இணையமும் எழுத்துச் சுதந்திரமும்

இணையம் வானளாவிய எழுத்து சுதந்திரம் நிறைந்த இடம் அது அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் வராது என்பதாக ஒரு நம்பிக்கை பலருக்கும் இருப்பதாகத் தோன்றுகிறது.

என்னைப் பொறுத்தவரை இது ஒரு தவறான நம்பிக்கை. அப்படிப்பட்ட ஒரு நம்பிக்கை எப்படி வந்திருக்கும்?

ஒரு காலத்தில் அப்படிப்பட்ட சுதந்திரம் இருந்திருக்கிறது என்பது நிஜம்தான். ஆனால் அது அனுமதிக்கப்பட்ட சுதந்திரமா இல்லையா என்பது எனக்குத் தெரியாது. பெருவாரியானவர்களின் கவனத்துக்கு வராமல் இருந்திருக்கிறது என்பது நிஜம்.

காரணம், இணையம் என்பது ஒரு காலத்தில் Computer Savvy (கணிணி விற்பன்னர்கள்) கள் மட்டுமே உபயோகித்த ஒரு இடம். உபயோகித்தவர்கள் எண்ணிக்கை மிக மிகக் குறைவு. அன்றைக்கு ஈ மெயில் தவிர்த்து கருத்துப் பறிமாற்றத்துக்கு வேறு மேடையே கிடையாது. ஈ மெயில் என்பது ஒன் டு ஒன். அங்கே மிதமிஞ்சிய கட்டுப்பாடுகள் அவசியமில்லை. இரண்டு பேர் நான்கு சுவர்களுக்குள் பேசுவது போன்றது அது.

தகவல் தொழிற்நுட்பம் நிமிஷத்துக்கு நிமிஷம் வளர்ந்து கொண்டிருக்கிறது. இன்றைக்கு இணையத்தை உபயோகிப்பது Computer Savvy (கணிணி விற்பன்னர்கள்) க்கள் மட்டுமில்லை. எல்.கே.ஜி குழந்தைகள் வரை எல்லோரும் உபயோகிக்கிறார்கள். எல்லார் வீட்டிலும் பிராட் பேண்ட் கனெக்‌ஷன் இருக்கிறது. எல்லார் மொபைலிலும் வைஃபை இருக்கிறது. மோடம் இருக்கிறது.

அன்றைக்கு ஈ மெயில் மட்டும்தான் இருந்தது. இன்றைக்கு வலைத் தளங்கள், ட்வீட்டர், ஃபேஸ்புக், மற்றும் இவற்றுக்கு இணையாக எண்ணிலடங்கா பல உரையாடல் மேடைகள் வந்தாகி விட்டது. நாம் எழுதுவதை ஆயிரக் கணக்கானவர்கள் படிக்க முடியும். லட்சம் ஃபாலோயர்கள் உள்ளவர்கள் கூட இருக்கிறார்கள்.

இப்போதும் கருத்துச் சுதந்திரத்திற்கு ஏதும் குறை இருப்பதாகத் தெரியவில்லை. பிரச்சினை, சொல்லும் விதத்தில்தான். அதனால்தான் அதற்காக 2008ம் ஆண்டு ஒரு சட்டமே இயற்றப்பட்டிருக்கிறது. இந்தச் சட்டத்தைப் படித்துப் பார்த்தால், அது சொல்லும் விதிமுறைகளுக்கு உட்பட்டு சவ்வூடு பரவல் பற்றி விவரித்தால் கூட இரண்டு பேர் சண்டைக்கு வரும் வாய்ப்புக்கள் ஏராளம்.

சொல்லும் விதம் எப்படித் தவறாகப் போகிறது என்று பார்ப்போம்.

