ராமகிருஷ்ணரும் பெர்முடா டிரையாங்கிளும்

அமானுஷ்யமான விஷயங்கள் குறித்து எதையாவது கிளப்பி விட்டுக் கொண்டே இருப்பதில் நம் ஜனங்களுக்கு ஒரு அலாதி திருப்தி உண்டு.

ரோட்டில் போய்க் கொண்டிருந்த போது தலையில் தேங்காய் விழுந்தது என்பார்கள். சுவற்றில் காயப் போட்ட வேட்டி தீப்பிடித்து எரிந்தது என்பார்கள். திண்ணையில் வந்து உட்கார்ந்த பேய் கொட்டைப் பாக்கு கேட்டது என்பார்கள். கொஞ்ச காலம் ஆனதும் விஞ்ஞானம் கலந்த கதைகள் விட ஆரம்பித்தார்கள். அறுபதுகளில் பறக்கும் தட்டுக் கதைகள் அடிக்கடி வந்தன.

கொஞ்ச காலம் ஏதுமில்லாமல் இருந்தது.

கொஞ்ச நாள் முன்பு திருவண்ணாமலையில் ஒரு ஆள் திடீரென்று சிவகாசி ராக்கெட் மாதிரி நெட்டுக் குத்தலாகக் கிளம்பிப் பறந்தார் என்றார்கள். சதுரகிரியில் தாஜ்மஹால் பீடி சைஸில் இருந்த ஒரு சித்தர் பாறையிலிருந்து தண்ணீரில் குதித்துக் குதித்து விளையாடியதாகச் சொன்னார்கள்.

இந்தக் கிளப்பி விடுகிற திரில் நமக்கு மட்டும்தானா? உலகின் மிகப் பெரிய புரளியான பெர்மூடா டிரயாங்கிள் அமெரிக்கர்களின் கிளப்பி விடல்தானே? அது குறித்து நிறையப் படிக்கும் ஆர்வம் ரொம்ப காலமாய் எனக்கு உண்டு. இப்போதுதான் நேரமும், சந்தர்ப்பமும் கிடைத்தது.

வட அட்லாண்ட்டிக் கடலில் பெர்மூடா என்று ஒரு தீவுக் கூட்டம் இருக்கிறது. 1505ம் ஆண்டு ஸ்பெய்ன் கப்பல் கேப்டன் ஜுவான் டீ பெர்மூடஸ் என்கிறவர்தான் முதன் முதலாக இதைக் கண்டு பிடித்தவர். அவருடைய பெயரே தீவுக்கு வைக்கப்பட்டது. இந்த பெர்மூடாவை ஒரு முனையாகவும், ப்யுயெர்ட்டோ ரிக்கோவை ஒரு முனையாகவும்,      மெக்ஸிகோ வளைகுடாவின் ஃப்ளோரிடாவை ஒரு முனையாகவும் வைத்து வரையப்பட்ட கற்பனை முக்கோணம்தான் பெர்முடா டிரையாங்கிள்.

Bermuda_TriangleJ

1945 தொடங்கி இந்தப் பகுதி வழியாகப் போன பல கப்பல்களும் விமானங்களும் காக்கா ஓஷ் ஆகிவிட்டதாகக் கதைகள் நிறைய உண்டு. இந்தக் காக்கா ஓஷ்களில் அமெரிக்கக் கடற்படையின் போர் விமானம் ஃப்ளைட்-19 ம் அடக்கம். இந்தப் பக்கம் போகிற கப்பல்களும் விமானங்களும் கம்ப்ளீட்டாக கபளீகரம் ஆகி விடுவதாக ஒரு தோற்றத்தை உண்டு பண்ண கங்கணம் கட்டிக் கொண்டு ஒரு கூட்டமே அலைந்தது. இந்த விளையாட்டை ஆரம்பித்து வைத்தவர் அஸ்ஸோஸியேட்டட் பிரஸ் என்கிற அமெரிக்கச் செய்தி நிறுவனத்தின் எட்வர்ட் வேன் விங்கிள் ஜோன்ஸ். 1950, செப்டம்பர் 17ம் தேதி மியாமி ஹெரால்ட் இதழில் இவர் எழுதிய செய்திக் கட்டுரைதான் முதல் காக்கா ஓஷ் செய்தி. இதில் பல அமானுஷ்ய மறைவுகளைப் படம் வரைந்து பாகம் குறித்திருக்கிறார்.

Bermuda-2J

இந்தப் புரளி வித்தை 1972 வரை தொடர்ந்தபடி இருந்தது.

