நகைச்சுவை

ஜோக்குகள்,அனுபவங்கள்

அவுக்காம பிழிஞ்சிடாதே.. ரிஸ்கு!!

மஹாமகத்தன்று கும்பகோணம் போக முடியாதவர்கள் எல்லாரும் மாசி மாசத்தின் கடைசி நாளான கடந்த ஞாயிற்றுக் கிழமை முற்றுகை இட்டார்கள்.

 எந்தப் பெரியக் கூட்டத்தைச் சொன்னாலும் மஹாமகக் கூட்டம் என்று வர்ணிப்பதைக் கேட்டிருக்கிறேன். ஃபிராங்க்லி நான் பார்க்கும் முதல் மஹாமகக் கூட்டம் இது. விவேக்கின் திருமலை படத்துக் காமெடி போல எங்கே போனாலும் போலீஸ்காரர்கள் திருப்பி விட்டார்கள். வண்டிகளை நிறுத்த முடியவில்லை, நிறுத்தினால் எடுக்க முடியவில்லை. ஹோட்டல்களில் சாப்பிட இடம் கிடைக்கவில்லை.

ஆப்பர்ச்சூனிட்டியைப் பயன்படுத்தி ரோட்டோரங்களில் பிளாஸ்டிக் மக், துவாலை, ஜட்டி என்று வர்ஜ்யா வர்ஜ்யமின்றி ஏதேதோ விற்றார்கள்.

ஒரு இடத்தில் திருப்பி விடப்பட்டு ஊர்ந்து ஊர்ந்து ஒரு மணி நேரம் போய் ஒரு சாலையின் கடைசியில் வண்டி போக முடியாத மாதிரி கர்டர் அமைத்திருந்தார்கள். சிக்கினோம்! பின்னாலும் வர முடியாது, முன்னாலும் போக முடியாது….

இந்த மாதிரி சிச்சுவேஷனில் அந்த சாலையின் நுழைவு, வெளியேற்றம் இரண்டிலும் கர்டர் அமைக்க வேண்டாமோ? போக்குவரத்துத் துறை ஏன் இப்படிக் கோமாளித்தனம் செய்கிறது?

பொற்றாமரைக் குளம் அருகே ஜாம் ஆனதில் ஒரு வண்டியிலிருந்து ஐந்தாறு பேர் இறங்கிப் போய் முழுக்குப் போட்டுவிட்டு வந்து விட்டார்கள்! வண்டியில் நடந்த உரையாடல் :

“ஏய்.. என்னய்யா இது? இப்படி சொத சொதன்னு வண்டிக்குள்ள வந்தா வண்டியெல்லாம் சகதி ஆயிடாதா?”

 “கோய்ச்சிக்காத மாப்ளே… அப்புடியே அவுக்காம பிளிஞ்சிகிட்டுத்தான் வந்தோம். ஜட்டிதான் ஈரமா இருக்கு, என்னா பண்றதுன்னு தெரியல்ல”

“சரி.. சரி… இங்க அவுத்துட கிவுத்துடப் போறீங்க. வண்டில லேடிஸெல்லாம் இருக்காங்க”

“அவுக்காம அப்புடியே புளிஞ்சிக்கிறோம்”

“எதை? ஜட்டியவா? அவுக்காம பிளியிறீங்களா? ரிஸ்க்குய்யா”

 

அதிகப் படிப்பு = அதிகக் குழப்பம்!

அதிகம் படித்தவர்கள்தான் எளிய விஷயங்களையும் ஜாஸ்தி குழப்பிக் கொள்கிறார்கள்.

இதற்கு நிறைய உதாரணங்கள் சொல்லலாம்.

என் நண்பன் ஒருவன் ஆட்டமோபைலில் போஸ்ட் கிராஜுவேட். கும்மிடிப்பூண்டியிலிருந்து வரும் போது அவன் பைக் நடுவழியில் மக்கர் செய்தது. அவன் கார்புரேட்டரைக் கழற்றி கிளீன் செய்கிறான், பாயிண்ட் செக் செய்கிறான், ஸ்பார்க் பிளக், ஏர் ஃபில்ட்டர்…..

ம்ம்ஹூம்.