உரையாடல்கள், விவாதங்கள் எல்லாமே அடிப்படையில் ஒரு Communication Process. எல்லா Communication இலும் ஒரு Communicator, ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட Receiver கள் இருக்கிறார்கள். Receiver களை நன்றாகப் புரிந்து வைத்திருக்க வேண்டியது அவசியம். இல்லையென்றால் ஏகப்பட்ட குழப்பங்கள் வரும். மொழி, அடிப்படை சமாச்சாரம். எதிராளிக்குப் புரியாத மொழியில் பேசும் போது எப்படிப்பட்ட பிரச்சினைகள் எழுகின்றன என்பதைப் பார்த்திருக்கிறேன். சில நகைச்சுவையாக முடியும். சில ரணகளமாக முடியும்.

என் நண்பன் ஒருவன் பார்க்கிறவர்களிடமெல்லாம் ஆங்கிலத்தில் பேசிக் கொண்டு திரிபவன். நாங்கள் வேலை செய்த தொழிற்சாலையின் வாசலில் லஞ்ச் டயத்தில் பழம் சாப்பிடுவது, தம் அடிப்பது, கடலை உருண்டை சாப்பிடுவது எல்லாம் செய்வோம்.

வாழைப்பழம் வாங்கித் தின்ற அவன் கடைக்காரரிடம் அமர்த்தலாக’ ‘Give me one more’ என்றான்.

அவர் ‘என்னங்க?’ என்றார்.

‘One more’ என்றான்.

அவர் ஒரு கிளாஸில் மோரை மொண்டு நீட்டினார்.

இன்னொரு உதாரணம் ரொம்பத் துயரமானது.

ஒரு அதிகாரி தன் கீழ் வேலை பார்க்கும் ஊழியர் ஏதோ கவலையில் நொந்து போய் உட்கார்ந்திருந்ததைப் பார்த்திருக்கிறார். துவண்டிருந்த அவரை நம்பிக்கை அளிக்க வைப்பதற்காக ‘பெஸிமிஸ்ட்டா இருக்காதீங்க’ என்று சொல்லியிருக்கிறார். அவருக்கு அர்த்தம் புரியவில்லை. அந்த அதிகாரியிடமே கேட்டிருக்கலாம். ஏதோ கெட்ட வார்த்தை என்று நினைத்துக் கொண்டாரோ என்னவோ பொசுக்கென்று எழுந்து போய் தன் நண்பர் ஒருவருக்கு ஃபோன் செய்து கேட்டிருக்கிறார். அவர் என்ன விஷயம் எதற்குக் கேட்கிறார் என்பதையெல்லாம் தெரிந்து கொள்ளாமல் நல்லதை நம்பாதவன், சோம்பேறி, எதிர்மறையாக யோசிக்கிறவன் என்றெல்லாம் சொல்ல இவருக்கு மஹா கோபம் வந்து விட்டது.

அவருக்கு ஊக்கம் தருவதற்காகச் சொல்லப்பட்டது என்பதை சுத்தமாக மறந்தார். ‘அதெப்புடி என்னைப் பாத்து அப்படிச் சொல்வே?’ என்று ஆரம்பித்து ’எங்களையெல்லாம் பார்த்தா உனக்கு அப்படி இருக்கா?’ என்று தன் பின்னால் ஒரு கும்பலையும் சேர்த்துக் கொண்டார்.

பெரிய ரகளையாகி மொத்த அலுவலகமும் இரண்டாகப் பிரிந்து வாக்குவாதம், விமர்சனங்கள், தனிநபர்த் தாக்குதல்கள், அவர்களின் பின்னணி பற்றி விமர்சனம் என்று ரணகளமாகி விட்டது.

சொன்னவருக்கு ஏண்டா இவனுக்கு நல்லது பண்ண நினைத்தோம் என்கிற விரக்தி ஏற்பட்டு பல நாட்களுக்கு மனத்தளவில் ரொம்பவும் பாதிக்கப்பட்டிருந்தார்.

இவ்வளவு ரகளைக்கும் காரணம் Communication Gap.

