துணுக்கு

சுவாரஸ்யமான துணுக்குச் செய்திகள்

நரி மேலழகர் உரை

பத்தரை மாற்றுத் தங்கம் என்கிறோமே அது என்ன measure?

 தங்கத்தின் தரத்துக்கு இத்தனை கேரட் என்கிற கணக்கு இருக்கிறது. மாற்று என்கிற சொல் எப்படி வந்திருக்கும்?

 எனக்குத் தமிழாசிரியராக இருந்த பி. சோமசுந்தரம் என்பவர் அதற்கு ஒரு வேடிக்கையான விளக்கம் சொல்வார்.

 “தங்க வேலை செய்யற பத்தர்கள் எல்லாரும் பொதுவா ரொம்ப நல்லவங்கடா. தொழில் தர்மம் இல்லாதவங்க அந்த வேலையைச் செய்ய முடியாது. அவங்க எல்லாருமே ரொம்ப நாணயமானவங்க. அதனாலதான் நம்ம ஊர்ல பத்தர் கடைங்க எல்லாம் நாணயக்காரத் தெருவுல இருக்கு. அப்படிப்பட்ட நாணயமான பத்தரை மாற்றிவிடுகிற அளவு அழகாவும், தகதகப்பாவும் இருக்குமாம், அதனால பத்தரை மாற்றுத் தங்கமாம்” என்பார்.

 “சார், இதுக்கு வேற மாதிரி கூட விளக்கம் சொல்லலாமே” என்றேன்.

 “என்னது சொல்லு?” என்றார்.

 “திருடணும்ன்னு சின்ன சபலம் வந்தாக் கூட அவங்க மனசை மாற்றிடும். அதனாலதான் பத்தரை மாற்றுத் தங்கம்ன்னு சொல்றாங்க. ஏன்னா பத்தரை மாற்றுத் தங்கம்ன்னு அழகானவங்களைச் சொல்லல்லையே, நல்ல குணம் உள்ளவங்களைத்தானே சொல்றோம்”

 இதைக் கேட்டதும் பி.சோ என்னை உற்றுப் பார்த்து விட்டுச் சொன்னது,

 “பரிமேலழகர் மாதிரி நீ ஒரு நரிமேலழகரா வருவேடா”

புரிஞ்சதா?

சமீபத்தில் வெளியான படம் ஒன்றின் இடைவேளையில் எனக்கும் எதேச்சையாய் சந்தித்த என் நண்பருக்கும் நடந்த உரையாடல்.

 “இப்பத்தான் படத்தைப் பார்க்கறயா?”

 “இது மூன்றாந்தரம்”

 “கரெக்ட். இது மூண்றாந்தரம்தான்”

 “ஓ.. நீயும் மூன்றாந்தரமா?”

 “இல்லை. நான் முதல்தரம், அதனால்தான் இதை மூன்றாந்தரம்ன்னேன்”

 “நீ முதல்தரம்ன்னா ஏன் இதை மூன்றாந்தரம்ன்னு சொல்லணும்?”

 “ஆம். ஒருவேளை நான் மூன்றாந்தரமா இருந்திருந்தால் இதை முதல்தரம்ன்னு சொல்லியிருப்பேன்”

 இந்த முதல்தரம், மூன்றாம்தரம் சமாச்சாரம் இரண்டாந்தரம் படிக்காமலே உங்களுக்குப் புரிந்ததா?

பத்தரை மாற்று(மா) தங்கம்?

பத்தரை மாற்றுத் தங்கம் என்கிறோமே அது என்ன measure?

தங்கத்தின் தரத்துக்கு இத்தனை கேரட் என்கிற கணக்கு இருக்கிறது. மாற்று என்கிற சொல் எப்படி வந்திருக்கும்?

எனக்குத் தமிழாசிரியராக இருந்த பி. சோமசுந்தரம் என்பவர் அதற்கு ஒரு வேடிக்கையான விளக்கம் சொல்வார்.

