ஜட்(கா) விமானங்கள்

ஜட்கா வண்டிப் பயணம் என்கிற த்ரில்லிங் அனுபவம் இப்போதெல்லாம் கிடைக்கிறதில்லை.

வெளியூர் போய்விட்டு நாகப்பட்டினம் ஸ்டேஷனில் வந்து இறங்கும் போதெல்லாம் அந்த த்ரில்லை எதிர்நோக்கி ரத்தம் சில்லிடும். மணிக்கூண்டு அருகில் வரிசையாக வண்டிகள் நிற்கும். குதிரைகள் பல தினுசு. முதலாவது தேசிங்குராஜன் குதிரை போல பளீர் வெண்மைக் குதிரைகள். வாட்ட சாட்டமாக உயரமாக இருக்கும். சரோஜா தேவி கூந்தல் மாதிரி கொத்தாகத் தொங்கும் வால். இந்தக் குதிரைகள் கணைத்தாலே வேட்டி அவிழ்ந்து விடும், அந்த அளவு வீரமான அரேபியக் குதிரைகள். வண்டியும் பளபளவென்று பெயிண்ட் அடித்து, ஃபர்ஸ்ட் கிளாஸ் ரயில் சீட் போல காயர் மெத்தையுடன், க்ளிங் க்ளிங் என்று சுழற்றி அடிக்கிற மணியுடன் அட்டகாசமாக இருக்கும். இம்ப்பாலா கார் மாதிரி லீஃப் ஸ்ப்ரிங்கெல்லாம் கூட இருக்கும். ஆனால் இவர்கள் ஒரு ரூபாய்க்குக் குறைந்து வர மாட்டார்கள். ஒரு ரூபாய் என்பது பெரிய காசு அப்போது. இருபது இட்டிலி வாங்கலாம், அல்லது ஆறு தோசை ஒரு காபி சாப்பிடலாம்.

அடுத்தது சுமார் உயர பழுப்பு நிறக் குதிரைகள். இவையும் நன்றாகப் புல்லும் கொள்ளும் சாப்பிட்டு ஆரோக்யமாகவே இருக்கும். வண்டியில் லீஃப் ஸ்ப்ரிங், குஷன் சீட் மாதிரி உச்சநிலை ஆடம்பரங்கள் இருக்காது. ஆனாலும் இவர்களும் முக்கால் ரூபாய் கேட்பார்கள். ம்ம்ஹூம். முக்கால் ரூபாயும் ஹை மிடில் கிளாஸ் ரேட்.

அடுத்தது கொரடாச்சேரி குதிரைகள். இது இடுகுறிப் பெயரா காரணப் பெயரா என்பது தெரியாது. உண்மையில் கொரடாச்சேரி குதிரைக்கு பெயர் போன ஊரெல்லாம் கிடையாது. இந்தக் குதிரைகள் பார்க்க எத்தியோப்பியா பொதுஜனம் போல இருக்கும். விலா எலும்பெல்லாம் எக்ஸ்-ரே எடுத்தது போல பளிச்சென்று தெரியும். கடிவாளமெல்லாம் லூசாகி காட்ராக்ட் வந்தது போல கண் வெளிறி இருக்கும். சற்றைக்கொருதரம் அது விடுகிற சூடான மூச்சில் ரோடில் கிடக்கும் சாணியெல்லாம் வரட்டியாகி விடும். ஹாய்.. ஹூய்… அய்ன்ன்ன்ங்… என்று வினோத ஓசைகள் எழுப்பி, பிற்சேர்க்கையாக தஞ்சை மாவட்டத்து கெட்ட வார்த்தைத் திட்டு திட்டினால்தான் நகரவே ஆரம்பிக்கும். அதை ஒரு ஃபர்லாங் நடக்க வைப்பதற்குள் வண்டிக்காரருக்கு தாலி அறுந்து விடும்.

ஒவ்வொரு விதக் குதிரையின் ஆரோக்யமும், சம்பந்தப்பட்ட வண்டிக்காரரின் ஆரோக்யமும் நேர் விகிதத்தில் இருக்கும். கொரடாச்சேரி குதிரை வண்டியோட்டி தயிர்வடை தேசிகன் போலவும், தேசிங்குராஜன் குதிரையின் ஓட்டி மதன் மித்ரா விளம்பரத்து மாடல் போலவும் இருப்பார்கள். குதிரைகளின் ஆரோக்யம் இந்தியப் பொருளாதாரம் போலத்தான். தேசிங்குராஜன் ரகம் நிறைய சம்பாதித்து, நிறைய தின்று கொழுத்துக் கொண்டே போகும். கொரடாச்சேரி ஜாதி சம்பாத்யமும் இல்லாமல் சாப்பாடும் இல்லாமல் மேன்மேலும் பலஹீனம் ஆகிக் கொண்டே போகும்.

