ரா. கி. ரங்கராஜன் என்னும் துரோணர்

பள்ளிப் பருவத்தில் தமிழ்வாணன் கதைகளை அடுத்து நான் ரசித்துப் படித்தது ரா.கி. ரங்கராஜன் கதைகள்தான்.

எல்லாமே சுவாரஸ்யமாகத்தான் இருக்கும் என்றாலும் மூவிரண்டு ஏழு, இருபத்தி மூன்றாவது படி, புரஃபஸர் மித்ரா இந்த மூன்றையும் குறிப்பிட்டுச் சொல்லலாம். அதிலும் மூவிரண்டு ஏழு ரொம்ப ஸ்பெஷல்.

சென்னையில் ‘என்னம்மா.. வாம்மா.. போம்மா’ என்று அழைப்பது ஆரம்பித்திருந்த சமயம். கதையில் வரும் தில்லைநாயகம் என்கிற கேரக்டர் கதாநாயகன் சேதுவிடம் பேசும் போது ‘யாரும்மா.. சேதுவாம்மா’ என்கிற மாதிரி பேசுவார். இதை எதற்குச் சொல்கிறேன் என்றால் அன்றைக்கு என்ன டிரெண்ட் என்று கவனித்துக் கொண்டே இருப்பார், அதைக் கதையில் ரொம்ப எளிமையாகப் பயன்படுத்துவார்.

சுஜாதா கதைகளில் கதாநாயகன் ரொம்ப இண்டலக்சுவலாக இருப்பான்; அதனால் ஒரு டிஸ்டன்ஸ் வந்து விடும். நாயகன் நமக்கு எப்போதும் படற்கையாகத்தான் இருப்பான். ஜெயகாந்தன் கதைகளில் நாயகன் பெரிய சிந்தனாவாதியாக இருப்பான். அவன் சமூகத்தின் அபூர்வ சாம்ப்பிளாக இருப்பான். அதனால் ஒரு டிஸ்டன்ஸ் வந்து விடும். தி. ஜானகிராமனின் கதாநாயகர்கள் தஞ்சாவூர் மாவட்டத்து கிராம லெவல் புத்திசாலிகளாக இருப்பார்கள். கர்நாடக சங்கீதம் பாடுவார்கள். தவில்காரரின் தாள நடை பற்றிப் பேசுவார்கள். கிராமத்துக்கே உரித்தான பலவீனங்களும் அவர்களிடம் இருக்கும். ஆகவே அவர்களும் சமூகத்தின் காமன் சாம்ப்பிள் என்று சொல்ல முடியாது.

ரங்கராஜன் கதைகளில் கதாநாயகன் பட்டணத்து நடுத்தர வர்க்க ஆசாமியாக இருப்பான். ரொம்ப சிந்திக்க மாட்டான். இண்டலக்சுவல் இல்லை. வட்டார வழக்கில் பேசுவதில்லை. நாம் அன்றாடம் பார்க்கிற நூற்றுக் கணக்கானவர்களில் ஒருவனாக இருப்பான். ஆகவே அவனோடு ஐக்யமாவது ரொம்ப எளிது. அவன் ஆசைகள், அவன் வெறுப்புக்கள், அவன் காதல் எல்லாம் சட்டென்று உங்களுக்கு ஒட்டிக் கொள்ளும்.

மூவிரண்டு ஏழு கதையின் நாயகன் சேது அப்படிப்பட்ட ஒரு பாத்திரம்தான். அவன் காதலிக்கும் கிருத்திகாவை நீங்களும் காதலிப்பீர்கள். அவளுடைய அக்கா ரஜினி மீது உங்களுக்கும் கோபம் வரும். கிருத்திகா செத்துப் போய் விட்டாள் என்று சேது இடிந்து போகும் போது நீங்களும் இடிந்து போவீர்கள். ஒரு கதையின் வெற்றி அந்தக் கதாநாயகனாக படிக்கிற நாமே மாறிக் கொள்வதுதான். இப்படி உங்களை மாற்றுவதில் ரங்கராஜன் சமர்த்தர்.

இந்தக் கதை தொடர்கதையாக வரும் போது அதை எடுத்து, தைத்து பைண்டிங் செய்தோம் நானும் என் சகோதரரும். எங்கள் கனவு நூலகத்தில் மூன்றாவது புத்தகம் அது. (முதல் இரண்டும் தமிழ்வாணன்!)

சினிமாப் பகுதியில் என்ன பெரிதாக எழுதி விட முடியும் என்று நினைக்காமல் அதையும் புதுமையாகச் செய்தார். வினோத் என்கிற புனைப் பெயரில் குமுதத்தில் சினிமாப் பகுதி எழுதினார். லைட்ஸ் ஆன் என்கிற தலைப்பில் வந்த அந்தப் பகுதியில் ஒவ்வொரு வாரமும் ஒரு சுவாரஸ்யமான ஆங்கில ஃபிரேஸ் எழுதுவார். Devil’s advocate, Talking through the hat என்கிற மாதிரி ஃபிரேஸ்களை நான் தெரிந்து கொண்டதே அதைப் படிக்கிற போதுதான்.