“தங்க வேலை செய்யற பத்தர்கள் எல்லாரும் பொதுவா ரொம்ப நல்லவங்கடா. தொழில் தர்மம் இல்லாதவங்க அந்த வேலையைச் செய்ய முடியாது. அவங்க எல்லாருமே ரொம்ப நாணயமானவங்க. அதனாலதான் நம்ம ஊர்ல பத்தர் கடைங்க எல்லாம் நாணயக்காரத் தெருவுல இருக்கு. அப்படிப்பட்ட நாணயமான பத்தரை மாற்றிவிடுகிற அளவு அழகாவும், தகதகப்பாவும் இருக்குமாம், அதனால பத்தரை மாற்றுத் தங்கமாம்” என்பார்.

“சார், இதுக்கு வேற மாதிரி கூட விளக்கம் சொல்லலாமே” என்றேன்.

“என்னது சொல்லு?” என்றார்.

“திருடணும்ன்னு சின்ன சபலம் வந்தாக் கூட அவங்க மனசை மாற்றிடும். அதனாலதான் பத்தரை மாற்றுத் தங்கம்ன்னு சொல்றாங்க. ஏன்னா பத்தரை மாற்றுத் தங்கம்ன்னு அழகானவங்களைச் சொல்லல்லையே, நல்ல குணம் உள்ளவங்களைத்தானே சொல்றோம்”

இதைக் கேட்டதும் பி.சோ என்னை உற்றுப் பார்த்து விட்டுச் சொன்னது,

“பரிமேலழகர் மாதிரி நீ ஒரு நரிமேலழகரா வருவேடா”

கடவுள் ஏன் காக்க வைக்கிறான்?

வைகுண்ட ஏகாதசி என்பதால் வழக்கமாய் ஃப்ரீயாகச் சந்திக்கிற அனுமாரையும், ராமனையும் கொஞ்சம் காத்திருந்துப் பார்க்க வேண்டியதாயிற்று நேற்று.

 வரிசையில் எனக்கு முன்னால் நின்றிருந்த ஒரு பெரியவர் யார் குறுக்கே புகுந்தாலும் ‘போங்க.. போங்க’ என்று அனுமதித்துக் கொண்டிருந்தார்.

 கோயிலாக இருந்தாலும் சரி, வேறெந்த இடமானாலும் சரி. வரிசையில் குறுக்கே பூர்கிறவர்களைக் கண்டால் எனக்கு அசாத்திய எரிச்சல் வரும். வயசில் ரொம்ப மூத்தவர் என்பதால் எரிச்சலை அடக்கிக் கொண்டு,

 “சார், இப்படி வர்ரவங்களையெல்லாம் விட்டுகிட்டிருக்கீங்களே, தரிசனம் முடிச்சி வீட்டுக்குப் போகிற எண்ணமே இல்லையா?” என்றேன்.

 “தம்பி.. பெரிய மனிஷங்களை மணிக்கணக்கா கியூவில நின்னு பாக்கிறவங்களைத் தெரியுமா உங்களுக்கு?” என்றார்.

 “தெரியும்”

 “ஒரு வணக்கம், இல்லைன்னா ஒரு புன் சிரிப்பு, இல்லைன்னா கொஞ்சம் நன்கொடை அல்லது கொண்டு வந்த புகார் மனுவை வாங்கிக்கிறதுன்னு சட் சட்டுன்னு டிஸ்போஸ் பண்ணிகிட்டே இருப்பாங்க தெரியுமா?”

 “ஆமாம்”

 “ஆனா சில குறிப்பிட்ட ஆசாமிகளை மட்டும், ஏய்.. சுப்புணி நீ கொஞ்சம் வெய்ட் பண்ணுன்னு நிக்க வைப்பாங்க”

 “ஆமாம்”

 “எல்லாரும் போனப்புறம் வாடா சுப்புணி உக்காருன்னு உக்கார வச்சி பொறுமையாப் பேசுவாங்க”

 “ஆமாம் சார்”

 “அப்படிப்பட்ட ஆட்கள் யாரு?”

 “ரொம்ப நெருக்கமானவங்களா இருப்பாங்க”

 ”நீங்களும் நானும் தனக்கு ரொம்ப நெருக்கம்ன்னு ராமன் நினைக்கிறான் சார், புரியல்லையா உங்களுக்கு?”

