மார்கெட்டிங் என்றால் என்ன?

ஓஸி என்கிற வார்த்தை என்ன மொழி?

பார்க்க ஆங்கிலம் போலத் தெரிந்தாலும் ஆங்கில அகராதியில் அப்படி ஒரு வார்த்தை இருக்கிறதா என்பது எனக்குத் தெரியாது. ஒரு வேளை ஆன் காண்ட்ராக்ட் அல்லது ஆன் காம்ப்ளிமெண்ட் என்பதன் சுருக்கமான வெளிப்பாடாக இருக்கலாம்.

ஓஸி வாங்குகிறவர்களிடம் ஒரு அசாத்யமான மார்கெட்டிங் திறமை இருப்பதை கவனித்திருக்கிறீர்களா? என்னடா, ஓஸி என்றால் வாங்குவது மார்க்கெட்டிங் என்றால் விற்பதாயிற்றே, முரண்பாடாக இருக்கிறதே என்று பார்க்கிறீர்களா? சேல்ஸ் என்றால் பொருளை விற்பது, மார்கெட்டிங் என்றால் ஐடியாவை விற்பது என்று சொல்வார்கள். கொஞ்சம் கவனியுங்கள். புரியும்.

நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்பதை ஒரு ஷணம் விடாமல் கவனித்துக் கொண்டே இருப்பார்கள். சுவர் தாண்டி நீங்கள் ஐந்தாறு டெஸிபல் லெவலில் பேசுவது கூட அவர்களுக்கு துல்லியமாகக் கேட்கும். ‘சின்னஞ்சிறு கிளியே’ என்று பலஹீனமாக முணகினால் போதும், வேலையைப் போட்டது போட்டபடி அப்படியே வந்தது போல கையில் கரண்டியுடன் வருவார்கள். வந்ததும் வராததுமாக,

“கொல்லைப் பக்கம் தண்ணி இழுக்கும் போது பாட்டுச் சத்தம் கேட்டதே, புதுசா டேப்ரிகார்டு வாங்கியிருக்கீங்களோ?” என்று கேட்பார்கள். உறுத்தாமல் ஃபிளாட்டரி செய்வதில் சமர்த்தர்கள்!

“என்ன பாட்டு, சின்னஞ்சிறு கிளியேவா?”

“அதேதான், ஆயிரம் சொல்லுங்க வசந்த கோகிலம் வசந்த கோகிலம்தான். இந்த மாதிரி வேறே யாரால பாட முடியும்..” இந்த இடம் முக்கியமானது. நவராத்திரி சமயம் என்றால்தான் இந்த பிட் செல்லுபடியாகும். தலையைச் சாய்த்துக் கொண்டு நீங்கள் பாட ஆரம்பித்ததும் சுண்டல் வாணாவைக் கொண்டு வந்து விடுவார்கள் என்றாலும், மனதுக்குள் பெரிய்ய என்.ஸி. வசந்த கோகிலம் என்கிற நினைப்பு உங்களுக்கு இருப்பதை எப்படியோ மோப்பம் பிடித்து விடுவார்கள்..

“வசந்த கோகிலமா.. அடக் கடவுளே நாந்தான் பாத்திரம் தேய்க்கிறப்ப பாடிகிட்டு இருந்தேன்”

“சும்மாவாவது திருவிளையாடல் சிவாஜி மாதிரி ஜோக் அடிக்கக் கூடாது.. நிஜமாவே நீங்களா?”

“பின்னே.. டேப் ரிகார்டாவது கிராம ஃபோனாவது.. ஒரு டிரான்ஸிஸ்டர் வாங்கித் தரச் சொல்லி கேட்டுண்டே இருக்கேன். நா என்ன லார்ட் மௌண்ட்பேட்டனான்னு கேக்கறார்”

“பாட்டு கத்துகிட்டீங்களோ?”

இந்த இடத்தில் உங்கள் மதர்ப்பு கண்டிப்பாக வெளிப்பட்டே தீரும்.

“சரளி, ஜெண்ட்ட வரிசையோட சரி. கீதம் கூடத் தாண்டல்லை”

“அடேங்கப்பா.. அதுக்கே இப்படின்னா கத்துகிட்டிருந்தா என்ன ஆயிருக்கும்? எல்லாரும் வசந்த கோகிலத்தைப் பார்த்து உங்களை மாதிரி பாடறதா சொல்லிண்டிருப்பாங்களே”

பேச்சு இப்படியே ஒரு இரண்டு நிமிஷம் போகும். பிறகு திடீரென்று,

“அடக் கடவுளே ஸ்டவ்வுல வெந்நீரை வெச்சிட்டு அப்படியே வந்துட்டேன். பக்கத்துக் கடைக்குப் போய் காபிப் பொடி வாங்கிண்டு வர அவருக்கு ஒரு மணி நேரம் ஆறது. வழியில யாரைப் பார்த்தாலும் ஊர்க்கதை பூரா பேசிப்ட்டுத்தான் வருவார். போய் ஸ்டவ்வை ஆஃப் பண்ணிப்ட்டு அவர் வந்ததும் பத்த வெச்சிக்கறேன்” என்று புறப்படுவார்கள்.

குறிப்பிடப்பட்ட ’அவர்’ வேட்டி போன போக்கு தெரியாமல் வீட்டில் தூங்கிக் கொண்டிருப்பது உங்களுக்குத் தெரிந்திருக்க நியாயமில்லை. நீங்கள் இருக்கும் ‘குளிர்ச்சியில்’ ஸ்பாண்டேனியஸாக என்ன செய்வீர்கள்?

