லேகியச் சித்தர்கள்

அரிமா, கரிமா, லகுமா என்று நக்மா நீங்கலான எட்டு சித்திகள் பற்றிப் படிக்கும் போதெல்லாம் சித்தர்கள் பற்றி நிறையத் தெரிந்து கொள்ளும் ஆசை எனக்கு வரும்.

 சித்தர்கள் பற்றி ஆதாரமில்லாத ஆச்சரியக் குறிப்புகள் நிறைய இருக்கின்றன. அந்தக் காலத்தில் மட்டுமில்லை, இப்போதும் கூட அவ்வப்போது அந்த மாதிரி ஆச்சரியங்கள் வெளியாகின்றன. சதுரகிரியில் கட்டை விரல் சைஸில் ஒரு சித்தர் தண்ணீரில் குதித்து விளையாடிக் கொண்டிருந்தார் என்கிறார்கள்; திருவண்ணாமலையில் ராக்கெட் மாதிரி நெட்டுக் குத்தலாகப் புறப்பட்ட சித்தர் பற்றி யு-டியூபில் படம் போட்டார்கள்.

 சித்தர்களின் ரசவாதம் சுவாரஸ்யத்தைத் தூண்டும் சப்ஜெக்ட். அதில் இரண்டு ரகம். மலிவான உலோகங்களைத் தங்கமாக்கும் தந்திரம் ஒன்று. பாதரசத்தைக் கட்டுகிறேன், கட்டி பரசிவத்தி மணி, நாதவேதை மணி, குரங்கு மணி சிரங்கு மணி என்று நுற்றியெட்டு விதமான மணிகள் செய்வேன் என்று அலையும் கூட்டம் ஒன்று.

 உலோகத் தோற்றமும், திரவ நிலையும் ஒன்றாய் அமைந்த பாதரசம் நெடுங்காலம் மக்களுக்கு ஒரு ஆச்சரியமாகவும், கொஞ்சம் அச்சமாகவும் இருந்திருக்கிறது. ரோமானியர்கள் பாதரசத்தைக் கடவுளாக வழிபட்டிருக்கிறார்கள்.

 இரும்பைத் தவிர அநேகமாய் மீதி எல்லா உலோகங்களுடனும் பாதரசம் கிரியை புரிந்து திடப் பொருளாக அமால்கம் தரக் கூடியது என்பது சித்தர் காலத்தில் தெரிந்திருக்க நியாயமில்லை. அதிலும் சோடியம், பொட்டாசியம், கால்சியம் போன்ற கார-உலோகங்கள் அவற்றின் வர்ஜின் ஃபார்மில் இருப்பதில்லை. ஆகவே பார்வைக்கு உலோகமாக அவை தென் படா. ஹைட்ராக்ஸைட் ரூபத்திலிருக்கும் போது பாதரசத்துடன் அவைகளைச் சூடு படுத்தி கிடைத்த அமால்கத்தைப் பார்த்து பாதரசத்தைக் கட்டிவிட்டேன் என்று அவர்கள் மகிழ்ந்திருக்கலாம்.

இந்தக் குரங்குமணி, சிரங்குமணி, குள்ளமணிகள் எல்லாம் என்னென்னவோ ஜாலக்குகள் செய்ய வல்லவை என்று ஆயிரம், எண்ணூறு என்று விற்கிறார்கள். என்னிடம் கூட இப்படியெல்லாம் சொல்லி அன்பளிப்பாக ஒருத்தர் கொடுத்த பாதரச லிங்கம்(!) இருக்கிறது. அதற்கு அபிஷேகம் செய்து அதை அருந்தினால் சர்வரோக நிவாரணம் என்கிறார்கள். வர்ஜின் மெர்க்குரி என்றால் வயிற்றுக்குள் போனதும் கழிச்சல் பிய்த்துக் கொள்ளும். மெர்க்குரி பாய்சன் என்பது என்னவெல்லாம் கொடுமைகள் செய்யவல்லது என்று இணையத்தில் பாருங்கள். எனக்கு எந்த அபூர்வ சக்தியும் கிடைக்கவில்லை. தெருவில் குப்பை கொட்டுகிறவர்களை நிறுத்த வைக்கிற சக்தியோ, போர்ட்டிக்கோவில் தினமும் அசிங்கம் பண்ணும் நாயை அடக்குகிற சக்தியோ கூட அதற்கு இல்லை.

