ஆன்மிகம்

குரு உசத்தியா, சீடன் உசத்தியா?

”’நீ தயாராக இருக்கும் போது குரு தோன்றுவார்’ என்று சொல்வார்களே, அதற்கு அர்த்தம் தெரியுமோ?”

 “சீடனாக இருப்பதற்கு சில தகுதிகளோ அல்லது குறைந்தபட்சம் ஏதாவது ஒரு தகுதியோ அவசியம். அந்தத் தகுதியைப் பெற்று விட்டால் இத்தனை நாள் தேடியும் புலப்படாத குரு, தானே வலிய தென்படுவார் அப்டீன்னு அர்த்தம் பண்ணிக்கறேன்”

 “ரொம்ப சரி. அந்தத் தகுதி என்னன்னும் தெரியுமா?”

 “ஒருவரை குருவாக ஏற்கிற பக்குவம்”

 “அந்தப் பக்குவம் ஏன் இல்லாமல் போகிறது?”

 “அந்தப் பக்குவம் இல்லாமல் போகிறது என்பதை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன். தகுதியான குரு இன்னமும் என் கண்ணில் தென்படாததே காரணம்”

 “உனக்கு குருவாக இருக்க என்னென்ன தகுதிகள் இருக்கணும்ன்னு நினைக்கிறே?”

 “என்னை விட வயது, கல்வி, அனுபவம், அறிவு எல்லாம் அதிகமாக இருக்கிற ஒருவரா இருக்கணும் அவ்வளவுதான்”

 “அதாவது உன்னை விட எல்லா விதத்திலும் உயர்வா இருக்கிற ஒருவரை, ஆம், இவர் என்னை விட உயர்ந்தவர்தான் அப்டீன்னு ஒப்புக்குவே? அப்படித்தானே?”

 “ஆமாம்”

 “அப்படி ஒப்புக்கிறதுக்கு எந்த உயர்வும் அவசியமில்லையே? சொல்லப் போனா உயர்வே அவசியமில்லையே? ஒருவர் எல்லா விதத்திலும் உயர்ந்தவர்ன்னு ஒப்புக்கிறதை வேறே விதமாவும் சொல்லலாமே?”

“எப்படி?”

 “எல்லா விதத்திலும் நீ தாழ்ந்து இருக்கேன்னு ஒப்புக்கிறதாவும் சொல்லலாமில்லையா?”

 “அவரை விட”

 “வாட் எவர். அப்படி ஒரு கோணம் இருப்பது நிஜம்தானே?”

 “ஆமாம்”

 “ஒருத்தரை குருவாக ஏற்கிற போதே உன் உயர்வு வெளிப்படற மாதிரி இருந்தாத்தானே உனக்குச் சிறப்பு? உசத்தியை உசத்தின்னு ஒப்புக்க உயர்வு அவசியமில்லையே?”

 “ஆமாம்”

 “தெரியாத ஒன்றை ஒருவரிடம் கற்கிற போது அவருக்கு குரு ஸ்தானம் தரணும். உனக்குத் தெரியாத ஒண்ணு அவருக்குத் தெரிஞ்சிருப்பதுதான் தகுதி. சிவபெருமான் முருகனுக்கு குரு ஸ்தானம் கொடுத்து பிரணவத்தின் அர்த்தத்தைக் கற்றுகிட்டதா ஒரு கதை உண்டு தெரியுமோ?”

 “ஆமாம், சுவாமிமலை”

 “அது சிவனின் பெருமையைக் காட்டுதா, முருகனின் பெருமையைக் காட்டுதா?”

 “சந்தேகமில்லாமல் சிவனின் பெருமையைத்தான் காட்டுது”

 “அப்போ நீ ஒருவரை குருவாக ஏற்கிற போது நீதான் உயர்ந்து நிற்கிறே என்பது சரிதானே?”

 “சரிதான்”

 “கூடிய விரைவில் உன் கண்களுக்கு குரு தென்படுவார்”

Advertisements

இது போதும்

ஒரு அரசருக்கு எவ்வளவு செல்வம் சேர்த்தும், எத்தனை நாடுகளைப் பிடித்தும் திருப்தியே இல்லாமல் இருந்தது.

மனம் எப்போதும் சஞ்சலத்திலேயே இருந்தது. யார் யாரையோ கேட்டார், எந்தெந்தக் கோயிலுக்கோ போனார். எதிலும் பலனில்லை.

 ‘இது போதுமென்ற மனம்தான் திருப்தியும் சந்தோஷமும்’ என்று யாரோ சொன்னார்கள். அதைக் கேட்டதும் செல்வம் சேர்ப்பதையும், நாடு பிடிப்பதையும் அரசர் நிறுத்தி விட்டார். ஆனாலும் மனம் அமைதிப்படவில்லை. செய்வதறியாமல் தவித்த அரசரிடம் அவரது மந்திரி பக்கத்து ஊரில் இருந்த முனிவர் ஒருவரைப் பார்க்கும்படி சிபாரிசு செய்தார்.

 அரசர் அந்த முனிவரைச் சந்தித்தார்.

 “சுவாமி. இந்த உலகத்திலேயே அதிக செல்வமும் மிகப் பெரிய ராஜ்யமும் என்னுடையது. ஆனாலும் மனதில் இன்னும் அமைதியில்லை. இது போதுமென்ற மனம்தான் முக்கியம் என்றார்கள். அந்த மனப்பான்மைக்கும் வந்துவிட்டேன். ஆனாலும் நிம்மதியில்லை. என்ன செய்வது?” என்று கேட்டார்.

 “ரொம்ப சுலபம்” என்றார் முனிவர்.

 அரசருக்கு ஆச்சரியமாக இருந்தது. பல ஆண்டுகளாகக் கஷ்டப்பட்டுவிட்டு வந்தால் இவர் சுலபம் என்கிறாரே!

 “எப்படி சுவாமி?”

 “உன் ஆட்களை அனுப்பி ’இது போதும்’ என்கிற திருப்தியில் இருக்கிறவனை அழைத்து வரச் சொல். அவனுடைய வேட்டியை வாங்கி ஒருநாள் நீ அணிந்து கொள். உன் சஞ்சலம் உடனே அகன்று மனதில் திருப்தி ஏற்படும்”

 அரசர் உடனே தன் ஆட்களை எட்டுத் திசையும் அனுப்பினார்.

 இது போதும் என்கிற திருப்தி இருக்கிறவன் அத்தனை எளிதில் அகப்பட்டு விடுவானா? தேடினார்கள் தேடினார்கள், ஆறு மாதம் தேடினார்கள். கடைசியில் ஒருத்தன் அகப்பட்டான். அவனை அரசரிடம் அழைத்துப் போனார்கள்.

 அவனைப் பார்த்த அரசர் துணுக்குற்றார். அவன் வேட்டி, சட்டையே போட்டிருக்கவில்லை. ஒரு கோவணம் மட்டுமே கட்டியிருந்தான்.

 “உன் வேட்டி எங்கே?” என்றார் அவனைப் பார்த்து.

 “வேட்டி எதுக்கு ராஜா, இது போதும்” என்றான் அவன்.

