அப்பா பை பை

புரண்டு படுத்த மகள் தூக்கத்தில் பேசிய வார்த்தைகள் அவனுக்கு சற்று ஆச்சரியமாக இருந்தது.

 ’அம்மா குட்நைட், அப்பா குட்நைட், தாத்தா குட்நைட் பாட்டி பை பை’ என்றாள். ம்ம்க்கும்.. பாட்டி மட்டும் தனியா ஊருக்குப் போவாளாக்கும் என்று எண்ணி சிரித்துக் கொண்டான்.

 மகள் என்றால் அவனுக்கு உயிர். கல்யாணமாகிப் பத்து வருஷம் குழந்தைகள் இல்லை. எல்லாரும் விசேஷம் உண்டா, விசேஷம் உண்டா என்று கேட்பது தாங்காமல் ஊரையே காலி பண்ணிக் கொண்டு இந்த ஊருக்கு வந்தார்கள்.

 என்ன ஆச்சரியம்!

 பத்தாம் மாசம் இவள் பிறந்தாள். அந்த வீட்டின் மீதும், மகளின் மீதும் விசேஷ பாசம் உண்டாயிற்று. தாத்தா பாட்டி என்றால் குழந்தைக்கு உயிர். எல்லாக் குழந்தைகளுக்கும் அம்மாவின் அப்பா அம்மா என்றால் விசேஷ பிரியம். கனவில் கூட அவர்கள் வருகிறார்கள். பாட்டி அந்தக் காலத்து மனிஷி. தனியாக ஊருக்குப் போக மாட்டாள் என்று காலையில் சொல்ல வேண்டும் என்று நினைத்துக் கொண்டான்.

 அடுத்த நாள் ஊரிலிருந்து மாமியார் இறந்து விட்டதாக தந்தி வரும் போது அதிர்ச்சியாக இருந்தது. சரி இது ஏதோ அன் எக்ஸ்பெக்டட் கோயின்ஸிடன்ஸ் என்று விட்டுவிட்டான். ஏறக்குறைய ஒரு வருஷம் ஆகி விட்டது. ஒரு நாள் இரவு மறுபடியும் அதே போல ஒரு சம்பவம்.

 அன்றைக்குத் தூக்கத்தில் ‘அம்மா குட்நைட், அப்பா குட்நைட், தாத்தா பை பை’ என்றாள். ஏதோ ஒரு தரம் காக்கை உட்காரப் பனம்பழம் விழுந்தது போல ஆகியிருக்கும். இதைப் பெரிதாக எடுத்துக் கொள்ள வேண்டாம் என்று நினைத்துக் கொண்டான்.

 ஆனால்,

 அடுத்த நாள் மாமனார் இறந்து விட்டதாகத் தந்தி வந்தது.

 அன்றிலிருந்து மகள் புரண்டு படுக்கிற போதெல்லாம் அவனுக்கு ரத்தம் சில்லிட்டு மூச்சு ஒடுங்கியது. அவன் பயந்த அந்த நாளும் வந்தது.

 ‘அம்மா குட்நைட், அப்பா பை பை’ என்றாள் அன்றைக்கு.

 அன்று இரவு கடப்பதே பெரிய விஷயமாக இருந்தது. தூக்கமே வரவில்லை. வியர்த்தது. பொழுது விடியும் போது உயிருடன் இருந்தது ஆச்சரியமாக இருந்தது. வாசற்கதவைத் திறந்து கொண்டு வெளியில் போய் சோம்பல் முறித்துக் கொட்டாவி விட்டான்.

 அப்பாடா.. காக்காய் உட்கார இரண்டு பனம்பழம் கூட விழுவதுண்டு போலிருக்கிறது என்று நினைத்துக் கொண்டான்.

 எதிர்வீட்டிலிருந்து அழுகுரல் கேட்டது.

Advertisements

8 comments

எதுவா இருந்தாலும் எழுதுங்க!

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s