லோக்பால்-சில சந்தோஷங்கள், சில பயங்கள்

லோக்பால் வெற்றியை எங்கள் தெரு சமூக ஆர்வலர்கள் பாலாஜியும், நாராயணனும் பட்டாஸ் வெடித்து ஃபைனலில் பாகிஸ்தானை இந்தியா ஜெயித்த மாதிரி கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள்.

 நிச்சயமாக இதில் சந்தோஷம் இருக்கிறது.

 ஆனால் இதை வெற்றி என்று வர்ணிப்பதில் எனக்குச் சம்மதமில்லை. இது வெற்றி என்றால் இந்திய அரசியல் சட்டத்துக்குத் தோல்வி என்றாகிறது. அதற்கு அப்புறம் வரலாம்.

 நாட்டின், நாட்டு மக்களின் நன்மையைக் கருதி தைரியமாக, விடாமுயற்சியுடன் குரல் கொடுக்க ஒரு மாமனிதர் கிடைத்திருக்கிறார் என்பது மிகப்பெரிய சந்தோஷம். அவரை ஆஃப் செய்ய அடக்குமுறையிலிருந்து அவதூறுப் பிரச்சாரம் வரை எல்லா முயற்சிகளும் செய்யப்பட்டும் அவை எடுபடாமல் போனது மிக மிகப் பெரிய சந்தோஷம்.

 சாந்திபூஷன் பெயரை ரிப்பேராக்குவதற்கு அரசியல் மாமாக்கள் உதவியுடன் முயற்சி நடந்தது. வெளியிடப்பட்ட ஒலித் தகடு ஜெனூயினானதுதான் என்று லேப்கள் சான்றிதழ் வழங்கும் அளவுக்குப் போனார்கள். அதையும் மக்கள் ஏற்றுக் கொள்ளாதது மிக மிக மிகப் பெரிய சந்தோஷம்.(எதிரிகளுக்கு ஆப்பு வைக்க எலக்ட்ரானிக் மீடியாவை பயன்படுத்தும் ஆபத்தான விஞ்ஞான வளர்ச்சி இந்த நாட்டில் பரவ ஆரம்பித்திருக்கிறது. பொதுநலச் சிந்தை இருக்கும் மின்னணுப் பொறியாளர்கள் இந்த மாதிரி விஷயங்களின் ஜென்யூனிட்டி இன்மையை எவ்விதம் கண்டறியலாம் என்கிற அவேர்னஸைப் பரப்பினால் நல்லது)

 அரசியல்வாதிகளை ஆட்டத்தில் சேர்த்துக் கொள்வதில்லை என்கிற உறுதியைப் பாராட்டியே ஆக வேண்டும். இதனால்தான் லட்சக்கணக்கான மக்களின் நம்பிக்கையைப் பெற முடிந்தது. பள்ளிப் பிள்ளைகள் முதல், ரிடையர் ஆனவர்கள் வரை எல்லாத் தரப்பினரும், நாட்டின் எல்லாப் பகுதிகளிலும் ஆதரவுக் குரல் தந்தது ஒரு சந்தோஷம்.

 ஆங்கில, செய்தித் தொலைக்காட்சிச் சேனல்கள் மிகப்பெரிய சேவை செய்திருக்கின்றன. நாடெங்கும் இந்த நல்ல முயற்சி பரவவும், ஆதரவு பெருகவும் இந்தத் தொலைக் காட்சி நிறுவனங்கள் முக்கிய காரணம். இவைகளின் முயற்சியின்றி இது நடந்திருக்கவே முடியாது என்று கூடச் சொல்வேன். இந்திய சுதந்திரப் போராட்ட காலத்தில் மீடியாக்கள் இவ்வளவு வளர்ச்சி பெற்றிருக்குமேயானால் ஆங்கிலேயர்கள் இருநூறு வருஷம் ஆண்டிருக்க முடியாது என்பது மட்டுமில்லை, இரண்டு வருஷம் கூடத் தாக்குப் பிடித்திருக்க முடியாது என்பது திண்ணம்!

