கோள் முதல் கோண் வரை

ரிடையர்மெண்ட் பிளானாக வாங்கி வைத்திருக்கும் புத்தகங்களில் பல படிக்கப்படாமல் ரிடையர்மெண்ட்டுக்காகக் காத்திருக்கின்றன. ஆனாலும் குரோம்பேட்டை வாரன் ரீடிங் கிளப்பிலும் நான் மெம்பர்!

 வாரன் ரீடிங் கிளப் என்ற பெயரைப் பார்த்து பிரிட்டிஷ் கவுன்ஸில் மாதிரி ஒரு நூலகத்தைக் கற்பனை செய்து கொள்ளாதீர்கள். நடுத்தர வர்க்கத்து வீடு ஒன்றின் பனிரெண்டுக்குப் பத்து அறைதான் மொத்த நூலகமும். வண்டி வண்டியாக ரமணி சந்திரனும், ராஜேஷ்குமாரும் இருந்தாலும் கொஞ்சம் பொறுமையாகத் தேடினால் என் ஆர்வத்திற்குப் பொருத்தமான சில ரத்தினங்களும் கிடைக்கும்.(இதற்கு அர்த்தம் ரமணி சந்திரனும், ராஜேஷ்குமாரும் குப்பை என்பதல்ல. நூலகங்களில் என் முதல் விருப்பம் புனைவுகள் அல்ல என்பதே)

 போனவாரம் எனக்கு அப்படிக் கிடைத்த ஒரு ரத்தினம், Stephen Hawking எழுதிய A Brief History of Time என்கிற புத்தகம்.

 நல்ல புத்தகம் என்பதற்கு உங்களில் பலர் பல இலக்கணங்கள் வைத்திருப்பீர்கள். என் அகராதியில் (நான் அகராதி பிடித்தவன் என்பதால் அல்ல) என்ன அர்த்தம் என்று சொல்கிறேன். ம்ம்க்க்குக்கூம்….

 முதலில், கூடுமானவரை அது ஒரு நான் ஃபிக்‌ஷனாக இருப்பது நல்லது. அதிக மொழிப் புலமை இல்லாமல் படிக்க முடிகிற புத்தகமாக இருக்க வேண்டும். வாக்கியங்கள், முடிக்கும் போது ஆரம்பம் மறந்து போகிற மாதிரி நீஈஈஈளமாக இருக்கக் கூடாது. (இந்த விதி இந்தப் புத்தகத்துக்கு முழுசாகப் பொருந்தவில்லை : Black holes are one of only a fairly small number of cases in the history of science in which a theory was developed in great detail as a mathematical model  before there was any evidence from observations that it was correct. என்பது நான் தேடி எடுத்த சின்ன வாக்கியங்களில் ஒன்று) இன்னொரு முக்கியத் தகுதி, கொடூரமான கணிதச் சமன்பாடுகளை அவ்வப்போது புகுத்தி பயமுறுத்தாமல் இருப்பது, அல்லது this is evident from theory of relativity and need not be explained any further என்கிற மாதிரி take it granted சமாச்சாரங்கள் இல்லாமல் இருப்பது. மாதநாவல் மாதிரி ஒரே மூச்சில் படித்து முடிக்க முடியாத அளவு யோசிக்க வைப்பதாக இருப்பது. (நாலு நாளில் பத்தொன்பது பக்கம்தான் படித்திருக்கிறேன்)

 இந்தப் புத்தகத்தின் ஆசிரியர் ஆரம்பத்திலேயே கணிதத்தின் துணை இல்லாமல் விளக்கப் போகிறேன் என்று சொல்லிவிட்டார். ஆனாலும் ஈ இஸ் இக்வல் டு எம்ஸி ஸ்கொயர் மட்டும் பயன்படுத்தியிருக்கிறேன் என்று சொல்வது கொஞ்சம் கவலையளிப்பதாக இருக்கிறது.

 பூமி உருண்டை பற்றியும், கிரகங்கள் பற்றியும் படிப்பது சின்ன வயசில் எனக்கு அத்தனை சுவாரஸ்யமான விஷயமாக இல்லை. நிறைய சந்தேகங்கள் வரும்.