மெக்கானிக் ஷாப்புக்குத் தள்ளிக் கொண்டு போனால் அவன் முதலில் பெட்ரோல் ட்யூபைப் பிடுங்கி செக் பண்ணிப் பார்த்துவிட்டு,

“வண்டில பெட்ரோல் இல்லைங்க” என்றானாம்.

காலையில்தானே ஃபுல் டேங்க் போட்டோம், அதெப்படி காலியாகும் என்கிற நினைப்பு. எவனோ பெட்ரோலைத் திருடிக் கொண்டு போயிருக்கிறான்! காலையில்தான் பெட்ரோல் போட்டோம் என்கிற நினைப்பு இருக்கிறவன், காலைவரை நன்றாகத்தானே ஓடியது அதற்குள் வண்டியில் இத்தனை டிஃபெக்ட் வருமா என்று யோசித்திருக்கலாம், ஆனால் எது அந்த யோசனையைத் தடுத்தது?

படிப்பு. நான் ஆட்டமோபைல் போஸ்ட் கிராஜுவேட் என்கிற கர்வம்.

அது போல, தொட்டியிலிருந்து பம்ப் செய்யும் பம்ப் ஒன்று வேலை செய்யவில்லை. ஒரு ஐ. ஐ. டி எஞ்சிநியரைக் கூப்பிட்டுக் காண்பித்ததில் அவர் ஒரு யு ட்யூப் மேனோ மீட்டர் வைத்து செக் செய்வதும் டிசைன் விவரங்கள் பார்ப்பதுமாக இருந்திருக்கிறார். செக்ஷன் ஆப்பரேட்டர் வந்து

“என்ன சார் ஆச்சு?” என்று கேட்கவும்

“Actually the available NPSH is less than the required NPSH. That is why the suction is high and consequently the vapor pressure is also lowering. Naturally water will evaporate to compensate this loss and hence there is vapor lock. We need to relook the NPSH condition…” என்று அவர் வியாக்கியானம் பண்ணிக் கொண்டிருக்க,

ஒரு அன் ஸ்கில்ட் ஆசாமி வந்து கொஞ்சம் சாணியைக் கரைத்து சக்ஷன் பைப்பில் ஊற்றி பிரைம் செய்து ஸ்டார்ட் செய்ததும் பம்ப் இரைக்க ஆரம்பித்து விட்டது.

இன்னொரு அனுபவம் ரொம்ப சுவாரஸ்யமானது. கோத்தாரி கெமிக்கல்ஸில் வேலை செய்யும் போது, குளோரின் நிரப்பும் நிலையத்தில் ஒரு காண்டிராக்ட் ஒர்க்கர் சிகரெட் பிடுத்துக் கொண்டிருந்தார். அந்தப் பக்கம் வந்த எக்ஸிக்யூட்டிவ் டைரக்டர் கே.எஸ்.ரங்கராஜன் கோபமாக அவரைப் பார்த்து,

“எந்தக் காண்டிராக்ட்டுடா நீ? உன் பேரென்ன?” என்று கேட்டார்.

அவன் எதுவும் சொல்லாமல் திரு திருவென்று விழித்தான்.

தெலுங்கு, ஆங்கிலம், ஹிந்தி, மலையாளம் என்று மாறி மாறிக் கேட்டு எதற்கும் பதில் வராததால் அருகிலிருந்த சுந்தர பாஷ்யம் என்ற காண்டிராக்டரிடம்,

“எனக்கு 12 லேங்வேஜ் தெரியும். இவன் எந்த லேங்வேஜ்காரன்?” என்றார் எரிச்சலுடன்.

“தமிழ்தான் சார்” என்றார் சுந்தர பாஷ்யம்.

“பின்ன ஏன் பதில் சொல்லல்லை?” என்றார் மறுபடி எரிச்சலாக.

“அவனுக்கு காது கேக்காதுங்க”

ரிட்டையர் ஆகாமல் இருப்பது எப்படி?

காலிங் பெல் அடித்தது.

திறந்தால்,

”எக்ஸ்க்யூஸ் மி” என்று ஒரு பெண் நின்றிருந்தார். இப்போதெல்லாம் பெண்கள் வாசலில் வந்து விற்காத பொருளே இல்லை. மதம் உள்பட எல்லாமே விற்கிறார்கள்.

