ஆசையும் கவலையும் சேர்ந்தால் யோசனை

”ஒரு கார் வாங்கறதுன்னு முடிவு பண்ணிட்டேன்”

“நல்லா யோசிச்சிதான் முடிவு பண்ணியா?”

“ஆமாம் ரொம்ப நாளா யோசனை பண்ணேன்”

“என்ன யோசனை பண்ணே?”

“கார் வாங்கணும்ன்னுதான்”

“கார் வாங்கணும், கார் வாங்கணும்ன்னு மட்டும்தான் யோசிச்சியா?”

“ஆமாம், கார் வாங்கணும்ன்னா அதைத்தான யோசனை பண்ணனும்?”

“அதுக்குப் பேர் யோசனையில்ல”

“பின்னே?”

“அது ஆசை”

“பின்னே யோசனைன்னா என்ன?”

“உங்கிட்ட கார் வாங்கற அளவு பணம் இருக்கா?”

“அதான் பேங்கில லோன் தர்ராங்களே?”

“எவ்வளவு மாசா மாசம் கட்ட வேண்டியிருக்கும்?”

“அஞ்சாயிரம் ரூபா”

“மாசம் அஞ்சாயிரத்தை லோனுக்குக் கட்டிட்டா வீட்டு செலவுக்கு அஞ்சாயிரம் கம்மியா இருக்குமே.. என்ன பண்ணுவே?”

“அஞ்சாயிரம் கம்மியா செலவு பண்ணுவேன்”

“எதைக் குறைப்பே?”

“வாரம் ஒரு பீர் சாப்பிடறேன்.. அதைக் கட் பண்ணலாம்”

“முன்னூறு ரூபாதான் கிடைக்கும்.. நிச்சயமா அதைக் கட் பண்ண மாட்டேன்னு தெரியும்”

“சிகரெட்?”

“நோ சான்ஸ்.. அந்த அளவு வில் பவர் இருந்தா கார் வாங்கற ஆசையே வந்திருக்காது”

“எலக்ரிசிட்டி?”

“மாசம் எத்தனை ரூபா எலக்ரிக் சார்ஜ் வருது?”

“பில்லு எண்ணூறு ரூபா.. ஸோ மாசம் நானூறு”

“எலெக்ட்ரிசிட்டியே யூஸ் பண்ணல்லைன்னாலும் தேறாது.. ஏஸியை மட்டும் கட் பண்ணா ஒரு இருநூறு ரூபா தேறும். வேறே?”

“வேறே… எண்டர்டெயின்மெண்ட்டைக் குறைச்சிக்கலாம்”

“அது எவ்ளோ ஆகுது மாசம்?”

“அது.. அது ஒரு ஆயிரத்தி இருநூறு வரும்”

“போதாது.. அப்புறம்?”

“கேபிள் டிவியை கட் பண்ணலாம்..”

“பூ.. வெறும் நூத்தம்பது.. வேறே?”

“பேப்பர்.. புக்ஸ்…”

“முன்னூறுதான்.. வேறே?”

“காபி?”

“ஆயிரம் கூடத் தேறாது”

“கிட்டக் கிட்ட மூவாயிரம் வருதே.. தேறாதுங்கிறே?”

“அதாவது, பீர் சாப்பிடாம, காபி சாப்பிடாம, டிவி பாக்காம, பேப்பர், புக்ஸ் எதுவும் படிக்காம, சினிமா போகாம, ஹோட்டலுக்குப் போகாம, குடும்பமே ராத்திரி வியர்த்து வழிய தூங்கி பணம் சேர்த்தா மூவாயிரம் தேறுது. இவ்வளவு தியாகங்கள் ஒர்த்தா? பாக்கி ரெண்டாயிரத்துக்கு என்ன பண்ணுவே?”

“பால் பாக்கெட்டைக் குறைச்சிடலாம். எண்ணை வாங்க வேண்டாம், உடம்புக்கும் நல்லது. காய்கறியைக் குறைக்கலாம். வீட்டை வாடகைக்கு விட்டுட்டு சின்ன வீட்டுக்குக் குடி போகலாம். மத்யானம் சாப்பாடு கட்டி எடுத்துட்டுப் போறதுக்கு பதில் கேண்டீன்ல சாப்டுப்பேன்”

“அதாவது, குடும்பமே அரை வயிறு சாப்ட்டு, சத்தே இல்லாம, கீக்கிடமா ஒரு வீட்ல இருந்துகிட்டு பஞ்சப் பனாதிகள் மாதிரி, எத்தியோப்பியா ஃபேமிலி மாதிரி இருக்கப் போறிங்க?”