 பூமியின் அச்சு இருபத்தி மூணரை டிகிரி சாய்ந்திருக்கிறது என்று படிக்கும் போது அறுபத்தாறரை டிகிரி நிமிர்ந்திருக்கிறது என்று ஏன் சொல்லக் கூடாது என்று கேட்கத் தோன்றும். பஞ்சவர்ணம் டீச்சரிடம் கேட்கப் பயமாக இருக்கும். கேட்டால், சுரீரென்று பிருஷ்டத்தில் பிரம்பால் அடித்து “வெய்யில்ல போய் கொக்குப் பிடி” என்று துரத்தி விடுவார். (கொக்குப் பிடிப்பது என்பது வலக்காலையும் இடக்கையையும் மடித்துப் பின்னுக்கு நீட்டிக் கொண்டு வலக்கையை நாற்பத்தைந்து டிகிரியில் முன் வைத்தபடி நிற்பது. கால் மாற்றினால் மறுபடி சுரீர்.)

 கொஞ்சம் பெரிய வகுப்பில் நிறைய சோலார் சிஸ்டங்கள் இருப்பதாகப் படித்த போது வேறு மாதிரி சந்தேகங்கள் வந்தன. இன்னொரு சூரியன், இன்னொரு சந்திரன், இன்னொரு பூமி என்று இருந்தால் அங்கேயும் ஒரு ஜவஹர் இருந்து கொண்டு இதே போல பாடத்தை கவனிக்காமல் ஆடு மேய்க்கிற பெண்ணை ஜன்னல் வழியாகப் பார்த்துக் கொண்டிருப்பானா? என்கிற சந்தேகம் வரும். ஸ்ரீநிவாசன் வாத்தியார் பஞ்சவர்ணம் டீச்சர் அளவுக்கு ஆபத்தானவர் இல்லை. ஆனால் அவருக்கு நக்கல் அதிகம்.

 “இருக்கலாம்டா. ஆனா எல்லா ஜவஹரும் எல்லா ஸ்ரீநிவாசனும் ஒரே சமயம் பிறந்து ஒரே சமயம் வளர்ரவங்க இல்லை. அங்கே செத்தப்புறம் இங்கே பிறப்பாங்க. எல்லாரும் ஒரு ஜெனரேஷன் அஹெட்டா இருப்பாங்க. நான் அந்த பூமியில பாடம் நடத்தறப்போ இந்தக் கேள்விய நீ கேட்டே, அப்ப செய்யாத ஒண்ணை இப்ப செய்யப் போறேன்.” என்று பிடறியில் தாங்குவார். தொடர்ந்து,

 “பாடத்துல சொன்னதுக்கு மேல யோசிச்சி நேரத்தை வீணாக்காதே. இதுக்கு மேல இருந்தா ஒண்ணு அவங்களே சொல்லியிருப்பாங்க. இல்லைன்னா பதினொண்ணாம் கிளாஸ் பாடத்துல சேர்த்திருப்பாங்க. கடந்த ஒரு நூற்றாண்டுக்குள்ள பிரபஞ்சத்தைப் பத்தி புதுசா எதுவும் கண்டுபிடிக்கல்லை. அவசரமா இன்னும் ஒரு வருஷத்துக்குள்ள கண்டுபிடிக்கப் போறதும் இல்லை. நீ கண்டு பிடிச்சதை பாடத்துல சேர்க்கணும்ன்னா குறைஞ்சது எஸ்.எஸ்.எல்.ஸி யாவது நீ பாஸ் பண்ணியிருக்கணும்” என்பார். (ஆமாம், அப்போதெல்லாம் எஸ்.எஸ்.எல்.ஸியைக் கூடத் தொடாதவர்கள் பாடம் எழுதுவது ஊக்குவிக்கப்பட்டதில்லை)

 பிரபஞ்சம் குறித்து நம் மனதில் எழுகிற எல்லாக் கேள்விகளையும் புத்தகத்தின் முதல் சில பக்கங்களில் கொட்டியிருக்கிறார் ஸ்டீஃபன் ஹாக்கிங். நிச்சயமாக பதில் இருக்கும். புரிகிற பாணியில் இருக்கிறதா என்பதைப் படித்து முடித்த பிறகு எழுதுகிறேன். நல்ல புத்தகங்களின் இன்னொரு அடையாளம் நம்மில் சிந்தனையைத் தூண்டி விடுவது. படிக்க ஆரம்பித்த போது தோன்றின சில சுவாரஸ்யமான சிந்தனைகளை உங்களுடன் பகிர விருப்பம்.