”யா.. யு ஆர் எக்ஸ்க்யூஸ்ட்” என்று கதவைத் திரும்ப சாத்தப் போனேன்.

“அதில்ல சார்.. கேன் யு ஸ்பேர் டூ மினிட்ஸ்?”

“கரெக்டா டூ மினிட்ஸ்தான்” என்றேன் கறாராக ராக்கெட் லாஞ்சிங்கைப் பாதியில் விட்டு வந்தவன் போல. ஆக்சுவலாய் என்ன செய்வதென்று தெரியாமல் மோவாயைச் சொறிந்து கொண்டிருந்த போதுதான் பெல் அடித்தது.

“ஓக்கே சார். திஸ் ஈஸ் என் இண்டரஸ்டிங் ஸ்கீம். மாசம் ஃபைவ் தௌசண்ட் வீதம் பத்து வருஷத்துக்கு கட்டினீங்கன்னா அதுக்கப்புறம் லைஃப் பூரா மாசம் ஃபைவ் தௌசண்ட் கிடைக்கும்”

இதென்ன பெரிய்ய இந்த ஸ்கீம்? இதை எந்தக் கழுதையிடம் கட்டினாலும் அதால் இந்த மாதிரி திருப்பித் தர முடியுமே!

“இண்டரஸ்டிங். ஆனா எனக்கு அவசியமில்லை”

“திஸ் ஈஸ் அ ரிடயர்மெண்ட் பிளான் சார்”

“கரெக்ட். ஆனா எனக்கு பிரயோஜனப்படாது”

“எவ்வளவு நாள் உழைப்பீங்க சார்? ரிட்டயர் ஆக வேண்டாமா?”

“ஆகத்தான் வேணும். அதுக்கு ஒரு விஷயம் ரொம்ப இம்பார்டண்ட் ஆச்சே”

“என்னது சார்?”

“எங்கயாவது வேலைல இருக்கணுமே?”

மூத்திரத்தில் மீன் பிடிப்பது என்றால் என்ன?

குரோம்பேட்டையில் எல்லாரும் 300 அடி, 400 அடி என்று நோண்டிக் கொண்டிருக்கிறார்கள் தண்ணீருக்காக.

நான் மாத்திரம் இன்னமும் 100 அடி போரில் போரடிக்காமல் ஒரு மணிக்கு 5 நிமிஷம், அந்த 5 நிமிஷத்தில் 30 லிட்டர், மொத்தம் 12 பம்ப்பிங் என்று காலை 5 மணி தொடங்கி மாலை 7 30 வரைக்கும் இதே வேலையாய் இருக்கிறேன். வருகிற 360 லிட்டர் தொட்டுக்கோ தொடைச்சிக்கோதான்! (ஆமாம், தொடைச்சிக்கோதான்!)

புது போர் போடத்தான் வேண்டும், ஆனால் முதலில் ஒரு வாட்டர் டிவைனர் வைத்துப் பார்த்து விடுவது என்று தீர்மானித்தேன். எலக்ட்ரிக்கல் மற்றும் பிளம்பிங் வேலை செய்யும் ஒரு ஆசாமி எங்கள் தெருவில் இருக்கிறார். அவரிடம் கேட்டதும்,

“இதோ எதுத்தூட்ல பார்த்துகிட்டு இருக்காரு வாங்க” என்று அழைத்தார்.

போனேன்.

டிவைனர் எங்கே நின்றாலும் கையிலிருந்த எலக்ட்ரோட் பின்பக்கத்தைக் காட்டியது. இடப்புறம், வலப்புறம், முன்னால் பின்னால் எங்கே போனாலும் பின்னால் காட்டுகிறது. அப்புறம் நடூ செண்ட்டருக்கு வந்தார். கையிலிருந்த எலெக்ரோட் கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ரென்று சுழல,

“இங்க தோண்டுங்க. தண்ணி இருக்கு. அஞ்சடில இருக்கு” என்றார்.

எல்லாரும் “ஏஏஏஏஏஏஏஏஏஏஏ” என்று கட்டை விரலை உயர்த்திக் கூச்சலிட வீட்டுக்காரர் டென்ஷன் ஆகிவிட்டார்.

“யோவ்.. அது ஸெப்டிக் டேங்க்குய்யா” என்றார்.

