செத்துச் செத்து விளையாடலாமா?

கண்ணாடியில் தன்னைப் பார்த்துக் கொண்ட சரோஜாவுக்கு ஆச்சரியம்!

 நிஜமாகவே ஆளை மாற்றித்தான் விட்டிருந்தார்கள்.

 அவசரமாக மேசை இழுப்பறையிலிருந்து தன்னுடைய ஃபோட்டோ ஒன்றை எடுத்துப் பார்த்தாள். சேன்ஸே இல்லை. இது யாரோ நான் யாரோ! பதினைந்து வயது குறைந்திருந்தது மட்டுமில்லை, பிரமிக்க வைக்கிற வசீகரமாக ஆக்கியிருந்தார்கள். திறமைசாலிகள்தான் இந்த பியூட்டி பார்லர்காரர்கள்.

 ‘கடவுளுக்கு நன்றி’ என்று தனக்குள் சொல்லிக் கொண்டு அந்த வாக்கியத்தின் அசாதாரண உண்மையை நினைத்து வியந்து கொண்டாள். நிஜமாகவே கடவுளுக்குத்தான் நன்றி. அவர் கொடுத்த ஆஃபர்தான் இப்படிப்பட்ட மாற்றத்தை அவளுக்கு உண்டாக்கியது. கடவுளாவது ஆஃபராவது என்று நினைப்பீர்கள். சரோஜாவுக்கு நேற்று நடந்தது உங்களுக்குத் தெரியாது.

 அவள் வாழ்க்கையை வெறுத்துப் பதினைந்து வருடங்கள் இருக்கும். காதல், கல்யாணம் என்பதெல்லாம் நடக்க வேண்டிய வயதில் வேறு வேலையாக இருந்து விட்டாள். வயது இன்றைக்கு ஐம்பது. தலையெல்லாம் நரை. முகத்தில் கோடுகள். உடம்பில் முக்கியமான பகுதியெல்லாம் தொள தொளா. முடியெல்லாம் கொட்டிப் போயிருந்தது. சொந்தம் என்று சொல்லிக் கொள்ள யாருமில்லை. நெருக்கமான நண்பர்களும் இல்லை.

 இந்த நிலையில் திடீரென்று ஹார்ட் அட்டாக் வந்து நேற்று அவள் செத்துப் போனாள். அதற்குப் பிறகு நடந்ததுதான் ரொம்ப சுவாரஸ்யம்.

 செத்துப் போய் விட்டோம் என்றே அவளுக்குத் தெரியவில்லை. வழக்கமாகக் கண் விழித்தால் படுக்கையில் படுத்த படி சீலிங் ஃபேனைப் பார்ப்பாள். அன்றைக்கு சீலிங் ஃபேனிலிருந்து படுக்கையில் படுத்திருந்த அவளையே பார்த்தாள். நிஜம்தானா என்று கிள்ளிப் பார்க்க நினைத்தால் கையே இல்லை. கொஞ்சம் கவனித்துப் பார்த்ததில் தானே இல்லை என்பது தெரிந்தது.

 ‘யாராவது வாங்களேன்’ என்று பெருத்த குரலில் அலறினாள்.

 சப்தமே வரவில்லை.

 நிச்சயம் இது கனவுதான் என்று நினைத்துக் கொண்டாள். பல சமயம் கனவில் கத்த நினைத்து சப்தம் வராமல் போவதுண்டு. மறுபடி மறுபடி முயற்சி செய்தால் சப்தமும் வரும் விழிப்பும் வந்து விடும். திரும்பத் திரும்ப முயன்றாள். எத்தனை தரம் முயன்றாலும் சப்தம் வரவில்லை. அது மட்டுமில்லை, ஃபேனுக்கு அருகில் மிதந்து கொண்டிருந்த அவள் தன் கட்டுப்பாடே இல்லாமல் மேலெழும்பிப் பறக்க ஆரம்பித்தாள். இருண்ட குகைப் பாதையில் ரயில் போவது போல வேகமாகப் போக ஆரம்பித்தாள். தூரத்தில் வெளிச்சம் தெரிய ஆரம்பித்து மெல்ல மெல்லப் பெரிதாகி ஒரு ஒளிப் பிரளயத்துக்குள் பிரவேசித்தாள்.