 ‘Why is it that we remember the past but not the future?’ என்று கேள்வி கேட்ட ஒரு குழந்தையின் புத்திசாலித்தனமான அறியாமையை வியந்து ஒரு இடத்தில் ஹாக்கிங் எழுதியிருக்கிறார். இது குறித்து ஃபிலடெல்ஃபியாவிலிருந்து தொலைபேசிய என் மகனுடன் விவாதித்துக் கொண்டிருந்தேன். அவன் சொன்னான்,

 “அது குழந்தையின் அறியாமை என்று அறுதியிட்டுச் சொல்கிற அளவு நம்மிடம் இந்த சந்தர்ப்பத்தில் இன்புட்கள் இல்லை. காலம் என்பது நேர்க்கோட்டில் செல்கிற அளவை என்கிற நம்பிக்கையில் நீ பேசுகிறாய். அப்படி இருந்தால்தான் ஃப்யூச்சர் என்பது இன்னும் சந்தித்திராத நிகழ்வாக இருக்கும். காலம் வட்டமான அளவையாக இருந்தால் எதிர்காலமும் நினைவில் இருப்பதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம்” என்றான். இந்த வாக்கியத்தின் அர்த்தம் புரியுமுன் உரையாடலைத் தொடர்வது என் அறியாமையை வெளிச்சம் போட்டுவிடும் என்பதால், “பாவனாவும் பூஞ்சைதான், தமன்னாவும் பூஞ்சைதான். ஆனா தமன்னாவுக்கு மட்டும் மார்க்கெட் பிச்சிகிட்டுப் போகுதே, ஏன்?” என்று நான் ஸ்ட்ராங்காக இருக்கும் சப்ஜெக்ட்டுக்கு உரையாடலை திசை திருப்ப முயன்றேன்.

 “ஃபோனை அம்மா கிட்ட குடுத்துட்டு நீ போய் தாச்சிக்கோ” என்று வெட்டினான்.

 சாணினும் உளன்; ஓர்தன்மை அணுவினைச் சதகூறிட்ட

கோணினும் உளன்; மாமேருக் குன்றினுமுளன்; இந்நின்ற

தூணினும் உளன்; நீசொன்ன சொல்லினும் உளன்;

இத்தன்மை காணுதி விரைவின்

என்று கம்பர் (கம்ப ராமாயணம், யுத்த காண்டம், இரணியன் வதைப் படலம்) டால்டனுக்கு முன்னாலேயே அணுவை மேலும் பிரிக்க முடியும் என்று சொல்லிவிட்டார், அதற்கு கோண் என்று பெயரும் வைத்து விட்டார். (ஆனால், ஓர்தன்மை அணுவில் என்று ஏன் லிமிடேஷன் வைத்தார்?)அவர் சொல்லாமல் விட்டதை நியூட்டனும், ஐன்ஸ்டினும் உணர்ந்திருக்கிறார்கள்.

 அணுவைச் சதகூறிட்ட கோணில் இருந்தால் பிரபஞ்சத்தின் ஒவ்வொரு ஒன் இண்ட்டு டென் பவர் மைனஸ் ஒருலட்சம் மில்லிமீட்டரிலும்(அணு விஞ்ஞானத்தில் அத்தாரிட்டியாக இருப்பவர்கள் சண்டைக்கு வரவேண்டாம். இது சும்மா ரேண்டமாகச் சொன்னது. எனக்குத் தெரிந்ததெல்லாம் ‘அணு(ஷ்கா)’ விஞ்ஞானம் மட்டுமே!) வியாபித்திருந்தால் பிரபஞ்சமே அவன்தான் என்றுதானே அர்த்தம்?

 சரிதான் இருந்துவிட்டுப் போகட்டும். அவனைக் கும்பிடுவதில் ஏதாவது பிரயோஜனம் உண்டா? என்கிற கேள்விக்கு இந்த நிமிஷத்தில் என்னிடம் தெளிவான விடை இல்லை. கிடைத்ததும் நிச்சயம் எழுதுவேன்.