1972 இல் SS VA Fogg என்கிற கப்பலின் விபத்தும் காக்கா ஓஷாகச் சித்தரிக்கப்பட்டது. அமெரிக்கக் கடற்காவல் படையினர் இந்தக் கப்பலின் சிதைந்த பாகங்களையும், இறந்தவர்களின் உடல்களையும் மீட்டு வந்து ஃபோட்டோக்களும் போட்டு இந்தச் செய்தியை முறியடித்தார்கள். அதற்கப்புறம் கொஞ்சம் குறையத் தொடங்கிற்று.

1975ம் ஆண்டு லாரன்ஸ் டேவிட் குஷே என்கிறவர் எழுதிய The Bermuda Triangle Mystery : Solved இந்தச் சமாச்சாரத்துக்கு கிட்டத்தட்ட முற்றுப் புள்ளி வைத்தது. விமானங்களும், கப்பல்களும் காணாமல் போவதில் இதர கடல் பகுதிகளை விட இந்தப் பகுதி ஒன்றும் எண்ணிக்கையில் மிகையானதே அல்ல என்கிறார். முணுக்கென்றால் காற்றழுத்தத் தாழ்வும், டிராப்பிக்கல் ஸ்டார்மும் வருவதாகச் சித்தரிக்கிற ஒரு பகுதியில் இவ்வளவு குறைவான காணாமல் போதல்கள் நிகழ்ந்திருப்பது பொருத்தமில்லை. பல சம்பவங்கள் ஆரோக்யமான வாநிலையிலேயே நிகழ்ந்துள்ளன. கானாமல் போனதாகச் சொல்லப்பட்ட சில கலன்கள் கரை சேர்ந்த செய்திகள் வெளிவரவில்லை என்பதால் மிகைப்படுத்தல்கள் அதிகம். சில சம்பவங்கள் நடக்கவே இல்லை; 1937 இல் ஃப்ளோரிடாவின் டேட்டோனா என்கிற இடத்தில் நூற்றுக் கணக்கானவர்கள் கண்ணெதிரே நடந்ததாகக் கூறப்பட்ட சம்பவம் விசாரிக்கப்பட்ட போது சம்பந்தப்பட்ட யாருக்குமே தெரிந்திருக்கவில்லை. இன்னும் பல ஆதாரங்கள் சொல்லி பெர்முடா முக்கோணம் என்பது புரியாதவர்களோ அல்லது புரிந்தவர்கள் பரபரப்புக்காகவோ கிளப்பி விட்ட சமாச்சாரம் என்று சொல்லியிருக்கிறார்.

1992 இல் சேனல் 4 தயாரித்த நிகழ்ச்சியொன்றில் லாயிட்ஸ் ஆஃப் லண்டன் என்கிற இன்ஷ்யூரன்ஸ் நிறுவனம் சொன்ன கருத்து குறிப்பிடத் தக்கது. இந்தப் பகுதியில் காணாமல் போகும் விமானங்கள் மற்றும் கப்பல்களின் எண்ணிக்கையொன்றும் அசாதாரணமானது அல்ல என்றும் பிரிமியம் கூடுதலாக வசூலிப்பதில்லை என்றும் அவர்கள் தெரிவித்தார்கள். இன்ஷூரன்ஸ் கம்பெனி சொன்னால் இறைவனே சொன்னது போல. அத்தனை எளிதில் அவர்கள் ஏமாற மாட்டார்கள்.

அமெரிக்கக் கடற்படையின் கருத்துப்படி பெர்மூடா முக்கோணம் என்று எதுவுமே கிடையாது. அமெரிக்க பூகோளப் பெயர்கள் கழகம் (பூகோளம் சம்பந்தமான தீர்வு கிடைக்காத கேள்விகள் அனைத்திற்கும் தீர்வு சொல்லும் அதிகாரம் வழங்கப்பட்ட அமைப்பு. இந்த அமைப்பு சொல்கிற தீர்வுகளை தொடர்புடைய எல்லாத் துறைகளும் ஏற்க வேண்டும்) இப்படி ஒரு பெயரை அங்கீகரிக்கவே இல்லை.

இந்த நிகழ்வுகளுக்கு அமானுஷ்யக் காரணங்கள் சொல்லும் விட்டலாச்சாரிய குரூப் ஒன்று இருக்கிறது. அது சொல்லும் காரணங்கள் : கி.மு. 9600ம் ஆண்டில் இருந்ததாக கிரேக்கப் புராணம் சொல்லும் அட்லாண்ட்டாக் கண்டம் இங்கேதான் புதைந்திருக்கிறது. அதன் மாய சக்திதான் இது என்று ஆதாரப் பூர்வமான பூச்சுற்றல் ஒன்று. துர்தேவதைகளின் மாயம் என்று தெலுங்குப் படம் போல இன்னொன்று. இதைப் பறக்கும்தட்டுக்களுடன் (UFO) இணைக்கும் விஞ்ஞான ரீல் கூட்டம் ஒன்று.