மூன்றாம் ரக வண்டிகளில் எட்டணாவுக்கு பேரம் படிந்து விடும். பரப்பின புல்லின் மேல் விரித்த கோரைப் பாய்தான் சீட். ஆம்பிளைகள் முன் பக்கம் உட்கார வேண்டும். ஜட்கா வண்டியில் முன்பக்கம் உட்கார்வது காளமேகம் பாடிய யமகண்டத்தை விட ரிஸ்கான செயல். குதிரை சண்டித்தனம் பண்ணும் போது பேலன்ஸ் தவறி நாம் சாக்கடையில் விழ வேண்டியிருக்கும்.

இன்னொரு ரிஸ்க்கும் உண்டு. வண்டிக்காரர் முன் பக்கத்தை அழுத்திக் கொண்டு ‘ம்ம்.. ஏறுங்க’ என்று சொல்லும் போதுதான் ஏற வேண்டும். என் அக்கா பையன் ஒரு ராட்சஸன். ஒருதரம் அவன் வண்டிக்காரர் பீடி இழுத்துக் கொண்டிருக்கும் போதே தொம்மென்று குதித்து ஏறிவிட்டான். பச்சக்கென்று வண்டி நெட்டுக் குத்தலாகத் தூக்கிக் கொண்டது. குதிரை தூக்கில் தொங்கி முழி பிதுங்கியது. வண்டிக்காரர் ஒரு பக்கமும் என் சகோதரர் ஒரு பக்கமுமாகத் தொங்கி சமநிலைக்குக் கொண்டு வந்தார்கள்.

ஜட்கா வண்டித் தொழில் நசித்துப் போனதும் தொடர்புடைய லாடம் அடிக்கும் தொழிலும் காணாமல் போய்விட்டது. புத்தம் புது லாடம் அடித்துக் கொண்ட குதிரைகள் ராத்திரியில் ஓடும் போது கால்களிலிருந்து ஸ்பார்க் வருவதைப் பார்த்து பிரமித்திருக்கிறேன். ரோட்டில் நடக்கும் போது ஆங்காங்கே கழற்றிப் போட்ட பழைய லாடங்கள் கிடக்கும். விஞ்ஞானப் பாடத்தில் லாட காந்தம் என்று படிக்கும் போது காந்தத்தின் வடிவத்தை டக்கென்று புரிந்து கொள்வோம்.

இந்தக் காலப் பாடப் புத்தகங்களிலும் அந்தப் பிரயோகம் இருக்கிறதா? குழந்தைகளுக்கு லாடம் என்றால் என்ன என்று தெரிகிறதா? குழந்தைகளுக்குப் பாடம் சொல்லித் தருகிறவர்கள் பின்னூட்டவும்.

Advertisements

24 comments

 1. மாயவரத்துல மாட்டு வண்டிகள் அதிகம். குதிரை வண்டிகள் 7-8 அவ்வப்போது நாராயண பிள்ளை சந்து முனையில் பார்க்கலாம். மணிக்கூண்டு தாண்டி வரும் போதே, நாராயண பிள்ளை சந்து முனைக்கான குதிரை சாண வாசனை கமகமக்கும் :0 நீங்க சொன்ன மாதிரி, சில மாட்டு வண்டிகளில் வைக்கோல் மெத்தை மீது விரித்தது தான் பாய். சமயத்தில் அந்த வைக்கோல் மாட்டுக்கு டிஃபனாகவும் பயன்படும்..