Advertisements

34 comments

 1. அன்பின் ஜவர்லால் – அருமையான உரை – அலசி ஆய்ந்த பின் எழுதப்பட்ட உடை. நன்று நன்று – பாவனா தம்ன்னா அனுஷ்கா –
  ஃபிலெடெல்ஃபியாவில் இருந்து மகன் தாச்சிக்கோ சொல்றது – குழந்தையின் அறியாமை இல்லை என அறுதியிட்டுச் சொல்வது போன்றவற்றால் படிப்பதற்கு சுவாரஸ்யம் கூடுகிறது. நல்வாழ்த்துகள் – நட்புடன் சீனா

 2. நேரம் பார்த்து நுழைந்து விட்டேன்…
  கோண் சைசிங் அருமையாக இருந்தது….நம் சித்தர்களும் அகண்டாகாரத்திற்கு கொடுத்த அதே மதிப்பை, அணுவின் அணுவிற்கும் கொடுத்துள்ளார்கள்…
  எல்லாம் அவன் என்றானபின் ….. அவனருளாளே அவன் தாழ் வணங்குதல் அன்றி வேறொன்றுமில்லை….
  பூஞ்சை…அணுஷ் போன்ற பொது அறிவு விளக்கங்களும் இடையிடையே தொடர….. ஹாக்கின்ஸை பகிர்வை தொடருவீர்கள் என்று நம்புகிறேன்……

 3. கண்டிப்பாகத் தலை சுற்ற வைக்கிறது. அதனால் இது நல்ல புத்தகம் என்று நம்பலாம்.
  நீங்களே எல்லாவற்றையும் படித்து விளக்கமும் எழுதி விடுங்கள்:).

 4. நல்ல துவக்கம். மேலும் எதிர்பார்க்கிறேன். பஞ்ச வர்ணம் டீச்சரும் ஸ்ரீநிவாசன் வாத்தியாரும் உங்களை மட்டுமல்ல எங்களையும், கலக்குகிறார்கள்…

 5. சுவையான anecodotesடன் எழுதியிருக்கிறீர்கள்.

  mmm..இந்தப் புத்தகத்தில் தான் ஆரம்பிக்கும். அப்புறம் carl saganம் படிச்சிட்டீங்கன்னு வைங்க.. இந்தப் பக்கம் வந்துருவீங்க.

 6. ஒரு சீரியசான விஞ்ஞான கட்டுரையில்
  atomic science+புறநானூறு செய்யுள்+தன சின்ன வயது ஸ்கூல் நினைவுகள்+பிதாகரஸ் தேற்றம்+மண்டோகபநிஷத்+நமீதா,ஷகீலா யாருக்கு பெரீய்ய்ய்ய ….மனது என்ற விவாதம்
  இப்படி ஒரு cocktail பாணி நடை 27/2/2008 யோடு போனது போனதாகவே இருக்கட்டுமே!மற்றவர்கள் அதை பின்பற்றுவது சலிப்பாக உள்ளது.
  No offense please

  1. நோ அஃபென்ஸ் கண்பத், ஏன் சலிப்படையறீங்க? இதைப் படிக்கிறதும் படிக்காததும் உங்க சுதந்திரம். ஷட் டவுன் பண்ணிட்டு, சட்டையை மாட்டிகிட்டு பார்பர் ஷாப் போனீங்கன்னா உங்களுக்குப் பிடிச்ச மாகஸீன்ஸ் இருக்கும். படிங்க. வரும்போது குறும்பூர் குப்புசாமி நாவல்கள் ரெண்டு வாங்கிக்கங்க. சலிப்பில்லாம சுவாரஸ்யமா படிங்க 🙂

 7. உங்களால்தான் சார் விஞ்ஞானத்தை கூட ஹாஸ்யமா சொல்ல முடியும். எல்லாவற்றையும் கலந்து கட்டி எழுதியிருப்பது அருமை. தொடருங்கள். தொடர்கிறோம்.

  வணக்கம்.வாழ்த்துக்கள்.