 இதற்கப்புறம் நான் எப்படிக் கோபப்பட முடியும்?

கேஜ்ரிவாலின் எளிமையும் கிடாரங்காய் ஊறுகாயும்

அர்விந்த் கேஜ்ரிவாலுக்கு சின்ன வீடு தேடும் படலம் பற்றிய செய்தியை நண்பர் engalblog  Sriram Balasubramaniam  பகிர்ந்திருந்தார்.
எனக்கு நேர்ந்த அனுபவம் ஒன்று ஞாபகம் வந்தது.
இல்லத்தரசியின் தோழி ஒருவர் வீட்டுக்குப் போயிருந்தோம். ’ராத்திரி உணவுக்கு என்ன பண்ணட்டும்?’ என்று கேட்டார் தோழி.
‘ரசம் சாதம், சுட்ட அப்பளம், தயிர் சாதம், ஊறுகாய்’ அவ்வளவுதான் என்றேன்.
சொல்லி விட்டு என் எளிமையை நானே ஒரு தரம் பெருமிதமாக வியந்து அட…க்கமாகச் சிரித்தேன்.
அக்கடா என்று டிவி பார்த்துக் கொண்டிருந்த கணவரை மூஞ்சூர் மாதிரி சப்தம் செய்து உள்ளே அழைத்தார் தோழி. கரகாட்டக்காரன் செந்தில் கவுண்டமணி காதில் சொல்வது போல ஏதோ சொன்னார். அவர் சட்டையை மாட்டிக் கொண்டு ஸ்கூட்டரைக் கிளப்பிக் கொண்டு ஓடினார்.
முக்கால் மணி நேரம் ஆயிற்று.
ஒரு பையை வேட்டிக்குள் மறைத்து அசட்டுச் சிரிப்புடன் கிச்சனுக்கு எடுத்துப் போனார் அந்தக் கணவர். கொஞ்ச நேரத்தில் தோழி வந்து கையைப் பிசைந்து கொண்டு,
’அப்பளம் கிடைச்சிரிச்சு, ஊறுகாயும் வாங்கியாச்சு. குக்கர் வச்சிடறேன். புழுங்கரிசி சோறு பரவாயில்லையா? தயிர் கிடைக்கல்லைங்க’ என்றார்.
‘அடக் கிரகமே இதுக்கா அவரை விரட்டினீங்க? உங்களுக்கு சிரமம் தரக் கூடாதுன்னுதான் இதெல்லாம் கேட்டேன். வீட்ல என்ன இருக்கு?’ என்றேன்.
‘சப்பாத்தியும் குருமாவும் இருக்குங்க’ என்றார்.

விஸ்வரூபம் எடுக்கிறதா பிரச்சினை?

KAMALS~1

விஸ்வரூபம் படப் பிரச்சினை விஸ்வரூபம் எடுத்துக் கொண்டிருக்கிறதோ என்கிற கவலை உண்டாகிறது. எதிர்க்கிறவர்களின் பிரச்சினையும் கவலையும் எனக்குப் புரியவில்லை. புதிய டிரெண்டுகளை உருவாக்குகிறவர்கள் நிறைய பிரச்சினைகளைச் சந்திக்க வேண்டியிருப்பது புரிகிறது. கமலஹாசனின் முயற்சியால் யாருக்கும் நஷ்டம் இருக்காது என்பதே என் நம்பிக்கை. எதிர்க்கிறவர்கள் வெறும் அச்சத்தால்தான் எதிர்க்கிறார்கள் என்பது என் துணிவு. பிரச்சினைகளைச் சந்திக்கும் துணிவை கமலஹாசனுக்குக் கடவுள் அருளட்டும். அவருக்குக் கடவுள் மீது நம்பிக்கை இல்லாவிட்டாலும் கடவுளுக்கு அவர் மீது நம்பிக்கை இருக்கிறது (நன்றி : இசைஞானி)

