அறிவியல்/சுய முன்னேற்றம்

பொது அறிவு

மின்சாரமும் சம்சாரமும்

பொறியியல் தத்துவங்களிலிருந்து நிறைய வாழ்க்கைத் தத்துவங்கள் படிக்கலாம்.

காதல் எல்லாருக்கும் பிடிக்கும் என்பதால் அங்கிருந்து தொடங்கலாம்.

Like poles repel, opposite poles attract. இந்த ஆப்போஸிட் போல்களின் இடையில் நிலவும் ஈர்ப்பு விசைதான் காதல். துருவங்கள் இனைந்து விட்டால் பிறகு ஈர்ப்பு விசை இருக்காது. அது போலவே காதலும் தள்ளி இருக்கிற வரை இருக்கும். இணைந்தால் காலியாகிவிடும்.

ஒரு செப்புக் கம்பி நேராக இருக்கும் போது வெறும் மின் கடத்தி. ஆனால் அதை வளைத்துக் கம்பிச் சுருள் ஆக்கினால் என்னென்னமோ செய்யலாம். நீதி, விறைத்துக் கொண்டு நேராக இருப்பதை விட வளைந்து வளைந்து போவது நம் ஆளுமையை அதிகரிக்கும்.

Potential Difference இருந்தால்தான் மின்சாரம் பாயும். அதுவும் அதிக அழுத்தத்திலிருந்து குறைந்த அழுத்தத்திற்கு. கற்க வேண்டுமானால் Low profile maintain செய்ய வேண்டும். விறைத்தால் கற்க முடியாது. வாலறிவன் நள்ளாள் தொழாஅர் எனின் என்று வள்ளுவர் சொன்னதும் இதுவே. மிகுந்த அறிவுடையவர்களைக் கண்டால் பணியுங்கள்.

மின்சாரத்தைக் கடத்த மறுத்து ரெஸிஸ்டர் ஆக இருக்கும் பொருட்கள் என்ன ஆகின்றன? தாங்கள் சூடாகின்றன. இப்படிச் சூடும், குளிர்ச்சியுமாக மாறி மாறி ஏற்பட்டு இறுதியில் Fatigue Failure ஆகின்றன. நமக்கும் விரோதங்களால் இதுவே நேரும். நாம்தான் சூடாவோம். கண்டக்டர் போல (பஸ் கண்டக்டர் இல்லை) வருவனவற்றைத் தேக்காமல் கடத்தி வைத்தால் மின்னோட்டம் போல நட்பும் உறவும் இனிதே தொடரும்.

இப்போதைக்கு இவ்வளவு போதும். இன்னும் சில தத்துவங்களைப் பிறகு பார்ப்போம்.

Advertisements

வள்ளுவர் சொல்லும் கம்யூனிகேஷன் டெக்னிக்

”ராமலிங்கம் உன்னைப் பத்தி என்ன சொல்றான் தெரியுமா?” என்கிற மாதிரி ஆரம்பிக்கிறவர்களை நான் என்கரேஜே செய்வதில்லை.

“அதை நான் ராமலிங்கம் கிட்டயே கேட்டுத் தெரிஞ்சிக்கறேன்” என்று உடனே ஆஃப் பண்ணி விடுவேன்.

இப்படிச் சொல்வதற்கு இருக்கும் ரொம்ப ஆத்மார்த்தமான காரணங்களை விட்டு விடுங்கள். அடிப்படையில் இது போன்ற பேச்சுக்களில் இருக்கும் கம்யூனிகேஷன் பிராப்ளம் ரொம்ப முக்கியமானது. ஒரு கம்யூனிகேஷனில் 7% தான் சொற்களின் அல்லது மொழியின் பங்களிப்பு. இடம், நேரம், சுற்றுச் சூழல், உடல் மொழி, குரலின் ஏற்றத் தாழ்வுகள், சுருதி, முகபாவம் என்று பல விஷயங்களின் தொகுப்பாகவே கம்யூனிகேஷன் அமைகிறது.

ராமலிங்கம் சொன்னதை நம்மிடம் சொல்ல வருகிறவர் 7% ஐத்தான் எடுத்து வருகிறார். அதிலும் பிழை இருக்க வாய்ப்பு இருக்கிறது. ராமலிங்கம் சொல்ல நினைத்ததற்கும் சொன்னதற்கும் இரண்டொரு சதவீதம் வேறுபாடு இருக்கும். அதை இவர் புரிந்து கொண்டதிலும், நம்மிடம் சொல்வதிலும் இரண்டொரு சதவீதம் பிழை இருக்கும். நாம் இருக்கிற மூடில் அதைப் புரிந்து கொள்வதிலும் இரண்டொரு சதவீதம் பிழை இருக்கும்.

ஆக மொத்தம் நமக்கு வந்து சேர்வது சொற்ப சதவீதம்தான் இருக்கும்.

வேட்பத்தாம் சொல்லிப் பிறர்சொல் பயன்கோடல்

 மாட்சியின் மாசற்றார் கோள்

என்பார் வள்ளுவர்.

அதாவது பிறர் கூறும் சொற்களை ஆராய்ந்து பயனுளவற்றை ஏற்பதும், பிறருக்கு உபயோகமானவற்றை அவர்கள் ஏற்கும்படி சொல்வதும் குற்றமற்றவர்களின் கொள்கை ஆகும் என்று இதற்கு அர்த்தம். கம்யூனிகேட் செய்கிறவனும், கம்யூனிகேஷனை ரிஸீவ் செய்கிறவனும் எப்படிப்பட்டவர்களாக இருக்க வேண்டும் என்பதை இந்தக் குறள் சொல்கிறது.

குற்றமற்றவர் என்கிற பதத்தை வள்ளுவர் பயன்படுத்த ஒரு காரணம் இருக்கிறது. கம்யூனிகேட் செய்கிறவனுக்கு Vested interest இருந்தது என்றால் கதை கந்தல்.