ஓ.. அதான் பின்னாலேயே காட்டிச்சா!

எனக்கு ஏமாற்றம் ஆகிப் போனது.

“என்ன சார் இப்படி ஆகிப் போச்சு?” என்றேன் எதிர் வீட்டுக்காரரிடம்.

“எதுவும் ஆகல்லை. அஞ்சு காசு செலவில்லாம, பிரச்சினை எதுவும் ஆகாம ஸெப்ட்டிக் டேங்க் கிளீன் பண்ற ஸ்டேஜுக்கு வந்திருக்கிறது தெரிஞ்சி போச்சே” என்றார்.

இதான் மூத்திரத்தில் மீன் பிடிப்பது என்பதா அல்லது அது வேறயா?

நாலு பேரு சிரிச்சா எதுவுமே தப்பில்ல

சென்ற ஞாயிறு 25-01-2015 முதல் ‘நாலு பேரு சிரிச்சா எதுவுமே தப்பில்ல’ என்கிற என் நகைச்சுவைத் தொடர் தினமலர் ஞாயிறு ஸ்பெஷல் இதழில் தொடங்கியிருக்கிறது.

சென்னை நீங்கலான இதர ஊர் தினமலர்களில் இது வெளியாகும்.

Dinamalar-25012015-Twitter

பெரியவரைப் போய் மரியாதையில்லாமல்….

பின் தெருவில் புதுசாக ஒரு அபார்ட்மெண்ட் கட்டுகிறார்கள்.

மிகச் சரியாக எங்கள் பின் சுவரை ஒட்டி இருக்கிறது அந்த இடம். அங்கே வேலை செய்கிற பணியாட்களில் யாரோ ஒருவன் தினமும் 1400 க்யூபிக் மீட்டர் பீடிப் புகை விடுகிறான். ஃபேனைப் பனிரெண்டாம் நம்பரில் வைத்தாலும் மூச்சடைக்கிறது. யார்தான் அது என்று பார்த்து விடுவதற்காக அங்கே போய் நின்றேன்.

ரெண்டு கன்னத்திலும் முக்கோணமாக டொக்கு விழுந்திருக்கிறது. கண்கள் ரெண்டும் குழி விழுந்து காதையும் தாண்டி ஆழத்தில் இருக்கின்றன. மார்பு உருண்டையாக இருக்கிறது. சுருக்கமாகச் சொன்னால் தயிர்வடை தேசிகனை ஒரு மாசம் பட்டினி போட்டது போல இருக்கிறார் அந்த ஆள். 235 வயசு இருக்கும் என்று தோன்றியது. ஏதாவது கேட்டால் 15 நிமிஷம் இருமி விட்டுத்தான் பதிலே சொல்கிறார். இருமி முடித்ததும் செத்து விடுவார் போல இருமுகிறார்.

“எவ்வளவு பீடி பிடிக்கிறீங்க தினமும்?” என்று கேட்டேன்.

“ஒரு அஞ்சாறு கட்டு இருக்குங்க” என்றார்.

“நானெல்லாம் இந்த மாதிரி பீடி பிடிச்சிருந்தேன்னா பத்து வருஷம் முன்னயே செத்திருப்பேன். நீங்க அந்தக் காலத்து உடம்புங்கிறதாலே இன்னும் உசிரு இருக்கு” என்றேன்.

என்னை ஒரு மாதிரியாகப் பார்த்தார்.

அப்போது ஒரு சித்தாள் வந்து, “இங்கே இன்னாடா பேச்சு? நாடார் கடையாண்ட போயி கேரியலை எடுத்துகிட்டு வா” என்றார். அந்தப் பெண்ணுக்கு இருபத்தைந்து வயது கூட இருக்காது.

“என்னங்க இது பெரியவரைப் போய் வாடா போடாங்கிறீங்க?” என்றேன் திகைத்து.

“என் தம்பிங்க அவன்” என்றார்.

நல்ல வேளை, அதைக் கேக்கல்லை

ஒரு மீன்பிடிப் படகு கரைதிரும்பும் போது வழி மாறி பாறையில் மோதி சேதமானது. விபத்துக்குக் காரணம் கலங்கரை விளக்கத்தின் ஆப்பரேட்டரின் பொறுப்பின்மைதான் என்று வழக்குப் பதிவு செய்தார்கள்.

