல்லாத் தொலைக்காட்சியும் செய்யும் அபரேஷன். ’கடக்காத மூன்று மாதங்களுக்கு முன்பு’ என்று ஏதாவது உண்டா? அல்லது கடந்த மூன்று மாதங்களுக்குப் பின் உண்டா? இல்லை ‘கடக்கப் போகும் மூன்று மாதங்களுக்கு முன்’ உண்டா? மூன்று மாதங்களுக்கு முன் என்றாலே பொருள் வந்துவிடுகிறதே?

தொலைக்காட்சிகளின் அடுத்த பேத்தல் ’குறைந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம்’. ஒன்று, குறைந்த காற்றழுத்த மண்டலம் என்று சொல்லவேண்டும், அல்லது காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் என்று சொல்லவேண்டும். குறைந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் என்று சொன்னால் insignificant reduction in pressure என்று ஆகி விடுகிறது. He does n’t know nothing என்று பேசுகிறவர்களைப் பார்த்திருப்பீர்கள்.

மொழி பெயர்க்கிறவர்களுக்கு தமிழ், ஆங்கிலம் இரண்டிலும் புலமை இருந்தால்தான் மொழிபெயர்ப்பு சரியாக இருக்கும். இல்லாவிட்டால் அந்த மொழிபெயர்ப்பு மொழியின் முழியைப் பெயர்த்துவிடும்.

பொருளைத்தான் மொழிபெயர்க்க வேண்டுமே ஒழிய சொற்களை அல்ல.

வாஷிங்டனில் திருமணம் நாவலில் இதை வைத்து நிறைய ஹ்யூமர் பண்ணியிருக்கிறார் சாவி. பாட்டிகள், ”முதலில் துணி காயப் போட கொடி கட்ட வேண்டும்” என்று அலுத்துக் கொள்ளும் போது ராக்ஃபெல்லர் மனைவி ”கொடி என்றால் என்ன?” என்று கேட்பார். அதற்கு சாம்பசிவ சாஸ்திரிகளின் பதில், “Flag”. திருமதி ராக்ஃபெல்லர் பாட்டிகளின் தேசப் பற்றை எண்ணிச் சிலிர்த்துப் போவார்.

Draft என்கிற பதத்துக்கு இந்த இடத்தில் தாற்காலிக, முதல்நிலை,ஆரம்ப என்று எதைச் சொன்னாலும் பொருந்தும். இதை நட்பான நகைச்சுவையாக எடுத்துக் கொண்டு சம்பந்தப்பட்டவர்கள் திருத்திக் கொண்டால் பெரிய தமிழ்ச்சேவை செய்ததாகத் திருப்திப் பட்டுக்கொள்வேன். இல்லாவிட்டாலும் பரவாயில்லை, தேங்காய்ச்சேவையைத் தின்றுவிட்டுப் படுத்துக்கொள்வேன்.

Advertisements

27 comments

 1. நானும் பார்த்து பொருமிய விஷயங்கள்…..
  சில பதடைகளில் அகத்து 15 பிறந்த நாள் காணும்…..

  அது என்ன அகத்து……. ஒன்று ஆகஸ்ட் ன்னு சொல்லுங்க…. இல்ல மாசி, பங்குனி ன்னு சொல்லுங்க…. அது என்ன சமஸ்கிரதம் கலக்காத தமிழ் என்று வார்த்தையை கொலை பண்ணுரிங்க?????

 2. இது எவ்வளவோ பரவால்ல சார்.. சென்னை ஏர்போர்ட்டில் Physically Challenged Persons-க்கு மெய்ப்புலம் அறைகூவலர் -ன்னு நியான் சைன்போர்ட் வச்சிருந்தாங்க.. எங்க போயி முட்டிக்கறதுன்னு தெரியல..