ஆக மொழி விஷயம் இப்படி என்றால் பேசுகிற அல்லது எழுதுகிற நடையும், நாம் தேர்ந்தெடுக்கும் சொற்களும் அடுத்தது.

ஒரு விஷயத்தை எனக்கு நெருக்கமான வட்டத்தில் சொல்லும் போது பல்வேறு விதமாகச் சொல்லலாம். கேட்பவர்கள் யார் என்பதைப் பொறுத்து, கொச்சையான சொற்களில் கூடச் சொல்லலாம். கேட்பவர்கள் என்னை இன் அண்ட் ஔட் தெரிந்தவர்கள். ஆகவே அந்த சொற்களில் vulgarity இருந்தாலும் அது உறைக்காது. அர்த்தம் மட்டுமே போய்ச் சேரும்.

அதையே எனக்கு அதிகம் பழக்கம் இல்லாத, இப்படிப்பட்ட ரீதியில் பேசியும் கேட்டும் இருக்காத ஒருவரிடம் சொன்னால், சொல்லப் படுவது அவர் குறித்த விமர்சனம் அல்ல என்றாலும் அவருக்கு சுருக்கென்று இருக்கும். அவர் அதைப் பண்புக் குறைவாகக் கருதுவார்.

இது மாதிரி சிறிய வட்டத்து மொழிநடைகள் தமிழ் ஆங்கிலம் இரண்டிலும் நிறைய இணையத்தில் இருப்பதைப் பார்க்கிறேன். அந்த மொழிநடை பழகி விட்ட ஒருசாராருக்கு அது Offending ஆக இருப்பதில்லை. அந்த மொழிநடை பழகாதவர்கள் அதை vulgar, offending, derogatory என்று பலவிதத்திலும் பார்க்கிறார்கள். இதை Communication gap, generation gap என்ன சொல்லி வேண்டுமானாலும் அழைத்துக் கொள்ளுங்கள். மொத்தத்தில் Gap இருக்கிறது. Bridge செய்ய வேண்டும்.

உணர்வுப்பூர்வமாக அணுகப்படும் விஷயங்கள் குறித்துப் பேச வயது, அனுபவம், சாதுர்யம், மக்கள் ஆதரவு, மக்களின் நம்பிக்கை எல்லாம் தேவையிருக்கிறது. ஒரு சூடான விவாதத்தின் முடிவில் சிரித்தபடி, கைகுலுக்கியபடி பிரிகிற சாதுர்யம் எல்லாருக்கும் இருப்பதில்லை. இவை இல்லாமல் பேசும்போது தவறுகள் நடக்க ஏராளமான வாய்ப்புகள் இருக்கின்றன.

இதெல்லாம் புரிந்து கொள்ளச் சிரமமானதாக இருந்தால், Wave length match ஆகாதவர்களிடமிருந்து விலகி இருந்து விடுவது சாலச் சிறந்தது.

ஏனென்றால் நாம் உலகைத் திருத்த அவதாரம் செய்தவர்கள் அல்ல. மிகுந்த மனித நேயத்துடனும், சகிப்புத் தன்மையோடும், மக்கள் நலனை மட்டுமே மனதில் கொண்டும் அப்படிச் செய்தவர்களே பழிச் சொல்லுக்கும் தண்டனைக்கும் ஆளானது பல புனித நூல்களில் சான்றாக இருக்கிறது.

நாம் எம்மாத்திரம்?

Advertisements

16 comments

 1. // இதெல்லாம் புரிந்து கொள்ளச் சிரமமானதாக இருந்தால், Wave length match ஆகாதவர்களிடமிருந்து விலகி இருந்து விடுவது சாலச் சிறந்தது.//

  🙂

 2. இதெல்லாம் புரிந்து கொள்ளச் சிரமமானதாக இருந்தால், Wave length match ஆகாதவர்களிடமிருந்து விலகி இருந்து விடுவது சாலச் சிறந்தது.