நீங்களும் இப்படித்தான் நினைச்சிருப்பீங்க

இந்தக் குட்டிக் கதை Discipline என்கிற சமாச்சாரம் ரொம்ப சுவாரஸ்யமானது, ஆச்சரியமானது, குழப்பமானது என்பதைச் சொல்கிறது. (கவனக் குறைவா ஒரு ஸ்பெல்லிங் மிஸ்டேக் பண்ணினா அதுதான் எல்லார் கண்ணுலயும் படுது! விஷயத்தை விட்டுடறாங்கெ!  🙂 )

மிதமிஞ்சிய கட்டுப்பாடுகளுடன் வளர்க்கப்பட்ட குழந்தைகள் ஹாஸ்டலில் சேரும் போது சுதந்திரத்தைக் கொண்டாடுகிறார்கள். தறிகெட்டுப் போகிறார்கள். அப்படி ஒரு பையன் கெட்ட பழக்கங்களுக்கு அடிமைப்பட்டு நாசமாகிக் கொண்டிருந்தான். விடுமுறைக்கு வந்த அவனுக்கு அப்பா அறிவுரை, அறவுரை எல்லாம் வழங்கவில்லை. கண்டிக்கவோ, தண்டிக்கவோ இல்லை.

அப்பாவும் பிள்ளையும் சேர்ந்து பட்டம் விட்டுக் கொண்டிருந்தார்கள். அப்பா கேட்டார், “தம்பி.. நூலோட வேலை என்னன்னு சொல்லு பார்க்கலாம்?”

பையன் கொஞ்சமும் தாமதிக்காமல் சொன்னான் “நூல்தாம்ப்ப்பா பட்டத்தை இழுத்துப் பிடிச்சிருக்கு”

அப்பா சொன்னார், “இல்லை மகனே நூல்தான் அதைப் பறக்க வச்சிகிட்டு இருக்கு”

பையன் சிரித்தான். அப்பா ஒரு கத்தரியால் நூலை வெட்டினார். முதலில் பட்டம் விடுபட்டு தாறுமாறாகப் பறந்தது. கொஞ்ச நேரத்தில், சற்று தூரம் தள்ளி கீழே போய் விழுந்தது.

“ஒழுக்கம் இப்படியானதுதான் மகனே. அது உன்னை இழுத்துப் பிடித்திருப்பதாக நீ நினைத்துக் கொண்டிருக்கிறாய். அதிலிருந்து அறுத்துக் கொண்டால் சுதந்திரம் என்று நினைத்திருக்கிறாய். ஆனால் அந்த சுதந்திரம் ரொம்ப தாற்காலிகமானது. சீக்கிரமே கீழே விழுந்து விடுவாய். ஒழுக்கம்தான் உன்னைக் கொடிகட்டிப் பறக்க வைத்துக் கொண்டிருப்பது. உன்னை அதிலிருந்து அறுத்துக் கொள்ளாதே”

பையன் அதற்குப் பிறகு எந்தக் கெட்ட விஷயங்கள் பக்கமும் போகவில்லை.

(ஷிவ் கேராவின் இரண்டு வரிக் கதையின் அடிப்படையில் நான் எழுதியது)

குரு உசத்தியா, சீடன் உசத்தியா?

”’நீ தயாராக இருக்கும் போது குரு தோன்றுவார்’ என்று சொல்வார்களே, அதற்கு அர்த்தம் தெரியுமோ?”

 “சீடனாக இருப்பதற்கு சில தகுதிகளோ அல்லது குறைந்தபட்சம் ஏதாவது ஒரு தகுதியோ அவசியம். அந்தத் தகுதியைப் பெற்று விட்டால் இத்தனை நாள் தேடியும் புலப்படாத குரு, தானே வலிய தென்படுவார் அப்டீன்னு அர்த்தம் பண்ணிக்கறேன்”

 “ரொம்ப சரி. அந்தத் தகுதி என்னன்னும் தெரியுமா?”

 “ஒருவரை குருவாக ஏற்கிற பக்குவம்”

 “அந்தப் பக்குவம் ஏன் இல்லாமல் போகிறது?”

 “அந்தப் பக்குவம் இல்லாமல் போகிறது என்பதை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன். தகுதியான குரு இன்னமும் என் கண்ணில் தென்படாததே காரணம்”

 “உனக்கு குருவாக இருக்க என்னென்ன தகுதிகள் இருக்கணும்ன்னு நினைக்கிறே?”

 “என்னை விட வயது, கல்வி, அனுபவம், அறிவு எல்லாம் அதிகமாக இருக்கிற ஒருவரா இருக்கணும் அவ்வளவுதான்”

 “அதாவது உன்னை விட எல்லா விதத்திலும் உயர்வா இருக்கிற ஒருவரை, ஆம், இவர் என்னை விட உயர்ந்தவர்தான் அப்டீன்னு ஒப்புக்குவே? அப்படித்தானே?”

 “ஆமாம்”

 “அப்படி ஒப்புக்கிறதுக்கு எந்த உயர்வும் அவசியமில்லையே? சொல்லப் போனா உயர்வே அவசியமில்லையே? ஒருவர் எல்லா விதத்திலும் உயர்ந்தவர்ன்னு ஒப்புக்கிறதை வேறே விதமாவும் சொல்லலாமே?”

“எப்படி?”

 “எல்லா விதத்திலும் நீ தாழ்ந்து இருக்கேன்னு ஒப்புக்கிறதாவும் சொல்லலாமில்லையா?”

 “அவரை விட”

 “வாட் எவர். அப்படி ஒரு கோணம் இருப்பது நிஜம்தானே?”

 “ஆமாம்”

 “ஒருத்தரை குருவாக ஏற்கிற போதே உன் உயர்வு வெளிப்படற மாதிரி இருந்தாத்தானே உனக்குச் சிறப்பு? உசத்தியை உசத்தின்னு ஒப்புக்க உயர்வு அவசியமில்லையே?”