எழுதும் போது ரா.கி. ரங்கராஜன் சொன்ன பல யுக்திகளை நான் கையாள்வதுண்டு. உரையாடல்களில் நகர்த்துவது, தெளிவுதான் உங்கள் ஸ்டைல் என்பது, இனிமேல் ஒரு வார்த்தை கூடக் குறைக்க முடியாது என்கிற அளவுக்கு கச்சிதமாக இருப்பது இப்படி நிறைய.

பொதுவாக யாராவது இறந்து போகும் போது ‘எல்லாருக்கும் ஒருநாள் மரணம் உண்டு’ என்று சமாதானப் படுத்திக் கொள்வோம். வயசாகிப் போச்சு, எல்லாம் பாத்தாச்சு கல்யாண சாவு என்றெல்லாம் சமாதானம் செய்து கொள்வோம். ரொம்பப் பிடித்தவர்கள் மரணம் அடையும் போது அவரை விட அதிக வயதானவர்களுடன் ஒப்பிட்டு அவரெல்லாம் இருக்கிறாரே இவர் இன்னும் கொஞ்ச காலம் இருந்திருக்கக் கூடாதா என்று ஏங்குகிறோம்.

சுஜாதா, ரா. கி. ரங்கராஜன் போன்றவர்கள் இறக்கிற போது எனக்கு அப்படித்தான் இருக்கிறது.

Advertisements

13 comments

 1. அவரது’ நான் கிருஷ்ணா தேவராயன்’. என்ற சரித்திர நாவல் எனக்கு மிகவும் பிடிக்கும்.அவர் எழுதிய சரித்திர நாவல் அது ஒன்றுதான் என்று நினைக்கிறேன்.

 2. கிருஷ்ணகுமார். மாலதி. முள்ரி. துரைசாமி. லலித். மோகினி. வினோத்… அப்பப்பா எத்தனை பெயர்களில் எழுதி முத்திரை பதித்த ஜாம்பவான்! எல்லா சப்ஜெக்ட்டிலும் எழுதிக் குவித்த அவரைப் போன்றவர்களின் மறைவுச் செய்தியைக் கேள்விப் படுகையில் எனக்கும் உங்களின் எண்ணம்தான் நண்பரே.

 3. ரா.கி. ரங்கராஜனின் பெரிய விசிறி நான். நான், கிருஷ்ணதேவராயன் பல தடவை படித்துவிட்டேன். அவரது மறைவு கேட்டதும் மறுபடி படிக்க ஆரம்பித்து இருக்கிறேன்.
  மிகச் சிறப்பாக அஞ்சலி செலுத்தியுள்ளீர்கள்!

 4. பிற்காலத்தில் நான் குமுதத்தில் எழுதத் துவங்கி ஆசிரியர் குழுவுடன் பரிச்சயம் ஏற்பட்டது. அப்போது ‘சூர்யா’ வின் செய்தி என்கிற சிறப்பான சிறுகதைக்கு ஏதோ ஒரு நிறுவனம் பரிசளித்திருந்த செய்தியில் கதையின் ஆசிரியர் ரா.கி.ரங்கராஜன் என்று குறிப்பிட்டிருந்தது. விசாரித்ததில் நான் மேற்சொன்ன அத்தனை எழுத்தாளர்களும் ரங்கராஜன் ஒருவரே என்கிற விவரம் தெரிந்து எனக்கு அப்போது ஏற்பட்ட பிரமிப்பு இன்னும் விலகவில்லை.

 5. அன்பின் ஜவஹர் – அஞ்சலி அருமையான அஞ்சலி – சுஜாதா, ஜெயகாந்தன், ஜானகிராமனின் கதாநாய்கர்களீல் இருந்து ரங்கராஜனின் கதாநாயகன் எவ்வாறு வேறுபடுகிறானென விள்ககியமை நன்று. கதை விம்ர்சனமும் நன்று – நல்வாழ்த்துகள் ஜவஹர் – நட்புடன் சீனா

 6. ரொம்பப் பிடித்தவர்கள் மரணம் அடையும் போது அவரை விட அதிக வயதானவர்களுடன் ஒப்பிட்டு அவரெல்லாம் இருக்கிறாரே இவர் இன்னும் கொஞ்ச காலம் இருந்திருக்கக் கூடாதா என்று ஏங்குகிறோம்.

  சுஜாதா, ரா. கி. ரங்கராஜன் போன்றவர்கள் இறக்கிற போது எனக்கு அப்படித்தான் இருக்கிறது.

  அருமையான பதிவு. நன்றி சார்.

எதுவா இருந்தாலும் எழுதுங்க!

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s