 இரண்டு நாட்களுக்கு முன்னால் தனக்குத் தானே சித்தர் பட்டம் சூட்டிக் கொண்டு மேற்சொன்ன மணிகளை மானுஃபேக்ச்சரிங் செய்யும் ஒரு ஆசாமியைப் பார்த்தோம். ஓடுகள் எல்லாம் பிரிந்து சகலமும் சிதிலமாக இருக்கும் ஒரு வீட்டில் (அல்லது கோயிலா?) இருக்கிறார். தண்டாயுதபாணிக்கு கற்பூரம் காட்டி, தட்டில் எவ்வளவு போட்டாலும் சந்தோஷமாக ஏற்றுக் கொள்கிறார். தண்டாயுதபாணியின் காலடியில் இருக்கும் சிவலிங்கம் நவபாஷாணத்தில் ஆனது என்கிறார். (பழனியிலேயே நவபாஷாணத்தைச் சுரண்டி காலி செய்தாகி விட்டது என்கிறார்கள், இவரை எப்படி விட்டு வைப்பார்கள்?)

 காவி வேஷ்டியும், கிழிசல் பனியனும் அணிந்து முகம் பூரா தாடியோடு இருந்தார். கொஞ்ச காலம் அரசுப் பேருந்தில் ஓட்டுனராக இருந்தாராம். ரொம்ப எளிதாகப் புரிகிற ஒரு சித்தர் பாட்டுக்கும், மாணிக்கவாசகர் பாட்டுக்கும் தப்பாக அர்த்தம் சொல்கிறார். ஓவராலாக அவர் லாங்வேஜ் ரோட்டில் லேகியம் விற்பவர் போல இருக்கிறது. (”இது சிவபெருமானோட விந்து”) ’அஷ்ட சித்திகள் உங்களுக்கு இருக்கா?’ என்று கேட்டதற்கு,

 “அதெல்லாம் இருக்கும்ங்க, நா எத்தையும் வெளில காம்ச்சிக்கிறது இல்லை” என்றார்.

 ஊரெல்லாம் கூடி ஒலிக்க அழுதிட்டுப்

பேரினை நீக்கிப் பிணமென்று பேரிட்டுச்

சூரையங் காட்டிடைக் கொண்டுபோய்ச் சுட்டிட்டு

நீரினில் மூழ்கி நினைப் பழிந்தார்களே

 என்று வாழ்வின் அநித்யத்தை வெடுக்கென்று சொன்ன திருமூலர் மாதிரி சித்தர்களின் பேருக்குத் தீராத களங்கம் இந்த லேகியச் சித்தர்கள்.

Advertisements

12 comments

 1. ஜவகர் சாமி. எனக்கொரு உண்மை தெரிஞ்சாகணும் சாமி.
  “அரிமா, கரிமா, லகுமா என்று எட்டு சித்திகள்ன்னு” சொல்லி இருக்கீங்க. அப்படின்னா அரிபா, கரிபா, லகுபா என்று எட்டு சித்தப்பாக்களும் இருக்காங்களா? அப்படி அஷ்ட சித்தப்பாக்களும் வாய்க்கப் பெற்றவங்களை எப்படிக் கூப்டனும்?

  அஷ்ட சித்தி இருந்தா சித்தர்கள். அஷ்ட சித்தப்பா இருந்தா சித்திகள்?

  எனக்கு ஒர்ர்ர்ரே குழப்பமா இருக்கு. நீங்க ரொம்ப ஓவரா சிந்தனையத் தூண்டி விடறீங்க :)))

 2. போலி சித்தர் பதிவு பொழுதுபோக்க இருக்கு, நல்ல சித்தர் யை அறிமுகம் செய்திருக்கலாம்.
  நக்மா பற்றி பதிவு வா இருந்தலும், பழச இருந்தாலும்
  ப( பு)டிக்க நல்ல இருந்திருக்கும் !!!