 3. //Draft என்கிற பதத்துக்கு இந்த இடத்தில் தாற்காலிக, முதல்நிலை,ஆரம்ப //

  அண்ணே நீங்கள் தவறாக புரிந்து கொண்டு எழுதியுள்ளீர்கள் என்றே நான் கருதுகிறேன்.
  வரையறை, வரைவு, வரையறுத்தல் இவை எல்லாம் திட்டம் (முன்கூட்டிய) தொடர்பில் பயன்படுத்தும் சொல்லாட்சிகள். Draft க்கு வரைவு என்கிற சொல் சரிதான். திட்ட வாக்காளர் பட்டியல் என்று எழுதலாம், யாரைத் திட்ட என்று கேட்டுவிடுவீர்கள். 🙂

  //முகமது பின் துக்ளக் நாடகத்தை இசைத்தட்டாக வெளியிட்டபோது, அப்போதைய முதல்வர் ’ரெகார்ட்’ என்கிற ஆங்கிலப் பதத்தை ’தஸ்தாவேஜு’ என்றே பலமுறை குறிப்பிட்டுக் கொண்டிருந்தாராம் // இசைத் தட்டுக்கு பிறகு ஒலி நாடா, குறும் தகடு, மென்தகடெல்லாம் வந்துவிட்டது 🙂

  இப்போது தாஸ்தாவேஜ் என்பதற்கு மாற்றாக (பதில் – தமிழ் இல்லையெ 🙂 ) கோப்பு, பதிவு என்றெல்லாம் இடத்திற்கேற்றாற் போல் பயன்படுத்தப்படுகிறது

  //அதேபோல, சமீபத்தில் தமிழன்பன், தமிழ்ச் சொற்கள் பயன்படுத்தாதவர்களுக்கு அபராதம் விதிக்க வேண்டும் என்று சொன்னதையும் சோ குறிப்பிட்டு, அபராதம் வடமொழிச் சொல் என்பதைச் சுட்டிக் காட்டியிருந்தார்//

  சோ இராமசாமியால் குத்திக்காட்ட மட்டுமே முடியும், அதற்கு ஏற்றத் தமிழ் சொல் இது தான் என்று சொல்லத் தெரியாது, நீங்களாவது குறிப்பிட்டு இருக்கலாம் இல்லையா ? 🙂

  பிணைத் தொகை , பிணைக் கட்டணம் , தண்டனைக் கட்டனம் (தண்டித்தல் – தமிழ் சொல் தான் நம்புங்க சாமி)

  // மூன்று மாதங்களுக்கு முன் என்றாலே பொருள் வந்துவிடுகிறதே?//

  🙂 சென்ற ஆண்டு என்று சொல்வது போல், சென்ற மூன்று திங்களுக்கு (மாதம் தான்) என்றும் சொல்லாம்.

  //தொலைக்காட்சிகளின் அடுத்த பேத்தல் ’குறைந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம்’. ஒன்று, குறைந்த காற்றழுத்த மண்டலம் என்று சொல்லவேண்டும், அல்லது காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் என்று சொல்லவேண்டும். குறைந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் என்று சொன்னால்//

  இங்கு ‘நல்ல மீன்’ விற்கப்படும் பார்திபன் – வடிவேல் நகைச்சுவை நினைவு வருது 🙂

  //தாற்காலிக, முதல்நிலை,ஆரம்ப என்று எதைச் சொன்னாலும் பொருந்தும்//

  இன்னொன்றும் இருக்கு ‘துவக்க நிலை’ 🙂

  1. நீண்ட இடைவெளிக்குப் பிறகு வந்திருக்கும் கண்ணன்ஜி, வருக. சுவாரஸ்யமா, விவரமா உங்க கருத்துக்களைப் பகிர்ந்துகிட்டிருக்கீங்க. நன்றி.

 4. தொலைக் காட்சி தமிழை கொலை செய்வது ஒரு புறம் ..ல,ள,ழ வராத அரசியல்வாதிகள் தமிலிக் கொண்டிருக்கிறார்கள் மறு புறம்.. ஆக்ஸிஜன் அவசரம். ( கிரந்தம் ஸி, ஜ தவறில்லை ..அவசியம் தேவை என்பதும் எனது உப கருத்து )

  //பாட்டிகளின் தேசப் பற்றை எண்ணிச் சிலிர்த்துப் போனார்கள் // கொடி விளக்கம் சரியான சரவெடி..

 5. //அவசியம் தேவை //

  தேவை (தமிழ்) என்றாலும் அவசியம் (வடசொல் அவஸ்ய) என்றால் ஒரே பொருள் உள்ள சொற்கள் தான். சில இடங்களில் கட்டாயம், கண்டிப்பாக, இன்றியமையாத என்றப் பொருளில் இந்த இரண்டு சொற்களில் எதையும் பயன்படுத்தப்படுத்தலாம். க்யூவரிசைக்கு சிரிக்கும் நாம் அவசியம் தேவை-யை சிரிக்காமலேயே பயன்படுத்துகிறோம். தேவையை அழுத்திச் சொல்ல ‘மிகத் தேவை’ என்று சொல்லலாம். மற்றபடி அதற்கு மாற்றாக ‘அவசியம்’ தேவையற்றச் சொல் தான் 🙂

 6. சுட்டியதற்கு நன்றி கோவி கண்ணன் .. நடு சென்டர் மாதிரி உட்கார்ந்து விட்டது … அடிக்கும் பொழுது அவசியம் தேவை பட்டது மாதிரி இருந்தது . நீங்கள் சுட்டிய பிறகு அவசியம் தேவை இல்லை யாகிவிட்டது (அனாவசியம் என குறிப்பிடவில்லை )
  இந்த மாதிரி நலமான விவாதங்கள் வளர்ச்சிக்கு உதவும் ( ஆரோக்கியம் என்றும் குறிப்பிடவில்லை

  1. சூப்பர் பத்மனாபன், கலக்கறீங்க! நிச்சயம் தேவை என்றோ, அத்தியாவசியம் என்றோ சொன்னாலும் சரியாக இருந்திருக்கும்.

   1. சர் ஜி,
    சரியா தவறானு தெரியல, ஆனாலும் நான் பார்த்தவரையில் ஒரே சொல்லை இரண்டு முறை அடுத்தடுத்து சொல்லி அதன் தீவிரத்தை காண்பிப்பது நிறைய மொழிகளில் உள்ளதுதானே, கன்னட: பிசி பிசி அன்னாஹ், மாட்லே மாடு பேக்கு. ஹிந்தி : கரம் கரம் ச்சாய்…என்பவை.
    ஒருவேளை அதேபோல வேறு மொழிகளிளிருந்து “Tranliterate ” பண்றதால வரும் பழக்கமாக கூட இருக்கலாம்.

    இதை தவிர தமிழில் உள்ள மற்ற வார்த்தைகளான வேக வேகமாக, குளு குளு பனிக்கூழ், என்பன போன்ற இலக்கணம் இதற்கு பொருந்தாதா?

    ஸ்ரீ

 7. //திருத்திக் கொண்டால் பெரிய தமிழ்ச்சேவை செய்ததாகத் திருப்திப் பட்டுக்கொள்வேன். இல்லாவிட்டாலும் பரவாயில்லை, தேங்காய்ச்சேவையைத் தின்றுவிட்டுப் படுத்துக்கொள்வேன்.”//

  தமிழ் ICU க்கு போறது ஒரு பக்கம் இருக்கட்டும் .தேங்காய்ச்சேவை அடுத்து உங்கவீட்டுல எப்ப செய்வாய் (OR ) செய்வாங்க?.அடியேனுக்கும் படைச்சால் …” மூட நெய் பெய்து முழங்கை வழி வார” சாப்ட பெருமாள் அருள் நிச்சயம் — வேலு

 8. வரைவு, v. noun. Measurement, அளவு. 2. A limit, or bound, எல்லை. 3. Separa tion, rejection, பிரிவு. 4. Change, perver sity, மாறுபாடு. (சது.) 5. Marriage, விவாகம்.

  வரைவுக்கும் முன்கூட்டிய திட்டமிடலுக்கோ அல்லது தினமலரில் குறிப்பிட்டதற்கோ சம்பந்தம் இருப்பது போலத் தெரியவில்லை.