 “ஆமாம்”

 “தெரியாத ஒன்றை ஒருவரிடம் கற்கிற போது அவருக்கு குரு ஸ்தானம் தரணும். உனக்குத் தெரியாத ஒண்ணு அவருக்குத் தெரிஞ்சிருப்பதுதான் தகுதி. சிவபெருமான் முருகனுக்கு குரு ஸ்தானம் கொடுத்து பிரணவத்தின் அர்த்தத்தைக் கற்றுகிட்டதா ஒரு கதை உண்டு தெரியுமோ?”

 “ஆமாம், சுவாமிமலை”

 “அது சிவனின் பெருமையைக் காட்டுதா, முருகனின் பெருமையைக் காட்டுதா?”

 “சந்தேகமில்லாமல் சிவனின் பெருமையைத்தான் காட்டுது”

 “அப்போ நீ ஒருவரை குருவாக ஏற்கிற போது நீதான் உயர்ந்து நிற்கிறே என்பது சரிதானே?”

 “சரிதான்”

 “கூடிய விரைவில் உன் கண்களுக்கு குரு தென்படுவார்”

தும்மலை அடக்கினால் என்ன ஆகும்?

என்றைக்காவது தும்மலை அடக்க முயன்றிருக்கிறீர்களோ?

 அப்படி அடக்க முயன்றால் ஹக்ஸூ என்பதற்கு பதில் ஹெப்ஸீ என்றோ, ஹிக்ஸி என்றோ தும்முவீர்களே ஒழிய தும்மல் அடங்காது. எப்படித் தும்மல் நம் கட்டுப்பாட்டில் இல்லையோ அப்படித்தான் காமமும்.

 மறைப்பேன்மன் காமத்தை  யானோ குறிப்பின்றித்

தும்மல்போல் தோன்றி விடும்

 என்பார் வள்ளுவர்.

 தும்மல் என்பது ஏன் வருகிறது? ஜலதோஷம் பிடித்தாலோ அல்லது ஆகாத காற்றை (ஒவ்வாத மணமோ அல்லது தூசியோ இப்படி எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம்) சுவாசித்தாலோ வருகிறது. தும்மல் தோன்றாமல் இருக்க வேண்டுமானால் சுத்தமான காற்றை சுவாசிக்க வேண்டும், ஒவ்வாத மணங்களை நுகராமல் இருக்க வேண்டும். அதையெல்லாம் செய்து தும்மலை வரவழைத்து விட்டு அந்த ஸ்டேஜில் அதை அடக்குவது என்பது துர்லபம்.

 அதே போலத்தான் காமத்தை உண்டாக்கும் காட்சிகள், பேச்சுக்கள், எழுத்துக்கள், எண்ணங்கள், மனிதர்கள் இவைகளைத் தவிர்க்காமல் காமம் தோன்றிய பிறகு அதை அடக்க முயல்வதும்.

 Lust is an effect. It needs to be controlled at cause level என்பது வள்ளுவர் சொல்ல விழையும் கருத்து. Product audit செய்வதற்கு பதில் Process Audit செய்ய ஆரம்பித்த போதுதான் Quality Control ஆக இருந்த தொழில் Quality Assurance ஆக மாறியது.

ஜெயகாந்தனின் சமாளிஃபிகேஷனா இது?

ஜெயகாந்தன் தீவிர கம்யூனிஸ்ட்டாக இருந்த காலம் உண்டு.

 அப்போதும், அங்கிருந்து விலகிய பிறகும் கூட சோவியத் யூனியன் குறித்து மிகுந்த உயர்வான அபிப்ராயங்களைக் கொண்டிருந்தவர். சோவியத் யூனியன்தான் உலகுக்கே வழிகாட்டி என்று சொன்னவர் அந்த எண்ணத்தை மாற்றிக் கொள்ள வேண்டிய காலம் வந்தது. அப்படி மாற்றிக் கொள்ள வேண்டியதற்குக் காரணம் சோவியத் யூனியனில் நிகழ்ந்த மாறுதல்களே.

 ஆனால் தன் நிலைப்பாட்டு மாறுதலை அவர் விளக்கும் போது பொத்தாம் பொதுவில் சோவியத் மீது பழி போடவில்லை. அவர் சொன்ன விளக்கமும் சுவாரஸ்யமானது.

 “………………. மறுக்கவில்லை. ஆனால் அதைப் பொய்யென்று காலம் நிரூபித்து விட்டது. அப்படியானால் நான் என் விருப்பத்தைச் சொன்னேன் என்றுதானே புரிந்து கொள்ள வேண்டும்?”

 இதை உலக மகா சமாளிஃபிகேஷன் என்றும் எடுத்துக் கொள்ளலாம். வேறு மாதிரியும் எடுத்துக் கொள்ளலாம்.

 தக்கார் தகவிலார் என்பது அவரவர்

எச்சத்தாற் காணப் படும்

 என்கிற குறள் மீது மிகுந்த பற்றும் நம்பிக்கையும் கொண்டவர் ஜெயகாந்தன் என்பதைப் பல்வேறு சந்தர்ப்பங்களில் பதிவு செய்திருக்கிறார். ஒரு நிகழ்வோ அல்லது மனிதரோ அல்லது அமைப்போ சம காலத்தில் உண்டாக்கும் தாக்கங்களை விட தங்களுக்குப் பின்னால் நெடுங்காலம் இந்தச் சமூகத்தால் எப்படி அறியப்படுகிறார்கள் என்பதை வைத்தே தகுதிகள் முடிவு செய்யப்பட வேண்டும். காலம் அதைப் பொய்யென்று நிரூபித்து விட்டது என்று சொல்லும் போது ஜெயகாந்தன் இதைத்தான் உணர்த்துகிறார்.

 Desire, Goal, Achievement இந்த மூன்றுக்கும் ஒரு சுவாரஸ்யமான தொடர்பு உண்டு. ஒன்றைச் சாதிக்க முதல் தேவை Desire. ஒரு இலக்கை நிர்ணயிக்கிறோம். அந்த இலக்கை அடைந்து விட்டால்தான் அதை இலக்கு – Goal என்று சொல்ல முடியும். இல்லாவிட்டால் அது வெறும் Desire தான்.