 “நீயா?” என்றது ஒளி. பேச்சின் மாடுலேஷனுக்கு ஏற்றாற்போல் ஒளி கண் சிமிட்டுவது போல இருந்தது.

 “நீயான்னா? என்னை முன்னமே பார்த்தது மாதிரி கேட்கறீங்க?”

 “எனக்கு எல்லாரையும் தெரியும். நீ இங்கே வர வேண்டிய நேரம் இது இல்லையே?”

 “நான் எங்கே வந்தேன்.. அதுவா வந்தது. இது என்ன இடம்?”

 “செத்தப்புறம் வர வேண்டிய இடம்”

 “அப்ப நா செத்துட்டேனா?”

 “இன்னும் இல்லை. பூமியைப் பொறுத்தவரை நீ செத்தாகி விட்டது. அதாவது அங்கிருந்து ரிலீவ் பண்ணிட்டாங்க. இங்கே அக்ஸெப்ட் பண்ணாத்தான் அது சாவுன்னு முடிவாகும்”

 “இல்லைன்னா?”

 “இல்லைன்னா அதை வெறும் NDE அதாவது Near Death Experience ந்னு சொல்வாங்க. பல பேரை அப்படி அக்ஸெப்ட் பண்ணாம அனுப்பியிருக்கோம். உலக அளவில் இது பத்தி மாநாடு நடந்திருக்கு. இந்த வருஷம் மார்ச் 9 – 10 ம்தேதியில் ஃபிரான்ஸ்ல இரண்டாவது மாநாடு இருக்கு. நீ கூடக் கலந்துக்கலாம்”

 “எப்படி? அதான் நான் செத்துட்டேனே?”

 “இல்லை. நான் உன்னை அக்ஸெப்ட் பண்றதா இல்லை. உனக்கு இன்னும் 30 வருஷம் டைம் இருக்கு”

 “ஏற்கனவே வயசு ஐம்பது. என் முகரைக் கட்டையை நீங்க படைச்சிருக்கிற லட்சணத்துக்கு எனக்குக் கல்யாணமே ஆகல்லை. சொந்தம், நட்பு எதுவும் கிடையாது. நான் என்ன கிழிக்கப் போறேன்? பேசாம அக்ஸெப்ட் பண்ணிடுங்க. எனக்கு வாழ்க்கை வெறுத்து பதினஞ்சு வருஷமாச்சு”

 “இல்லை.. நீ இப்ப திரும்பிப் போனதும் ஒரு சுவாரஸ்யமான அனுபவம் காத்திருக்கிறது”

 “இந்த வயசிலா? அவசியமில்லை. என்னை அக்ஸெப்ட் பண்ணிடுங்க”

 “சேன்ஸே இல்லை. உன்னை அக்ஸெப்ட் பண்ணா இன்னும் பல பிரியாரிட்டிக்கள் தள்ளிப் போகும். சிஸ்டம் அஃபெக்ட் ஆகும். பூமியில கட்டுக்கடங்காத குழப்பம் உண்டாகும். நீ போகலாம்”

 “போகலாம்ன்னா? ஏதோ 21G பஸ் பிடிச்சிப் போக முடியும் போல சொல்றீங்களே? வந்ததே நானாக வரவில்லை. எப்படித் திரும்ப மட்டும்……..” என்று சொல்லிக் கொண்டிருந்த சரோஜா மீதியைச் சொல்லும் போது விழித்திருந்தாள்.

 “ஐய்யோ.. பொணம் பேசுது” என்று சிலர் ஓடினார்கள்.

 மொபைலில் பேசிக் கொண்டிருந்த போலீஸ்காரர், “வண்டி தேவையில்ல சார். ஆட்டோவிலயே பாடியை கூட்டிட்டு வந்திடறேன்” என்றார்.

 கதவை உடைத்துக் கொண்டு ஜனங்கள் உள்ளே வந்திருப்பதைப் பார்த்த போது தான் செத்துத்தான் போயிருக்கிறோம் என்பது புரிந்தது. தூக்கம் வரவில்லை என்று ஒன்றுக்கு நாலாக தூக்க மாத்திரை போட்டுக் கொண்டதாகச் சொல்லி சமாளித்தாள். நிஜத்தைச் சொன்னால் நேராக கீழ்ப்பாக்கம் அழைத்துப் போய் விடுவார்கள்.

