நீங்களும் இப்படித்தான் நினைச்சிருப்பீங்க

இந்தக் குட்டிக் கதை Discipline என்கிற சமாச்சாரம் ரொம்ப சுவாரஸ்யமானது, ஆச்சரியமானது, குழப்பமானது என்பதைச் சொல்கிறது. (கவனக் குறைவா ஒரு ஸ்பெல்லிங் மிஸ்டேக் பண்ணினா அதுதான் எல்லார் கண்ணுலயும் படுது! விஷயத்தை விட்டுடறாங்கெ!  🙂 )

மிதமிஞ்சிய கட்டுப்பாடுகளுடன் வளர்க்கப்பட்ட குழந்தைகள் ஹாஸ்டலில் சேரும் போது சுதந்திரத்தைக் கொண்டாடுகிறார்கள். தறிகெட்டுப் போகிறார்கள். அப்படி ஒரு பையன் கெட்ட பழக்கங்களுக்கு அடிமைப்பட்டு நாசமாகிக் கொண்டிருந்தான். விடுமுறைக்கு வந்த அவனுக்கு அப்பா அறிவுரை, அறவுரை எல்லாம் வழங்கவில்லை. கண்டிக்கவோ, தண்டிக்கவோ இல்லை.

அப்பாவும் பிள்ளையும் சேர்ந்து பட்டம் விட்டுக் கொண்டிருந்தார்கள். அப்பா கேட்டார், “தம்பி.. நூலோட வேலை என்னன்னு சொல்லு பார்க்கலாம்?”

பையன் கொஞ்சமும் தாமதிக்காமல் சொன்னான் “நூல்தாம்ப்ப்பா பட்டத்தை இழுத்துப் பிடிச்சிருக்கு”

அப்பா சொன்னார், “இல்லை மகனே நூல்தான் அதைப் பறக்க வச்சிகிட்டு இருக்கு”

பையன் சிரித்தான். அப்பா ஒரு கத்தரியால் நூலை வெட்டினார். முதலில் பட்டம் விடுபட்டு தாறுமாறாகப் பறந்தது. கொஞ்ச நேரத்தில், சற்று தூரம் தள்ளி கீழே போய் விழுந்தது.

“ஒழுக்கம் இப்படியானதுதான் மகனே. அது உன்னை இழுத்துப் பிடித்திருப்பதாக நீ நினைத்துக் கொண்டிருக்கிறாய். அதிலிருந்து அறுத்துக் கொண்டால் சுதந்திரம் என்று நினைத்திருக்கிறாய். ஆனால் அந்த சுதந்திரம் ரொம்ப தாற்காலிகமானது. சீக்கிரமே கீழே விழுந்து விடுவாய். ஒழுக்கம்தான் உன்னைக் கொடிகட்டிப் பறக்க வைத்துக் கொண்டிருப்பது. உன்னை அதிலிருந்து அறுத்துக் கொள்ளாதே”

பையன் அதற்குப் பிறகு எந்தக் கெட்ட விஷயங்கள் பக்கமும் போகவில்லை.

(ஷிவ் கேராவின் இரண்டு வரிக் கதையின் அடிப்படையில் நான் எழுதியது)

Advertisements

ரிட்டையர் ஆகாமல் இருப்பது எப்படி?

காலிங் பெல் அடித்தது.

திறந்தால்,

”எக்ஸ்க்யூஸ் மி” என்று ஒரு பெண் நின்றிருந்தார். இப்போதெல்லாம் பெண்கள் வாசலில் வந்து விற்காத பொருளே இல்லை. மதம் உள்பட எல்லாமே விற்கிறார்கள்.

”யா.. யு ஆர் எக்ஸ்க்யூஸ்ட்” என்று கதவைத் திரும்ப சாத்தப் போனேன்.

“அதில்ல சார்.. கேன் யு ஸ்பேர் டூ மினிட்ஸ்?”

“கரெக்டா டூ மினிட்ஸ்தான்” என்றேன் கறாராக ராக்கெட் லாஞ்சிங்கைப் பாதியில் விட்டு வந்தவன் போல. ஆக்சுவலாய் என்ன செய்வதென்று தெரியாமல் மோவாயைச் சொறிந்து கொண்டிருந்த போதுதான் பெல் அடித்தது.