****************************************************************************

பெண்கள் கிளர்ச்சியூட்டும் விதத்தில் ஆடைகள் அணியக் கூடாது என்று சொன்னால் பல பெண்களுக்குப் பிடிக்கவில்லை. சம உரிமை, சுதந்திரம், ஆணாதிக்கம், கன்ஸர்வேட்டிவ் என்று ஏதேதோ சொல்லி எதிர்க்கிறார்கள். தன்னைக் காத்துக் கொள்ளும் திறன் இருக்கும் பெண்கள் எப்படி வேண்டுமானாலும் உடை அணியலாம். ஆனால் எல்லாப் பெண்களுக்குமே அந்தத் திறனும், வலிமையும் இருக்கிறதா? இல்லை என்றால் பாதுகாப்பாக இருப்பதுதானே நல்லது?

****************************************************************************

MSG

சமீபத்தில் வயலின் மேதை எம்.எஸ்.கோபாலகிருஷ்ணன் மறைந்து விட்டார். ஹிந்துஸ்தானியும், கர்நாடக இசையும் கலந்த ஒரு இனிய மயக்கம் அவரது இசை. பரூர் ஸ்டைல் என்று சொல்லப்படும் அபூர்வமான சுவரப் பிரயோக ஸ்டைல் அவருடையது. ஒரு தாளத்துக்கு மூன்று சுரங்களாக இறங்கு வரிசையிலும் ஏறு வரிசையிலும் துரித காலத்தில் அவர் வாசிப்பது யுனீக் ஸ்டைல். ஒரு தரம் பெங்களூர் போகும் போது ரயிலில் முதல் வகுப்பு கூபேயில் அவருடன் அரட்டை அடித்துக் கொண்டு போனது மறக்க முடியாத நிகழ்ச்சி. முக்கால் வாசி நேரம் அவர் என்னைப் பேட்டி எடுப்பது போலப் பேசிக் கொண்டு வந்தது சுவாரசியம். அது குறித்து ஒரு இடுகை தனியாகப் போட வேண்டும்.

****************************************************************************

இந்த முறை புத்தகச் சந்தை மௌண்ட் ரோட் ஒய்.எம்.ஸி.ஏ மைதானத்தில் நடக்கிறது. தேதியும் 11 லிருந்து 23 வரை என்று மாற்றப்பட்டிருக்கிறது. அரவிந்த் கெஜ்ரிவாலின் ஸ்வராஜ் புத்தகத்தைத் தமிழில் தன்னாட்சி என்ற பெயரில் என்னை எழுதச் சொல்லி கிழக்கு பதிப்பகம் வெளியிட்டிருக்கிறது. அதை எழுதி முடிக்கும் போது நிறைவாக உணர்ந்தேன். படிக்கிறவர்களுக்கும் அப்படியே இருக்கும் என்று நம்புகிறேன். எச்சரிக்கை : அது குறித்த தனிப் பதிவு விரைவில் வருகிறது!

******************************************************************************

ஆண்கள் குறித்த பெண்களின் மனப்பாங்கு குறித்து ஒரு வெண்பா முயன்றேன். அதற்கு உரை எழுத உரையாசிரியர்கள் வரவேற்கப்படுகிறார்கள் :

உனக்குப் பண்பே கிடையாது பாதகன்
கணக்குப் பண்ணும் காமுகன் – நான்
எத்தனை மோசமாய் உடை யணிந்தாலும்
சித்தனாய் ஞானியாய் நீயிரு.

குலுக் பாடல்களில் பொருட்செறிவு

டைம்ஸ் ஆஃப் இண்டியாவிலும், இந்தியன் எக்ஸ்பிரஸிலும் சப்ளிமெண்ட்டில் வரும் படங்களைப் பார்த்தால் உள்ளாடை விளம்பரமோ என்று எண்ணத் தோன்றுகிறது.