 (என் நாலாங்கிளாஸ் வாத்தியார் சிங்காரம் பிள்ளை மாரல் இன்ஸ்ட்ரக்‌ஷன் வகுப்பில் சொன்ன கதையை ஃப்ரெட்ரிக் ஃபோர்சித்தின் நோ கம்பேக்ஸ் ஃபார்முலாவில் எழுத முயன்றிருக்கிறேன்)

எத்தனை முனியாண்டி வந்தாலும்…

பல வருஷங்கள் கழித்து நானும் என் நண்பனும் எங்கள் கிராமத்தில் அதிகாலை வாக்கிங் போய்க் கொண்டிருந்தோம்.

 மாடு மேய்த்துக் கொண்டிருந்த ஒரு ஆள் குளத்தில் இறங்கி கைகால் கழுவிக் கொண்டான். அரச மரத்தடியில் இருந்த பிள்ளையாரிடம் வந்து மளமளவென்று ஐந்தாறு தோப்புக்கரணம் போட்டான்; தலையில் குட்டிக் கொண்டான். பிறகு பிள்ளையாரை சுற்ற ஆரம்பித்தான்.

 என் நண்பன் அவனைப் பார்த்து “என்னய்யா.. எக்ஸர்சைஸ் பண்ணியாச்சு, தலைல அடிச்சிகிட்டாச்சு. பிள்ளையார் லாட்டரில லட்ச ரூபா குடுத்துடுவாரா?” என்றான்.

 மாட்டுக்காரன் பதிலேதும் சொல்லவில்லை. சிரித்துக் கொண்டே பிள்ளையாரை சுற்றினான்.

 “எத்தனை முனியாண்டி வந்தாலும் உங்களையெல்லாம் திருத்த முடியாதுடா” என்றான் தொடர்ந்து.

 எங்க ஊர்க்காரர்கள் எல்லாருமே இதை அடிக்கடி சொல்வார்கள். அவர்களுக்கெல்லாம் முனியாண்டி ஒரு பூலோக மாமேதை.

 சுற்றி முடித்து வந்த அவன் என் நண்பனைப் பார்த்து, “ஐயா ராத்திரி எல்லாம் தூங்கி இருக்கோம். உடம்பு சோர்ந்து இருக்கும். மூளை வேலை செய்யாது. கொஞ்சம் உடல்பயிற்சி பண்ணி தலையைத் தட்டி விட்டா உடம்பும் மூளையும் ஃப்ரெஸ்ஸா இருக்குங்க” என்றான்.

 “அதை பிளே கிரௌண்ட்ல போய் பண்ண வேண்டியதுதானே?”

 “இல்லீங்க.. அரச மரக் காத்து உடம்புக்கு நல்லதுங்க. அரச மர வேர்லேர்ந்து வைத்யரு நிறைய மருந்தெல்லாம் கூட செய்யறாருங்க. இதையெல்லாம் புள்ளைங்க கிட்டே சொன்னா புரியாதுங்க. எடக்கு மடக்கா கேள்வி கேக்குங்க. ஆனா புள்ளைங்களுக்கு இந்த நல்லது நடக்கணும்ங்கிறதுக்காக பெரியவங்க இங்க ஒரு புள்ளையாரை வச்சி போய் தோப்புக்கரணம் போட்டு தலைல குட்டிக்க புள்ளையார் நல்ல புத்தி குடுப்பாருன்னு சொன்னாங்க”

 அவன் போய் விட்டான்.

 “கொஞ்சம் ஒய்வுக்கப்புறம் வேலை ஆரம்பிக்கணும்ன்னா முதல்லே வார்மிங் அப் எக்ஸர்ஸைஸ் பண்ணுவாங்க. அது மட்டுமில்லை, உக்காந்து உக்காந்து எழுந்திருக்கிறப்போ தலையில் ரத்தம் போறதும் டிரைன் ஆகிறதுமா மாறி மாறி நடக்கும். அது ஒரு பர்ஜிங் மாதிரி. தலையில் குட்டிக்கும் போது செரிப்ரல் கார்ட்டெக்ஸின் ஃப்ரண்ட் லோபில் புதுசா ரீஜெனரேட் ஆன செல்கள் வேலை செய்ய ஆரம்பிக்கும். இதைத்தான் மாட்டுக்கார வேலு சொல்லிட்டுப் போறாரு” என்றேன்.

 “யோசிக்க வேண்டிய விஷயம்தான். எத்தனையோ விஞ்ஞானிங்க இருந்தும் முனியாண்டியைத் திருத்த முடியல்லை போலிருக்கே?”

 “முனியாண்டியைத் திருத்திகிட்டிருக்கிற வேலையை விஞ்ஞானிங்க பண்ண மாட்டாங்க”

 “ஏன்?”

 “ஒரு மாட்டுக்காரனுக்கு தெரிஞ்ச சாதாரண விஷயம் முனியாண்டிக்கு தெரியல்லையே.. அவனைப் போய் திருத்திகிட்டிருக்கிறது வேஸ்ட்டுதானே!”

பகுத்தறிவும் வாலில்லாக் குரங்குகளும்

பகுத்தறிவு என்பது ஒரு extra-human நிலையோ, superhuman நிலையோ அல்ல. It is quite human.

வாலில்லாக் குரங்குகளுக்கு ஏறக்குறைய மனிதர்கள் அளவு அறிவும் உணர்வுகளும் இருப்பதாகச் சொல்வார்கள். பகுத்தறிவைப் பயன்படுத்த ஆரம்பித்ததும் வால் முளைப்பது நின்று போனது என்று சொல்லலாம். இந்த நிலையின் அடுத்த பரிமாணம்தான் மனிதன் என்பதும் ஒரு பொதுவான நம்பிக்கை. Sensory organ கள் தருகிற இன்புட்களை எந்த பிராஸஸிங்கும் செய்யாமல் அப்படியே எடுத்துக் கொள்வது ஐந்தறிவு நிலை. அவைகளைப் பிராஸஸ் செய்து ஒரு அவுட்புட் டிர்ரைவ் செய்வது மனிதநிலை. இந்த பிராஸஸிங்தான் பகுத்தறிவு செய்கிற வேலை. ஆறாவது அறிவு.

இதற்கு மேற்பட்ட ஒருநிலை என்று ஒன்று இல்லாவிட்டால் கொஞ்ச காலத்தில் பழையபடி முந்தைய பரிமாணமான வாலில்லாக் குரங்கு நிலைக்குப் போய் விடுகிற அபாயம் உண்டு.(Darvin!) அதே சமயம் இந்த மேற்பட்ட நிலை மெல்ல வளர்ந்து கொண்டு போனால் மனிதனுக்கு அடுத்த பரிமாணத்தை அடையும் சாத்தியமும் இருக்கிறது.

அந்த மேற்பட்ட நிலை எல்லோருக்குமே கொஞ்சம் இருக்கிறது. Instinct என்கிற இன்புட்தான் அந்த அடுத்த நிலை. Instinct என்பது எந்த sensory organ லிருந்தும் வருவதல்ல. Decision making பற்றிச் சொல்லும் போது இந்த instinct க்கு ஒரு முக்கிய இடம் தருகிறார்கள்.