“ஓக்கே சார். திஸ் ஈஸ் என் இண்டரஸ்டிங் ஸ்கீம். மாசம் ஃபைவ் தௌசண்ட் வீதம் பத்து வருஷத்துக்கு கட்டினீங்கன்னா அதுக்கப்புறம் லைஃப் பூரா மாசம் ஃபைவ் தௌசண்ட் கிடைக்கும்”

இதென்ன பெரிய்ய இந்த ஸ்கீம்? இதை எந்தக் கழுதையிடம் கட்டினாலும் அதால் இந்த மாதிரி திருப்பித் தர முடியுமே!

“இண்டரஸ்டிங். ஆனா எனக்கு அவசியமில்லை”

“திஸ் ஈஸ் அ ரிடயர்மெண்ட் பிளான் சார்”

“கரெக்ட். ஆனா எனக்கு பிரயோஜனப்படாது”

“எவ்வளவு நாள் உழைப்பீங்க சார்? ரிட்டயர் ஆக வேண்டாமா?”

“ஆகத்தான் வேணும். அதுக்கு ஒரு விஷயம் ரொம்ப இம்பார்டண்ட் ஆச்சே”

“என்னது சார்?”

“எங்கயாவது வேலைல இருக்கணுமே?”

மூத்திரத்தில் மீன் பிடிப்பது என்றால் என்ன?

குரோம்பேட்டையில் எல்லாரும் 300 அடி, 400 அடி என்று நோண்டிக் கொண்டிருக்கிறார்கள் தண்ணீருக்காக.

நான் மாத்திரம் இன்னமும் 100 அடி போரில் போரடிக்காமல் ஒரு மணிக்கு 5 நிமிஷம், அந்த 5 நிமிஷத்தில் 30 லிட்டர், மொத்தம் 12 பம்ப்பிங் என்று காலை 5 மணி தொடங்கி மாலை 7 30 வரைக்கும் இதே வேலையாய் இருக்கிறேன். வருகிற 360 லிட்டர் தொட்டுக்கோ தொடைச்சிக்கோதான்! (ஆமாம், தொடைச்சிக்கோதான்!)

புது போர் போடத்தான் வேண்டும், ஆனால் முதலில் ஒரு வாட்டர் டிவைனர் வைத்துப் பார்த்து விடுவது என்று தீர்மானித்தேன். எலக்ட்ரிக்கல் மற்றும் பிளம்பிங் வேலை செய்யும் ஒரு ஆசாமி எங்கள் தெருவில் இருக்கிறார். அவரிடம் கேட்டதும்,

“இதோ எதுத்தூட்ல பார்த்துகிட்டு இருக்காரு வாங்க” என்று அழைத்தார்.

போனேன்.

டிவைனர் எங்கே நின்றாலும் கையிலிருந்த எலக்ட்ரோட் பின்பக்கத்தைக் காட்டியது. இடப்புறம், வலப்புறம், முன்னால் பின்னால் எங்கே போனாலும் பின்னால் காட்டுகிறது. அப்புறம் நடூ செண்ட்டருக்கு வந்தார். கையிலிருந்த எலெக்ரோட் கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ரென்று சுழல,

“இங்க தோண்டுங்க. தண்ணி இருக்கு. அஞ்சடில இருக்கு” என்றார்.

எல்லாரும் “ஏஏஏஏஏஏஏஏஏஏஏ” என்று கட்டை விரலை உயர்த்திக் கூச்சலிட வீட்டுக்காரர் டென்ஷன் ஆகிவிட்டார்.

“யோவ்.. அது ஸெப்டிக் டேங்க்குய்யா” என்றார்.

ஓ.. அதான் பின்னாலேயே காட்டிச்சா!

எனக்கு ஏமாற்றம் ஆகிப் போனது.

“என்ன சார் இப்படி ஆகிப் போச்சு?” என்றேன் எதிர் வீட்டுக்காரரிடம்.