 A desire becomes a goal only when it is reached; else, it is just a desire என்று அவர் சொல்வதாகவும் எடுத்துக் கொள்ளலாம்.

எத்தனை முனியாண்டி வந்தாலும்…

பல வருஷங்கள் கழித்து நானும் என் நண்பனும் எங்கள் கிராமத்தில் அதிகாலை வாக்கிங் போய்க் கொண்டிருந்தோம்.

 மாடு மேய்த்துக் கொண்டிருந்த ஒரு ஆள் குளத்தில் இறங்கி கைகால் கழுவிக் கொண்டான். அரச மரத்தடியில் இருந்த பிள்ளையாரிடம் வந்து மளமளவென்று ஐந்தாறு தோப்புக்கரணம் போட்டான்; தலையில் குட்டிக் கொண்டான். பிறகு பிள்ளையாரை சுற்ற ஆரம்பித்தான்.

 என் நண்பன் அவனைப் பார்த்து “என்னய்யா.. எக்ஸர்சைஸ் பண்ணியாச்சு, தலைல அடிச்சிகிட்டாச்சு. பிள்ளையார் லாட்டரில லட்ச ரூபா குடுத்துடுவாரா?” என்றான்.

 மாட்டுக்காரன் பதிலேதும் சொல்லவில்லை. சிரித்துக் கொண்டே பிள்ளையாரை சுற்றினான்.

 “எத்தனை முனியாண்டி வந்தாலும் உங்களையெல்லாம் திருத்த முடியாதுடா” என்றான் தொடர்ந்து.

 எங்க ஊர்க்காரர்கள் எல்லாருமே இதை அடிக்கடி சொல்வார்கள். அவர்களுக்கெல்லாம் முனியாண்டி ஒரு பூலோக மாமேதை.

 சுற்றி முடித்து வந்த அவன் என் நண்பனைப் பார்த்து, “ஐயா ராத்திரி எல்லாம் தூங்கி இருக்கோம். உடம்பு சோர்ந்து இருக்கும். மூளை வேலை செய்யாது. கொஞ்சம் உடல்பயிற்சி பண்ணி தலையைத் தட்டி விட்டா உடம்பும் மூளையும் ஃப்ரெஸ்ஸா இருக்குங்க” என்றான்.

 “அதை பிளே கிரௌண்ட்ல போய் பண்ண வேண்டியதுதானே?”

 “இல்லீங்க.. அரச மரக் காத்து உடம்புக்கு நல்லதுங்க. அரச மர வேர்லேர்ந்து வைத்யரு நிறைய மருந்தெல்லாம் கூட செய்யறாருங்க. இதையெல்லாம் புள்ளைங்க கிட்டே சொன்னா புரியாதுங்க. எடக்கு மடக்கா கேள்வி கேக்குங்க. ஆனா புள்ளைங்களுக்கு இந்த நல்லது நடக்கணும்ங்கிறதுக்காக பெரியவங்க இங்க ஒரு புள்ளையாரை வச்சி போய் தோப்புக்கரணம் போட்டு தலைல குட்டிக்க புள்ளையார் நல்ல புத்தி குடுப்பாருன்னு சொன்னாங்க”

 அவன் போய் விட்டான்.

 “கொஞ்சம் ஒய்வுக்கப்புறம் வேலை ஆரம்பிக்கணும்ன்னா முதல்லே வார்மிங் அப் எக்ஸர்ஸைஸ் பண்ணுவாங்க. அது மட்டுமில்லை, உக்காந்து உக்காந்து எழுந்திருக்கிறப்போ தலையில் ரத்தம் போறதும் டிரைன் ஆகிறதுமா மாறி மாறி நடக்கும். அது ஒரு பர்ஜிங் மாதிரி. தலையில் குட்டிக்கும் போது செரிப்ரல் கார்ட்டெக்ஸின் ஃப்ரண்ட் லோபில் புதுசா ரீஜெனரேட் ஆன செல்கள் வேலை செய்ய ஆரம்பிக்கும். இதைத்தான் மாட்டுக்கார வேலு சொல்லிட்டுப் போறாரு” என்றேன்.

 “யோசிக்க வேண்டிய விஷயம்தான். எத்தனையோ விஞ்ஞானிங்க இருந்தும் முனியாண்டியைத் திருத்த முடியல்லை போலிருக்கே?”

 “முனியாண்டியைத் திருத்திகிட்டிருக்கிற வேலையை விஞ்ஞானிங்க பண்ண மாட்டாங்க”

 “ஏன்?”

 “ஒரு மாட்டுக்காரனுக்கு தெரிஞ்ச சாதாரண விஷயம் முனியாண்டிக்கு தெரியல்லையே.. அவனைப் போய் திருத்திகிட்டிருக்கிறது வேஸ்ட்டுதானே!”

ராமகிருஷ்ணரும் பெர்முடா டிரையாங்கிளும்

அமானுஷ்யமான விஷயங்கள் குறித்து எதையாவது கிளப்பி விட்டுக் கொண்டே இருப்பதில் நம் ஜனங்களுக்கு ஒரு அலாதி திருப்தி உண்டு.

ரோட்டில் போய்க் கொண்டிருந்த போது தலையில் தேங்காய் விழுந்தது என்பார்கள். சுவற்றில் காயப் போட்ட வேட்டி தீப்பிடித்து எரிந்தது என்பார்கள். திண்ணையில் வந்து உட்கார்ந்த பேய் கொட்டைப் பாக்கு கேட்டது என்பார்கள். கொஞ்ச காலம் ஆனதும் விஞ்ஞானம் கலந்த கதைகள் விட ஆரம்பித்தார்கள். அறுபதுகளில் பறக்கும் தட்டுக் கதைகள் அடிக்கடி வந்தன.

கொஞ்ச காலம் ஏதுமில்லாமல் இருந்தது.