“நல்லா இருக்கு. அதுக்காக ஸ்டவ்வை ஆஃப் பண்ணுவானேன். கரண்டியை இப்படிக் குடுங்க.” என்று வாங்கிப் போய் ஒரு கரண்டி காபிப் பொடியை எடுத்து வந்து கொடுப்பீர்களா மாட்டீர்களா?

அவருடைய ஐடியா விற்பனை ஆயிற்றா இல்லையா?

இது மாதிரி ஆட்களை சமாளிக்க சில வழிகள் உள்ளன. அதெல்லாம் மார்க்கெட்டிங் லெவலைத் தாண்டி பிஸினஸ் மேனேஜ்மெண்ட் லெவல் ஐடியாக்கள். அவைகளை விரைவில் வேறு இடுகையில் பார்ப்போம்.

15 comments

 1. அண்ணா, இதெல்லாம் உங்ககிட்டே நடக்குமா? உங்களை மாதிரி புகழ்ச்சிக்கு மயங்காதவர்கள் இந்த லோகத்துலேயே இல்லையாக்கும் !!

  ஆமாம், என் வேலை என்ன ஆச்சி??
  அன்புடன்
  சீமாச்சு

 2. //இது மாதிரி ஆட்களை சமாளிக்க சில வழிகள் உள்ளன. அதெல்லாம் மார்க்கெட்டிங் லெவலைத் தாண்டி பிஸினஸ் மேனேஜ்மெண்ட் லெவல் ஐடியாக்கள். அவைகளை விரைவில் வேறு இடுகையில் பார்ப்போம்.//

  எதிர்பார்க்கிறேன்!

 3. // பார்க்க ஆங்கிலம் போலத் தெரிந்தாலும் ஆங்கில அகராதியில் அப்படி ஒரு வார்த்தை இருக்கிறதா என்பது எனக்குத் தெரியாது//

  உண்மையாக உங்களுக்கு OC என்ற சொல்லாடல் எப்படி வந்தது என்று தெரியாதா? இந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சியின் போது கிழக்கிந்திய கம்பெனி தபால் மீது ஸ்டாம்ப் ஒட்டாமல் O.C.S என்று முத்திரை குத்தி விட்டால் இலவசமாக மெயில் டெலிவரி செய்யப்படும் என்று எங்கோ படித்திருக்கிறேன். O.C.S என்பதன் விரிவு On Company Service என்றும் அதுவே OC என்று பழக்கத்தில் வந்து இலவசமாக என்பதை குறிப்பதாகவும் கேள்விப்பட்டிருக்கிறேன்.

 4. நான் சொல்ல வந்தேன், அதற்குள் நண்பர் கே.எஸ் சொல்லிவிட்டார். நன்றி .
  கே.எஸ் : //எங்கோ படித்திருக்கிறேன்//, ஆனந்த விகடனில் மதன் பதில் அளித்திருந்தார்.

 5. நிஜம் தான். நாம் முன்னெச்சரிக்கையாக ஏமாறக் கூடாது என்று நினைத்தாலும் வந்த காரியத்தைச் சாதித்து விடுவார்கள்.
  நல்ல பதிவு. நன்றி.

 6. //குறிப்பிடப்பட்ட ’அவர்’ வேட்டி போன போக்கு தெரியாமல் வீட்டில் தூங்கிக் கொண்டிருப்பது உங்களுக்குத் தெரிந்திருக்க நியாயமில்லை// சுஜாதா டச்…

  மற்றபடி சொல்வதற்கு ஒன்றுமில்லை..

 7. ஓஸி என்கிற வார்த்தை என்ன மொழி?

  பார்க்க ஆங்கிலம் போலத் தெரிந்தாலும் ஆங்கில அகராதியில் அப்படி ஒரு வார்த்தை இருக்கிறதா என்பது எனக்குத் தெரியாது. ஒரு வேளை ஆன் காண்ட்ராக்ட் அல்லது ஆன் காம்ப்ளிமெண்ட் என்பதன் சுருக்கமான வெளிப்பாடாக இருக்கலாம்.”

  ஆங்கிலம் தான்.

  பிரிட்டிஷ்காரர்கள் நம்நாட்டை ஆண்டபோது அவர்கள் அனுப்பும் கடிதங்களின் மேல் ஸ்டாம்ப் ஒட்டாமல் “O C S “(On Company Service ) என்று முத்திரை போட்டு அனுப்புவார்கள். O C S
  இல் போகிறது என்றால் ஸ்டாம்ப் ஒட்டாமல் சும்மா போகிறது. நாளடைவில் அது சுருங்கி OC இல் போகிறது என்று ஆனது. பிறகு சும்மா (பணம் கொடுக்காமல்) வரும் எல்லாவற்றுக்கும் OC
  இல் வருகிறது என்று ஆகிவிட்டது. (அப்பாடா! ரொம்ப நாட்களாக யாரவது கேட்க மாட்டார்களா என்று இருந்தேன்!).

  நட்புடன்,
  கணேசன்.
  பி. கு :இப்போதுதான் முதல் முறையாக உங்கள் வலைத்தளம் வந்தேன். உங்கள் பதிவுகள் அருமை.

எதுவா இருந்தாலும் எழுதுங்க!

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s