 பள்ளிக் கூடத்துக்கு ஒருநாள் லீவு போட்டுவிட்டு வெளியே புறப்பட்டாள். எங்கே என்பது தெரியாமலே நடந்தாள். வழியில் ஒரு பியூட்டி பார்லர் இருந்தது. ‘ஒரு மணி நேரம் கொடுங்கள், உங்களைப் பல வருஷங்கள் பின்னால் அனுப்புகிறோம்’ என்று போட்டிருந்தார்கள். ஒரு சபலம் தட்டியது.

 “என்னைக் கூட மாற்ற முடியுமா?” என்று சந்தேகத்துடன் கேட்டாள்.

 “ஏன் முடியாமல்? இது நீங்களே இல்லை, வேறே ஆள் என்கிற மாதிரி மாற்றிக் காட்டுகிறோம்” என்றார்கள். மாற்றித்தான் விட்டார்கள். கண்ணாடியில் வேறு யாரோ போல இருந்தது. ஒரு ஜீன்ஸும் டீ ஷர்ட்டும் போட்டுக் கொண்டால் நன்றாக இருக்கும் போலத் தோன்றியது. வாங்கி போட்டுக் கொண்டாள். கடையிலிருந்து வெளியேறி பத்தடி கூடப் போயிருக்க மாட்டாள். எதிரில் வந்த வசீகர இளைஞன் புன்னகை ஒன்றை உதிர்த்தான்.

“கார்ஜியஸ்” என்றான்.

 சரோஜாவுக்கு தன் காதுகளை நம்ப முடியவில்லை. இருபத்தைந்து வயதில் நடக்காதது இப்போது நடக்கிறது!

 “தேங்க் யூ ஹேண்ட்சம்” என்றாள் தைரியத்தை வரவழைத்துக் கொண்டு.

 “ரியலி?” என்றான் சந்தோஷத்தின் உச்சியில்.

 “ம்ம்ம்ம்” என்று வெட்கமாகச் சிரித்தாள்.

 “என்னை லவ் பன்ணுவீங்களா?” என்றான் நம்பிக்கையே இல்லாமல்.

 “ஏற்கனவே பண்ண ஆரம்பிச்சிட்டேன்” என்றாள்.

 “ஆஹா.. பார்க்கிங்லேர்ந்து என் காரை எடுத்துகிட்டு வர்ரேன். மாயாஜால் போகலாம்” என்றான்.

 புறப்பட்டார்கள்.

 இஸிஆரில் வலது பக்கம் திரும்பும் போது அந்த விபத்து நடந்தது. வலப்புறமிருந்து வந்த லாரி மோதி கார் கூளமாயிற்று. சரோஜாவுக்கு மீண்டும் அதே அனுபவம். தலையில் அடிபட்டு ரோடில் கிடந்த அவளை எலெக்ட்ரிக் போஸ்ட் உச்சியிலிருந்து பார்த்தாள். பறக்க ஆரம்பித்தாள். இருண்ட பாதை.. தூரத்தில் ஒளி.. ஒளிப் பிரளயம். உரையாடல்…… எல்லாம் ஆக்‌ஷன் ரீபிளே ஆயிற்று. மறுபடி செத்து விட்டோம் என்பது புரிந்தது.

 “என்ன முட்டாள்தனமான சிஸ்டம் உங்களுடையது? நேற்றுத்தானே எனக்கு இன்னும் 30 வருஷம் அவகாசம் இருக்கிறது என்றீர்கள்?” வெடித்தாள் ஒளியிடம்.

 “ஓ.. நீயா! தப்பு நடந்து போச்சு”

 “இப்படிச் சொன்னா சரியாயிடுமா? திருப்பி அனுப்புங்க என்னை”

 “முடியாது. ரிஜிஸ்தரில் எண்ட்ரி போட்டாகி விட்டது”

 “அதெல்லாம் எனக்குத் தெரியாது. தப்பு உங்களுடையது. நீங்கள் என்னை அனுப்பத்தான் வேண்டும். நீங்கள் எப்படி இப்படி ஒரு தப்பைச் செய்யலாம்?”

 “தப்பு என்னுடையதல்ல. எம கிங்கரர்களிடம் உன் ஃபோட்டோவைக் கொடுத்து வைத்திருந்தேன். கூட்டி வருவது உன்னை அல்ல என்று நிச்சயித்த பிறகுதான் கூட்டி வந்திருக்கிறார்கள்”

(Joji Valli என்கிற எழுத்தாளர் தன் Grateful Heart என்னும் ஆங்கில நூலில் நிறைய குட்டிக் கதைகள் எழுதியிருக்கிறார். Aging என்கிற ஒரு 12 வரிக் கதையின் சிறுகதை வடிவம் இந்தக் கதை. இதே ஸ்டைலில் அவரது சில கதைகளைத் தேர்ந்தெடுத்து தமிழில் புத்தகமாக வெளியிடும் ஆவல் இருக்கிறது. உங்கள் கருத்துக்கள் பிளீஸ்…..)

Advertisements

22 comments

  1. கேகண்ணன்.. நான் இதைப் படித்தது ஜோஜிவாலியின் புத்தகத்தில்… இது ஒரு செவி வழிக் கதை என்பதும் தெரியும்! 🙂

 1. முடிவு ஊகிக்கும்படி இருந்தாலுமே நன்றாகவே இருக்கிறது. தொடரலாமே. சிறுகதைகளாக அல்லது குறுங்கதைகளாக.
  ஓ ஹென்றி அல்லது ஜெஃப்ரி ஆர்ச்சர் பாணியில் எழுதலாம்.

 2. ரொம்ப சுவாரசியமாகவும், நகைச்சுவையாகவும் இருக்கிறது தலைவா! கண்டிப்பாக புத்தகமாக எழுதுங்கள்! வாழ்த்துக்கள்!

 3. இது போல் இன்னொரு கதை:
  தண்டபாணி தீராத விளையாட்டுப் பிள்ளை. அவன் உயிரைப் பறிக்க வந்த எமதூதன் “ கிளம்பு “ என்றான்.
  “ நான் ஏன் கிளம்பணும்…?”
  “ இதோ பார்… இந்தப் புத்தகத்திலுள்ள லிஸ்ட்டில் உன் பெயர் தான் முதலில் உள்ளது…” தண்டபாணி யோசித்தான்.
  “ தூது தூது… கிளம்ப நான் ரெடி… கொஞ்சம் வாய்க்கு ருசியா சாப்பிட்டுட்டு ரெஸ்ட் எடுத்துக்கிட்டுக் கிளம்பலாமே…” எமதூதனுக்கும் நப்பாசை. சரி என்றான். நம் ஹீரோ, தூதன் சாப்பாட்டில் தூக்க மாத்திரைகளைக் கலந்து, குடிக்க சரக்கும் கொடுத்தான். எமதூதன் ஆழ்ந்த நித்திரைக்குப் போனதும். புத்தகத்தை எடுத்து, லிஸ்ட்டில் முதலில் இருந்த தன் பெயரை அழித்து விட்டு, அதைக் கடைசியில் எழுதிவிட்டான். உறக்கம் கலைந்து புத்துணரச்சியும், பரவசத்துடன் எழுந்த எம தூதன்,
  “ தண்டு… நீ என் நண்பேண்டா… ரொம்ப நாளைக்குப் பிறகு நல்ல சரக்கும் சாப்பாடும் குடுத்ததுக்கு ரொம்ப நன்றி. இதுக்கு கைமாறா என்ன செய்யப் போறேன்னு தெரியல… என்னால முடிஞ்சது, லிஸ்ட்டுல கடைசியிலிருந்து ஆரம்பிக்கிறேன்… ஹாப்பி…?” என்றான்.

 4. எப்டி… இப்டி… நம்மூருக்காரங்க எப்பயுமே கலக்குறாங்களே…வரட்டும் கதைப்புத்தகத்தை வாங்கிப்படிக்க நான் தயார்.

எதுவா இருந்தாலும் எழுதுங்க!

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s