  1. ஆர்வியெஸ், அது ஆக்சுவலா தி தியரி ஆஃப் எவெரிதிங். அந்தப் புத்தகம் எழுதப்பட்டதில் தனக்கு எந்தத் தொடர்பும் இல்லைன்னு ஸ்டீஃபன் ஹாக்கிங் சொல்லிட்டார். ஆனாலும் அதுவும் ஒரு நல்ல புத்தகம். என் பையன் வாங்கி வெச்சிருக்கான், இன்னும் படிக்கல்லை, ஒரு அவசர மேயல் மட்டும் பண்ணேன் 🙂

 8. Sorry Mr.Jawahar,I think you are hurt by my comments..
  “இதைப் படிக்கிறதும் படிக்காததும் உங்க சுதந்திரம்”. என்ற வாக்கியமே போதும்!என் தவறு என்ன என்று புரிய :(( பதிவு பின்னூட்டம் இரண்டும் ஓசி; இதில் குறை வேறு என்ன கண்டுபிடிப்பது!!)மேலும் என்னைத்தவிர மற்ற அனைவரும் இதை புகழ்ந்திருக்கும்போது,நான் மட்டும் தனியாக நின்றால் எரிச்சல் வரத்தான் செய்யும்.அது என் நோக்கமும் இல்லை.
  இனிமேல் எதாவது பிடித்திருந்தால் அதை சொல்கிறேன்.இல்லையெனில்…மூச்!!
  Sorry once again!

  1. கண்பத் : என் கருத்துக்களுக்கு மாற்றுக் கருத்து இருந்தா நீங்க எப்பவுமே அதைப் பதிவு பண்ணலாம். விவாதிக்கலாம். விவாதங்கள் ஒரு விஷயத்தின் புரிதலை அதிகரிக்கும். படிக்கவே சலிப்புன்னு சொன்னதாலதான் சலிப்பு இல்லாத சொல்யூஷன் சஜஸ்ட் பண்ணேன்.

   1. Thanks Mr.Jawahar..
    நான் பார்த்தவரையில் almost எல்லா ப்ளாக் களும் ரசிகர் மன்றங்களைப்போல செயல் படுகின்றன மாற்று கருத்துக்களுக்கு அங்கு இடமில்லை அவை வரவேறகப்படுவதுமில்லை .almost எல்லா ப்ளாகர்களுக்கும் ஒரே பாலிசி “கம்மினா கம்.கம்மினாட்டி கோ”என்பதுதான்.என்ன,இதையே உங்களைப்போன்றோர்
    “இதைப் படிக்கிறதும் படிக்காததும் உங்க சுதந்திரம்” என சற்று டீஜண்டாக (!) கூறுகின்றனர். ;-))
    A Brief History of Time ,Stephen Hawking சுமார் இருபது ஆண்டுகளுக்கு முன் எழுதிய ஒரு உலக பிரசித்திபெற்ற விஞ்ஞான கட்டுரைத்தொகுப்பு.மிகவும் ஆழமான கருத்துக்களை உள்ளடிக்கியது. (இது கிரோம்பெட்டிற்கு வந்து சேர ‘சற்று’ கால தாமதம் ஆகிவிட்டது போலும்!) இதை நீர்த்துபோகாமல் அப்படியே மொழிபெயர்த்தல் உசிதம் என்ற ஆதங்கத்தில் நான் அவ்வாறு சொன்னேன்.இல்லை நான் நடிகை காந்திமதியைத்தான் title role இல் வைத்து “ஒளவையார்” படம் எடுப்பேன் என்று ஒரு producer விருப்பப்பட்டால்..so be it..

