எங்க பாட்டி கல்யாணத்தில..

”அம்மா.. வீட்டை ஒழிக்கறேன் வீட்டை ஒழிக்கறேன்னு சொல்றீங்களே ஒழிய எதுவுமே நடக்கிறதில்லை. முதல்லே வேண்டாத பொருளைத் தூக்கி எறிஞ்சாத்தான் வீட்ல இடம் கிடைக்கும். சும்மா நாலு மூலைத் தாச்சி மாதிரி இங்கேர்ந்து அங்கே அங்கேர்ந்து இங்கேன்னு நகர்த்திகிட்டு இருக்கிறதுக்குப் பேர் ஒழிக்கிறது இல்லை”

”சரிடா.. வேண்டாத பொருளை எல்லாம் எடுத்து பரண்ல வச்சிடறேன்”

“வேண்டாததை ஏம்மா பரண்ல வைக்கணும்? தூக்கிப் போட வேண்டியதுதானே?”

“வேண்டாம்ன்னா? உடனே தூக்கிப் போட்டுடுவியா? பின்னாலே ஒருநாள் பிரயோஜனப்படும்”

“எனக்குத் தெரிஞ்சி கடந்த முப்பது வருஷமா வீட்டைக் காலி பண்றப்ப எல்லாம் பழைய வீட்டுப் பரண்லேர்ந்து புது வீட்டுப் பரண்க்கு எல்லாம் வந்துகிட்டு இருக்கே ஒழிய எதையும் யூஸ் பண்ணதாவும் தெரியல்லை, தூக்கிப் போட்டதாவும் தெரியல்லை”

“சரிடா.. எதைத் தூக்கிப் போடலாம்ன்னு நீ சொல்லு. போட்டுடுவோம்”

“இந்த கங்காளம்? இதை வச்சிகிட்டு என்ன பண்றோம்?”

“இதுவா?”

“ஆமாம்.. இதேதான்”

“உனக்கென்ன பைத்தியம் பிடிச்சிடுச்சா?”

“இன்னும் இல்லை, இப்படியே போனா கொஞ்ச நாள்ள பிடிச்சிடும். அப்படி என்ன மடத்தனம் இதைத் தூக்கிப் போடறதிலேன்னு சொன்னா தெரிஞ்சிக்கறேன்”

“இன்னைக்கு இந்த மாதிரி ஒரு பாத்திரம் வாங்கணும்ன்னா என்ன விலை ஆகும் தெரியுமா?”

“நிறையதான் ஆகும்”

“நிறைய ஆகிறது இருக்கட்டும். முதல்லே இப்படி ஒரு கங்காளம் இன்னைக்கு கடைல கிடைக்குமா?”

“கிடைக்காதும்மா.. அதுக்காக வச்சிருக்கணுமா?”

“அபூர்வமான பொருள்டா இதெல்லாம்”

“அம்மா.. ஒரு காலத்துல இடுப்புல மரப்பட்டைதான் கட்டிக்கிட்டாங்க. இன்னைக்கு லட்ச ரூபா குடுத்தாலும் அதெல்லாம் கிடைக்காது. ஆனா இது எங்க தாத்தா கட்டிக்கிட்ட மரப்பட்டைன்னு யார் வீட்லயாவது பரண்ல வச்சிருக்காங்களா?”

“குதர்க்கம் பேசறதே உனக்கு வேலை. அந்தக் காலத்துல இந்த கங்காளம் நிறைய தண்ணியை ரொப்பி வச்சா ஒரு வாரத்துக்கு இருக்கும். இதுல சாம்பார் வச்சா ஒரு கல்யாணத்துக்கு வந்த எல்லாருக்கும் போறுமா இருக்கும்”

“இன்னைக்கு தண்ணியை எங்கே பிடிச்சி வைக்கிறே?”

“ஓவர்ஹெட் டாங்க்ல”

“கல்யாணத்துக்கு நீயா சமைக்கிறே?”