“ஆ.. ஆமாம்”

“எதுக்கு? நீ மட்டும் ஜாலியா தினம் கார்ல ஆஃபிஸ் போக?”

“ஏன் வீக் எண்ட்ல அவங்களும் வரலாமே?”

“பெட்ரோலுக்கும், மெயிண்டனன்ஸுக்கும் உங்க தாத்தா குடுப்பாரா? அதுக்காக ஒரு வேளை சோத்தை கட் பண்ணுவியா?”

“இதெல்லாம்தான் யோசனையா? இதெல்லாம் கவலைடா”

“கரெக்ட்.. இந்தக் கவலையால இப்ப நீ என்ன முடிவுக்கு வந்தே?”

“இருபத்தோறாயிரம் டேக் ஹோம் வர்ர மாதிரி ஒரு வேலைக்கு மாற வேண்டியதுதான்”

“இப்பதான் யோசிக்க ஆரம்பிச்சிருக்கே”

29 comments

  1. வீடு கட்ட நினைச்சாலும் அதே கவலைதான் வருது. யானை விலைய விட அங்குசம் விலை ரொம்ப ஜாஸ்தியா இருக்கு. சுண்டக்காய் காப் பணம் சுமைக் கூலி முக்காப் பணம்.

    ஒரே பழமொழியாய் கமெண்டுவதாக தோன்றினால் மன்னிக்கவும்

  2. “இதெல்லாம்தான் யோசனையா? இதெல்லாம் கவலைடா”

    “கரெக்ட்.. இந்தக் கவலையால இப்ப நீ என்ன முடிவுக்கு வந்தே?”

    “இருபத்தோறாயிரம் டேக் ஹோம் வர்ர மாதிரி ஒரு வேலைக்கு மாற வேண்டியதுதான்”

    “இப்பதான் யோசிக்க ஆரம்பிச்சிருக்கே”
    Super Lines

  3. ”ஒரு ப்ளாக் ஆரம்பிக்கறதுன்னு முடிவு பண்ணிட்டேன்”

    “நல்லா யோசிச்சிதான் முடிவு பண்ணியா?”

    “ஆமாம் ரொம்ப நாளா யோசனை பண்ணேன்”

    “என்ன யோசனை பண்ணே?”

    “ப்ளாக் ஆரம்பிக்கணும்ன்னுதான்”

    “ப்ளாக் ஆரம்பிக்கணும், ப்ளாக் ஆரம்பிக்கணும்ன்னு மட்டும்தான் யோசிச்சியா?”

    “ஆமாம், ப்ளாக் ஆரம்பிக்கணும்ன்னா அதைத்தான யோசனை பண்ணனும்?”

    “அதுக்குப் பேர் யோசனையில்ல”

    “பின்னே?”

    “அது ஆசை”

    “பின்னே யோசனைன்னா என்ன?”

    “உங்கிட்ட ப்ளாக் நடத்தற அளவு நேரம் இருக்கா?”

    “தூக்கத்தை குறைக்கவேண்டியதுதான்?”

    “எவ்வளவு நேரம் வேண்டியிருக்கும்?”

    “நாலு மணி”

    “எதைக் குறைப்பே?”

    “ஆறு மணி நேரம் தூங்கறேன் .. அதைக் கட் பண்ணலாம்”

    “ஒரு மணிதான் கிடைக்கும்.. நிச்சயமா அதைக் கட் பண்ண மாட்டேன்னு தெரியும்”

    “அரட்டை நேரம்?”

    “நோ சான்ஸ்.. அந்த அளவு வில் பவர் இருந்தா ப்ளாக் நடத்தற ஆசையே வந்திருக்காது”

    “டிவி ?”

    “வாரம் எத்தனை மணி நேரம் பார்க்கறே?”

    “12 மணி நேரம் .. ஸோ daily 1.5 மணி”

    “டிவி யே பார்க்கலைனாலும் தேறாது.. வேறே?”

    “வேறே… பசங்களுக்கு homework சொல்லிதருவதை குறைச்சிக்கலாம்”

    “அது எவ்ளோ நேரம் ஆகுது தினம்?”