   2. கண்பத், புரியக் கடினமான விஷயங்களை நகைச்சுவை சேர்த்துச் சொல்வது விஷயத்தை நீர்த்துப் போக வைக்கும் என்று நீங்கள் நம்புகிறீர்கள். அதனால்தான் நீர்த்துப் போகாமல் எழுதும் எழுத்தாளர்களை உங்களுக்கு ரெக்கம்மண்ட் செய்தேன். ஸ்டீஃபன் ஹாக்கிங்கை இருபது வருஷம் முன்னாலேயே சூடாகப் படித்துக் கரைத்துக் குடித்து விட்டீர்கள் என்பதைச் சொல்லியிருக்கிறீர்கள். அந்தப் புத்தகத்தைப் படிக்காதவர்களின் சவுகர்யத்திற்காகத்தான் இந்தக் கட்டுரை. அதனால்தான் படிப்பது அல்லது விலகுவது உங்கள் சுதந்திரம் என்றேன். மற்றபடி நீங்கள் பண்போடு சொல்லியிருக்கிற கம்மனாட்டி, மொட்டச்சி, மூதேவி லாஜிக்குகள் எதுவும் அதில் இல்லை. அப்படி இருப்பது டிப்ளமஸியும் இல்லை. அது வெறும் வண்டிமஸியாகத்தான் இருக்கும். காந்திமதி உவமை தப்பு. ஒளவையார் எடுத்தால், தமன்னாவை வைத்துச் செய்வதே என் விருப்பம். ஏனென்றால் ஒளவையார் இளமையையும், அழகையும் தியாகம் செய்தவர் என்கிறன இலக்கியங்கள். அவை, இருபது வருஷம் முன்பு இல்லை, இருநூறுக்கும் மேற்பட்ட வருஷங்களுக்கு முன் எழுதப்பட்டவை. நான் அவைகளை சூடாகப் படித்து விட்டேன் 🙂

 9. @Ganpat
  >>நான் பார்த்தவரையில் almost எல்லா ப்ளாக் களும் ரசிகர் மன்றங்களைப்போல செயல் படுகின்றன மாற்று கருத்துக்களுக்கு அங்கு இடமில்லை அவை வரவேறகப்படுவதுமில்லை .almost எல்லா ப்ளாகர்களுக்கும் ஒரே பாலிசி “கம்மினா கம்.கம்மினாட்டி கோ”என்பதுதான்.என்ன,இதையே உங்களைப்போன்றோர்
  “இதைப் படிக்கிறதும் படிக்காததும் உங்க சுதந்திரம்” என சற்று டீஜண்டாக (!) கூறுகின்றனர். )

  Very well said… I agree with you 100%
  இருந்தாலும் ஜவஹர் குரும்பூர் குப்புசாமியை வம்புக்கு இழுத்திருக்க வேண்டாம் 🙂

  1. ஏன் உப்பிலி, நீர்த்துப் போகாமல் எழுதும் எழுத்தாளர்களை ரெக்கம்மண்ட் செய்வது தப்பா? இந்த பிளாக்கில் எதிர்க் கருத்துக்கள் நிராகரிக்கப் படுவது இல்லை. அவை விவாதிக்கப்படுகின்றன என்பது உங்களுக்குப் புரியவில்லை என்றால் இன்னும் முழுசாகப் படிக்கவில்லை என்று அர்த்தம். தரக் குறைவாகத் திட்டுகிறவர்களுக்கும் அடல்ட் ஈகோவிலிருந்துதான் பதில் சொல்வேன் என்பதை இந்த பிளாக்கை முழுமையாகப் படித்தால் புரியும். காத்திருக்கிறேன்.

   1. அன்புள்ள ஜவஹர்,

    எழுத்துலக ஜாம்பவான் சாவியின் மோதிரக் கையால் குட்டு வாங்கிய உங்களின் பரம ரசிகன் நான். தனிப்பட்ட முறையில் உங்களை நான் எதுவும் குறை கூறவில்லை. நண்பர் Ganpat சொல்வது போல் பெரும்பாலான blog-களில் மாற்றுக் கருத்துக்களுக்கு இடமும் இல்லை. அவை அங்கே வரவேற்கப் படுவதும் இல்லை. உங்கள் மனதைப் புண்படுத்தியிருந்தால் மன்னிக்கவும்.

   2. எந்த பிளாக்குகளில் மாற்றுக் கருத்துக்கள் சரியாக எதிர்கொள்ளப் படவில்லையோ அங்கேயெல்லாம் கூட நான் மாற்றுக் கருத்துக்களைப் பதிவு செய்திருப்பதை நீங்கள் பார்த்திருக்கலாம். மாற்றுக் கருத்து என்றால் என்ன என்பதில் தெளிவும், அதைப் பதிவு செய்யும் விதத்தில் அஸெர்ட்டிவ்னெஸ்ஸும் இருக்க வேண்டும். நீங்கள் என்னைக் குறை கூறியதாக நான் நினைக்கவில்லை. உங்கள் ஆதரவுக்கு நன்றி, தொடரட்டும்.