 3. தகுதியான மனிதர்களிடம் மட்டும் தான் சித்தர்கள் புலப்படுவார்கலாம். நீங்க எதில் தகுதியான மனிதர் என்று தெரியவில்லை , லேகிய சித்தர்களிடம் மாட்டிக் கொள்கிறீர்கள். ஒரே காமெடி. 😉

  சித்தர்கள் ராஜ்யம் ( http://siththarkal.blogspot.com/) என்று ஒரு பதிவர் தளம் இருக்கிறது. அங்கே சென்றால் சித்தக் கடலில் நீந்தலாம்.

 4. “அமால்கத்தைப் பார்த்து பாதரசத்தைக் கட்டிவிட்டேன் என்று அவர்கள் மகிழ்ந்திருக்கலாம்.”

  என் சாதாரண காமாலைக் கண்ணுக்கு (புத்தகத்தில் மஞ்சள், பேச்சில் பச்சை, காட்சியில் அல்லது நீட்சியில் நீலம் என்று பலான கண்ணல்ல, முப்பரிமாணத்தில் விளிப்பதற்கு!!) மேற்சொன்ன வார்த்தைகள் இப்படி முதலில் பட்டது, மன்னிக்கவும்:

  அமலா பாலை பாஸ்கருக்கு கட்டிவைத்துவிட்டார்கள்.

  ஒரு நிமிடம் ஆடிப்போய்விட்டேன், பாஸ்கர் யாருப்பா அதுன்னு? நம்ம ஆர்யாவோ என்று தோன்றியது (அவர் நடித்த பாஸ் என்கிற பாஸ்கரன் நினைவில் வந்தால் நான் பொறுப்பல்ல!).

  ஆர்யாவா, அமலா பாலுக்கு என்னாச்சு? (இலங்கை) பூஜாவின் வாழ்க்கையில் விளக்கேற்ற் ஆர்யா தயாரானோரோ இல்லையோ அமலா ஏன் எரி எண்ணெய் ஊற்ற வேண்டும்? என்று சில நேரம் யோசிக்க வைத்துவிட்டது. தோன்றியது, எழுதிவிட்டேன். மேலும் கலாய்க்க முடிந்தால் பின்னர் மீண்டு வருவேன்.

 5. சித்தர்களை லேகியச் சித்தர்கள் என்று சொலவதையும்,ரச வாதம் என்பதை போலி என்று சொல்வதையும் நான் கண்டிக்கிறேன்.உங்களுக்கு ஞானம் என்பது உண்மையிலேயே இல்லை என்பதையே இது காட்டுகிறது.அனைத்தும் பொய் என்பது உண்மையிலேயே உங்களுக்கு தெரியுமா???தெரியாத ஒன்றைப் பற்றி உங்களுக்கு தெரியாது என்றால் அமைதியாய் இருங்கள்.வீணாய் சித்தர்களின் சாபத்தைப் பெறாதீர்கள்.சித்தர்களின் சக்தி அறியாதவர்கள் நீங்கள்.நான் உங்கள் மொத்த கருத்துக்களையும் வன்மையாகக் கண்டிக்கிறேன்
  மிக்க நன்றி
  என்றென்றும் பேரன்பினால்
  சாமீ அழகப்பன்

  1. எனதன்பு சாமிஅழகப்ப சித்தரே, சித்தர்களே போலி என்றா எழுதியிருக்கிறேன்? திருமூலர் மாதிரி சித்தர்கள் வாழ்ந்த நாட்டில் இந்த மாதிரி லேகியச் சித்தர்களும் இருக்கிறார்கள் என்று எழுதியிருக்கிறேன்.

 6. அமல்கத்தை பார்த்து பாதரசத்தை கட்டி விட்டதாக நினைத்து இருக்கலாம். மிகவும் தவறான கருத்து. லேகிய சித்தர்களை நீங்கள் தாராளமாய் பகடி செய்யலாம், ஆனால் மனித குலம் தழைக்க மகத்தான சேவைகள் செய்த சித்த பெருமக்களை, பரிபாஷைகள் மூலம் தவறான நபரின் கைகளுக்கு அவை சேராமல் பாதுகாத்து பொக்கிஷமாக வைத்திருக்கும் தன்மையை கேலி செய்ய வேண்டாம். போலிகளை நன்றாக வெளுத்து வாங்குங்கள். ஆனால் உண்மையை குறைத்து மதிப்பிட வேண்டாம்.

எதுவா இருந்தாலும் எழுதுங்க!

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s