 பிரபல தமிழ் செய்தி சேனல் இதுபற்றி அதிகம் அலட்டிக் கொள்ளாமல் லோக்கல் அரசியலின் குழாயடிச் சண்டைகளை ஒளிபரப்பிக் கொண்டு, படுதோல்விகளின் ஒரத்தில் ஒட்டிக் கொண்டிருக்கும் வெற்றித் துளிகளை வெளிச்சம் பொட்டுக் காட்டிக் கொண்டு, கொலைகாரர்களுக்கு மன்னிப்புக் கோரி உருக்கமாக வேண்டிக்கொண்டு நேரத்தை உபயோகமாகச் செலவு செய்து கொண்டிருந்தது.

 சந்தோஷங்களைச் சொல்லியாகிவிட்டது. இப்போது சில பயங்கள்.

 இவ்வளவு பெரிய ஜனநாயக நாட்டில், ஊழலைக் கட்டுப்படுத்த, இருக்கிற சட்டங்கள் போதாது என்று உலகம் பூரா தமுக்கடித்து அறிவித்த மாதிரி இருக்கிறது. இருக்கிற சட்டங்கள் போல இதுவும் புஸ்வாணமாகிப் போகாது என்பதற்கு என்ன உத்திரவாதம்?

 1. லோக்பால் உறுப்பினர்கள் எல்லாரும் நியமன உறுப்பினர்கள். நியமிக்கும் அதிகாரம் யார் கையில் இருக்கிறதோ அவர்களின் நேர்மையைப் பொறுத்துதான் குழுவின் நேர்மையும் நம்பகத் தன்மையும் அமையும். அந்தப் பொறுப்பில் இருப்பவர்கள் ஆசை காட்டப்பட்டோ, மிரட்டப்பட்டோ, விளம்பரத்துக்கு ஆசைப்பட்டோ தவறான தேர்வுகளைச் செய்ய மாட்டார்கள் என்பது என்ன நிச்சயம்?
 2. உண்ணாவிரதத்துக்கே அரசாங்கத்துடன் பேரத்தில் இறங்கி, பரஸ்பரம் ஒப்புக்கொள்ளப்பட்ட இடத்தில், ஒப்புக்கொள்ளப்பட்ட கால அவகாசம் வரை, ஒப்புக்கொள்ளப்பட்ட எண்ணிக்கைக்கு மட்டும் மக்கள் கூட்டம் சேர்த்து போராடியவர்கள், அரசாங்கத்தின் இதர பேரங்களுக்கும் படிப்படியாக ஒப்புக்கொள்ளமாட்டார்கள் என்பதற்கு என்ன உத்தரவாதம்?
 3. அன்னா ஹஸாரேவும் அவர் ஆதரவாளர்களும், ஆசையினாலோ, மக்களின் வற்புறுத்தலாலோ, அரசியலின் நிலையின்மை காரணமாகவோ, வேறு ஏதாவது நிர்ப்பந்தம் காரணமாகவோ முழுநேர அரசியல்வாதிகளாக மாறமட்டார்கள் என்பதற்கு என்ன உத்திரவாதம்?
 4. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களைவிட, நியமன உறுப்பினர்களுக்கு அதிக அதிகாரம் இருப்பது ஜனநாயகத்துக்கு அச்சுறுத்தலாக, முசோலினி டைப் அரசாங்கம் இங்கே அமைய முன்னோடியாய் அமைந்து விடாதா?

 வழக்கமான Devil’s advocate வேலையைச் செய்துவிட்டேன். Devil க்கு தகுதியான விடை தரும் Angel களின் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.