  2. நன்றி BaalHanumanஜி!
   நாம்(=இந்தியர்கள்)பெரிதும் விரும்புவது பிறரை விமரிசிப்பதை!
   மிக வெறுப்பதோ நம்மை விமரிசிப்பவரை !!
   அப்படி யாராவது செய்தால்,
   அவரை barberic த்தனமாக(ஸ்பெல்லிங் சரிதானே?)
   தாக்கி திருப்தி அடைவதும் நம் வழக்கம்
   .
   After all,
   அப்பாவிகளை பயன்படுத்திக்கொண்டு,
   முட்டாள்களை ரசித்துக்கொண்டு,
   புத்திசாலிகளைக்கண்டு பயந்து,
   கயவர்களைக்கண்டு ஒதுங்கி,
   ஏழைகளை வெறுத்து,
   செல்வந்தர்களை பூஜித்து
   சுயநலமிக்க போலி வாழ்க்கை
   வாழ்பவர்கள் தானே நாம்!

 10. Thanks Mr.Jawahar..
  உங்களுடைய முதல் பதில் நீங்கள் ஒரு குரும்பூர் குப்புசாமி ரசிகர் என புரியவைத்தது..இரண்டாவது (இன்றைய) பதிலோ நீங்கள் ஒரு “கன்னித்தீவு”ரசிகர் என காட்டுகிறது.
  இதற்கு மேலும் கீழே போக வழியில்லை.தரை தடுக்கும்.எனவே
  போட்டியை நிறுத்திக்கொள்ளலாமா?
  (முக்கியமாக “இன்று” உங்களை மேலும் கண்பத்தை திட்டவைத்து அந்த பாவத்தை சுமக்க நான் தயாரில்லை! எனவே ..)
  வணக்கம்

  oh sorry ஒரு ஸ்மைலி போடவேண்டுமே!!
  :-))

 11. ஜவஹர் சார், நான் மேலே பரங்கியர் பாஷையில் பறைஞ்னது மனசிலாயில்லோ, பின்னெ என்டே வூட்டான்டே தான் வரணும்னு விளிக்கின்னது.

  http://www.solaiyooran.blogspot.com/
  http://www.simplyfutureperfect.blogspot.com/
  http://www.singaisivas.wordpress.com/

 12. சமீபத்தில் நான் முகனூலில் எழுதியது:

  நியூட்டனின் மூன்றாம் விதி…

  தமிழ் பாட நூல்களில் தவறாமல் இடம் பெறும் ஒரு பாடம் பண்டைக்கால அறிவியல் தலைப்பை ஒட்டியதாக இருக்கும். தமிழர்கள் அந்தக் காலத்திலேயே பல அறிவியல் நுணுக்கங்க்களை அறிந்து வைத்திருந்தனர் என்பதாகவே அந்தப் பாடம் போகும்…

  அதற்கு எல்லோரும் சொல்லும் உதாரணம் அணுவைப் பற்றிய அறிவு. (அணு என்றவுடன் சுகுணா சிக்கன் விரும்பிக் சாப்பிடும் அணுஹாசன் பத்தி நினைத்து என் பேரைக் கெடுக்க்க வேண்டாம்.)

  நான் குறிப்பிடும் அணு சின்ன…சின்ன..துகள் தான்.

  திருக்குறளைப் பத்தி புகழ்ந்து பாடும் போது ஒரு கவிஞர்… உணர்சி வஸப்பட்டு (வாலியும் வைர முத்துவும் கலைஞரை பாராட்டுவது போல்) கடுகைத் துளைத்து ஏழ் கடலைப் புகுத்தி குறுகத் தரித்த குறள் என்கிறார்.

  அதுக்கு அப்புறம் வந்தவரோ…

  அதுக்கும் கொஞ்ச்சம் மேலே போய்…. அணுவைத் துளைத்து ஏழ்கடலைப் புகுத்தி குறுகத் தரித்த குறள் என்று ஒரே போடாகப் போடுகிறார்…. இது அந்தக் காலத்தில் அணு பற்றிய அறிவு இருந்ததாய் அறிஞர்கள் கூறும் ஆதாரங்கள்..