“எதுவும் ஆகல்லை. அஞ்சு காசு செலவில்லாம, பிரச்சினை எதுவும் ஆகாம ஸெப்ட்டிக் டேங்க் கிளீன் பண்ற ஸ்டேஜுக்கு வந்திருக்கிறது தெரிஞ்சி போச்சே” என்றார்.

இதான் மூத்திரத்தில் மீன் பிடிப்பது என்பதா அல்லது அது வேறயா?

நாலு பேரு சிரிச்சா எதுவுமே தப்பில்ல

சென்ற ஞாயிறு 25-01-2015 முதல் ‘நாலு பேரு சிரிச்சா எதுவுமே தப்பில்ல’ என்கிற என் நகைச்சுவைத் தொடர் தினமலர் ஞாயிறு ஸ்பெஷல் இதழில் தொடங்கியிருக்கிறது.

சென்னை நீங்கலான இதர ஊர் தினமலர்களில் இது வெளியாகும்.

Dinamalar-25012015-Twitter

மஹாசக்தியே வந்து பிறந்தாலும்….

“என்னென்ன காரணத்துக்கோ அவதாரம் எடுத்து அலுப்பா இருக்கு. பூலோகத்தில் ஒரு சாதாரணப் பெண்ணாப் பிறந்து கொஞ்ச காலம் வாழணும் போல இருக்கு” என்றார் சக்தி.

பரமேஸ்வரன் பதிலேதும் சொல்லவில்லை. லேசாகப் புன்னகை மட்டும் செய்தார்.

“இந்தப் புன்னகைக்கு என்ன அர்த்தம்?”

“புன்னகைக்கு எதுக்கு அர்த்தம் இருக்கணும்? புன்னகையே வேறே ஏதோ ஒண்ணின் அர்த்தம்தானே?”

“அர்த்தமே புரியல்லை, ஆகவே கட்டாயம் இது எதோட அர்த்தமோ அது எனக்குப் புரியப் போகிறதில்லை. நான் பூலோகத்தில் பிறக்க இருப்பதில் உங்களுக்கு ஆட்சேபமில்லையே?”

“என் ஆட்சேபத்தை மீறி நீ போனதில்லையா?”

“உண்டு, ஆனால் அது உங்களை மீற வேண்டும் என்பதற்காக அல்ல. மனைவியர் மீது ஆண்கள் அனாவசியமான ஆதிக்கம்………”

“ஓ.. மேன். இதைப் பலமுறை கேட்டாகி விட்டது. உன்னுடைய ஆட்டிட்ட்யூட் காரணமாய் இப்போது பூலோகத்தில் எந்தப் பக்கம் போனாலும் பெண்கள் மேல் சாவனிஸம் பேசுகிறார்கள் “

“இதோ.. இப்படிப் பெண்களைப் பேசக் கூட அனுமதிக்காத ஆட்டிட்யூட்தான் அதற்குக் காரணம். சரி, என்னுடைய சார்ஜையும் சேர்த்து ஹேண்டில் பண்ணுவீர்களா, எனி அப்ஜெக்‌ஷன்ஸ் ஆர் ப்ரெஜுடிஸஸ்?”

”மனிதப் பிறவி என்பது ஆஃப்டர் ஆல் நம் கணக்கில் அதிக பட்சம் இரண்டு மாதங்கள். நீ புறப்படு, ஐ ஹேவ் நோ அப்ஜக்‌ஷன்ஸ் வாட் ஸோ எவர். எந்த ஊர்?”

“பழகின ஊர்தான், மதுரை”

“என்னுடன் பழகின ஊரா?”

பரமேஸ்வரனின் மொக்கைக்கு ஒரு வாய்ச் சுளிப்பை விடையாகக் கொடுத்து விட்டு பார்வதி புறப்பட்டார்.

பரமேஸ்வரன் வாட்சைப் பார்த்தார். மணி பத்து. பார்வதி இப்போது கருவாக உருவானால் ஜனிப்பதற்கு இன்னும் ஒன்றேகால் மணிநேரம் ஆகலாம். மொபைல் அடித்தது.

எமன்.

“எமா, ஒரு ஒண்ணரை மணி நேரம் கழிச்சி வர்ரேன். பூமியில் இன்னைக்குப் பிறக்கப் போற ