கேரக்டரையே புரிஞ்சிக்க மாட்டேங்குறாங்க!

பல உரையாசிரியர்கள் திருவள்ளுவரைப் புரிந்து கொள்ளவே இல்லை.

 அவர் இன்று உயிரோடு இருந்தால் ‘என் கேரக்டரையே புரிஞ்சிக்க மாட்டேங்குறீங்களே!’ என்று வேதனைப்படலாம்!

சிந்திப்பதற்கு எட்வர்ட் டி போனோ சொன்ன வழிகளைவிடச் சிறப்பானது திருக்குறள் படிப்பதுதான். ஒவ்வொரு திருக்குறளையும் படித்துவிட்டு, இதற்கு நேராகச் சொல்லப்பட்டதற்கு மிகுதியாக, அல்லது வித்யாசமாக ஏதாவது அர்த்தம் இருக்குமா என்று யோசித்துப் பாருங்கள். ரெண்டு வரியில் அவர் எழுதினதற்கு இதுதான் நோக்கம். ரெண்டு நாள் உங்களை யோசிக்க வைக்கிற குறள்கள் நிறைய உண்டு.

சில சொற்பொழிவாளர்கள் மணிக்கணக்கில் பேசுவதை ஒன்றரை நிமிஷத்தில் மறந்து போய்விடலாம்!

‘மாடு மேய்க்கத்தான் லாயக்கு’, ‘காப்பி ஆத்தத்தான் போவே’, ‘சிரைக்கவா வந்தே?’ என்கிற ரீதியில் பேசும் முட்டாள் வாத்தியார்கள் லிஸ்டில் உரையாசிரியர்கள் அவரை வைத்தது சோகம்.

அறத்தாறு இதுவென வேண்டா சிவிகை
பொறுத்தானோடு ஊர்ந்தான் இடை.

என்பது ஒரு சுவாரஸ்யமான குறள்.

திருவள்ளுவர் எதை வலியுறுத்துகிறாரோ அதற்கு நேர் எதிரிடையாகத்தான் பெரும்பாலான உரையாசிரியர்களும்,(பரிமேலழகர் உள்பட!) தமிழாசிரியர்களும் இதற்குப் பொருள் சொல்லியிருக்கிறார்கள். மு.வரதராசனார் மட்டும் விதிவிலக்கு.

அறத்தின் பயன் இன்னதென்று சொல்லத் தேவையில்லை, பல்லக்கைத் தூக்குகிறவர்களையும், அதில் பயணம் செய்பவர்களையும் பார்த்தாலே போதும் என்கிற ரீதியில்தான் எல்லாரின் உரையும் அமைந்திருக்கிறது. அதிலும் கலைஞர் கருணாநிதி இதே அர்த்தத்தை இன்னும் அவருடைய திறமையெல்லாம் சேர்த்து எழுதியிருக்கிறார்.

அது பொருளாக இருக்கலாம், இல்லாமலும் போகலாம். நானும், மு.வ. அவர்களும் மட்டும்தான் சரி என்று சொல்வது அறியாமையாக இருக்கும். பரிமேலழகரை விட நான் மேதாவி என்று நினைத்துக் கொண்டால் அது அறியாமையின் உச்சம். ஆனால் இந்தக் குறளை வேறொரு கோணத்திலும் பார்க்க முடியும். அந்தக் கோணத்தில் பார்க்க முதலில் திருவள்ளுவர் மேல் ஒரு நம்பிக்கை வேண்டும்.

பல்லக்குத் தூக்குகிறவனுக்கு அது தலையெழுத்து என்றோ, முன்வினைப் பயன் என்றோ அர்த்தம் வருகிற மாதிரி வள்ளுவர் பேசுவாரேயானால், சில தொழில்களைக் கேவலமாக அவர் நினைக்கிறார் என்று பொருளாகிவிடும். எந்தத் தொழிலும் கீழானது அல்ல என்பதே நிஜம். இதை வள்ளுவரும் கூட வேறொரு இடத்தில் சுட்டிக் காட்டியிருக்கிறார்.

பிறப் பொக்கும் எல்லா உயிர்க்கும்

சிறப்பொவ்வாச் செய்தொழில் வேற்றுமையான்

என்கிற குறளை ஞாபகப் படுத்திப் பாருங்கள்.

சிறப்பு ஒவ்வா என்று ஏன் சொல்கிறார் என்றால், தொழிலை வைத்துச் சிறப்பை (உயர்வு, தாழ்வை) சொல்ல முடியாது என்கிறார். தொழிலில் வித்யாசங்கள் உண்டே ஒழிய ஏற்றத் தாழ்வு கிடையாது என்கிறார்.

அறத்தைச் செய்யாததால் விதி உனக்கு ஆப்பு வைத்துவிட்டது. அறம் செய்தவன் நோகாம நுங்கு தின்கிறான் பார் என்கிற தொனியில் ஒரு அறவுரையை சொல்கிற ஆட்டிட்யூட் இருந்திருந்தால் அவரை இந்தச் சமூகம் எப்போதோ நிராகரித்திருக்கும்.

அந்த இடத்தில் போய் அறவுரையே சொல்லக் கூடாது.

ஏற்கனவே நொந்து நூடுல்ஸ் ஆகியிருக்கும் ஒருத்தனிடம் இப்படிச் சொன்னால், “அறமாவது, ……………வது, இப்படி ஆப்பு வைக்கிற அறம் எனக்குத் தேவையே இல்லை” என்பது அவனுடைய ரியாக்‌ஷனாக இருக்கும். பல்லக்கில் போய்க் கொண்டிருக்கிறவனிடம் இப்படிச் சொன்னால் மண்டைக்கனம் ஏறி, ஆஹா…. ஏற்கனவே நிறைய அறம் செய்தாகிவிட்டது. பாக்கி வாழ்க்கை அனுபவிக்க மட்டுமே என்கிற எண்ணம் வந்துவிடும். ஆக இரண்டு பேருக்குமே அறன் வலியுறுத்தல் ஒர்கவுட் ஆகாது.

பல்லக்குத் தூக்குவது ஒரு உதாரணம்தான்.

ஊர்ந்தான் இடை என்று முடித்திருக்கிறார் பாருங்கள்.

உழைக்கிறவனுக்கும், உழைப்பை அனுபவிக்கிறவனுக்கும் இடையே ஒப்பீடாக அறத்தை போதிக்காதீர்கள் என்பதுதான் திருவள்ளுவர் சொல்லவந்தது. அறத்தாறு இதுவென வேண்டா – என்றால் அறத்தால் வந்த வினை இது என்று சொல்லாதீங்கடா என்று அர்த்தம்.

இதை மிகச் சரியாகத் தப்பாகப் புரிந்து கொண்டிருக்கிறவர்கள்தான் அதிகம். இந்த மாதிரி அபரேஷன்கள் கூடுமானவரை வராமல் எழுதியிருக்கிறேன் என் திருக்குறள் புத்தகத்தை.

மாற்றுக் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.

Advertisements

16 comments

 1. 🙂 (தமிழ் முறையா படிச்சதில்லை, அதனால நாலைந்து எல்லாருக்கும் தெரிந்த குறள் மட்டும் தான் தெரியும் என்பதால்.)

 2. ஐயா..

  இந்தக் குறளை

  பிறப் பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வாச்
  செய்தொழில் வேற்றுமை யான்

  என்று பிரித்து படித்துப் பாருங்கள். வள்ளுவர் எதைச் சொல்ல வருகிறார் என்பது புரியும்.

  அதாவது பிறப்பு என்பது ஒன்றாக இருந்தாலும் சிறப்புகள் அனைவருக்கும் ஒன்று போல் இருப்பதில்லை; அதற்குக் காரணம் அவரவர்கள் செய்யும் தொழில்கள்தான் என்பதே வள்ளுவர் கூற வருவது. இதை வழக்கறிஞர் ரவி (ஷோபனா ரவி) “சொற்களுக்குள் ஏறிக் கொள்” என்ற நூலில் மற்ற குறள்களோடு ஒப்பு நோக்கி, மிக விரிவாக ஆராய்ந்து, திறனாய்வு செய்து எழுதியுள்ளார். (திரிசக்தி பதிப்பகம்)

  அறத்தாறு இதுவென வேண்டா சிவிகை
  பொறுத்தானோடு ஊர்ந்தான் இடை.

  இதற்கு நீங்கள் சொன்ன விளக்கம் சரியே! மாறுபட்ட இரண்டு நிலையில் இருப்பவர்களிடம் போய் அறத்தை உபதேசிக்காதே; நீ செய்த அறத்தினால் தான் இது வந்தது என்று சொல்லாதே என்கிறார்.

  இதன் மூலம் அவர் சொல்லாமல் சொல்லும் உட்பொருள் (இறைச்சி என்பார்களே இலக்கியத்தில்) என்ன என்பதை உணர முடிகிறதா?

  இது மாதிரி பல குறள்களில் வள்ளுவர் பல கொக்கிகளைப் போட்டிருக்கிறார். அவற்றை அந்தக் குறளுக்கு மட்டும் நேரடியாகப் பொருள் கொண்டு விளக்கம் கூறி உள்ளனர் பல உரைசாரியர்கள் . ஆனால் வள்ளுவர் அதே பொருளை வலியுறுத்தும் பிற குறள்களில் என்ன சொல்லியிருக்கிறார் என்பதை ஒப்பு நோக்கியபின் தான் வள்ளுவர் உண்மையாகவே என்ன சொல்ல வருகிறார் என்பதை உணர முடியும்.

  வள்ளுவர் ஒரு தீர்க்கதரிசி மட்டுமல்ல; ஒரு சமூக ஞானியாகவும் இருந்திருக்கிறார்.