Advertisements

13 comments

 1. பாஸ் தயவு செய்து நீக எழுதுறத நிறுத்துங்க இல்லனா ஜாக்கி சேகர் லக்கி லூக் கேபிள் ஷங்கர் இவங்க ப்ளாக் படிச்சி பாத்து எழுத கத்துகாங்க ப்ளீஸ் முடியல ரொம்ப பேத்துகிறது

  1. அறிவுரைக்கு நன்றி. அவங்க எல்லார் கிட்டயும் கத்துக்க நிறைய விஷயங்கள் இருக்குதுன்னு நானும் உணர்ந்திருக்கேன். ஆனாலும் நான் நானாத்தான் இருப்பேன் 🙂

 2. //மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களைவிட, நியமன உறுப்பினர்களுக்கு அதிக அதிகாரம் இருப்பது ஜனநாயகத்துக்கு அச்சுறுத்தலாக, முசோலினி டைப் அரசாங்கம் இங்கே அமைய முன்னோடியாய் அமைந்து விடாதா?//

  மக்களால் தேர்ந்து எடுக்கப்பட்டவர்களோ, நியமன உறுப்பினர்களோ யார் நல்லவரோ அவர்கள் கையில் அதிகாரம் இருப்பதே நன்று! இதையும் தான் பார்ப்போமே!

 3. இலஞ்சம் மற்றும் ஊழல் இரண்டுமே ஒழிக்கப்பட வேண்டும் என்பதில் யாருக்கும் இரு வேறு கருத்து இருக்க முடியாது.

  இலஞ்சம் என்பது கிராம நிர்வாக அலுவலரில் தொடங்கி மேல்மட்டம் வரை பொதுமக்களிடம் பெறும் கையூட்டு. எந்த விதிமுறைகளையும் மீறாமல் முறைப்படி ஒரு சான்றிதழ் பெற வேண்டுமானால்கூட கையூட்டு வெட்ட வேண்டும். இல்லை என்றால் காரியம் நடக்காது. அடுத்து அதே போன்றதொரு சான்றிதழை விதிமுறைகளை மீறி பெறவேண்டுமானாலும் கையூட்டு வெட்டியாக வேண்டும். என்ன இதற்கு தொகை கூடுதலாக இருக்கும்.

  ஊழல் என்பது ஒரு திட்டத்தை நிறைவேற்றும் போது ஒப்பந்தத்தைப் பெறுவதற்காகவோ அல்லது ஒருசாராருக்கு சலுகை காட்டுவதற்காகவோ அல்லது திட்டத்தை அறைகுறையாக நிவேற்றியோ அல்லது முழுமையாக நிறைவேற்றாமலேயோ ஒதுக்கப்பட்ட நிதியை ஒரு சிலர் கபளீகரம் செய்து கொள்வது.

  சுருக்கமாகச் சொன்னால் இலஞ்சம் என்பது பெரும்பாலும் சாமான்யர்கள் சம்பந்தப்பட்டது. ஊழல் என்பது மேன்மக்கள் சம்பந்தப்பட்டது. ஆக இரண்டிலும் மக்கள் பணம்தான் கொள்ளை போகிறது. இலஞ்சம் நேரடியாக நாமே கொடுப்பதால் கோபம் கொப்பளிக்கிறது. ஊழல் மக்கள் வரிப்பணமாக இருந்தாலும் அரசாங்கப் பணமாக இருப்பதால் மக்களுக்கு கோபம் இருந்தாலும் அது அவ்வளவாக கொள்பளிப்பதில்லை.

  லோக்பால் கொண்டுவந்தால் இவை எல்லாம் ஒட்டு மொத்தமாக ஒழிக்கப்பட்டுவிடும் என்றுதான் பலரும் நம்பிக் கொண்டிருக்கிறார்கள். இது எப்படி சாத்தியம் என்பதை இதுவரை ஒருவரும் விளக்கவில்லை.

  மொத்தமாக ஒழியாது என்றாலும் ஊழலை ஒழிப்பதற்கான ஒரு நல்ல முயற்சியாக இதை ஏன் பார்க்கக்கூடாது என சிலர் வாதிடுகிறார்கள்.