ஒரு முடிவை எடுப்பதற்கான எல்லா இன்புட்களும் இருந்துவிட்டால், வாலில்லாக் குரங்கே அந்த முடிவை எடுத்துவிட முடியும். சில இன்புட்கள் இல்லாதிருக்கும் போதுதான் மனிதன் தேவை. அப்போது கொஞ்சம் ரிஸ்க் எடுக்க வேண்டும், கொஞ்சம் instinct ஐப் பயன்படுத்த வேண்டும். எந்த விஷயத்தில் எவ்வளவு ரிஸ்க் எடுக்கலாம் என்று தீர்மானிக்க இந்த instinct பயன்படும். (குறிப்பு : இந்த instinct ஃபேக்டர் ஆண்களை விடப் பெண்களுக்கு அதிகம்!)

இந்த instinct அறிவு, அனுபவம் இவற்றாலும் வரலாம், அல்லது இது தவறாகப் போகாது என்கிற நம்பிக்கையிலும் வரலாம். அறிவு வளர்ச்சி என்பது ஞான யோகம். அனுபவம் என்பது கர்ம யோகம். நம்பிக்கை என்பது சரணாகதி, அதாவது பக்தி யோகம்.

அறிவை வளர்த்துக் கொள்ள நிறையக் கற்க வேண்டும் அதற்குக் கால அவகாசம் நிறைய அவசியம். அனுபவம் என்பதும் காலத்தின் அளவைத்தான் குறிக்கும். சரணாகதி உடம்பில் வலிமை இருக்கும் வரை வராது. அதனால்தான் பொதுவாக பக்தி யோகம் முதுமையில் வருகிறது. (அப்போதும் இல்லாமலும் இருப்பதுண்டு சிலருக்கு!)

எனக்கு instinct வேண்டும்; ஆனால் காத்திருக்க முடியாது, என்கிறவர்களுக்கு ஏதாவது இருக்கிறதா?

ஆம்.

அது என்ன?

தெரிந்து கொள்ள எத்தனை பேர் ஆவலாக இருக்கிறார்கள் என்று தெரிந்து கொண்ட பிறகே இதற்கு பதில் சொல்லப் போகிறேன்.

கிளி ஜோஸியமும் சில சாமியார்களும்

சமீபத்தில் ஒரு பெண் துறவியைச் சந்திக்க நேர்ந்தது.

ஆசிரமம் படாடோபமே இல்லாமல் நல்ல நிசப்தமான சூழலில் எளிமையாக இருக்கிறது.. சில உம்மாச்சி சிலைகள், அழகான நந்தவனம், கூரைவேய்ந்த ஒரு தியானக் கூடம். கூட்டமும் இல்லை. ஓரிருவர்தான் அவரைப் பார்க்க வந்திருந்தார்கள். துறவியின் குடிலும் அப்படியே. ரொம்ப லோ-மிடில் கிளாஸ் ரகம். குடிலுக்கு முன்னர் ஒரு கூரைக் கொட்டகை.

அவருக்கு வயது ஐம்பத்திச் சில்லரை இருக்கும். சின்ன பிளாஸ்டிக் நாற்காலியில் உட்கார்ந்திருந்தார். மார்பிலிருந்து முழங்கால் வரை குளிக்கப் போகும் பெண்கள் போல ஒரு பழைய துணியை சுற்றியிருந்தார். தலையில் ஜடாமுடி. அந்த ஜடாமுடிக்குச் சற்றும் பொருந்தாத ஒரு அமைதியான முகம்.

ரொம்பவும் டவுன் டு எர்த் பேசுகிறார். அழுத்தமான, ஆழ்ந்த குரல். நூற்றி எண்பது டெஸிபல்! சவுண்ட் சர்வீஸ் உதவியின்றி தெரு முழுக்கக் கேட்கும். எல்லாரையுமே ஒருமையில்தான் விளிக்கிறார். என்னைப் படற்கையில் குறிப்பிடும் போது ’அவன்’ என்று குறிப்பிட்டார். பெண்களை சுவாதீனமாக ’என்னடி..’ என்று அட்ரஸ் செய்கிறார். அதெல்லாம் உறுத்தலாக இல்லை. ரொம்பப் பழகின மனிதர் உரிமையோடு பேசுகிற த்வனிதான் தெரிந்தது. கொஞ்சம் மாணிக்கவாசகர், கொஞ்சம் அப்பர், கொஞ்சம் மங்கையாழ்வார், கொஞ்சம் பாரதியார் பேசுகிறார். சில செய்யுள்களை அடிபிறழாமல் சொல்லி கருத்து சொல்கிறார். மனதில் நினைக்கிற சில விஷயங்களுக்கு அவைகளை நாம் வெளியில் சொல்லாமலே பதில் சொன்னபோது சற்று வியப்பு உண்டாயிற்று.

உதாரணம்,

துறவி : கடவுளை விட குரு சக்தி வாய்ந்தவர். கடவுள் தருகிறவற்றை அவரால் நிறுத்தி வைக்க முடியும். கடவுள் தர மறுப்பதை அவரால் பெற்றுத் தர முடியும். எல்லோரும் வாழ்க்கையில் ஒரு குருவைத் தேடி அடைய வேண்டும்.

நான் : (மனதுக்குள்) தேடிகிட்டுத்தான் இருக்கேன். யாரும் கிடைக்கல்லையே..

துறவி : தேடறதுன்னா சட்டைப் பையிலிருந்து விழுந்த சில்லரையைத் தேடுவது மாதிரி இல்லை. ஆத்மார்த்தமா, ஐம்புலன்களும் ஒன்றித் தேடணும். அழுது புரண்டு நீ எங்கே இருக்கே எப்போ என் கண்ல படுவேன்னு தேடணும்..

நான் : (மனதுக்குள்) தேடி யாராவது கிடைச்சிட்டாலும்? சாமியார்ன்னு சொல்லிக்கிற ஒரு பயலும் சரியில்லை.

துறவி : இருக்கிற எல்லாரையும் இவன் சரியில்லை, அவன் சரியில்லைன்னு ஒதுக்கிடறோம். பேப்பர்ல வர்ர விஷயங்களின் அடிப்படையில் அவங்க கேரக்டரை முடிவு பண்றோம். தப்பு பண்றவங்க இருக்காங்க, இல்லைன்னு சொல்லல்லை. பண்ணாதவங்களும் இருக்காங்க. பொறுமையா, முனைப்பா தேடினா கிடைப்பாங்க

நான் : (மனதுக்குள்) சேன்ஸே இல்லை. உயிரோட இருக்கிற எவனும் லாயக்கில்லை. சிலர் முட்டாள்கள். சிலர் வியாபாரிகள். சிலர் பொறுக்கித் தனத்தை மறைக்க மாறுவேடத்தில் இருக்கிறவர்கள்.

துறவி : உயர்ந்த மனிதர் ஒருத்தர் கூடவா கிடைக்கல்லை?

நான் : (மனதுக்குள்) விவேகானந்தர்தான் அவ்வளவு உயர்ந்தவர். அவர்தான் செத்துப் போய்ட்டாரே?

துறவி : குரு உயிரோட இருக்கிறவராத்தான் இருக்கணும்ன்னு யார் சொன்னது? என் குரு சதாசிவ பிரம்மம்தானே?

