ஒரு சுவாரஸ்யமான கற்பனை.
ஒரு சின்ன நகரம் அமைக்க வேண்டும். அதில் திண்ணை வைத்த ஓட்டு வீடுகள், பெரிய குளங்கள், ஜட்கா வண்டி, தமுக்கு அடித்துக் கொண்டு நோட்டீஸ் பறக்க விடும் சினிமா வண்டிகள், அரை மணிக்கு ஒரு தரம் ரீல் மாற்றும் சினிமா தியேட்டர்கள், அவற்றில் எம். ஜி. ஆர்., சிவாஜி சினிமாக்கள், வீடுகளில் ரேடியோக்கள், அந்த ரேடியோக்களில் காலையில், ‘ஆகாஸவாணி : செய்திகள், வாசிப்பது விஜயம்; இலங்கை இனப் பிரச்சினைக்கு பேச்சு வார்த்தை மூலம் தீர்வு ஒன்றைக் காண வேண்டியதன் அவசியத்தை பிரதமர் இந்திரா காந்தி வலியுறுத்தினார்’ என்று செய்திகளும்,
பிற்பலில் மாதர் நிகழ்ச்சியில் பாபுஜியும் மாதரும், மாலை ஏழரைக்கு விவிதபாரதியில் தேன் கிண்ணம் என்று நிகழ்ச்சிகள் ஒலிபரப்பாக வேண்டும். தெருக்களை அடைத்துப் பந்தல் போட்டு லவுட் ஸ்பீக்கர் கட்டி பாட்டுப் போட்டு கல்யாணங்கள் நடத்த வேண்டும்.
புரிந்திருக்கும் என்று நினைக்கிறேன்.
அப்படியே 1970ம் வருஷ செட் அப். இந்த நகரத்தில் சில 60+ ஆண்களையும் பெண்களையும் வெளி உலக சம்பந்தம் இல்லாமல் 100 நாட்கள் தங்க வைக்க வேண்டும்.
ஆட்ட விதிகள், தங்கி இருப்பவர்கள் தங்களுக்குள் பேசிக் கொள்ளும்போது நடக்கும் விஷயங்களை நிகழ்கால வாக்கியங்களாய்ப் பேச வேண்டும். அதாவது, அந்தக் காலம் போலவே இருக்கு இல்லே? என்கிற மாதிரி பேசாமல்,
‘செட்டியார் வீட்ல கல்யாணம். சாயந்திரத்துலேர்ந்து பாட்டு போட்டுக் கொல்றான் அன்பு சவுண்ட் சர்வீஸ்க்காரன்’
‘நியூஸ் கேட்டியா? நிஜலிங்கப்பாவும் சிண்டிகேட் காங்கிரஸ்ல சேர்ந்துட்டாராம்’
‘ஸ்டார் டாக்கீஸ்ல அவள் ஒரு தொடர்கதை போட்டிருக்கான். ஸ்ரீப்ரியான்னு ஒரு பொண்ணு, பிரமாதமா நடிச்சிருக்கா’
என்கிற மாதிரியெல்லாம்தான் பேச வேண்டும். நகரத்தோடு நகமும் சதையுமாய் ஒட்டிக் கொள்ள வேண்டும். நூறு நாட்கள் முடிந்ததும் நகரில் வசித்தவர்கள் எப்படி இருப்பார்கள்?
பதினைந்து வயதாக! மனசில் மட்டுமில்லை, உடலளவிலும்!
சும்மா காது குத்துகிறேன் என்று நினைக்காதீர்கள்.
1981ம் வருஷம் ஹார்வேர்ட் சோஷியல் சைக்காலஜிஸ்ட் எலன் லாங்கர் என்கிற பெண்மணி நான் மேலே சொன்னது போன்ற 1959ம் வருஷ செட் அப் உருவாக்கி அதில் சில 70+ மனிதர்களைக் குடி வைத்திருக்கிறார். ஆட்டத்தின் முடிவில்,
வரும்போது வீல்சேரில் வந்தவர் போகும் போது வாக்கிங் ஸ்டிக் ஊன்றி நடந்து போயிருக்கிறார், சுவற்றில் சாய்ந்தபடி ஜட்டி மாற்றிக் கொண்டவர்கள் எல்லாம் ஒற்றைக் காலில் நின்றபடி போட்டுக் கொண்டார்களாம், எப்போதுமே இங்கே வலிக்குது அங்கே வலிக்குது டயர்டா இருக்கு என்று சொன்னவர்கள் ஃபுட் பால் விளையாடினார்களாம், கண்ணாடி இல்லாமல் புஸ்தகம் படித்தார்கள், ஆர்த்தரிட்டீஸ் காணாமல் போனது, ஷுகர் லெவல் இறங்கியது, பிளட் பிரஷர் நார்மல் ஆனது, இன்னும் சில பிரசுரிக்க முடியாத மாறுதல்களும் நிகழ்ந்தனவாம்!
இத்தனைக்கும் அவர்கள் 7 நாட்கள்தான் அங்கே இருந்திருக்கிறார்கள்!
பிக் பாஸ் மாதிரி கழிசடை நிகழ்ச்சிகளுக்கு பதிலாக யாராவது ஒரு டிவிக்காரர்கள் இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்து, சிகிச்சைக்கு முன், சிகிச்சைக்குப் பின் மாற்றங்களைக் காட்டலாம்.
எழுபதுகள் என்றால் கலந்துகொள்ள நான் ரெடி!