  ”நோய்நாடி நோய் முதல் நாடி அது தணிக்கும்
  வாய்நாடி வாய்ப்பச் செயல்” என்கிற வள்ளுவனின் வாக்கை எல்லாவற்றிருக்கும் பொருத்த வேண்டும் என்று சொல்கிகிறவர்கள் இதற்கு அவ்வாறு செய்யவில்லை என்பதிலிருந்தே பெரிய அளவில் மாற்றங்கள் எதுவும் நிகழ்ந்து விடாது எண்பதே உண்மை.

  உங்களது கட்டுரையின் முற்பாதி சந்தோசம் நிகழப்போகும் பிற்பாதி சோகத்துக்கு சீல் வைப்பதாக உள்ளதே.! என்ன செய்ய? எனினும் ஒரு சில உண்மைகளையாவது உரைத்தைமைக்கு கொசுரளவு மட்டுமே வாழ்த்துகள்.

 4. வெற்றி என்று வர்ணிப்பதில் எனக்குச் சம்மதமில்லை. இது வெற்றி என்றால் இந்திய அரசியல் சட்டத்துக்குத் தோல்வி என்றாகிறது.

  நல்ல பதிவு.
  மிக்க நன்றி.

 5. பாராளுமன்றம் தீர்த்து இருக்க வேண்டியவிஷயம் என்பதில் யாருக்கும் அயம் இல்லை.நாம் தெருந்தேடுத்து அனுப்பிய பாராளுமன்ற உறுப்பினர்கள்செயவேண்டியவேலை அனால் துரதிஷ்ட்டவசமாக அவர்கள் இதை செய முன்வரவில்லை என்னில் இதில் அவர்களுக்கு பாதிப்பு உள்ளது.அதனால் மக்கள் மன்றம் கட்டாயபடுத்தி செய்து இருக்கிறது.இனிவருங்காலங்களில் இது போன்ற நிலை வாரும் என்றல் தான் ஆரசிய வாதிகள் சிறிது அடக்கி வசிப்பார்கள்என்று நினைக்கிறேன்

 6. //அரசியல்வாதிகளை ஆட்டத்தில் சேர்த்துக் கொள்வதில்லை என்கிற உறுதியைப் பாராட்டியே ஆக வேண்டும். இதனால்தான் லட்சக்கணக்கான மக்களின் நம்பிக்கையைப் பெற முடிந்தது//

  என்ன சார் இது, இவருக்கும் மத்திய அரசுக்கும் தூது போன புண்ணியவான், ஆதர்ஷ் ஊழல் புகழ் விலாஸ்ராவ் தேஷ்முக் என்பதை மறந்திட்டீங்களா?

  இந்தியாவில் ஊழலை எதிர்த்து இதுவரையில் மூன்று போராட்டங்கள் நடைபெற்றிருக்கின்றன. முதலாவது ஜெயபிரகாஷ் நாராயண்; இரண்டாவது வி.பி.சிங்; மூன்றாவது ஹஜாரே! முதல் இரண்டும் தோல்வியில் முடிந்தன. காரணம், தொடர் தீப்பந்தத்தை எடுத்துச் சென்றவர்கள் சொதப்பினார்கள்.

  ஹஜாரேயின் சகாக்கள் இப்போதே அடித்துக் கொள்ளத் தொடங்கி விட்டார்களே? 🙂

 7. ஒரு நாடாளுமன்றத்தை மிரட்டும் அதிகாரம், மமதை இந்த அன்னா ஹசாரேவிற்கு எப்படி வந்தது?
  இந்த நாடகத்தை நடத்துவது யார்?
  தில் இருந்தால் அரசியலில் களம் இறங்கி பெரும்பான்மை பலத்துடன் வெற்றிபெற்று இந்த லோக்பால் என்ன குதிரைப்பால், கழுதைப்பால், ஆட்டுப்பால், ஒட்டகப்பால் என்று எந்த சட்டத்தையும் கொண்டுவரலாமே?

  அன்னா ஹசாரே ஒரு சர்க்கஸ் கோமாளி!