இதில் ஆச்சரியம் என்னவென்றால் இன்றைக்கு சினிமாக்கள் ரொம்ப கௌரவமாக இருக்கின்றன. சினிமா செய்திகளில் இருக்கும் கவர்ச்சி சினிமாக்களில் இல்லை. எழுபதுகளில் சினிமாக்களுக்கு இரண்டு விஷயம் இன்றியமையாதவை. அவைகளில் ஒன்று கற்பழிப்புக் காட்சி. எல்லாப் படங்களிலுமே இதற்காகவே தங்கைப் பாத்திரங்கள் இருக்கும். ஏழைக் குடும்பமாக இருந்தால் கூட தங்கைகள் மட்டும் செழுமையாக இருப்பார்கள். (ஒருதரம் லைட்ஸ் ஆன் வினோத் பகுதியில் செட்டில் ’நான் கிழிக்கிற ஐநூறாவது ஜாக்கெட் இது’ என்று எஸ்.வி.ராமதாஸ் சொன்னதாகப் படித்திருக்கிறேன்.)

இன்னொன்று ‘அங்கும் இங்கும்’ ஜிகினா பளபளக்க குலுக் நடிகைகள் பாடும் எல்.ஆர்.ஈஸ்வரி பாட்டு. ஒரு தமாஷ் என்னவென்றால், சில சமயம் இந்தப் பாடல்களில் இருக்கும் பொருட்செறிவு சோகப் பாடல்களில் கூட இருக்காது.

முழுவதும் துறந்த ஞானியுண்டு – அந்த

ஞானியின் வரிசையில் நானுமொன்று

பாசமும் பந்தமும் துறவிக்கில்லை – எந்த

பேதமும் என்போல் அழகிக்கில்லை

என்பது சகுந்தலாவின் குலுக் பாடல்களில் ஒன்றின் வரிகள்.

இவ்வளவு இருந்தும் சினிமா செய்திகள் இடம் பெறும் பகுதிகளில் வருகிற படங்கள் ரொம்ப மடியாக இருக்கும்.

******

அமேசான் ஆன்லைனிலேயே புத்தகங்கள் லெண்டிங் செய்கிறார்களாம். புத்தகம் படிப்பதற்காகவே லைஃப் டைம் 3ஜி ப்ரீ பெய்டாக அமேசான் கிண்டில் என்கிற ரீடர்களும் வருகின்றன. எனக்குக் கூட மகன் ஒன்று வாங்கி அனுப்பியிருக்கிறான்.

எனக்கென்னவோ ஹார்ட் காபியில் படிக்கிற சௌகர்யமும் திருப்தியும் இதில் வருவதில்லை. ஒரு முக்கிய காரணம் சென்ஸ் ஆஃப் பொசெஷன். ’என்கிட்ட இன்ன புத்தகம் இருக்கிறது’ என்கிற உணர்வு டிஜிட்டல் புத்தகங்களில் இல்லை.

ஆகவே நாய் பெற்ற தெங்கம் பழமாக அந்தக் கிண்டில் சும்மா இருக்கிறது. ‘நீங்கதான் யூஸ் பண்ணல்லையே யாருக்காவது குடுத்துடலாமா?’ என்று இல்லத்தரசி கேட்டால்,

‘புஸ்க்கு.. அது அவன் எனக்காக வாங்கி அனுப்பினது’ என்று மறுத்து விடுவேன்.

******

நங்கநல்லூர் ஆஞ்சநேயரைப் பார்க்கப் போகிற எல்லாரும் கோயில் அருகே இருக்கும் கிரி டிரேடர்ஸுக்குத் தவறாமல் போகவும்.

சங்க இலக்கியங்கள் எல்லாம் உரையுடன் கிடைக்கின்றன. டி.டி.ரங்கராஜன், ஷிவ் கேரா, சுக போதானந்தா, கிரேஸி, எஸ்.வி.சேகர், சோ நாடகங்கள், டி.கே.ஜெயராமன், மகாராஜபுரம், லால்குடி….. என்று சகல ஐஸ்வர்யங்களும் ஒரே இடத்தில்!