  எங்க காலத்துல ஒரு ரூபாய்க்கு 10 இட்லி தான். நீங்க சொல்ற 20 இட்லி கணக்கைப் பார்த்தால் நீங்கள் அவுரங்கசீஃப் காலத்தவர் என்று வரலாற்று ஆசிரியர்கள் எளிதாகக் கணிக்கலாம் 🙂

 2. //வண்டிக்காரர் முன் பக்கத்தை அழுத்திக் கொண்டு ‘ம்ம்.. ஏறுங்க’ என்று சொல்லும் போதுதான் ஏற வேண்டும். என் அக்கா பையன் ஒரு ராட்சஸன். ஒருதரம் அவன் வண்டிக்காரர் பீடி இழுத்துக் கொண்டிருக்கும் போதே தொம்மென்று குதித்து ஏறிவிட்டான். பச்சக்கென்று வண்டி நெட்டுக் குத்தலாகத் தூக்கிக் கொண்டது. குதிரை தூக்கில் தொங்கி முழி பிதுங்கியது. வண்டிக்காரர் ஒரு பக்கமும் என் சகோதரர் ஒரு பக்கமுமாகத் தொங்கி சமநிலைக்குக் கொண்டு வந்தார்கள்// hilariouss! rofl!

 3. பழநிக்கு போகும்போதெல்லாம் குதிரை வண்டி சவாரி தான்! பஸ் ஸ்டாண்டிலிருந்து அடிவாரம் வரை குதிரை வண்டி பிடிப்பார்கள். அந்த வினோதமான வாசனையும், சத்தமும், அனுபவமும் – What a nostalgia!
  நீங்கள் சொல்கிற மாதிரி அதில் ஏறி உட்காரும் வரை ரொம்ப பயம். ஏறும் போது வண்டி 180 டிகிரி கீழே போகுமே! ”வண்டிச்சத்தம்“ என்ற பிரயோகம் கூட குதிரைவண்டியில் இருந்து தான் வந்திருக்குமோ? மாட்டு வண்டி வாடகைக்கு ஓடிக்கொண்டி இருந்ததாக எனக்கு நினைவில்லை. 😀

 4. எங்க காலத்துல ஒரு ரூபாய்க்கு 10 இட்லி தான். நீங்க சொல்ற 20 இட்லி கணக்கைப் பார்த்தால் நீங்கள் அவுரங்கசீஃப் காலத்தவர் என்று வரலாற்று ஆசிரியர்கள் எளிதாகக் கணிக்கலாம் // சீமாச்சு அண்ணா, எங்க தலையை இப்படி தாறுமாறாக ஓட்டுவதை நான் வன்மையாக கண்டிக்கின்றேன் 🙂

 5. என்னுடைய தகப்பனார், அந்தக் காலத்தில் அலுவலக சம்பந்தமாக, டூர் சென்ற காலங்களில், ரயில்வே ஸ்டேஷனுக்கு செல்ல குதிரை வண்டிச் சத்தம் இரண்டணா / மூன்றணா – வவுச்சர் ஃபார்ம் ஜவுளிக்கடை முதலாளியிடம் சப்மிட் செய்து வாங்கியது ஞாபகம் வருகிறது.

 6. // ஜட்கா வண்டிப் பயணம் என்கிற த்ரில்லிங் அனுபவம் இப்போதெல்லாம் கிடைக்கிறதில்லை//

  உண்மைதான். பல வருடங்களுக்கு முன் ஜட்கா வண்டிகள் தமிழ் நாட்டில் காணாமல் போன பிறகு கூட மைசூருக்கு டூர் போன போது ஜட்கா வண்டிப் பயணம் வாய்த்தது.
  மைசூரில் இன்றும் ஜட்கா வண்டிப் பயணம் செய்யலாம் என்று நினைக்கிறேன். இந்த விடியோ பார்க்கவும். http://www.youtube.com/watch?v=2OOTPVMZ1fM

 7. படிக்க சுவாரசியமாக இருந்தது! உங்களிடம் இது போல் நகைச்சுவைப் பதிவுகையே அதிகம் எதிர்பார்க்கிறேன்.

 8. அந்த தஞ்சை மாவட்டத்து கெட்ட வார்த்தை…..

  அதே நாகப்பட்டினத்தில் என்னுடைய அம்ம்மா அம்மப்பா ஃபேமிலி குதிரை வண்டியில் ஏறி ரெண்டு கிலோ மீட்டர் முன்னாடி இருக்கிற ஊருக்கு போறதுக்கு ஏறி ரெண்டு கிலோ மீட்டர் பின்னாடி இருக்கிற ஊர்ல கொண்டுபோய் இறக்கிட்டுது ந்னு சொல்லக் கேள்விப்பட்டிருக்கிறேன்.