இது போல இன்னும் சில மனக் குரல்களுக்கும் பதில் கிடைத்தது. அந்த நிமிஷம் கொஞ்சம் சிலிர்த்துத்தான் போனேன். ஆனால் எங்களை அடுத்து அவரைச் சந்தித்த குரூப்பிடம் பேசியதைக் கவனித்த போது அந்த சிலிர்ப்பு கொஞ்சம் ஆட்டம் கண்டது. இடம் நிசப்தமாக இருந்ததால் தூரத்திலிருந்தே கேட்க முடிந்தது.

“என்னடா பிரச்சினை உனக்கு?”

“அம்மாவும் அப்பாவும் எப்பப் பாத்தாலும் சண்டை போட்டுகிட்டே இருக்காங்க”

“அதொண்ணும் புதிசில்லையே? அதைப் பத்தி உனக்கென்ன? அவங்க சண்டை போட்டுப்பாங்க, அவங்களே கூடிப்பாங்க”

“இல்லை.. ஒரு மாதிரி வீடே நிம்மதி இல்லாம இருக்கில்ல… அதனால….”

“உன் பிரச்சினை அதில்லை. உனக்கு ஒரு கல்யாணம் பண்ணி வைக்கணும்ங்கிற எண்ணமே அவங்களுக்கு வரல்லை”

“………………………………………………..”

“அவங்க பாத்தாலும் பாக்கல்லைன்னாலும் உனக்குன்னு பிறந்தவளை நீ சந்திக்கத்தான் போறே..”

தொடர்ந்து தடாலென்று கீழே விழுந்து நமஸ்காரம் பண்ணும் சப்தம்.

வரும்போது ’வேணும்ன்னா வாங்கிக்க’ என்று சில குறுந்தகடுகளை விற்றார்கள். மாதாஜி படம் பிரிண்ட் செய்த பொட்டலத்தில் விபூதி குங்குமம் தந்தார்கள். ’நவராத்திரி விழா விமரிசையாக நடக்கும்; வா’ என்று அழைத்தார்கள்.

நான் முதன்முதலில் மெயிண்டனன்ஸ் வேலையில் சேர்ந்த போது ஒரு எந்திரம் வேலை செய்யவில்லை என்கிற போது பெரிய்ய்ய புதிராக இருக்கும். ஆரம்பத்தில் பிரச்சினையைக் கண்டுபிடிக்க சில மணிநேரங்கள் கூட ஆகியிருக்கிறது. ஆனால் ஒரு வருடமோ, இரண்டு வருடங்களோ ஆன பிறகு தொட்டுப் பார்த்து, நுகர்ந்து பார்த்து, சில சமயம் வெறுமனே பார்த்தே பிரச்சினை இன்னதென்று கண்டுபிடித்து விடுகிற அளவுக்கு ஆனேன். சில சமயம் எந்திரத்தின் அருகில் போகாமல் கடந்த சில மணி நேரங்களில் என்ன ஆயிற்று என்பதை லாக் புக்கில் படித்தோ அல்லது ஆப்பரேட்டரிடம் பேசியோ கூட பிரச்சினை இன்னதென்று கண்டுபிடித்து விட முடியும்.

சம்பந்தப்பட்ட ஆப்பரேட்டர்கள் வியந்து போவார்கள்.

விஷயம் இதுதான். ஒரு குறிப்பிட்ட எந்திரத்தில் எழக்கூடிய பிரச்சினைகள் ஒரு சைக்கிள் கம்ப்ளீட் ஆக குறிப்பிட்ட காலம் ஆகும். சின்ன எந்திரம் என்றால் சில வாரங்கள், கொஞ்சம் பெரிதென்றால் மாதங்கள், இன்னும் பெரிதென்றால் வருடங்கள்.

மனிதர்களும் அப்படித்தான்.

மக்களின் பிரச்சினைகள் ஒரு சிறிய பட்டியலில் அடங்கிவிடக் கூடியவை. கல்யாணம் ஆகவில்லை. பொண்டாட்டி அல்லது புருஷன் சரியில்லை. குழந்தை இல்லை. வேலை கிடைக்கவில்லை. வீடு வாங்கவில்லை…. இத்யாதி. வயது, கல்வித் தகுதி, குடும்பச் சூழல், முகபாவம் இவைகளை வைத்து தினசரி முப்பது நாற்பது பேர்களைச் சந்திக்கும் ஒருவர் என்ன பிரச்சினை என்பதை ஊகிப்பது பெரிய விஷயமல்ல என்று தோன்றுகிறது. கொஞ்சம் பிராக்டிக்கல் சைக்காலஜி தெரிந்திருக்க வேண்டும்.

கிளி ஜோஸியக்காரர்கள் நாற்பது வயதைக் கடந்த சில ஆசாமிகளுக்கு ‘அவ எண்ணம் சரியில்ல.. கொஞ்சம் விலகியே இரு. இல்லைன்னா உன் பொண்டாட்டிக்கு சக்களத்தியா வந்துடுவா’ என்று சொல்லி நூறு ரூபாய் லக்கி பிரைஸ் அடிப்பதைப் பார்த்திருக்கிறேன்.

நான் சந்தித்த மாதாஜி ஒரு உன்னதமான ஆத்மாவாகக் கூட இருக்கலாம். என் ஆராய்ச்சிப் புத்தி என்னை இப்படியெல்லாம் நினைக்க வைக்கிறது.

உங்களுக்கு இப்படிப்பட்ட அனுபவங்கள் இருந்தால் பகிர்ந்து கொள்ளலாமே?

பலகோடி அர்ஜுணர்களும் சிலநூறு கௌரவர்களும்-1

”சின்மயானந்தாவின் The art of Man Making படிச்சிருக்கியா?”

 “முழுசா இன்னமும் படிக்கல்லை. ஆனா ரேண்டமா அங்க கொஞ்சம் இங்க கொஞ்சம்ன்னு படிக்கிறதுண்டு அப்பப்போ”

 “பரவாயில்லை. முதல் சில அத்தியாயங்கள் படிச்சாலே அவர் என்ன சொல்ல வர்ரார்ன்னு புரியும்”

 “யு ஆர் ரைட். மனிதர்களுக்கு வாழ்க்கையில திருப்தியும் சந்தோஷமும் கிடைக்க materialistic வளர்ச்சிகள் மட்டுமே போதாது. உண்மையில் அது மூன்றில் ஒரு பங்கு தேவைதான் என்கிற ரீதியில் சொல்றார்”

 “கரெக்ட். அதைப் பத்தி நீ என்ன நினைக்கிறே?”

 “சின்மயானந்தாவோட கருத்துக்களை சீர் தூக்கிப் பார்க்கிற அளவுக்கு நான் பெரிய்ய அப்பா டக்கர் இல்லை. அவர் சொல்றது புரிஞ்சாலே பெரிய விஷயம்.”

 “நீ சொல்றது சரி. மை காட்.. என்ன லேங்வேஜ் ஸ்கில் இல்லை?”

 “அதை லேங்வேஜ் ஸ்கில்ன்னு நான் சொல்ல மாட்டேன். அது வெறும் ஸ்கில் இல்லை. ரொம்பப் பவர்ஃபுல் லேங்வேஜ்”

 “என்ன வித்யாசாம்?”