“இல்லை.. சமையல் காண்டிராக்டர்தான்”

“அப்ப இந்த கங்காளம் என்னைக்காவது யூஸ் ஆகுமோ?”

“ஆகாது”

“அப்ப தூக்கிப் போடலாமா?”

“அதெப்புடி?”

“அதெப்புடின்னா? இதைப் போட்டுட்டு வேறே பொருள் ஏதாவது வாங்கிக்கலாம்.. அல்லது சமையல்காரங்க கிட்டே விக்கலாம்”

“ப்ச்.. இதோட மதிப்பு உனக்கு தெரியல்லை”

“எனக்குத் தெரியல்லைன்னா பரவாயில்லை. வாங்கிக்கிறவனுக்கு தெரியும்”

“நான் சொன்னது அந்த மதிப்பு இல்லை”

“பின்னே?”

“எங்க பாட்டியோட கல்யாணத்துல இந்த கங்காளத்துலதான் சாம்பார் வெச்சி….. “

”அம்மா.. ஒரு நிமிஷம்”

“என்ன?”

“உங்க பாட்டி கல்யாணத்துல சாம்பார் மிஞ்சவே இல்லையா?”

“மிஞ்சியிருக்கும்.. தூக்கி ஊத்தியிருப்பாங்க. ஏன் கேக்கறே?”

“அதையும் ஒரு தூக்குல ஊத்தி பரண்ல வச்சிருந்தா ஒரு ஆத்திர அவசரத்துக்கு யூஸ் ஆகுமேன்னுதான்”

Advertisements

5 comments

 1. நல்லா இருக்கு. ஆனால் எங்க வீட்டிலே பழைய பித்தளை, வெண்கலச் சாமான்களை எல்லாம் கோவிலிலே கொடுத்துட்டோம். அம்பத்தூர் ராகவேந்திரா கோவிலுக்குக் கொடுத்தோம். 2 படி, 3 படி வடிக்கும் வெண்கலப்பானை, பித்தளைத் தவலை, அடுக்கு, ஜோடு தவலைனு நிறைய. இப்போப் பேர் சொன்னாலே பலருக்கும் புரியாது!

  மாதிரிக்கு ஒண்ணு, ரெண்டு வெண்கலப்பானைகளும், உருளிகளும் வைச்சுட்டு இருக்கேன். குமுட்டி அடுப்பு, கல்சட்டியும் ஒண்ணு வைச்சிருக்கேன். அடுத்த தலைமுறைக்குக் காட்டலாமே.

 2. நான்கூட இதே கதைதான். ஒரே இடத்தில் இல்லாமல் பிள்ளைகளிடம் வெவ்வேறு இடங்கள் , வாழ்க்கையே மாறிவிட்டதால் குடம்,சொம்பு, வெண்கலப்பானை,குத்து விளக்கு, மாதிரிக்கு ஒன்று ஜெனிவா வரவேற்பறையில் பளபளவென்று உட்கார்ந்திருக்கு. கங்காளம்,ஜோட்தவலை,
  எல்லாம் எவர் ஸில்வரா மாறி விட்டது.
  காதுவைத்த பித்தளைக் கூடையில் இன்டோர் ப்ளான்ட்
  ஆக்ரமிப்பு செய்து விட்டது.
  ஜெனிவா எப்படி போச்சா? u.n இல் பிள்ளைக்கு எல்லாம் எடுத்துப்போக ஷிப்மென்ட் கிடைச்சது.
  உங்கம்மா கதையேதான் என்னுடைய பாத்திர ஆசையும்.
  நிறைய டோஸும் வாங்கி இப்போது எல்லோரும் இன்புற்றிருக்க வேண்டியதைத் தவிர வேறொன்றறியேன்
  பராபரமே தான்.
  ரொம்ப நாட்கள் கழித்து வருகிறேன்.
  உங்களுடைய பதிவு மிக்க ஸந்தோஷத்தைக் கொடுத்தது.
  இதயம் பேத்துகிறதற்கு திரும்ப வருகிறேன். அன்புடன்

எதுவா இருந்தாலும் எழுதுங்க!

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s