கொஞ்ச நாள் முன்பு திருவண்ணாமலையில் ஒரு ஆள் திடீரென்று சிவகாசி ராக்கெட் மாதிரி நெட்டுக் குத்தலாகக் கிளம்பிப் பறந்தார் என்றார்கள். சதுரகிரியில் தாஜ்மஹால் பீடி சைஸில் இருந்த ஒரு சித்தர் பாறையிலிருந்து தண்ணீரில் குதித்துக் குதித்து விளையாடியதாகச் சொன்னார்கள்.

இந்தக் கிளப்பி விடுகிற திரில் நமக்கு மட்டும்தானா? உலகின் மிகப் பெரிய புரளியான பெர்மூடா டிரயாங்கிள் அமெரிக்கர்களின் கிளப்பி விடல்தானே? அது குறித்து நிறையப் படிக்கும் ஆர்வம் ரொம்ப காலமாய் எனக்கு உண்டு. இப்போதுதான் நேரமும், சந்தர்ப்பமும் கிடைத்தது.

வட அட்லாண்ட்டிக் கடலில் பெர்மூடா என்று ஒரு தீவுக் கூட்டம் இருக்கிறது. 1505ம் ஆண்டு ஸ்பெய்ன் கப்பல் கேப்டன் ஜுவான் டீ பெர்மூடஸ் என்கிறவர்தான் முதன் முதலாக இதைக் கண்டு பிடித்தவர். அவருடைய பெயரே தீவுக்கு வைக்கப்பட்டது. இந்த பெர்மூடாவை ஒரு முனையாகவும், ப்யுயெர்ட்டோ ரிக்கோவை ஒரு முனையாகவும்,      மெக்ஸிகோ வளைகுடாவின் ஃப்ளோரிடாவை ஒரு முனையாகவும் வைத்து வரையப்பட்ட கற்பனை முக்கோணம்தான் பெர்முடா டிரையாங்கிள்.

Bermuda_TriangleJ

1945 தொடங்கி இந்தப் பகுதி வழியாகப் போன பல கப்பல்களும் விமானங்களும் காக்கா ஓஷ் ஆகிவிட்டதாகக் கதைகள் நிறைய உண்டு. இந்தக் காக்கா ஓஷ்களில் அமெரிக்கக் கடற்படையின் போர் விமானம் ஃப்ளைட்-19 ம் அடக்கம். இந்தப் பக்கம் போகிற கப்பல்களும் விமானங்களும் கம்ப்ளீட்டாக கபளீகரம் ஆகி விடுவதாக ஒரு தோற்றத்தை உண்டு பண்ண கங்கணம் கட்டிக் கொண்டு ஒரு கூட்டமே அலைந்தது. இந்த விளையாட்டை ஆரம்பித்து வைத்தவர் அஸ்ஸோஸியேட்டட் பிரஸ் என்கிற அமெரிக்கச் செய்தி நிறுவனத்தின் எட்வர்ட் வேன் விங்கிள் ஜோன்ஸ். 1950, செப்டம்பர் 17ம் தேதி மியாமி ஹெரால்ட் இதழில் இவர் எழுதிய செய்திக் கட்டுரைதான் முதல் காக்கா ஓஷ் செய்தி. இதில் பல அமானுஷ்ய மறைவுகளைப் படம் வரைந்து பாகம் குறித்திருக்கிறார்.

Bermuda-2J

இந்தப் புரளி வித்தை 1972 வரை தொடர்ந்தபடி இருந்தது.

1972 இல் SS VA Fogg என்கிற கப்பலின் விபத்தும் காக்கா ஓஷாகச் சித்தரிக்கப்பட்டது. அமெரிக்கக் கடற்காவல் படையினர் இந்தக் கப்பலின் சிதைந்த பாகங்களையும், இறந்தவர்களின் உடல்களையும் மீட்டு வந்து ஃபோட்டோக்களும் போட்டு இந்தச் செய்தியை முறியடித்தார்கள். அதற்கப்புறம் கொஞ்சம் குறையத் தொடங்கிற்று.

1975ம் ஆண்டு லாரன்ஸ் டேவிட் குஷே என்கிறவர் எழுதிய The Bermuda Triangle Mystery : Solved இந்தச் சமாச்சாரத்துக்கு கிட்டத்தட்ட முற்றுப் புள்ளி வைத்தது. விமானங்களும், கப்பல்களும் காணாமல் போவதில் இதர கடல் பகுதிகளை விட இந்தப் பகுதி ஒன்றும் எண்ணிக்கையில் மிகையானதே அல்ல என்கிறார். முணுக்கென்றால் காற்றழுத்தத் தாழ்வும், டிராப்பிக்கல் ஸ்டார்மும் வருவதாகச் சித்தரிக்கிற ஒரு பகுதியில் இவ்வளவு குறைவான காணாமல் போதல்கள் நிகழ்ந்திருப்பது பொருத்தமில்லை. பல சம்பவங்கள் ஆரோக்யமான வாநிலையிலேயே நிகழ்ந்துள்ளன. கானாமல் போனதாகச் சொல்லப்பட்ட சில கலன்கள் கரை சேர்ந்த செய்திகள் வெளிவரவில்லை என்பதால் மிகைப்படுத்தல்கள் அதிகம். சில சம்பவங்கள் நடக்கவே இல்லை; 1937 இல் ஃப்ளோரிடாவின் டேட்டோனா என்கிற இடத்தில் நூற்றுக் கணக்கானவர்கள் கண்ணெதிரே நடந்ததாகக் கூறப்பட்ட சம்பவம் விசாரிக்கப்பட்ட போது சம்பந்தப்பட்ட யாருக்குமே தெரிந்திருக்கவில்லை. இன்னும் பல ஆதாரங்கள் சொல்லி பெர்முடா முக்கோணம் என்பது புரியாதவர்களோ அல்லது புரிந்தவர்கள் பரபரப்புக்காகவோ கிளப்பி விட்ட சமாச்சாரம் என்று சொல்லியிருக்கிறார்.