 9. //பொருளைத்தான் மொழிபெயர்க்க வேண்டுமே ஒழிய சொற்களை அல்ல//
  ஐயோ இது பத்தி சொல்லி மாளாது..
  பாட்டுப் போட்டிகளுக்கு வரும் ஜட்ஜ் பிருகஸ்பதிகள் “You have done justice to this song” என்பதை அப்படியே மொழி பெயர்த்து “நீங்க இந்தப் பாட்டுக்கு நியாயம் பண்ணியிருக்கீங்க” என்று சொல்லும் போது பத்திக்கிட்டு வருது.
  ”Take a left ” – Left எடுத்துக்கோ – இது மாதிரி நெறய கொலைகள்..

  என்றும் அன்புடன்
  பாஸ்டன் ஸ்ரீராம்

 10. கோவியை வழிமொழிகிறேன்!

  //தாற்காலிக// – என்பது மேற்கொண்டு பயன்பட தகுந்தது என்ற பொருளை தருவதில்லையே?

  1. மேற்கொண்டு பயன்படுத்துகிற நிலை வரும்போது தாற்காலிக என்கிற ப்ரிஃபிக்ஸ் எடுக்கப்பட்டுவிடும்.

 11. //பொருளைத்தான் மொழிபெயர்க்க வேண்டுமே ஒழிய சொற்களை அல்ல//
  தமிழில் ஒரு தொ(ல்)லை காட்சி தொடரில் நான் பார்த்த, கேட்ட வசனம் “He is a filtered Idiot”. மண்டையை பிய்த்துக்கொண்ட பின்பு விளங்கியது! அவர் “அவன் ஒரு வடி கட்டின முட்டாள்”
  என்பதை தான் வசன கர்த்தா இப்படி மொழி (முழி!) பெயர்த்துள்ளார் என்று!

 12. //தங்களைத் தமிழ்க் காவலர்களாகக் காட்டிக் கொள்பவர்கள் அடுத்தவனுக்கு ஆப்பு வைப்பதில் இருக்கிற கவனத்தில் ஒன்றிரண்டு சதவீதம் தங்கள் தமிழறிவைத் தீட்டிக் கொள்ளக் காட்டுவது அவர்களுக்கும் தமிழுக்கும் நல்லது.//

  அப்படி இருந்தா தமிழ்நாடு என்றைக்கு முன்னேறியிருக்குமே.. இப்படியெல்லாம் தனித்தமிழ் கூறி (வி) தமிழ் வளர்த்தலால் யாதொரொ பயனும் விளையாது. அது மலர் போல இயல்பாக மலருதல் வேண்டும்.

  இன்றைக்கு நல்ல தமிழ் வீழ்ச்சியடைந்ததற்கு அரசியல் மட்டுமல்ல, சில பத்திரிகைகளும், நவீன பதிப்பகங்களும் கூடக் காரணம்.

 13. நல்லா எழுதியிருக்கீங்க.
  பின்னூட்டங்களும் விறுவிறுப்பாய் இருந்தது. தமிழில் 60 சதவிகித வார்த்தைகள் வடமொழி தான். சொன்னால் ஒத்துக் கொள்ள மாட்டார்கள். ஏன் வார்த்தை என்பதே வடமொழி தான்

 14. //நல்லா எழுதியிருக்கீங்க.
  பின்னூட்டங்களும் விறுவிறுப்பாய் இருந்தது. தமிழில் 60 சதவிகித வார்த்தைகள் வடமொழி தான். சொன்னால் ஒத்துக் கொள்ள மாட்டார்கள். ஏன் வார்த்தை என்பதே வடமொழி தான்//
  ரிசபன்!
  இதில் எத்தனை சத விகிதம் வடமொழிச் சொற்கள் உண்டு. சொல் எனச் சொல்லவிருக்க வார்த்தையென அடம் பிடித்தால்; என்செய்வோம்.

எதுவா இருந்தாலும் எழுதுங்க!

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s