 “வெறும் ஸ்கில்ன்னா அதில மொழிப் புலமை மட்டுமே இருக்கும். ஹை ஒக்காபிலரி, நிறைய்ய அட்ஜெக்டிவ்ஸ், காம்ப்லெக்ஸ் வாக்கியங்கள்ன்னு வாயைப் பிளந்து கிட்டு கேட்கிற மாதிரி நிறையப் பேர் பேசறாங்க. ஆனா சின்மயானந்தாவின் மொழிநடை அவர் சொல்ல வருகிற கருத்தை நமக்குச் செலுத்துகிற சக்தி நிறைந்ததா இருக்கு. அதனாலதான் பவர்ஃபுல்ன்னு சொன்னேன்”

 “இன்னும் கொஞ்சம் விளக்கமா, உதாரணத்தோட சொல்ல முடியுமா?”

 “டிரை பண்றேன். ஒரு குறிப்பிட்ட பகுதியைச் சொல்றேன் :

 Arjuna argues that he can not fulfill his duties towards his nation, and he brings forth a chain of empty arguments, all of them extremely sentimental and highly emotional. On the whole, Vyasa the author, demonstrates in Arjuna the total break up of the human personality under the stress and strain of its own immediate environment.

 அப்டீன்னு சொல்றார். நான்கைந்து வரிகள்தான்னாலும் அதில எத்தனை விஷயங்கள் இருக்குங்கிறது யோசிக்க வேண்டியது”

 “நீ என்ன யோசிச்சே?”

 “பேச்சும் செயலும் ஒன்றுக்கொன்று mutually exclusive.. அதனால….”

 “வெயிட், வெயிட்… பேச்சும் செயலும் ம்யூச்சுவலி எக்ஸ்க்ளூசிவா அல்லது Complimentary யா?”

 “கண்டிப்பா ம்யூச்சுவலி எக்ஸ்க்ளூசிவ்தான். எண்ணம் ஒண்ணு பேச்சா வெளிப்படுது, அல்லது செயலா வெளிப்படுது”

 “இல்லையே, உன்னையெல்லாம் சுட்டுத் தள்றதுதாண்டா சரின்னு சொல்லிகிட்டே ஷூட் பண்றாங்களே.. அங்கே பேச்சும் இருக்கு செயலும் இருக்கே?”

 “இவ்வளவு வயலண்ட் எக்ஸாம்ப்பிள் தேவையா? போகட்டும்; இருக்கலாம். செயலே வந்தப்புறம் பேச்சு ரிடண்டண்ட். காம்ப்ளிமெண்ட்ரின்னா அர்த்தம் வேறே. இரண்டு விஷயங்களின் தொகுதியாலதான் முழுமை கிடைக்கும் என்கிற மாதிரி இருக்கிற விஷயங்களைத்தான் காம்ப்ளிமெண்ட்ரின்னு சொல்ல முடியும்”

 “சரி, காம்ப்ளிமெண்ட்ரி இல்லைதான் ஒத்துக்கிறேன். ஆனால் செயல் வந்தப்புறம் பேச்சு ரிடண்டண்ட் என்கிறதை நான் ஒப்புக்க மாட்டேன். எண்ணம் செயலாக மட்டும் வெளிப்படும் போது அது பிடிவாதமாகவோ, பண்புக் குறைவாகவோ நினைக்கப்படுகிற சந்தர்ப்பங்கள் இருக்கு”

 “ஓக்கே.. அக்ரீட். அப்ப பேச்சும் செயலும் சில இடங்களில் supplementary யாக இருக்குன்னு அமெண்ட் பண்ணிக்கலாம். நான் சொல்ல வந்தது வேறே. நம்மால ஒரு விஷயத்தைப் பண்ண முடியாதப்ப மணிக்கணக்கில் நம்மால காரணங்களும் விளக்கமும் சொல்ல முடிகிறது, சொல்கிறோம். பல சமயம் சம்பந்தப்பட்ட செயலே பத்து நிமிஷத்தில் பண்ணி முடிக்கிற செயலா இருக்கும். வெத்துக் காரணங்களால் இயலாமையை மறைக்கிறது அடிப்படை மனித குணம். இதை இந்த சந்தர்ப்பத்தில் நினைவு படுத்திக்க முடியுது”

 “அர்ஜுணன் இயலாதவன். அவன் வெத்துக் காரணங்கள் சொன்னான்னு சொல்றியா?”

 “இயலாதவன்னு மொட்டையா சொன்னா அது அனர்த்தமா இருக்கும். பல வேலைகளைச் செய்ய நமக்கு தாற்காலிக இயலாமைகளும் இருப்பதுண்டு. அதற்கான காரணங்களும் ஜெனூயினா இருப்பதுண்டு. அதையெல்லாம் மறந்துட்டு இது என் கடமை என்கிற டிரைவ் மட்டும் இருக்கிற நிலையை யாராவது கொடுத்தா அந்தக் காரியத்தைச் செய்து முடிச்சிடுவோம். அப்படி முடிச்சப்புறம் ஜெனூயினா இருந்த காரணங்கள் வெத்துக் காரணங்களாப் போயிடும்”

 “நிஜம்தான். ஆஃபீஸ்ல நமக்கு உடன்பாடில்லாத பல வேலைகளைச் செய்ய வேண்டியிருக்கே.. யு ஆர் டூயிங் திஸ் இன் தி இண்டரஸ்ட் ஆஃப் தி ஆர்கனைசேஷன் பிளா.. பிளா.. சொல்ல மேலதிகாரிகள் இருக்காங்களே”

 “இன் அதர் வேர்ட்ஸ் கிருஷ்ணர்கள்”

 “யெஸ்”

 “அந்த ஷண நேரக் குழப்பம் நமக்குத் தரும் உணர்வுகள்தான் செயலுக்குத் தடை. அதைத்தான் அடுத்த வரியில் சொல்லியிருக்கார்”

 “சின்மயானந்தா 35 வார்த்தைகள்ள சொன்ன விஷயம் பத்தி நம்மாலே 350 வார்த்தைகள் பேச முடியுது”

 “அதனாலதான் அதை பவர்ஃபுல் லேங்வேஜ்ன்னு சொன்னேன். எப்போதோ, ஏதோ ஒரு புத்தகத்தில் படித்த கட்டுரையில் ஒரு வாக்கியம் ஞாபகம் வருகிறது,

 ‘வழக்கமாகக் கூடி, வசீகரமாகப் பேசி, வளையாது குனியாது வாய் வீரம் காட்டி விட்டு, வாகை சூடியதாக மனப்பால் குடித்து விட்டு, தோகையர் புடைசூழப் போகபூமிக்குச் செல்லும் சுக போகிகள் கூட்டமல்ல…..’

 அந்தக் கட்டுரை முழுக்க இப்படிப்பட்ட வாக்கியங்களிலேயே எழுதப்பட்டிருந்தது. இந்த மொழிநடையும், அதன் வசீகரமும் சொல்ல வந்த கருத்தை பிளாட்டிங் பேப்பர் போல ஒற்றி எடுத்து விடுகிறது. ஸ்கில்ஃபுல் லேங்வேஜுக்கும், பவர்ஃபுல் லேங்வேஜுக்கும் இருக்கிற வித்யாசம் இதுதான்”

 “அது சரி, சின்மயானந்தா சொன்ன அடிப்படைக் கருத்துக்கு வரலாம்…..”