1992 இல் சேனல் 4 தயாரித்த நிகழ்ச்சியொன்றில் லாயிட்ஸ் ஆஃப் லண்டன் என்கிற இன்ஷ்யூரன்ஸ் நிறுவனம் சொன்ன கருத்து குறிப்பிடத் தக்கது. இந்தப் பகுதியில் காணாமல் போகும் விமானங்கள் மற்றும் கப்பல்களின் எண்ணிக்கையொன்றும் அசாதாரணமானது அல்ல என்றும் பிரிமியம் கூடுதலாக வசூலிப்பதில்லை என்றும் அவர்கள் தெரிவித்தார்கள். இன்ஷூரன்ஸ் கம்பெனி சொன்னால் இறைவனே சொன்னது போல. அத்தனை எளிதில் அவர்கள் ஏமாற மாட்டார்கள்.

அமெரிக்கக் கடற்படையின் கருத்துப்படி பெர்மூடா முக்கோணம் என்று எதுவுமே கிடையாது. அமெரிக்க பூகோளப் பெயர்கள் கழகம் (பூகோளம் சம்பந்தமான தீர்வு கிடைக்காத கேள்விகள் அனைத்திற்கும் தீர்வு சொல்லும் அதிகாரம் வழங்கப்பட்ட அமைப்பு. இந்த அமைப்பு சொல்கிற தீர்வுகளை தொடர்புடைய எல்லாத் துறைகளும் ஏற்க வேண்டும்) இப்படி ஒரு பெயரை அங்கீகரிக்கவே இல்லை.

இந்த நிகழ்வுகளுக்கு அமானுஷ்யக் காரணங்கள் சொல்லும் விட்டலாச்சாரிய குரூப் ஒன்று இருக்கிறது. அது சொல்லும் காரணங்கள் : கி.மு. 9600ம் ஆண்டில் இருந்ததாக கிரேக்கப் புராணம் சொல்லும் அட்லாண்ட்டாக் கண்டம் இங்கேதான் புதைந்திருக்கிறது. அதன் மாய சக்திதான் இது என்று ஆதாரப் பூர்வமான பூச்சுற்றல் ஒன்று. துர்தேவதைகளின் மாயம் என்று தெலுங்குப் படம் போல இன்னொன்று. இதைப் பறக்கும்தட்டுக்களுடன் (UFO) இணைக்கும் விஞ்ஞான ரீல் கூட்டம் ஒன்று.

கொஞ்சம் லாஜிக்கலாக யோசிக்கிறவர்கள் காற்றழுத்தத் தாழ்வு அடிக்கடி நிகழ்வது, டிராப்பிக்கல் ஸ்டார்ம் என்கிற சுழற்காற்று உள்ளிட்ட சில விஷயங்களைக் காரணமாகச் சொல்கிறார்கள். அவைகளில் ஒரு காரணம் என்னைக் கவர்ந்தது.

அந்தப் பகுதியில் திசைகாட்டும் கருவிகளின் செயல்பாட்டைக் குலைக்கிற காந்த விசைகள் இருப்பதாகவும், அதனால் திசைமாறிப் போய்விடுவதாகவும் ஒரு கருத்து இருக்கிறது. இது என் கவனத்தைக் கவரக் காரணம் ராமகிருஷ்ண பரமஹம்ஸர் சொன்ன ஒரு செய்தி :

“சமுத்திரத்தின் கீழ் உள்ள காந்தக்கல் மலை தண்ணீரின் மீது போகும் கப்பலை இழுத்து அதிலிருக்கும் இரும்பு ஆணிகளிப் பிடுங்கி பலகைகளை வெவ்வேறாகிப் பிரித்துக் கடலுக்குள் மூழ்க அடிக்கிறது………” கடவுளின் மஹாசக்தி மனிதனின் அகம்பாவத்தை நொடிப்பொழுதில் காணாமல் அடித்துத் தன்பால் இழுக்கவல்லது என்பதைச் சொல்ல அவர் சொன்ன உதாரணம் இது.

பெர்மூடா டிரையாங்கிள் சமாச்சாரங்கள் பேசப்படுமுன்னரே 1886ம் ஆண்டு அவர் இறந்து விட்டது குறிப்பிடத் தக்கது.

இண்டர்வியூ அட்டெண்ட் பண்ண டிப்ஸ்

BSNL ன் ராஜிவ் காந்தி நினைவு தொழிற்பயிற்சி மையத்தின் தலைவர் திரு. பாபு ஸ்ரீநிவாஸ் ரெயின்போ FM (101.4) இல் வேலைவாய்ப்புகள் மற்றும் அவை தொடர்பான பயிற்சிகள் குறித்துப் பேசிக் கொண்டிருந்தார். மாணவர் ஒருவர் In Plant Training இல் Campus Interview வை எவ்விதம் எதிர்கொள்வது என்பது குறித்தும் பயிற்சி தருமாறு விண்ணப்பம் செய்து கொண்டார். திரு. பாபு ஸ்ரீநிவாஸ் இதை உடனடியாக ஒரு ஆலோசனையாக ஏற்றுக் கொண்டார்.

எழுத்தாளர் சுஜாதா ஒரு முறை இது குறித்து எழுதியிருந்தார். உட்கார்ந்தவுடன் ஃபைலை நீட்டாதீர்கள், கேட்ட பிறகு கொடுங்கள்; தெரியாது என்றால் தெரியாது என்று சொல்லுங்கள்; கேட்டதற்கு மட்டும் பதில் சொல்லுங்கள்; அவர்கள் நிறுவனம் குறித்து உங்களுக்குத் தேவைப்படும் தகவல்களைக் கேளுங்கள்… என்பது மாதிரி விஷயங்கள் சொல்லியிருந்தார்.

நானும் கூட அவ்வப்போது இண்டர்வியூ கமிட்டியில் இருந்திருக்கிறேன். கேண்டிடேட்டைக் கவனிப்பதை விட இண்டர்வியூ செய்பவர்களை அதிகம் கவனிப்பேன். வந்தவனுக்கு என்ன தெரியும் அல்லது தெரிய வேண்டும் என்பதை விடத் தனக்கு என்னென்ன தெரியும் என்று காண்பித்துக் கொள்ளும் அவசரம் அவர்களிடம் தெரியும். பொதுவாக அழகன் படத்து எ ரோஸ் இஸ் எ ரோஸ் இஸ் எ ரோஸ் ஆட்டிட்யூட் அவர்களிடம் தெரியும்.