 8. எனக்கு என்னவோ முதல் கோணல் முற்றிலும் கோண்லாகவே படுகிறது.
  சாகும் வரை உண்ணாவிரதம் என்று ஆரம்பித்து, ஏதோ இரண்டு வாரம் சுற்றுலா செல்வது போல நடத்தி, 12 நாட்களில் வெற்றி என்று அறிவித்துவிட்டனர். இவர்கள் கேட்டதை அவர்கள் தருவதாகவும் கூறவில்லை… அவர்கள் முடியாது என்றதில் இவர்கள் எதையும் முடிந்துவிட்டது என்றும் அறிவிக்கவில்லை. ஆனால் போராட்டம்…BORE ஆட்டம் ஆகக்கூடாது என்பதால் “வெற்றி” என்று அறிவித்துவிட்டார்கள்.
  ஊரில் கொலை, கொள்ளை, கற்பழிப்புகள் நடப்பதால், நானும் உண்ணாவிரதம் இருந்து, என் இஷ்டத்துக்கு புது சட்டம் இயற்றி, அதை அரசு எந்தவிதமான ஆட்சேபணையுமின்றி ஒத்துக்கொள்ள வைக்கப்போகிறேன்.
  வருகிறீர்களா நண்பரே?
  NOTE:
  BBC TV & CNN TVக்களோடு பேச்சுவார்த்தை முடிந்துவிட்டது. உள்ளூர் TVக்களுக்கு ஜாம்பஜார் ஜக்குவும் சைதாப்பேட்டை கொக்குவும் SPORNSORSHIPக்கு பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருக்கின்றனர். விரைவில் தேதி அறிவிக்கப்படும்

 9. திரு ஜவஹர்… மக்களை திரட்டும் ஒரு சக்தி அவரிடம் உள்ளது என்பதில் எனக்கும் சந்தோஷம். ஆனால் இந்த லோக்பால் ஒரு பெரிய மாற்றத்தினையும் கொண்டு வராது என்பதில் நான் திண்ணமாக இருக்கிறேன்… காரணம் பிரதமரையும் விசாரிக்கும் சட்டம் எல்லாம் ஏற்க்கனவே இருப்பதுதான் (கொஞ்சம் நடைமுறைகள் அதிகம்). மேலும் எவ்வளவு சட்டங்கள் கொண்டுவந்தாலும் அதை செயல்படுத்தும் நபரை பொறுத்துதான் அதன் வீரியம் இருக்கும். உதாரணம் தேர்தல் கமிஷன்.. அதன் அதிகாரம் எல்லாம் ஏற்க்கனவே இருந்ததுதான்.. ஆனால் அப்படி ஒன்று இருந்ததே டி.என். சேஷன் வந்த பின் தான் வெளியுலகுக்கு தெரிய வந்தது… எனவே செயல்படுத்தும் வீரியம் மற்றும் அதை செயல்படுத்தும் அதிகாரம் படைத்தவர் – இவர்களை பொறுத்துதான் சட்டத்தின் மாண்பு அமையும். ஜன் லோக்பால் என்ன, கன் (துப்பாக்கி) லோக்பால் கொண்டுவந்தால் கூட அதை செயல் படுத்தாமல் இருந்தால்…அது கழிவறை காகிதம்தான்…

  1. சரியார் சொன்னீங்க சந்திரன். நீங்க சொன்ன சேஷன் உதாரணமும் எக்ஸல்லண்ட். இருக்கிற சட்டத்தை உபயோகப் படுத்தத் தெரிஞ்சவன் உபயோகம் பண்ணா ஜகஜாலம் பண்ணலாம். அந்த திறமை இல்லைன்னா எதுவும், எவனும் ஒண்ணும் பண்ண முடியாது என்கிற உங்கள் கருத்து இன்னும் அதிகத் தெளிவைத் தருது. நன்றி, வாழ்த்துக்கள்

எதுவா இருந்தாலும் எழுதுங்க!

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s