  இதற்கு முன்னர் கொஞ்சம் எடிசன் பத்தியும் கொஞ்சம் சின்ன தகவல் அறிந்து விட்டு தொடர்வோம்…

  இந்த எடிஸனை அவங்க ஸ்கூல் டீச்சர் மொதோ நாளே அவங்க அம்மாவைப் கூப்பிட்டு, இவன் இதுக்கெல்லாம சரிப்பட்டு வரமாட்டான் என்று கூட்டிப் பொகஸ் சொல்லி விட்டார்கள். ஸ்கூல் டீச்சரே தேராத கேஸு என்று கைவிட்ட அந்த குழந்தை இல்லை என்றால் உலகமே இருண்டு கிடந்திருக்கும்…

  நியூட்டன் பார்வை கொஞ்சம் வித்தியாசமானது. ஆப்பிள் விழுகிறது மரத்திலிருந்து…அதுக்கும் முன்னரும் பலர் அதை பாத்திருக்கிறாங்க… அவங்க பார்வையில் இந்த நியூட்டனின் மூளையில் உதித்த கேள்வி எல்லாம் வரலையே???

  என் பையன் கேக்கும் கேள்வி… அந்த நியூட்டன் தலையிலே ஆப்பிளுக்குப் பதிலா…ஆப்பிள மரம் விழுந்திருந்தா… நமக்கு இந்த விதிகள் படிக்கும் விதி வந்திருக்காது… ம்..அவனவன் கவலை..அவனவனுக்கு…

  என் பார்வையில் நியூட்டனின் விதிகள்… குறிப்பாக மூன்றாம் விதியினை அறிந்திருக்கும் ஆதாரங்கள் இருக்குமா?? கேள்வியோடு கொட்டவியும் வந்தது…

  அப்படியே தூக்கம் வந்திடுச்சி…

  கனவில் வந்தார் கம்பர்… (கனவிலுமா???)

  என்ன என்ன்வோ..நியூட்டன் விதி..எல்லாம் பொலம்பிட்டே இருந்தே..என்னது அது..

  அது ஒன்னும் இல்லை கம்பர் சார்… உங்களுக்கு தெரியாத சங்கதி…நீங்க போங்க..நானு தூங்குறேன்..

  அடேய் பொடிப்பயலே… எனக்கே தெரியாத சங்கதியா… என்ன சமாச்சாரம் சொல்லு மொதல்லே…

  நியூட்டனின் மூணாம் விதி… ஒவ்வொரு விசைக்கும் அதற்கு சமமான எதிர்விசை உண்டு…இது தான் சாமி…குட் நைட். கம்பராஜா…

  ஹலோ..இதை நான் ராமாயணத்திலே எழுதியிருக்கேனே….. வாலி சுக்ரீவன் கூட சண்டை போட இறங்கும் சமயத்தில் நான் இந்த நியூட்டன் விதியை நியூட்டன் கண்டுபிடிக்கும் முன்பே எழுதி இருக்கேன்….

  கனவு கலைந்தது…

  ஓடிப் போய் இராமாயணம் தேடினேன்… அட…அப்படித்தான் இருக்கு… நீங்களும் பாருங்களேன்..

  ஊழி முடிவில் வரும் அலையின் விசை ஒத்து சுக்ரீவனை அழைக்க வாலி எழுந்தானாம். அந்த விவையால் அந்த கிஷ்கிந்தா மலையே கீழே சென்றதாம். மேலும் தோள்களை உதறிய போது எழுந்த காற்றால் அந்த மலையின் பக்கத்தில் உள்ள மலைகள் எல்லாம் இடம் பெயர்ந்தனவாம்… நியூட்டன் விதி மாதிரி இல்லே????

  எழுந்தனன் வல் விரைந்து இறுதி ஊழியில்
  கொழுந்திரைக் கடல் கிளர்ந்தனைய கொள்கையான்
  அழுந்தியது அக் கிரி அருகில் மால் வரை
  விழுந்தன தோள்புடை விசித்த காற்றினே..

  கம்பன் ஆய்வுகள் இன்னும் வரும்.

எதுவா இருந்தாலும் எழுதுங்க!

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s