சிங்க்ரோ ஹைவாக் வேக்யூம் பம்ப் எப்படி வேலை செய்கிறது?

ஆக்டேன் வேல்யூவை எப்படி இம்ப்ரூவ் பண்ணலாம்?

கார்பன் ஒரு கண்டக்டரா?

என்பது மாதிரியெல்லாம் கேள்விகள் கேட்டு கேண்டிடேட்டின் முழியைப் பிதுங்கச் செய்து கொண்டிருப்பார்கள். அவ்வப்போது தங்கள் பாஸையும் யூனிட் ஹெட்டையும் பெருமையாக ஒரு பார்வை பார்த்துக் கொள்வார்கள். இது மாதிரி ஆசாமிகளை எப்படி ஃபேஸ் செய்வது என்று டிரைனிங் கொடுப்பது அசாத்தியம். ஒரு இண்டர்வியூ பேனல் மெம்பராக எதெல்லாம் எனக்குப் பிடிக்காது என்று என்னால் சொல்ல முடியும்.

சூயிங்-கம் மென்றபடி வருவது, சொல்வதற்கு முன்னாலேயே உட்கார்வது, கால் மேல் கால் போட்டு உட்கார்வது இதெல்லாம் இருந்தால் அவர்களின் ஆட்டிட்யூடைக் கொஞ்சம் ஆழ்ந்து செக் செய்ய ஆரம்பிப்பேன். தலை முடியை பிளீச் செய்வது, ஸ்ட்ரைட்டனிங் என்கிற பெயரில் வேற்றுக் கிரகத்து ஆசாமி போல வருவது, காரே பூரே என்று கட்டிங் செய்து கொள்வது, ஒற்றைக் காதில் கடுக்கன் என்பது போன்ற கோமாளித்தனங்கள் இருந்தால் ஆட்டிட்யூடுக்கு உடனே சைஃபர் மார்க் போட்டு விடுவேன். மேற்சொன்ன கந்தர்கோலங்களுக்கு அவர்கள் சொல்லும் பெயர் இன் திங்! என்னைப் பொறுத்தவரை இன் திங் இருந்தாலே அவன் அவுட் ஆஃப் தி திங்.

பலகோடி அர்ஜுணர்களும் சிலநூறு கௌரவர்களும்-2

(முதல் அத்தியாயத்தைப் படிக்க இங்கே சொடுக்கவும்)

”சரி சொல்லு. பொருளாதார வளர்ச்சி மட்டுமே ஒரு நாட்டின் வளர்ச்சியைக் காட்டுமா? கலாச்சார வளர்ச்சிக்குத் திட்டங்கள் போடப்படணும்ன்னு சின்மயானந்தா சொல்றாரே அதை நீ ஒத்துக்கிறியா?”

“அதை ஒப்புக்கிறதா இல்லையான்னு ஒரு முடிவுக்கு வர்ரதுக்குள்ளே எனக்கு சில சந்தேகங்கள் இருக்கு. முதல்லே அதை டிஸ்கஸ் பண்ணிடலாமா?”

“என்னது?”

“நாகரிகம், கலாச்சாரம் இரண்டுக்கும் ஏதாவது வேறுபாடு இருக்கா?”

“சுவாரஸ்யமான கேள்வி. லெட் மி திங்க். பொதுப்படையா பார்க்கிறப்போ வேறே வேறே மாதிரிதான் தெரியுது. ஆனா ரெண்டுமே ஒரே விஷயத்தின் வெவ்வேறு நிலைகள்ங்கிறதுதான் நிஜம்”

“எப்படிச் சொல்றே?”

“பகுத்தறிவைப் பயன்படுத்த ஆரம்பிச்சதும்தான் மனித இனமே தோன்றிச்சு. மிருகங்கள்ளேர்ந்து மனிதனை வேறுபடுத்திக் காட்டுகிற குணங்கள்ளதான் நாகரிகம் தொடங்கிச்சு. இன்னும் கொஞ்சம் வாழ்க்கைத் தரத்தை உயர்த்திக்கிற வழக்கங்களைக் கலாச்சாரம்ன்னு சொல்லலாம்”

“அதாவது, நாகரிகத்தின் பரிணாம வளர்ச்சிதான் கலாச்சாரம்ன்னு சொல்றே?”

“கரெக்ட்”

“நாகரிகத்துக்கு சில உதாரணங்கள் சொல்லு?”

“ஆரம்பம்ங்கிறதினாலே அடிப்படைத் தேவைகள்ளதான் நாகரிகம் தொடங்கியிருக்கும். அதாவது, முதல்ல உணவு. குரங்குகள் காய், கனிகளைத் தின்னு காலங்கழிச்சிகிட்டு இருந்தது. மனிதனா பரிணாம வளர்ச்சி வந்ததும் உணவுகள் மெல்ல மெல்ல விரிவடைஞ்சது. சமைத்த உணவைச் சாப்பிடறது, காரம், உப்பு, புளிப்புன்னு பல சுவைகளைத் தேடி சரிவிகிதமா கலந்து சாப்பிட ஆரம்பிச்சது.. அப்படியே போய் இன்னைக்கு பீஸா வரைக்கும் வந்திருக்கு”

“சரி. உணவில எந்த இடத்தில நாகரிகம் மறைஞ்சி கலாச்சாரம் தொடங்கிச்சு?”

“அப்படிப் பின் பாயிண்ட்டா இதுதான் கட் ஆஃப்ன்னு சொல்ல முடியாது. ஒவ்வொரு ஸ்டேஜும் முன் ஸ்டேஜிலிருந்து ஒரு படி மாறியிருக்கும். இப்ப, இந்த நிமிஷம் பார்த்தா சமைத்த உணவைச் சாப்பிட்டது நாகரிகமாவும், வடை, பாயசத்தோட ரசம், சாம்பாரெல்லாம் சாப்பிடறது கலாச்சாரம்ன்னும் சொல்லலாம்”

“அப்ப சமைக்காத உணவைச் சாப்பிடறது அநாகரிகமா?”