 “ம்ம்ஹூம் அதை அடுத்த பகுதியில வெச்சிக்கலாம். ஏற்கனவே 540 வார்த்தைகள் பேசிட்டோம். இதுக்கு மேலே பேசினா ஜனங்களுக்குப் பொறுமை இருக்காது”

லேகியச் சித்தர்கள்

அரிமா, கரிமா, லகுமா என்று நக்மா நீங்கலான எட்டு சித்திகள் பற்றிப் படிக்கும் போதெல்லாம் சித்தர்கள் பற்றி நிறையத் தெரிந்து கொள்ளும் ஆசை எனக்கு வரும்.

 சித்தர்கள் பற்றி ஆதாரமில்லாத ஆச்சரியக் குறிப்புகள் நிறைய இருக்கின்றன. அந்தக் காலத்தில் மட்டுமில்லை, இப்போதும் கூட அவ்வப்போது அந்த மாதிரி ஆச்சரியங்கள் வெளியாகின்றன. சதுரகிரியில் கட்டை விரல் சைஸில் ஒரு சித்தர் தண்ணீரில் குதித்து விளையாடிக் கொண்டிருந்தார் என்கிறார்கள்; திருவண்ணாமலையில் ராக்கெட் மாதிரி நெட்டுக் குத்தலாகப் புறப்பட்ட சித்தர் பற்றி யு-டியூபில் படம் போட்டார்கள்.

 சித்தர்களின் ரசவாதம் சுவாரஸ்யத்தைத் தூண்டும் சப்ஜெக்ட். அதில் இரண்டு ரகம். மலிவான உலோகங்களைத் தங்கமாக்கும் தந்திரம் ஒன்று. பாதரசத்தைக் கட்டுகிறேன், கட்டி பரசிவத்தி மணி, நாதவேதை மணி, குரங்கு மணி சிரங்கு மணி என்று நுற்றியெட்டு விதமான மணிகள் செய்வேன் என்று அலையும் கூட்டம் ஒன்று.

 உலோகத் தோற்றமும், திரவ நிலையும் ஒன்றாய் அமைந்த பாதரசம் நெடுங்காலம் மக்களுக்கு ஒரு ஆச்சரியமாகவும், கொஞ்சம் அச்சமாகவும் இருந்திருக்கிறது. ரோமானியர்கள் பாதரசத்தைக் கடவுளாக வழிபட்டிருக்கிறார்கள்.

 இரும்பைத் தவிர அநேகமாய் மீதி எல்லா உலோகங்களுடனும் பாதரசம் கிரியை புரிந்து திடப் பொருளாக அமால்கம் தரக் கூடியது என்பது சித்தர் காலத்தில் தெரிந்திருக்க நியாயமில்லை. அதிலும் சோடியம், பொட்டாசியம், கால்சியம் போன்ற கார-உலோகங்கள் அவற்றின் வர்ஜின் ஃபார்மில் இருப்பதில்லை. ஆகவே பார்வைக்கு உலோகமாக அவை தென் படா. ஹைட்ராக்ஸைட் ரூபத்திலிருக்கும் போது பாதரசத்துடன் அவைகளைச் சூடு படுத்தி கிடைத்த அமால்கத்தைப் பார்த்து பாதரசத்தைக் கட்டிவிட்டேன் என்று அவர்கள் மகிழ்ந்திருக்கலாம்.

இந்தக் குரங்குமணி, சிரங்குமணி, குள்ளமணிகள் எல்லாம் என்னென்னவோ ஜாலக்குகள் செய்ய வல்லவை என்று ஆயிரம், எண்ணூறு என்று விற்கிறார்கள். என்னிடம் கூட இப்படியெல்லாம் சொல்லி அன்பளிப்பாக ஒருத்தர் கொடுத்த பாதரச லிங்கம்(!) இருக்கிறது. அதற்கு அபிஷேகம் செய்து அதை அருந்தினால் சர்வரோக நிவாரணம் என்கிறார்கள். வர்ஜின் மெர்க்குரி என்றால் வயிற்றுக்குள் போனதும் கழிச்சல் பிய்த்துக் கொள்ளும். மெர்க்குரி பாய்சன் என்பது என்னவெல்லாம் கொடுமைகள் செய்யவல்லது என்று இணையத்தில் பாருங்கள். எனக்கு எந்த அபூர்வ சக்தியும் கிடைக்கவில்லை. தெருவில் குப்பை கொட்டுகிறவர்களை நிறுத்த வைக்கிற சக்தியோ, போர்ட்டிக்கோவில் தினமும் அசிங்கம் பண்ணும் நாயை அடக்குகிற சக்தியோ கூட அதற்கு இல்லை.

 இரண்டு நாட்களுக்கு முன்னால் தனக்குத் தானே சித்தர் பட்டம் சூட்டிக் கொண்டு மேற்சொன்ன மணிகளை மானுஃபேக்ச்சரிங் செய்யும் ஒரு ஆசாமியைப் பார்த்தோம். ஓடுகள் எல்லாம் பிரிந்து சகலமும் சிதிலமாக இருக்கும் ஒரு வீட்டில் (அல்லது கோயிலா?) இருக்கிறார். தண்டாயுதபாணிக்கு கற்பூரம் காட்டி, தட்டில் எவ்வளவு போட்டாலும் சந்தோஷமாக ஏற்றுக் கொள்கிறார். தண்டாயுதபாணியின் காலடியில் இருக்கும் சிவலிங்கம் நவபாஷாணத்தில் ஆனது என்கிறார். (பழனியிலேயே நவபாஷாணத்தைச் சுரண்டி காலி செய்தாகி விட்டது என்கிறார்கள், இவரை எப்படி விட்டு வைப்பார்கள்?)

 காவி வேஷ்டியும், கிழிசல் பனியனும் அணிந்து முகம் பூரா தாடியோடு இருந்தார். கொஞ்ச காலம் அரசுப் பேருந்தில் ஓட்டுனராக இருந்தாராம். ரொம்ப எளிதாகப் புரிகிற ஒரு சித்தர் பாட்டுக்கும், மாணிக்கவாசகர் பாட்டுக்கும் தப்பாக அர்த்தம் சொல்கிறார். ஓவராலாக அவர் லாங்வேஜ் ரோட்டில் லேகியம் விற்பவர் போல இருக்கிறது. (”இது சிவபெருமானோட விந்து”) ’அஷ்ட சித்திகள் உங்களுக்கு இருக்கா?’ என்று கேட்டதற்கு,

 “அதெல்லாம் இருக்கும்ங்க, நா எத்தையும் வெளில காம்ச்சிக்கிறது இல்லை” என்றார்.