தன் கட்சிக்காரர் எவ்வளவு பொறுப்பானவர் என்று நிரூபிக்க விரும்பிய அவரது வக்கீல் விசாரணையை ஆரம்பித்தார்.

“கலங்கரை விளக்கம் மீன்பிடிப் படகுகளுக்கு எந்த விதத்தில் உதவியாக இருக்கும்?”

“கரை எந்தப்பக்கம் என்பதைக் கண்டறிய உதவியாக இருக்கும்”

“எத்தனையோ விளக்குகள் இருந்தாலும் அதுதான் கலங்கரை விளக்கம் என்று எப்படித் தெரியும்?”

“கலங்கரை விளக்கத்தில் இருப்பது சுழல் விளக்கு”

“சம்பவம் நடந்த அன்று வேலைக்குப் போயிருந்தீர்களா?”

“போயிருந்தேன்”

“எத்தனை மணிக்கு?”

”மாலை ஐந்தரைக்கு”

“எப்போது ட்யூட்டி முடிந்தது?”

“காலை ஏழு மணிக்கு”

“சம்பவம் நடந்த நேரம் என்ன?”

“இரவு பனிரெண்டு மணிக்கு சற்று முன்னதாக இருக்கலாம்”

“எப்படித் தெரியும்?”

“மீட்புப் படகு கரை சேரும் போது மணி பனிரெண்டு”

“கலங்கரை விளக்கில் சுழற்சி வேலை செய்கிறதா?”

“வேலை செய்கிறது”

“அதில் என்ன பிழை வந்தாலும் உடனடியாக சரி செய்யப் போதுமான பயிற்சி உங்களுக்கு இருக்கிறதா?”

“இருக்கிறது” (மேலும்…)

அப்பா பை பை

புரண்டு படுத்த மகள் தூக்கத்தில் பேசிய வார்த்தைகள் அவனுக்கு சற்று ஆச்சரியமாக இருந்தது.

 ’அம்மா குட்நைட், அப்பா குட்நைட், தாத்தா குட்நைட் பாட்டி பை பை’ என்றாள். ம்ம்க்கும்.. பாட்டி மட்டும் தனியா ஊருக்குப் போவாளாக்கும் என்று எண்ணி சிரித்துக் கொண்டான்.

 மகள் என்றால் அவனுக்கு உயிர். கல்யாணமாகிப் பத்து வருஷம் குழந்தைகள் இல்லை. எல்லாரும் விசேஷம் உண்டா, விசேஷம் உண்டா என்று கேட்பது தாங்காமல் ஊரையே காலி பண்ணிக் கொண்டு இந்த ஊருக்கு வந்தார்கள்.

 என்ன ஆச்சரியம்!

 பத்தாம் மாசம் இவள் பிறந்தாள். அந்த வீட்டின் மீதும், மகளின் மீதும் விசேஷ பாசம் உண்டாயிற்று. தாத்தா பாட்டி என்றால் குழந்தைக்கு உயிர். எல்லாக் குழந்தைகளுக்கும் அம்மாவின் அப்பா அம்மா என்றால் விசேஷ பிரியம். கனவில் கூட அவர்கள் வருகிறார்கள். பாட்டி அந்தக் காலத்து மனிஷி. தனியாக ஊருக்குப் போக மாட்டாள் என்று காலையில் சொல்ல வேண்டும் என்று நினைத்துக் கொண்டான்.

 அடுத்த நாள் ஊரிலிருந்து மாமியார் இறந்து விட்டதாக தந்தி வரும் போது அதிர்ச்சியாக இருந்தது. சரி இது ஏதோ அன் எக்ஸ்பெக்டட் கோயின்ஸிடன்ஸ் என்று விட்டுவிட்டான். ஏறக்குறைய ஒரு வருஷம் ஆகி விட்டது. ஒரு நாள் இரவு மறுபடியும் அதே போல ஒரு சம்பவம்.

 அன்றைக்குத் தூக்கத்தில் ‘அம்மா குட்நைட், அப்பா குட்நைட், தாத்தா பை பை’ என்றாள். ஏதோ ஒரு தரம் காக்கை உட்காரப் பனம்பழம் விழுந்தது போல ஆகியிருக்கும். இதைப் பெரிதாக எடுத்துக் கொள்ள வேண்டாம் என்று நினைத்துக் கொண்டான்.