புத்தகச் சந்தையில் வாங்கிய அளவு புத்தகங்கள் கால் மணி நேரத்துக்குள் வாங்கி விட்டோம். அங்கே வேலைக்கிருக்கும் பெண்கள் படு ஸ்மார்ட். நீங்கள் எந்தெந்த அலமாரி அருகே போய் எதையெல்லாம் பார்த்துப் பெருமூச்சு விடுகிறீர்கள் என்பதிலிருந்து உங்கள் புத்தக ரசனை தெரிந்து விடுகிறது அவர்களுக்கு. உங்கள் ஃபேவரைட் டாப்பிக்குகளில் தி பெஸ்ட்டை எடுத்து வந்து உங்களை டெம்ப்ட் செய்து விடுகிறார்கள்!

யு கேன் வின்னில் இரண்டு அத்தியாயங்கள் சேர்க்கப்பட்டு, ஷிவ் கேராவின் சொற்பொழிவு வீடியோ அடங்கிய ஒரு சிடியும் இலவசம் என்பதைச் சொல்லி ஒரு காப்பி என்னிடம் விற்று விட்டாள்.

******

தமிழ்ப் ‘படுத்தல்’

”நான் பொய்யைத் தவிர வேறெதுவும் சொல்றதில்லை” என்று ஒருவர் சொல்வது ஒரு மாயச் சுழல். அது பொய் என்றால் என்ன அர்த்தம், நிஜம் என்றால் என்ன அர்த்தம் என்று கொஞ்சம் யோசித்துப் பாருங்கள். இதை நான் செய்து கொண்டிருந்த போது ஒரு போலிஷ் (போலிஸ் இல்லை) ஜோக் ஞாபகம் வந்தது.

ஒரு போலந்துக்காரரை பிஸியாக வைத்திருக்க என்ன செய்ய வேண்டும்?

பி.டி.ஓ என்று இரண்டு பக்கமும் எழுதிய ஒரு காகிதத்தை அவரிடம் கொடுத்து விட்டால் போதும்!

************************************************************************

வேற்று மொழியிலிருந்து ஒரு கதையைத் தமிழில் எழுதும் போது அடிப்படையான சில மாற்றங்கள் செய்ய வேண்டியது அவசியம். இல்லையென்றால் என்ன ஆகும்? கீழ்வரும் வரிகளைப் படியுங்கள் :

சோட்டா சேட் ஜூனா பஸாரில் பாவு பாஜி சாப்பிட்டபடி யோசித்துக் கொண்டிருந்தான். பட்பட் வாலா அருகில் நிறுத்தி வருகிறாயா என்கிற மாதிரிப் பார்த்தான். வாஸ்வானி சிலை பக்கத்தில்தான் இருக்கிறது செளரங் லேன். அதற்குப் போய் பட்பட்டில் போவானேன்?

இதே ரீதியில் முழுப் புத்தகத்தையும் உங்களால் படிக்க முடிந்தால் நீங்கள் ஒரு முரட்டு இலக்கிய ரசிகர். ஆனால் பெரும்பாலான தமிழ் வாசகர்கள் அப்படி இல்லை.

போன வாரம் ‘வாகை சூடும் சிந்தனை’ என்றொரு புத்தகம் வாங்கினேன். அது தமிழாக்கம் செய்யப்பட்ட சுய முன்னேற்ற நூல். முழுக்க முழுக்க டிவியில் காலையில் வரும் டப்பிங் செய்த கிறிஸ்தவ நிகழ்ச்சி போலவே இருக்கிறது.

************************************************************************

அறிவகற்றும் என்கிற பதத்துக்கு என்ன அர்த்தம் என்று கேட்டால் அறிவில்லாமல் செய்து விடும் என்றுதான் தொண்ணூறு சதவீதம் பேர் பதில் சொல்கிறார்கள். கீழ் வரும் குறளில் அந்தப் பதம் அறிவை விசாலப்படுத்தும் என்கிற பொருளில் வருகிறது :

பேதைப் படுக்கும் இழவூழ் அறிவகற்றும்

ஆகலூழ் உற்றக் கடை.

இல்லை என்கிறவர்கள் பின்னூட்டலாம்!