கொஞ்சம் லாஜிக்கலாக யோசிக்கிறவர்கள் காற்றழுத்தத் தாழ்வு அடிக்கடி நிகழ்வது, டிராப்பிக்கல் ஸ்டார்ம் என்கிற சுழற்காற்று உள்ளிட்ட சில விஷயங்களைக் காரணமாகச் சொல்கிறார்கள். அவைகளில் ஒரு காரணம் என்னைக் கவர்ந்தது.

அந்தப் பகுதியில் திசைகாட்டும் கருவிகளின் செயல்பாட்டைக் குலைக்கிற காந்த விசைகள் இருப்பதாகவும், அதனால் திசைமாறிப் போய்விடுவதாகவும் ஒரு கருத்து இருக்கிறது. இது என் கவனத்தைக் கவரக் காரணம் ராமகிருஷ்ண பரமஹம்ஸர் சொன்ன ஒரு செய்தி :

“சமுத்திரத்தின் கீழ் உள்ள காந்தக்கல் மலை தண்ணீரின் மீது போகும் கப்பலை இழுத்து அதிலிருக்கும் இரும்பு ஆணிகளிப் பிடுங்கி பலகைகளை வெவ்வேறாகிப் பிரித்துக் கடலுக்குள் மூழ்க அடிக்கிறது………” கடவுளின் மஹாசக்தி மனிதனின் அகம்பாவத்தை நொடிப்பொழுதில் காணாமல் அடித்துத் தன்பால் இழுக்கவல்லது என்பதைச் சொல்ல அவர் சொன்ன உதாரணம் இது.

பெர்மூடா டிரையாங்கிள் சமாச்சாரங்கள் பேசப்படுமுன்னரே 1886ம் ஆண்டு அவர் இறந்து விட்டது குறிப்பிடத் தக்கது.

Advertisements

13 comments

  1. புத்தகத்தின் பெயர் ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்ஸர் அருளிய உபதேச மொழிகள். வெளியீடு : ஸ்ரீ ராம்கிருஷ்ண மடம், சென்னை. பக்கம் 265. உபதேச மொழி எண் : 767. ஸ்கேன் செய்த இமேஜ் வேண்டுமென்றால் மின்னஞ்சல் அனுப்பவும்.

   1. நான் ராமகிருஷ்ணரின் அமுத மொழிகள் புத்தகம் படித்டிருக்கிறேன். அதில் இது மாதிரி எதுவும் இல்லையே என்பதால் கேட்டேன். உங்க மேல இல்லாத நம்பிக்கையா? நீங்க சொன்னா நம்புறேன்

 1. பெர்முடா முக்கோணத்தில் 1993ம் ஆண்டு தொலைந்து போன நான் இன்னும் நிலையுலகுக்குத் திரும்பவில்லை. என்னைப் போல் யாரோ அலைந்து திரிவதாக அவ்வப்போது தெரியவந்தாலும் ஏதும் செய்யமுடியாது தவிக்கிறேன்.

 2. //அமானுஷ்யமான விஷயங்கள் குறித்து எதையாவது கிளப்பி விட்டுக் கொண்டே இருப்பதில் நம் ஜனங்களுக்கு ஒரு அலாதி திருப்தி உண்டு.//
  சார்,
  அந்த பட்டியல்ல நீங்களும் இப்போ சேர்ந்திட்டீங்களா??!!

  //பூகோளம் சம்பந்தமான தீர்வு கிடைக்காத கேள்விகள் அனைத்திற்கும் தீர்வு சொல்லும் அதிகாரம் வழங்கப்பட்ட அமைப்பு.//???!!
  நல்ல பொழைப்பா இருக்கே சார். அமெரிக்கா சொன்னா சூப்பர் ஸ்டாரே சொன்ன மாதிரின்னு சொல்லுங்க.

  //கி.மு. 9600ம் ஆண்டில் இருந்ததாக கிரேக்கப் புராணம் சொல்லும் அட்லாண்ட்டாக் கண்டம் இங்கேதான் புதைந்திருக்கிறது.//
  ஏன் நம்ம லெமூரியாக்கண்டம் இல்லையா அச்சச்சோ!

  //பெர்மூடா டிரையாங்கிள் சமாச்சாரங்கள் பேசப்படுமுன்னரே 1886ம் ஆண்டு அவர் இறந்து விட்டது குறிப்பிடத் தக்கது.//
  சரி, மொட்டத்தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு போடுறதுன்னு ஒன்னு சொல்வாங்களே, அது ஏன் இப்போ எனக்கு ஞாபகத்துக்கு வருது.

  http://www.concurrentmusingsofahumanbeing.blogspot.com

எதுவா இருந்தாலும் எழுதுங்க!

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s