 3. வள்ளுவரிடத்தில் எனக்கொரு வழக்குண்டு, செவிச்செல்வம் பெரியது என்று ஓரிடத்தில் கூறிவிட்டு மழலைச் செல்வம்தான் பெரியது என்று வேறொரிடத்தில் கூறியிருப்பார். இது ஒரு உதாரணம் தான்.

  இது போல, பொய்யே சொல்லக்கூடாது,. சில இடங்களில் சொல்லலாம் என்று தொடர்கிறது. ஒரு தீர்க்கமான பார்வையுடன் தான் இதை எழுதியிருக்கிறா!. என ஒரு சந்தேகம் எனக்கு இருக்கிறது.

 4. இப்படி ஒவ்வோரு குறளையும் கடைந்து எடுத்து பார்த்தோமானால் அமுதான பொருள் கிடைக்கும் என்பதற்கு சரியான உதாரணம்…. அறத்தாறு இதுவென….

  இம்மாதிரி விளக்கங்கள் சீக்கிரம் “உருப்பட “ வைக்கிறது….

 5. திருவள்ளுவர் பூடக திலகமாக இருந்துட்டு போகட்டும் .தங்கள்
  ” உருப்படு” பற்றி இங்க வெளிப்படையா சொல்லுறது தான உருப்படுற(பொழைக்கிற) புள்ளைக்கு அடையாளம். …வேலு

 6. திருக்குறளுக்கு பரிமேலழகர் அவர்கள் இயற்றிய உரையிலேயே 100% accuracy (பாருங்கள் சிக்ஸ் சிக்மா படுத்தும் பாட்டை!) இருப்பதாக சொல்லமுடியாது என்று நாமக்கல் கவிஞர் ‘திருவள்ளுவர் திடுக்கிடுவார்’ என்ற நூலில் குறிப்பிட்டிருக்கிறார்.

  பரிமேலழகர் மிகச்சில(கவனிக்க: எல்லாமும் இல்லை!) குறள்களுக்கு தவறாக பொருள்கொண்டு உரையெழுதியுள்ளார் என்பது அவர் வாதம். அந்த நூல் அதற்கான ஆராய்ச்சியும்தான்!

  அன்புடன்
  கார்த்திகேயன்
  காரணம் ஆயிரம்™
  http://kaaranam1000.blogspot.com

 7. என்ன சார் போற போக்க பாத்தா திருக்குறளுக்கு நீங்க ஒரு உரை எழுதுவீங்க போல இருக்கு.
  எழுதுங்க எழுதுங்க அத படிச்சாவது எதாவது உருபிடியா எதாவது செய்யறேநானு பாப்போம்

  1. ஏற்கனவே வந்திருக்கிற என்னுடைய திருக்குறள் வழியில் உருப்படு புத்தகம் நீங்க இன்னும் படிக்கல்லையா?

 8. இக்குறளுக்கு எனக்குத் தோன்றிய பார்வையை இங்கு தர விரும்புகிறேன்…

  பல்லக்கைச் சுமப்பவனும், அதன்மேல் அமர்ந்திருப்பவனும் ஒரே பயணத்தில்தான் இருக்கிறார்கள்; ஒரே காட்சிகளைத்தான் காண்கிறார்கள். ஆனால் மேலே இருப்பவனோ சுற்றியிருக்கும் அத்தனையையும் ரசித்துக்கொண்டு வருவான். மற்றவனோ பாரத்தை சுமப்பதனால் எதையும் ரசிக்கும் மனமின்றி கடமையே என்று தன் பயணத்தைத் தொடர்வான்.

  இங்கு ’பல்லக்கு’ எனும் உருவகம் ’வாழ்க்கை’யைக் குறிப்பதாக எடுக்கலாம். அப்படிப் பார்க்கும்போது, சிலர் வாழ்க்கையைச் சுமக்கிறார்கள் என்றும், சிலரை வாழ்க்கை சுமக்கிறது எனவும் பொருள் வருகிறது.

  முன்னவர்கள் ‘என் வெற்றி; என் தோல்வி; என் வாழ்க்கை’ என்று எல்லாவற்றையும் தன் பொறுப்பில் வைத்துக் கொள்பவர்கள்.. பின்னவர்களோ, எல்லாவற்றையும் இறைவனுக்களித்து (நாளையப் பொழுதை இறைவனுக்களித்து நடக்கும் வாழ்வில் அமைதியைத் தேடு-கண்ணதாசன்), ஒரு நீரோட்டம் போல, நிகழ்ச்சிகளின் இழுப்புக்கு, தன்னை முழுவதும் ஒப்படைத்துவிடுவர்.

  இதில் எந்த வழி சிறந்தது என்று யாராவது வந்து நமக்கு விளக்கம் கொடுக்க வேண்டுமா என்ன? என்று வள்ளுவர் கேட்கிறாரோ!!!

  1. நன்றி காளிதாஸ், என்னுடைய எழுத்து திருக்குறள் படிக்கிற ஆர்வத்தை உண்டாக்குதுன்னா அது ஒரு விருது மாதிரி எனக்கு.

எதுவா இருந்தாலும் எழுதுங்க!

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s