 ஆனால்,

 அடுத்த நாள் மாமனார் இறந்து விட்டதாகத் தந்தி வந்தது.

 அன்றிலிருந்து மகள் புரண்டு படுக்கிற போதெல்லாம் அவனுக்கு ரத்தம் சில்லிட்டு மூச்சு ஒடுங்கியது. அவன் பயந்த அந்த நாளும் வந்தது.

 ‘அம்மா குட்நைட், அப்பா பை பை’ என்றாள் அன்றைக்கு.

 அன்று இரவு கடப்பதே பெரிய விஷயமாக இருந்தது. தூக்கமே வரவில்லை. வியர்த்தது. பொழுது விடியும் போது உயிருடன் இருந்தது ஆச்சரியமாக இருந்தது. வாசற்கதவைத் திறந்து கொண்டு வெளியில் போய் சோம்பல் முறித்துக் கொட்டாவி விட்டான்.

 அப்பாடா.. காக்காய் உட்கார இரண்டு பனம்பழம் கூட விழுவதுண்டு போலிருக்கிறது என்று நினைத்துக் கொண்டான்.

 எதிர்வீட்டிலிருந்து அழுகுரல் கேட்டது.

பொன்னார்

”ஆங்கிலேயர்கள் காலத்தில் சாலைகளுக்கும், தெருக்களுக்கும் வைக்கப்பட்ட பெயர்களை மாற்றிகிட்டே வர்ராங்க. இந்த ஆர்மேனியன் ஸ்ட்ரீட்டை எப்போ மாத்துவாங்க?”

 “எதுக்காக மாத்தணும்?”

 “எதுக்காகவா? அந்நியர்கள் வெச்ச பேரை நாம ஏன் உபயோகப் படுத்தணும்? ஆர்மேனியன்ங்கிறது யாரோ, எவரோ. நம்ம நாட்டுக்காரங்க யார் பேராவது வைக்கலாமே, மற்ற சாலைகளுக்கு மாற்றின மாதிரி”

 “சிவபெருமான் அந்நியரா?”

 “இல்லையே?”

 “அப்ப இதே பேர் இருந்துட்டுப் போகட்டும்”

 “ஆர்மேனியன்ங்கிறது சிவபெருமானா?”

 “ஆமாம்”

 “யார் சொன்னது?”

 “சுந்தரர்”

 “யாரு சுந்தர் சியா?”

 “ம்ம்ஹூம்.. சுந்தரமூர்த்தி சுவாமிகள்”

 “அவர் எப்போ அப்படிச் சொன்னார்?”

 “பொன்னார் மேனியனே புலித் தோலை அரைக்கசைத்துங்கிற தேவாரம் அவர்தானே பாடினார்?”

ஓ.. அந்த வீடா?

நடு ராத்திரியில் அந்த போலிஸ் ஸ்டேஷன் ஃபோன் அடித்தது.

 தூக்கக் கலக்கத்துடன் அதை எடுத்தார் டூட்டி கான்ஸ்டபிள் “ஹலோ..?”

 “ஒரு திருடன் மாட்டிக்கிட்டான், உடனே வாங்க”

 “மாட்டிக்கிட்டான்னா? எங்கே மாட்டிக்கிட்டான்? அட்ரஸ் சொல்லுங்க”

 “மார்க்கண்டேயன் தெரு தெரியுமா?”

 “தெரியும் சொல்லுங்க”

 “அங்கே ஒரு பிள்ளையார் கோயிலுக்கு எதிர்வீடு”

 ”தெரியும்.. சொல்லுங்க”

 “அங்கதான் சார் பெட் ரூம்ல சிக்கியிருக்கான்”

 “ஓஹோ.. நீங்க யாரு?”

 “நாந்தான் சார் அந்த சிக்கின திருடன், உடனே வந்து காப்பாத்துங்க சார்”

 “அது கஷ்டம். காலைலதான் வர முடியும்”

 “ஏன் சார்?”

 “அவளுக்கு பயந்துதான்ய்யா நான் பர்மனண்ட்டா நைட் ட்யூட்டி வாங்கிகிட்டு இருக்கேன் வெண்ணை”