  ஏனென்றால் நாம் உலகைத் திருத்த அவதாரம் செய்தவர்கள் அல்ல. மிகுந்த மனித நேயத்துடனும், சகிப்புத் தன்மையோடும், மக்கள் நலனை மட்டுமே மனதில் கொண்டும் அப்படிச் செய்தவர்களே பழிச் சொல்லுக்கும் தண்டனைக்கும் ஆளானது பல புனித நூல்களில் சான்றாக இருக்கிறது.

  It is a timely Post. I have shared it in my FaceBook Page. Thank You Sir

 3. அருமையான பதிவு. முறையாக உபயோகித்தால் கருத்து சுதந்திரம் பெரும் மாற்றத்தை உண்டு பண்ண வல்லது. முறைதவறி உபயோகித்தால் அது உபயோகித்தவரையே மறுபடி தாக்க கூடியது. நல்ல வார்த்தைகளில் விளம்பி இருந்தீர்கள். நன்றி.

 4. திண்டுக்கல் தனபாலன் சொன்னது:
  //நல்ல விளக்கம்… இதை அனுபவத்தால் அறிந்து கொள்ள முடியும்…// அனுபவம்னா எப்படிங்க? ஜெயிலுக்குப்போயா?

 5. உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது… வாழ்த்துக்கள்…

  மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2012/11/5.html) சென்று பார்க்கவும்…

  நன்றி…

 6. அன்பின் ஜவஹர் – எழுத்துச் சுதந்திரம், பேச்சுச் சுதந்திரம் இவை எல்லாமே இரு பக்கம் கொண்ட கத்தி போலத்தான். பயன்படுத்தும் போது அதிக எச்சரிக்கை தேவை. மறுபக்கம் இருப்பவரின் குணமறிந்து பயன் படுத்த வேண்டும். ஆனால் இணையத்திலோ விளையாட்டாய்த் துவங்கி வினையாக முடிகிற்து. நல்வாழ்த்துகள் – நட்புடன் சீனா

 7. கருத்துச் சுதந்திரம் என்பதைவிட, உங்கள் கருத்து பலரை சுலபமாக சென்றடைய ஒரு வாய்ப்பு என்பதையும், அதன் நெளிவு சுளிவுகளையும் உணர்ந்து பயன்படுத்தினால் இணையம் ஒரு வரப்பிரசாதம் என்பதில் ஐயமில்லை.

 8. சுதந்திரம் என்பதை பலரும் தவறாக புரிந்து கொள்வதே பல பிரச்சினைகளுக்கும் காரணம். எச்சில் துப்புவது,குப்பை போடுவது நமது ஊரில் சாதாரண விஷயம். ஆனால் இவை பலநாடுகளில் தண்டனைக்குரிய குற்றம். வீட்டிலும், பொது இடங்களிலும் நமது கடமை உணர்ந்து கண்ணியமாக வாழ கட்டுப்பாடான சுதந்திரமே சிறந்தது என்பதை எப்போதும் எல்லோரும் மனதில் கொள்ள வேண்டும். இணையத்தைப் பொறுத்த வரை பிரபலமாக வேண்டும் என நினைத்து பிராப்ளத்தில் மாட்டிக் கொள்கிறவர்கள் நிறைகுடம் மட்டுமல்ல காலிகுடமும் தளும்பாது என்ற உண்மையை உணராத ஆறறிவு அரைக்குடங்கள்.

 9. எந்த இடத்தில் ego clash ஆகிறதோ அங்கே பிரச்சனைதான் என்பதை முதலில் உணரவேண்டும்.
  எனக்கு எல்லாம் தெரியும் நான் யாரைப்பற்றியும் மனம் போன போக்கில் பேசுவேன் என்பதெல்லாம் நல்லதுக்கல்ல என்பதை காலம் புரியவைத்துவிடும்.

எதுவா இருந்தாலும் எழுதுங்க!

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s