    “அது.. அது ஒரு ஒரு மணி வரும்”

    “முடியாது இப்போவே பசங்க சரியாமார்க் வாங்குறதில்லன்னு சொல்லற.. அப்புறம்?”

    “பேப்பர் படிப்பதை கட் பண்ணலாம்..”

    “பூ.. வெறும் 30 நிமிஷம் .. வேறே?”

    “உடற்பயிற்சி…”

    “30 நிமிஷம்தான்.. வேறே?”

    “கிட்டக் கிட்ட மூணு மணி வருதே.. தேறாதுங்கிறே?”

    “அதாவது, குடும்பத்தில் யாரோடயும் பேசாம,டிவி பார்க்காம
    பசங்களுக்கு உதவாம,தூங்காம,நடக்காம ஒரு zombie மாதிரி
    கம்ப்யூட்டர்முன்னாடி உட்கார்ந்து !”

    “ஆ.. ஆமாம்”

    “எதுக்கு? நீ மட்டும் ஒரு ப்ளாகர் ன்னு பேர் எடுக்க ?”

    “ஏன் வீட்டிலும் எல்லாரும் ப்ளாக் ஆரம்பிக்கலாமே?”

    “சமையலும் சாப்பாடும் உங்க தாத்தா செய்வாரா? அதுக்காக ஒரு வேளை சோத்தை கட் பண்ணுவியா?”

    “இதெல்லாம்தான் யோசனையா? இதெல்லாம் கவலைடா”

    “கரெக்ட்.. இந்தக் கவலையால இப்ப நீ என்ன முடிவுக்கு வந்தே?”

    “வெறும் பின்னூட்டத்துடன் நிறுத்திக்கலாமான்னு!”

    “இப்பதான் யோசிக்க ஆரம்பிச்சிருக்கே”
    ==================================================
    –மிக நன்றி. ஜவஹர் !!!
    அன்புடன்,
    Ganpat
    (aka)
    இடத்தைக்கொடுத்தால் மடத்தை பிடிப்பவன்!

  4. “அதாவது, குடும்பமே அரை வயிறு சாப்ட்டு, சத்தே இல்லாம, கீக்கிடமா ஒரு வீட்ல இருந்துகிட்டு பஞ்சப் பனாதிகள் மாதிரி, எத்தியோப்பியா ஃபேமிலி மாதிரி இருக்கப் போறிங்க?”

    “ஆ.. ஆமாம்”

    “எதுக்கு? நீ மட்டும் ஜாலியா தினம் கார்ல ஆஃபிஸ் போக?”

    True !!!
    Very nice

  5. ஒரு நடுத்தரவர்க்கத்தின் கனவு ஆசை எல்லாம் காரும் வீடும்தான் ஆனால் இதற்காக இவர்கள் அடையும் கடன்களை கழிக்கவே வாழ்க்கையை கழிக்கிறார்கள் அல்லது மேலும் மேலும் வேலை நுகத்தடியில் சிக்கி கொண்டு ஒரு சூரிய உதயத்தை பார்க்கவோ ஒரு பூவின் நறுமணத்தை உணரவோ முடியாத
    மனநிலைக்கு போய் விடுகிறார்கள்

    வாழ்க்கையில் பகட்டு இருக்கலாம் தவிர்க்கவியலாத போது
    பகட்டே வாழ்க்கையானால் என்ன செய்வது

  6. நல்ல பதிவு. ஆசைக்கும் யோசனைக்கும் தெளிவாக வேறுபடுத்தி கூற நன்றாக ஆசைப்பட்டு யோசனை செய்து எழுதி இருக்கிறீர்கள்.

    1. இல்லை மணவாளன், பொதுவா மீள் பதிவுகள் நான் போடறதில்லை. ஒரே ஒரு தரம் டெஸ்டிங்குக்காக போட்டிருக்கேன். விஜய் கோபால்ஸாமி காமெண்ட் எழுதியிருக்கார்!

  7. நுகர்வு வெறியை வெளிப்படுத்தும் பதிவு. “இருபத்தோறாயிரம் டேக் ஹோம்…” என்றாலும் அவசியத் தேவையிலிருந்து திட்டமிடாமல் “எதையும் அனுபவி” என்கிற மன நிலைக்கு ஆட்பட்டுவிட்டால் இருபத்தோராயிரம் என்ன… இரண்டு இலட்சம் என்றாலும் இதற்கு முடிவில்லை.