  உண்மையா சார்? குதிரைக்கு ரிவர்ஸ் கியர் உண்டா?

 9. குதிரை வண்டிகளுடன் மாட்டு வண்டிகளும் பவனி வரும் நாகையில் . மாடுகள் செழுமையாக இருந்தாலும் அவை மெதுவாக நடை போடுவதால் எங்கள் வோட்டு குதிரை வண்டிக்கே . இரண்டு அரை கிலோமீட்டர் தூரத்துக்கு ஒன்றரை கிலோமீட்டர் நடந்து சென்று வண்டி பிடித்துகொண்டு ரயில் நிலையமோ அல்லது பாண்டியன்(பேபி ) தியட்டருக்கு சென்ற காலம் கண்முன் நிற்கிறது.!!

  1. சீமாச்சு கவனிக்கவும். பாண்டியன் லாக்கீஸை பேபி தியேட்டர் என்று சொல்கிறார். சரித்திர ஆராய்ச்சியாளர்கள் இவரைப் பார்த்து என்ன சொல்வார்கள்? :))

   1. ஜவஹர் ஐயா, ரங்கநாதன் சொல்ற விஷயமெல்லாம் பார்த்தால் அவர் மாமன்னர் அக்பர் காலத்தவர் என்று வரலாற்று ஆசிரியர்கள் துல்லியமாகக் குறிக்கலாம்..

 10. ===>அடுத்தது கொரடாச்சேரி குதிரைகள். இது இடுகுறிப் பெயரா காரணப் பெயரா என்பது தெரியாது. உண்மையில் கொரடாச்சேரி குதிரைக்கு பெயர் போன ஊரெல்லாம் கிடையாது<=== இதுக்கு விளக்கம் நேர் நேர் தேமா.. மாதிரி ரொம்ப ஸிம்பிள் (என நினைக்கிறேன்). குதிரையே இருக்கமுடியாத ஒரு ஊர்ல குதிரை இருந்தா அது எப்படி இருக்கும் (என்பதற்க்காக இருக்குமோ?)..

  இந்தக்கால குழந்தைகளுக்கு "லாடம் கட்டுவது" தெரிந்திருக்கலாம்..(உபயம் சினிமா/சீரியல்கள்).. நான் மாட்டுக்கும் குதிரைக்கும் காலில் லாடம் அடிப்பதை (கால்களை "X" வடிவில் கட்டி) சிறுவயதில் நிறைய பார்த்திருக்கிறேன் (ஆணியின் கொண்டை சதுரமாக இருக்கும்).

  நீங்களும் நாற்பதுகளில்(வயது) இருக்கிறீர்கள் என்பது விலைப்பட்டியல் மூலம் புரிகிறது. எனக்கு நன்றாக நினைவுள்ளது. ஒரு ரூபாய் வைத்துக்கொண்டு பாளையிலிருந்து நெல்லை டவுணுக்கு பஸ்ஸில் சென்று(25பைசா) புதுப்படம் (தரை டிக்கெட்தான்..தரை என்றால் அப்படியே தரையல்ல.. சாய்மானம் இல்லாத நீள பெஞ்சு) பார்த்து (45பைசா) இடைவேளையில் கடலைமிட்டாய் சாப்பிட்டு(5பைசா) பின் பஸ்ஸில் திரும்புவோம்(25பைசா)..சுகமான சுவையான அனுபவங்கள்

 11. இன்று லாடம் கட்டும் தொழில் நசிந்து விட்டது என்று யார் சொன்னது…? போலீஸார் என்ன செய்து கொண்டிருக்கிறார்களாம்…?

 12. 2 mistake

  1 RVS said to Ananya
  Fwd: to seemachuji
  (தலைவர் ஃபோட்டோல எவ்ளோ யங்கா இருக்கார். எழுத்து எவ்ளோ யங்கா இருக்கு……..)

  2 Thala immediate reply(?)
  நேர்ல யங் இல்லையா?
  (he.. he.. hee… NIzam)

  Thala = Albert Einsteen (theriyatha/marantha matter solvathanaaal….)
  or
  = Aiswarya Rai(photogenic??)

  ippa Boominathan இது மாதிரி எதாவது பழங்கஞ்சி இன்னும் இருந்த வந்து கொட்டுங்கோ..

  Totally damage, why Blood …….(thala -same Blood)

எதுவா இருந்தாலும் எழுதுங்க!

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s