 ஊரெல்லாம் கூடி ஒலிக்க அழுதிட்டுப்

பேரினை நீக்கிப் பிணமென்று பேரிட்டுச்

சூரையங் காட்டிடைக் கொண்டுபோய்ச் சுட்டிட்டு

நீரினில் மூழ்கி நினைப் பழிந்தார்களே

 என்று வாழ்வின் அநித்யத்தை வெடுக்கென்று சொன்ன திருமூலர் மாதிரி சித்தர்களின் பேருக்குத் தீராத களங்கம் இந்த லேகியச் சித்தர்கள்.

சாயிபாபா சர்ச்சைகள்

ஏப்ரல் முதல் தேதியன்றே சவப்பெட்டிக்கு ஆர்டர் செய்து விட்டார்களாம். சில தெலுங்கு சேனல்களில் பெங்களூர் மல்லேஸ்வரத்தில் இருக்கும் கடையின் ரசீதைக் கூட காட்டினார்களாம். இன்றைய (28-04-2011) சென்னைப் பதிப்பு தினத் தந்தியில் 12ம் பக்கத்தில் செய்தி படித்தேன். நிஜமா என்பது எனக்குத் தெரியாது.

 பல விஷயங்களை செட்டில் செய்ய அவகாசம் தேவைப்பட்டிருக்கலாம்.

 சாயிபாபா மக்கள் ஞாபகத்தில் நிலைத்திருக்கப் போவது என்ன காரணத்தால், என்று நேற்று (27-04-2011) ஹெட்லைன்ஸ் டுடே தொலைக்காட்சியில் ஒரு விவாதம் நடந்தது.

 எனக்கு அவரது அபூர்வ சக்திகள் மீதும், ஆன்மீக அறிவின் மீதும் எள்ளளவும் நம்பிக்கை கிடையாது. நான் முட்டாளாக இருக்கலாம். விவேகானந்தருக்குப் பிறகு பிறந்த யாருக்குமே ஆன்மீகத்தில் தெளிவு இல்லை என்பது என் தாழ்மையான அபிப்ராயம். ஆனால் அவர் அமைத்த கல்வி நிறுவனங்களும், மருத்துவ மனைகளும் நன்றாகவே இயங்கி வருகின்றன. அவை பற்றி தப்பான பேச்செதுவும் இல்லை. குடிநீருக்கு நன்கொடை கொடுத்ததும் பாராட்டப்பட வேண்டியதே.

 நல்ல காரியம் செய்ய விரும்புகிறவர்களிடமிருந்தெல்லாம் நன்கொடை பெற்று அதில் ஒரு பகுதியை நல்ல விஷயங்களுக்குச் செலவிட்டிருக்கிறார். ஒரு நல்ல கோ-ஆர்டினேட்டர். பாக்கிப் பணமும் தர்மத்துக்கே வந்தால் நல்லது.

 மற்றபடி அவரைக் கடவுள் என்று சொல்பவர்களைப் பார்த்து பரிதாபம்தான் படுவேன். அவர் கடவுள் என்றால், மாஜிக் நிபுணர்கள் எல்லாருமே கடவுள்கள்தான்!

இது பகுத்தறிவு(!)வாதிகளுக்கு அல்ல….

பகுத்தறிவு என்றால் என்ன?

 ”பகுத்” ஐ எடுத்து விடுங்கள். மிச்சம் என்ன இருக்கிறது?

 அறிவு.

 அவ்வளவுதான்.

 மூளை, மனிதனின் செண்ட்ரல் பிராஸஸிங் யூனிட்.

 ஐம்புலன்கள், அதாவது மெய், வாய், கண், மூக்கு, செவி இவையெல்லாம் இன்புட் சானல்கள். இந்த இன்புட்களை பிராஸஸ் செய்து ரிஸல்ட் தரவேண்டியது மூளையின் வேலை. இந்த பிராஸஸ் உங்களுக்கு, எனக்கு, உங்களுக்கும் எனக்கும் நண்பர்கள், விரோதிகள் எல்லாருக்கும் பொது. ஆனால் அவுட்புட்கள் வித்யாசமாக இருக்கின்றன.

ஏன்?

எல்லாக் கம்ப்யூட்டர்களிலும் செண்ட்ரல் பிராஸசிங் யூனிட்கள் இருக்கின்றன. எல்லாமே இன்புட்களை சரியாகப் பிராஸஸ் செய்து சரியான அவுட்புட்களைத் தருகின்றனவா?

உங்களுக்கு ஒரு டிராயிங் வேண்டும். கீ போர்ட்தானே இன்புட், என்னதான் இன்புட் கொடுத்தாலும் டிராயிங் வருமா? ஆட்டோகேட் சாஃப்ட்வேர் இருந்தால்தானே வரும்?.

நீங்கள் டைப் செய்வது ஒரு கடித வடிவில் வரவேண்டும். கீபோர்ட் மட்டும் போதுமா?

எப்படி வரும்?

எம்.எஸ். வேர்ட் இருக்க வேண்டும்.

ஒரு அக்கவுண்டிங் ஸ்டேட்மெண்ட் வேண்டும்.

எக்ஸெல் வேண்டுமல்லவா?

ஆக, இன்புட்களுக்கு மீறி ஒரு விஷயம் தேவையிருக்கிறது, சாஃப்ட்வேர்.

அப்போது மனித சி.பி.யூ வில் கடவுள் அவுட்புட்டாக இருக்க வேண்டுமானால் என்ன சாஃப்ட்வேர் இருக்கிறது? அல்லது எப்படி புரோக்ராம் செய்வது? யாராவது சொல்லியிருக்கிறார்களா?

ஆம்.

சொல்லியிருக்கிறார்.

யார்?

ஸ்வாமி விவேகானந்தா.

அந்த புரோக்ராம் பெயர் என்ன?

ராஜ யோகா.

ஒரு விஞ்ஞானியாகவோ, பொறியாளனாகவோ ஏகப்பட்ட பிராக்டிகல் செஷண்கள் இருக்கின்றன. நாம் நம்மை (அல்லது கடவுளை) அறிய பிராக்டிகல்ஸ் இருக்காதா?

அவைகளைச் செய்து பார்த்த பிறகும் நமக்கு எதுவும் பிடிபடவில்லை என்றால் அப்புறம் நாத்திகர்கள் ஆகலாமே?

எப்படி சவுகர்யம்?

ராஜயோகா கற்க விருப்பமா?

நிறையப் பேர் தயாராயிருந்தால் வகுப்புகள் ஆரம்பிக்கலாம்.

ஆன்மிகம் வாங்கல்லையோ ஆன்மிகம்

நண்பர், ப்ளாக்கர் ஜோ பெர்னாண்டோ சாமியார்கள் பிரச்சினை குறித்து அனலிடிகலாக ஒரு இடுகை போடச்சொல்லி கேட்டிருந்தார்.

அப்படி ஒரு இடுகை போடுகிற ஆர்வம் ஏற்கனவே எனக்கு இருந்தாலும், எனக்கு சிந்தனாவாதி என்கிற அடைமொழியை அவர் தந்தது என் ஆர்வத்தை இரட்டிப்பாக்கியது! நன்றி ஜோ…

குற்றம் சாட்டப்பட்ட எல்லா சாமியார்களுமே தப்பானவர்கள்தான் என்று தீர்மானமாக நம்மால் சொல்ல முடியவில்லை. படித்த செய்திகளின் அடிப்படையில் மட்டுமே சொல்வதானால் அப்படிச் சொல்லலாம். ஆனால் அப்படிச் சொல்வது அறிவுடைமை ஆகாது. ஆகவே, நீதிமன்றத்தின் தீர்ப்புக்குக் காத்திருப்போம். நீதி இன்னும் இந்த நாட்டில் சாகவில்லை.

