கிமுவில் பாலச்சந்தர் கதை

”இளவரசே, அரசியார் உங்களை அழைக்கிறார்கள்” சேவகன் இடுப்பை வளைத்து உணர்வின்றிச் சொன்னான்.

 ”வருகிறேன் என்று சொல்” என்றான் குணால். அவன் சேவகன் பக்கம் திரும்பக் கூட இல்லை.

 “இல்லை இளவரசே, ஏதோ தலையாய செய்தியாம், கையோடு அழைத்து வரச் சொன்னார்கள்” என்றான் மீண்டும். இப்போது அவன் சொன்ன விதம் இது உறவுமுறை அழைப்பல்ல, அரசியின் கட்டளை என்பது போல் ஒலித்தது.

 “அரசியின் கோபம் நமக்கெதற்கு? போய் என்னவென்று கேட்டு வாருங்களேன்” என்றாள் காஞ்சனமாலா.

 அரசியைச் சந்திக்கச் செல்லத் தான் தயங்குவதன் காரணத்தை மனைவி காஞ்சனமாலாவிடம் குணாலால் சொல்ல முடியாது. சொன்னால் அவளால் தாங்க முடியாது. கடந்த சில நாட்களாக நடந்து வரும் சம்பவங்கள் அவனைக் குழப்பத்தில் ஆழ்த்திக் கொண்டிருந்தன.

 நேற்று நந்தவனத்தில் உலவிக் கொண்டிருந்த போது அவன் மேல் ஒரு ரோஜா வந்து விழுந்தது. மல்லிகைக் கொடியிலிருந்து ரோஜா எப்படி விழும் என்கிற ஆச்சரியத்தில் நிமிர்ந்து பார்த்தால் உப்பரிகையில்  திஷ்யரக்‌ஷா!

 ’இங்கே வாயேன்’ என்பது போலக் கையை ஜாடை செய்து வெட்கத்தோடு சிரித்தாள்.

 குணால் ஒரு வினாடி பதறினான்.

 இதை அவன் பெற்றோரோ, மனைவி காஞ்சனமாலாவோ பார்த்தால் என்ன ஆவது!

 சட்டென்று அரண்மணைக்குள் நுழைந்து மறைந்து போனான்.

 அது முதல் தடவையல்ல. போன வாரம் தயா நதிக்கரைக்குக் குளிக்கப் போயிருந்தான். அவன் குளித்துக் கொண்டிருந்த போதே அவளும் ஆடைகளைக் களைந்து விட்டு நீரில் இறங்கி விட்டாள். கையால் முகத்தை மறைத்துக் கொண்டு கரையேறி ஓடி வந்து விட்டான். அவன் எங்கே போனாலும், என்ன செய்தாலும் தொடர்கிறாள். இதெல்லாம் காஞ்சனமாலாவுக்குத் தெரியாது. தான் இப்போது அழைக்கப்படுவது இது விஷயமாகத்தான் என்பது அவனுக்குத் தெரியும்.

 என்ன சொல்வது?

 என்ன வேண்டுமானாலும் சொல்லலாம். என் மனதில் தப்பில்லை என்று எண்ணிக் கொண்டான். எழுந்தான்.

 “அரசியிடம் வாதிட வேண்டாம். அவர் என்ன சொன்னாலும் அதன்படி நடந்து கொள்ளுங்கள்” என்றாள் காஞ்சனமாலா.

 பைத்தியக்காரி. நடக்கப் போவது தெரியாமல் பேசுகிறாள். அரசி சொற்படி நடந்தாலும் பிழை, நடக்கவில்லையென்றாலும் பிழை என்பது இவளுக்கெங்கே புரியப் போகிறது.

 குணால் எழுந்ததைப் பார்த்ததும் சேவகன் நடக்க ஆரம்பித்தான். நேராக அந்தப்புறம் சென்றார்கள். சேவகன் பணிந்து கையை உட்புறம் நீட்டி நின்றான். குணால் உள்ளே பிரவேசித்ததும் உள்ளேயிருந்து ஒரு குரல் சேவகனுக்குக் கட்டளை பிறப்பித்தது,

 “நாங்கள் ராஜ ரகசியம் பேசப் போகிறோம். கதவைச் சாத்திக் கொண்டு வெளியில் இரு. மன்னர் வந்தால் மட்டும் எனக்குத் தெரிவி”

 “ஆகட்டும் அரசி”

 அவன் கதவை மூடிக் கொண்டு வெளியேறினான்.

 உள்ளே யாரையும் காணாமல் “அழைத்தீர்கள் என்று சொன்னான்” என்று பொதுவாகச் சொன்னபடி சுற்றிலும் பார்த்தான் குணால்.

 அவன் கொஞ்சமும் எதிர்பாராமல் பின்னாலிருந்து யாரோ அணைத்தார்கள். சுகந்தமான நறுமணமும் மல்லிகைப் பந்து போன்ற மென்மையும் ஒருவினாடி அவனைக் கிறங்கச் செய்தன. சட்டென்று விலகித் திரும்பினான்.

 திஷ்யரக்‌ஷா!

 “இது தவறு” என்றான்.

 ”என்ன தவறு?” என்றாள் வேல்விழிகளைச் சிமிட்டியபடி.

 “நான் திருமணமானவன்”

 “உங்கள் தந்தையும் திருமணம் ஆனவர்தானே? திருமணம் ஆகிவிட்டதென்று அவர் உங்கள் தாயை மணக்காமல் இருந்திருந்தால் உங்களால் சாம்ராட் அசோகரின் மகனாகப் பிறந்திருக்கவே முடியாதே?”

 “என் தந்தையைப் போல் இன்னொரு மணம் செய்வதில் தவறில்லை. ஆனால் தந்தையின் மனைவியையே மணப்பது தவறு. தயவு செய்து கதவைத் திறக்கச் சொல்லுங்கள் அரசி”

 (அசோகர் தன் இறுதிக் காலத்தில் மணந்த திஷ்யரக்‌ஷா குறித்தும், அசோகரின் மகன் குணால் குறித்தும் வரலாற்றில் இருக்கும் தகவலின் அடிப்படையில் நான் எழுதியிருக்கும் கதை இது)

Advertisements

3 comments

எதுவா இருந்தாலும் எழுதுங்க!

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s