“இப்படி பார்த்திபன் வடிவேலு கிட்டே கேட்கிற மாதிரி குண்டக்க மண்டக்க கேள்வி கேட்கக் கூடாது. சமைச்ச உணவு எளிதா ஜீரணம் ஆகுது. சுவை அதிகமா இருக்கு. அதனால பண்றோம். சமைக்கிறது நாகரிகத்தின் தொடக்கம்ன்னா சமைக்காதது அநாகரிகமான்னா என்ன சொல்றது?”

“தியரிட்டிக்கலா அதுதான் லாஜிக்ன்னாலும் அதைச் சொல்ல தயக்கமா இருக்கில்ல?”

“ஆமாம்”

“ஏன்னா, இந்த நாகரிகம், கலாச்சாரம் எல்லாமே தேவை அடிப்படையில் வந்த மாற்றங்கள்ங்கிறதுதான் நிஜம். அப்படித் தேவையின் அடிப்படையில் வந்தாலும் நாட்டுக்கு நாடு மாறுபடுது. காரணம் ஒரு நாட்டின் தட்பவெப்பம், பூகோள அமைப்பு இதையெல்லாம் பொறுத்து தேவைகளைப் பூர்த்தி செய்துக்கிற முறைகள் மாறுபடும். எஸ்கிமோக்களால அரிசி சோறு திங்கவும் முடியாது தேவையும் இல்லை. கீழை நாடுகள் எல்லாம் டிராப்பிக்கல் தேசங்கள். மேலை நாடுகள் ஆர்க்டிக் தேசங்கள். இரண்டிலும் விளையக் கூடிய பொருட்கள்ள வேறுபாடுகள் இருக்கு. மனிதனுக்கு இந்த சீதோஷ்ணங்களை எதிர்கொள்ள சாப்பிட வேண்டிய உணவுகள்ளயும் வேறுபாடு இருக்கு. வட இந்தியாவில சப்பாத்தி அதிகம் சாப்பிடுகிற வழக்கம் குளிரை எதிர்கொள்கிற சக்தி கோதுமைக்கு இருக்கிறதுதான்.”

”சரிதான். உணவு, உடை, இருப்பிடம் எல்லாத்துக்கும் இது பொருந்தும்தான். கலாச்சாரம்ன்னு சொல்லும் போது வேறே சில முக்கிய ஃபீச்சர்ஸ் உண்டே? உதாரணத்துக்கு ஒருவனுக்கு ஒருத்தி, கற்பு இதெல்லாம்?”

“ஒருதாரம் வெச்சிக்கிறதா, பலதாரம் வெச்சிக்கிறதாங்கிறதெல்லாம் அஃபோர்டபிலிட்டி. ராஜாக்கள் பலர் பலதாரம் வெச்சிருந்தாங்க. இந்து திருமணச் சட்டம்ன்னு ஒண்ணு வர்ர வரைக்கும் பலதார மணங்கள் இருந்துகிட்டுத்தான் இருந்தது.”

“அப்ப கற்பு?”

“கற்புங்கிறது ஆரோக்யத்தின் அடிப்படையில் வந்தது. ஒன் டு ஒன்ங்கும் போது ரிலையபிலிட்டி அதிகம். வெளியிலேர்ந்து எந்த சீக்கும் வந்துடாதுங்கிற கான்ஃபிடென்ஸ் இருக்கும்”

“ஸோ கலாச்சாரம்ங்கிறதே தேவைகளும், பூகோளமும் சம்பந்தப்பட்டவைங்கிறே”

“அதே”

“சரி. இப்ப சொல்லு. இதன் அடிப்படையில சின்மயானந்தா சொல்லியிருக்கிற விஷயத்தை எப்படிப் பார்ப்பே?”

“கலாச்சாரத்தை ஒண்ணும் திட்டம் போட்டு வளர்க்கத் தேவையில்லை. காலப் போக்கில் தேவைகளுக்கு ஏற்ப அது வளர்ந்துகிட்டுத்தான் இருக்கும்”

”இருக்கலாம். ஆனா சின்மயானந்தா சொல்ல வர்ர விஷயம் வேறே”

“என்ன அது?”

“தேவைகளும் பூகோளமும் மட்டுமே தீர்மானிக்கிற கலாச்சாரம் சர்வைவலுக்குத்தான் பயன்படும். நேத்து குரங்கு, இன்னைக்கு மனிதன். நாளைக்கு வேறே ஒரு உயர்வான நிலைக்குப் போக வேண்டாமா?”

“ம்ம்ம்ம்….. யெஸ்…. போனா நல்லாத்தான் இருக்கும்”

“அப்போ இந்த கலாச்சாரம் கட்டுப்பாடான கலாச்சாரமா இருக்கணும். தேவைகள், பூகோளம் நீங்கலா வேறு சில ஃபேக்டர்ஸும் கலாச்சாரத்தைத் தீர்மானிக்கறதிலே ஒரு அங்கமா இருக்கணும்”

“யெஸ்… சௌண்ட்ஸ் லாஜிக்கல். எப்படிப் பண்றது?”

“பகவத் கீதையில அந்த வழிமுறைகள் இருக்கிறதாச் சொல்றாரு. ஃபர்தரா படிச்சாத் தெரியும்”

“படிச்சப்புறம் எனக்கும் சொல்லேன்”

“ஷ்யூர்.. படிக்கப் படிக்க ஷேர் பண்ணிக்கிறேன்”

“சரி, பலகோடி அர்ஜுணர்களும் சில நூறு கௌரவர்களும்ங்கிற இடத்துக்கு நம்ம பேச்சு இன்னும் வரவே இல்லையே?”

“வரும்.. வெய்ட் பண்ணு”