  8. அத்தனைக்கும் ஆசைப்படு – ஜக்கி

    ஆசையே அழிவிற்குக் காரணம் – புத்தர்

    ஆசைகளும், வாசனைகளும் எங்கிருந்துபுறப்படுகின்றன என்பதைக் கவனி. அதை அறிந்தால் அங்கே மனம் லீனமாகும். மனம் அழிந்தால் ஆத்மா பிரகாசிக்கும். – ரமணர்

    எந்த ஒன்றுக்கும் கவலைப்படாதே! எதையும் தைரியமாக எதிர் கொள். உனக்குள் இருக்கும் தெய்வீக ஆற்றலை உணர் – சுவாமி விவேகானந்தர்.

    உனக்குள் ஏற்படும் கவலைகளும், வீண் குழப்பங்களுமே உன் ஆன்ம முன்னேற்றத்திற்குத் தடை. அதை அறிந்து விலக்குவாய் – ஸ்ரீ அன்னை.

    ஆசையும் கவலையும் சேர்ந்தால் யோசனை – ஸ்ரீ லஸ்ரீ ஜவஹர்லால் சுவாமிகள்

    ஆசைப்பட்டுக் கொண்டே கவலைப்படுவதா? கவலைப்பட்டுக் கொண்டே ஆசைப்படுவதா? ஆசையோடு கவலைப்பட்டுக் கொண்டே யோசிப்பதா? கவலையோடு ஆசைப்பட்டுக் கொண்டே யோசிப்பதா? யோசித்துக் கொண்டே கவலையோடு ஆசைப்படுவதா? யோசித்துக் கொண்டே ஆசையோடு கவலைப்படுவதா? அதாவது நான் என்ன சொல்ல வர்றேன்னா…
    – குழப்பானந்தா

  9. நன்றி. இதுவரை “இதுமாதிரி” எல்லாம் யோசிக்காதவன் என்பதை உளப்பூர்வமாக ஒப்புக் கொள்கிறேன். மேலும் உங்களது அதிரடி ””வெற்றி” தொடர வாழ்த்துகள்.

    1. ரமணன், நீங்க ஏதோ கடுப்புல பேசிகிட்டு இருக்கிற மாதிரி இருக்கு 🙂 இந்த இடுகைக்கும் ஆன்மிகத்துக்கும் அதிக சம்பந்தமில்லை. எண்ணங்களை ஆசை, கவலை, உபயோகமான யோசனைன்னு பிரிச்சிக் காட்டுகிற முயற்சி, அவ்வளவே. எட்வர்ட் டி போனோவின் திங்கிங் கோர்ஸ் படிச்சதால ஏற்பட்ட பாதிப்பு!

  10. ஆஹா.. நான் சும்மா சீண்டினேன் சார், ஏதோ நம்மால முடிஞ்சதுன்னு. .. மத்தபடி கடுப்புமில்ல… தொடுப்புமில்ல… வயசானதால முழங்கால் மூச்சுப் பிடிப்புதான் இருக்கு. . நீங்கதான் கொஞ்சம் டென்ஷனாயிட்டாப் போலத் தெரியுது. சாரி. 😦

    1. முழங்கால் மூட்டுப் பிடிப்பு என்று வாசிக்கவும். (அதைக் கூட சரியா டைப் பண்ண முடியல. விரல்லாம் தடுமாறுது)

    2. ரமணன், என்னை டென்ஷன் பண்றது ரொம்பக் கஷ்டம். சில விவகாரமான இடுகைகளில் வந்திருக்கும் பின்னூட்டங்களையும் அதற்கு என் ரியாக்‌ஷணையும் பாருங்கள், புரியும்

  11. ஜவஹர் சார்…

    உங்கள் பதிவுகளைப் படிக்கும் போது மனம் ரிலாக்ஸாகிறது. அந்த மூடில் கொஞ்சம் ஜாலியாகப் பின்னூட்டம் போட்டேன். போடுகிறேன். ஒருவேளை விளையாட்டு, வினையாகி விட்டதோ என்னவோ… 😦

    இயற்கை சிலசமயம், சிலபேரை சீரியஸாகவே இருக்கும்படி வைத்திருக்கும் போலும். இயற்கையை மீற நான் யார். நன்றி.

    அன்புடன்
    ரமணன்

Jawahar -க்கு பதில் அளிக்கவும் மறுமொழியை நிராகரி