***********************************************************************

சளியால் காது அடைக்கிற போது எந்த மருந்தும் பயன்படாது போலிருக்கிறது. மூக்குக்கும், காதுக்கும் டிராப்ஸ் கொடுத்தார் டாக்டர். ஐந்தாறு பாட்டில் வாங்கி ஊற்றி கழுத்துவரை நிறைத்தும் பிரயோஜனமில்லை. காக்காய் மாதிரி தலையைச் சாய்த்துச் சாய்த்துத்தான் கேட்கிறேன் யாராவது பேசும் போது.

இதே பிரச்சின சில வருஷங்களுக்கு முன் வேலூரில் இருந்த போது வந்தது. அப்போது வாசன் என்று ஒரு டாக்டர், “நீங்க செவிடெல்லாம் ஆயிட மாட்டீங்க. இதுக்கு மருந்தெல்லாம் இல்லை. ஆப்பரேஷன் டூ மச். மூக்கைப் பொத்திகிட்டு எச்சல் முழுங்கிகிட்டே இருங்க, ப்ளக்குன்னு விட்டுடும். உடனே நடக்காது பொறுமையா பண்ணிகிட்டே இருங்க” என்று அட்வைஸ் செய்தது நினைவு வந்து அதை முயற்சித்தேன்.

பிளக்கென்று வலது காது திறந்தது என்னவோ நிஜம்தான்.

ஆனால் பச்சக் என்று இடது காது அடைத்துக் கொண்டு விட்டது!

ஒல்லி பார்த்திபனும் உயரமான குஷ்பூ மகளும்

லேண்ட் மார்க்கில் 3 ஃபார் 2 என்று ஒரு ஆஃபர் போட்டிருக்கிறார்கள்.

 மூன்று புத்தகங்கள் வாங்கினால் அவற்றுள் குறைந்த விலையிலானது இலவசம். எனக்கு அப்படிக் கிடைத்தது : சுஜாதா பதில்கள். லேண்ட் மார்க்கில் இலவசமாக இன்னொன்றும் கிடைத்தது. அது : மகளை விண்டோ ஷாப்பிங் செய்ய விட்டு ஸ்டூலில் உட்கார்ந்திருந்த நடிகை குஷ்பூவின் தரிசனம்! யாரும் பேசிவிடக் கூடாதே என்று தடுக்கவோ என்னவோ மொபைலிலேயே பேசிக் கொண்டிருந்தார். மகள் அவரைக் காட்டிலும் உயரமாக இருக்கிறார்.

************************************************************************ 

ஐநாக்ஸில் எங்கேயும் எப்போதும் பார்க்க நடிகர் பார்த்திபனும் வந்திருந்தார். திரையில் கொஞ்சம் தாட்டியாகத் தெரிபவர் நேரில் சராசரியாகத்தான் இருக்கிறார். தொள தொளா சட்டையாலோ என்னவோ! கேண்டீன்காரரிடம் என்ன பேசினார் என்பது பக்கத்திலேயே நின்றிருந்த எனக்கு காதை சொருகினாலும் கேட்கவில்லை. ஆனால் கேண்டீன்காரப் பையன் அவர் கேட்ட எல்லாவற்றுக்கும் பதில் சொன்னான்!

 முகத்தைப் பார்த்ததும் என்னை முந்திக் கொண்டு அவர் புன்னகை செய்தார். அடையாளம் கண்டு கொண்ட சில பள்ளி மாணவர்களுடன் சலிக்காமல் ஐந்தாறு புகைப்படம் எடுத்துக் கொண்டார்.

 ************************************************************************

 ஐநாக்ஸிலிருந்து கடற்கரை காந்தி சிலை பத்து நிமிஷ நடைதான். செப்டம்பர் மாதத்து மாலை மெரினாவில் ரொம்ப இதமாக இருக்கிறது. பிச்சுக் பிச்சுக் உப்புக் காற்றை மட்டும் சகித்துக் கொள்ள வேண்டும்.

 கடல்நீரில் கால் நனைத்துவிட்டு வரும் போது இன்னொரு எதிர்பாராத சந்திப்பு.

