இசைத்தலும் இசைய வைத்தலும்

ஐந்தாவது முறையாக ஃபோனை எடுத்துப் பார்த்து விட்டுப் பையில் வைத்துக் கொண்டான் இளவரசு.

 “என்ன அடிக்கடி பார்க்கிறே?” என்றேன்.

 “இல்லே.. இன்னைக்கு ஒரு கம்போஸிங் கம்மிட் பண்ணியிருந்தேன். டைரக்டர்தான் ஃபோன் பண்ணிகிட்டே இருக்காரு. சைலண்ட்ல போட்டிருக்கேன்”

 “ஐயய்யோ.. ஐயாம் சாரிடா. நான் கிளம்பறேன். நீ உன் தொழிலைப் பாரு” என்று எழுந்தேன்.

 “அதெப்படி.. பல வருஷம் கழிச்சி வந்திருக்கே. உன்னை எழுந்து போன்னு சொல்லிட்டு நான் போக முடியுமா?”

 “அதெல்லாம் கவலை இல்லை. நீ உன் தொழிலைப் பாரு, நான் அப்புறமா வர்ரேன்”

 “நான் என் தொழிலைப் பார்க்கிறது இருக்கட்டும்; நீ என் தொழிலைப் பார்க்க வேணாமா? வா, ஸ்டூடியோவுக்குப் போகலாம்”

 “நானா?”

 “நீயேதான் வா. கார்ல பேசிகிட்டே போகலாம். டியூனை ஓக்கே பண்ணியாச்சுன்னா நம்ம அரட்டையை வந்து தொடரலாம்”

 “அவ்வளவு சீக்கிரம் ஓக்கே ஆகுமா? திரும்பத் திரும்ப கம்போஸ் பண்ணி பல்லவி ஓக்கே ஆகவே ராத்திரி ஆயிடும்ன்னெல்லாம் இசையமைப்பாளர்கள் சொல்லிக் கேட்டிருக்கேனே?”

 “வாஸ்தவம்தான். பட் நான் எப்பவுமே ஒன் அவர்லே ஒரு ட்யூனை ஓக்கே பண்ணிடுவேன்”

 “ம்ம்.. உன் மாதிரி இசை ஞானம் எல்லாருக்கும் இருக்குமா? இல்லாதவன் கஷ்டப்பட்டுத்தானே ஆகணும்?”

 இதற்கு இளவரசு பதிலொன்றும் சொல்லவில்லை. லேசாகச் சிரித்துக் கொண்டான். நாங்கள் அடுத்த விஷயம் பேசுமுன் ஸ்டூடியோ வந்து விட்டது.

 எங்களை வரவேற்ற டைரக்டர் ரொம்பப் பெரிய ஆள். அவர் வாங்காத அவார்ட் இல்லை, அறிமுகம் செய்யாத பெரிய ஸ்டார்கள் இல்லை, காணாமல் அடிக்காத கர்விகள் இல்லை.. யாருக்கும் தலை வணங்க மாட்டார் அதே சமயம் யாரையும் தூக்கி எறிந்தும் பேச மாட்டார். இளவரசுவின் டெம்பர்மெண்டுக்கு இவரிடம் எப்படி வேலை செய்கிறான் என்பது ஆச்சரியமாக இருந்தது. அவர் டைரக்‌ஷனில் எப்படியோ அப்படி இசையில் இவன்.

 இளவரசின் அஸிஸ்டண்ட் ஹார்மோனியப் பெட்டியைக் கொண்டு வந்து காமாட்சியைப் பிரதிஷ்டை செய்யும் ஆதிசங்கரர் போல பவ்யமாக வைத்தான். இளவரசு உட்காரும் வரை காத்திருந்து தப்லாக்காரரும் உட்கார்ந்தார்.

 “சார்.. இது ஹீரோயின் தன்னோட வருத்தத்தை பூடகமா சொல்ற மாதிரிப் பாட்டு, அதனாலே சிந்து பைரவி ராகத்துல..” என்று ஆரம்பித்தான்.

 “இல்லை அரசு.. சோகம் மெட்டுல தெரியக் கூடாது. சொற்கள்ள மட்டும்தான் தெரியணும்”

 “சரி, அதை மாத்திக்கலாம். சோகம்ங்கிறதாலே டெம்போ குறைவா தன்னம்த்த தந்தன்னன்னன்னு ஒரு எய்ட் பீட் ரிதம்….” இளவரசு முடிப்பதற்குள் டைரக்டர் குறுக்கிட்டார்,

 “ம்ம்ஹூம்.. பாட்டு மேலோட்டமாக் கேட்டா குத்துப் பாட்டு போல இருக்கணும். வார்த்தைலதான் சோகம்” என்றார்.

 “ஓஹோ.. ஓக்கே. மாத்திக்கலாம். சந்தம் எப்படி, ஒரு லைனுக்கு ஆறு வார்த்தை வர்ராப்பல இருக்கலாமா? நல்ல ஃப்ளோவும் கண்டிநியுட்டியும் இருக்கும்”

 “ம்ம்ஹூம். வந்தானா.. வர்லியா; தந்தானா.. தர்லியா; அஞ்சு நிமிஷம் அஞ்சு நிமிஷம் வந்து பழகு வந்து பழகுங்கிற மாதிரி இருக்கட்டும் சந்தம். அதான் பல்லவி”

 இளவரசு தியானம் செய்கிறவன் போல இரண்டு நிமிஷம் கண்மூடி உட்கார்ந்தான். பிறகு பக்கத்திலிருந்த தப்லா வித்வானிடம், “தந்தன தத்தா தந்தன தத்தா தன்னம்னம்.. இதான் ரிதம்” என்றான்.

 அவர் தன் தப்லாவைக் குமுக்கி அந்த தந்தன தத்தாவுக்கு உயிர் கொடுக்க இளவரசு ஹார்மோனியத்தில் வந்தானா வர்லியா சந்தத்தை ஷண்முகப்பிரியாவில் வாசித்தான்.

 “எக்ஸல்லண்ட்.. உனக்குள்ள இருக்கிற திறமை உனக்குத் தெரியல்லை. நான் தோண்டி எடுக்க வேண்டியிருக்கு. நாளைக்கு ரிக்கார்டிங் முடிச்சிடு” என்றார் டைரக்டர்.

 எனக்கு ஆச்சரியமாக இருந்தது.

 “என்னடா, இந்த டைரக்டர் மஹா ஈகோ பிடிச்சவன்ம்பாங்க.. பத்து நிமிஷத்துல ஓக்கே பண்ணிட்டியே?”

 சிரித்தான்.

 “எப்படிடா ரெண்டு நிமிஷத்துல அவர் கேட்ட மாதிரி ட்யூனைப் போட்டே?”

 ”இது ரெண்டு நிமிஷத்தில் போட்டதில்லை. நான் நேத்து பூரா யோசிச்சி போட்ட ட்யூன்” என்றான்.

Advertisements

4 comments

  1. தெரிந்தோ தெரியாமலோ, முதல் முறையாக தப்லாவைத் தப்லா என்று எழுதிய ஜவஹர்ஜி… பிடியுங்கள் பாராட்டுக்களை…
    தமிழில் வழக்கமாக இதை தபேலா என்று எழுதி அர்த்தத்தையே மாற்றி விடுவார்கள்….

எதுவா இருந்தாலும் எழுதுங்க!

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s