ஆனால் ஒரு விஷயம் ரொம்ப துரதிஷ்ட வசமானது.

‘நிச்சயம் இவர் இப்படிச் செய்திருக்க முடியாது’ என்று பெரும்பாலானவர்கள் நினைக்கிற நிலையில் தங்களை யாரும் வைத்துக் கொள்ளவில்லை. அதற்குக் காரணங்கள் பல.

கோவணத்தை எலி கடிக்கிறது என்பதற்காக பூனை வளர்க்க ஆரம்பித்த சாமியார் எப்படி சம்சாரி ஆனார் என்பது பழைய கதை.

முதல் deviation எப்படி முற்றிலும் deviation ஆக ஆக்கும் என்கிற தத்துவத்தை அந்தக் கதையிலிருந்து நாம் உணரவில்லை.

துறவி என்கிறவர் யாசித்து உண்ண வேண்டும் என்பது பெரியவர்கள் சொன்னது.

ஏன் அப்படிச் சொன்னார்கள்?

முதற் காரணம், நாளை என்கிற நாளுக்காக எதையும் சேமிக்கக் கூடாது. செல்வம் சேர்ந்து விட்டாலே அதைக் காக்கிற கவலை, பெருக்குகிற ஆசை, அவசியமில்லாதவைகளை வாங்குதல் என்று நிறைய deviation கள் வந்து விடும். இந்த நாட்டில், நான் அறிந்த எந்தத் துறவியும் யாசித்து உண்டதில்லை.

முதன் முதலில் துறவிகள் பால் அன்பும் மதிப்பும் இருந்தவர்கள் நில புலன்களையும் பணத்தையும் மடத்தின் பேரில் எழுதி வைத்தது முதல் தவறு என்றால், துறவிகள் அதை ஏற்றது அதை விடப் பெரிய தவறு.

சரி, என் பேரில் என்ன இருக்கிறது, எல்லாமே ட்ரஸ்ட் தானே என்றால் அந்த ட்ரஸ்ட் நல்ல முறையில் இயங்குகிற பொறுப்பு உங்கள் தலையில் ஏறிக் கொண்டு விட்டதே! நல்ல காரியங்களுக்குத்தான் செலவழிக்கப் போகிறோம் என்றால், மேலும் நல்ல காரியம், மேலும் சேகரிப்பு என்று தொடர்கிறதே! நேரடியாகவோ, மறைமுகமாகவோ செல்வத்தின் பால் கவனம் போய் விட்டதே! பணப்புழக்கம் ஆரம்பித்து விட்டாலே பனைமரத்தின் கீழ் பால்தான். செல்வத்தைத் தக்க வைத்துக் கொள்ள சில நட்புகள், சில விரோதங்கள், சில வியாபாரங்கள்…. ம்ம்ஹூம் பாதி ஆன்மிகம் கோவிந்தா.

அடுத்தது பிரம்மச்சரியம்.

பிரம்மச்சரியம் என்பது பிளாஷ் பாயிண்ட் இல் இருக்கும் எண்ணை போன்றது. அதனருகில், சிறிது தூரத்தில் கூட ஒரு சின்ன தீப்பிழம்பு கூட வரக் கூடாது. வந்தால் ப்ளக் என்று பற்றிக் கொண்டு விடும். பெண்களின் வாசனையே கூடாது. ஆனால் அவர்கள் விட்டால்தானே.

சாமியார்களுக்கு முதல் ஓட்டே பெண்களுடையதுதான். அதிலும் வாழ்வில் தோல்வியைச் சந்தித்த பெண்கள் ரொம்பத் தீவிர பக்தைகள். புருஷன் கொஞ்சம் முரடனாக இருந்து விட்டால் போதும். உடனே நான் ஆன்மிகத்தில் கலந்து விட்டேன் என்று போய் விடுகிறார்கள்.

பெண்ணின் அன்பு என்றால் என்னவென்றே தெரியாத சாமியார்களுக்கு இவர்களின் நேசம் போதையளிப்பதாக இருக்கிறது.

அந்த போதையை கொஞ்சம் கொஞ்சமாக அதிகமாக நுகர ஆரம்பிக்கிறார்கள்.

மெதுவாக முன்னேறுகிற எதிலுமே மாற்றம் நடந்து கொண்டிருப்பது சம்பந்தப் பட்டவர்களுக்குத் தெரியாது.

கொதிக்கிற நீரில் ஒரு தவளை குதித்தால் சூடு தாங்காமல் உடனே வெளியே குதித்து விடும். ஆனால் குளிர்ந்த நீர் இருக்கும் ஒரு அண்டாவில் தவளை நீந்திக் கொண்டிருக்கிறது என்று வைத்துக் கொள்ளுங்கள், தண்ணீரை சூடு பண்ண ஆரம்பியுங்கள். அதன் கத கதப்பை ரசிக்கும். முன்னை விட ஒரு டிகிரி. அதை விட ஒரு டிகிரி என்று சூடு ஏறிக் கொண்டிருப்பதே தெரியாமல் பொரிந்து செத்துப் போகுமே ஒழிய மெதுவாக நடைபெறும் இந்த மாற்றத்தை அது அறியவே அறியாது.

அது போலத்தான் பெண்களோடு பழக ஆரம்பிக்கிற சாமியார்களின் கதையும்.

அடுத்தது விளம்பர ஆசை.

போஸ்டரில் முகம், டிவியில் நிகழ்ச்சி, அந்த குரு இந்த குரு என்று பட்டங்கள்…. பத்திரிகைகளில் பேட்டிகள்…

இதெல்லாம் இருக்கிற எவருமே துறவிகளோ, சேவை நோக்கமோ கொண்டவர்கள் அல்ல.

இது மாதிரி பலஹீனமான ஆசாமிகள் மாட்டும் போது ஆன்மிகமே பம்மாத்து, இந்து மதமே டுபாக்கூர் என்று எண்ணத் தேவையில்லை. இந்து மதம் ஒரு மிகப் பெரிய கடல். இவர்களெல்லாம் அதிலிருக்கும் தண்ணீரின் ஒரு மாலிக்யூல் கூட கிடையாது.

தன்னை சாமியார் என்றோ குரு என்றோ அறிவித்துக் கொள்ளாத, மடம் இல்லாத, ட்ரஸ்ட் இல்லாத சாதாரண குடும்பஸ்தர்கள் எத்தனையோ பேர் ஆன்மிகத்தை சொல்லித்தர இருக்கிறார்கள். மறைந்த பல மகான்களின் நூல்கள் இருக்கின்றன.

பலஹீனமான, ஆன்மிக வியாபாரிகளை அடையாளம் கண்டு கொண்டு அவர்களை விட்டு விலகுகிற தீர்மானத்துக்கு உங்களில் எத்தனை பேர் வந்திருக்கிறீர்கள்?