என்னையே முழுங்கி விடுவது போலப் பார்த்துக் கொண்டிருந்த அவர்,

 “நீங்க சொன்னது கரெக்ட்தான், ஆர்பிட்டல் சாண்டரில் இருப்பது எஸ்.கே.எஃப் மேக் பேரிங்தான் 6000Z” என்றார்.

 ஒரு வினாடி யோசித்த எனக்கு ஆச்சரியமும், அதிர்ச்சியும்.

 பதினைந்து வருஷம் முன்பு அவரிடம் நான் கடைசியாகப் பேசிய வாக்கியம்,

 “சார், அது Koyo மேக் இல்லை, எஸ்.கே.எஃப் 6000Z ன்னு போட்டிருக்கும் பாருங்க”

 ரொம்ப நேரம் பேசிக் கொண்டிருந்தோம்.

 எழுந்திருக்கும் போது நான் சொன்னது,

 “மன்னிக்கணும், அது Koyo தான். ஏன்னா 6000Z பேரிங்குக்கு எல்லா மேனுஃபேக்சரரும் அதே டெசிக்னேஷந்தான் தர்ராங்க”

 இதற்கு பதிலை எத்தனை வருஷம் கழித்துச் சொல்வாரோ!

கற்பது கடினம் மறப்பது எளிது

 

 

 

நல்ல விஷயங்கள் கற்கக் கடினமானவை, மறக்க எளியவை. கெட்ட விஷயங்கள் கற்க எளியவை, மறக்கக் கடினமானவை.

விளையாட்டாக ஹாஸ்டல் டே அன்று தம் இழுக்க ஆரம்பித்தால், விட வேண்டும் என்கிற எண்ணம் வரவே இருபது வருஷமாகும். விடுவதற்கு ஐந்து வருஷமாகும். விட்டு ஐந்து வருடத்திற்குள் மறுபடி ஒரு தம் இழுத்தால் திரும்ப பேக் டு ஸ்கொயர் ஒன்!

பிராணாயாமம் செய்வது பழகிப் போக வேண்டுமானால் ஆறு மாதம் ஆகும். இருபத்தோறு நாள் செய்யாமல் இருந்தால் மறந்து போகும்! திரும்ப ஆரம்பிக்க மறுபடி ஆறு மாதம்.

இதையெல்லாம் எதற்காகச் சொல்கிறேன் என்றால், என் ஓவியத் திறமை த்ரீ இடியட்ஸ் படத்து மாதவன் போல சின்ன வயசில் முடக்கப் பட்டது. இரண்டாம் கிளாஸ் படிக்கும் போது கிளாஸ் டீச்சர் அடுத்த கிளாஸ் வாத்யாரைப் பார்த்து ஜொள்ளு விடும் போது ஸ்லேட்டில் சிவாஜி படம் வரைந்து கொண்டிருப்பேன். ஜொள்ளு முடிந்து வந்ததும் பஞ்சவர்ணம் டீச்சர், “என்ன பொம்ம போட்டுகிட்டு இருக்கே? கைய முறிச்சிடுவேன்” என்று விரலில் பிரம்பால் அடிப்பார். வீட்டில், “ஒரு எண்பது பக்கம் நோட்டு பூரா தலை தலையா போட்டு வீணக்கியிருக்கான்” என்று அண்ணன் போட்டுக் கொடுத்து அப்பா, “மூதேவி, நீ உருப்படப் போறதில்லே” என்று சான்றிதழ் தருவார்.

விடாப்பிடியாக அவ்வப்போது படம் போட்டுக் கொண்டே இருப்பேன்.

பள்ளிப் பருவம் கடந்ததும் எல்லாம் மறந்து போயிற்று. சமீபத்தில் நடிகர் சிவகுமாரின் ‘இது ராஜபாட்டை அல்ல’ புத்தகத்தைப் படித்த போது பழைய ஓவிய ஆசை மறுபடி தலை தூக்கிற்று.

அதுதான் மேலே இருக்கும் படம்.

ஓவியக் கலையை இன்னும் முழுசாக அன்லேர்ன் செய்யவில்லை என்று நினைக்கிறேன், சரியா?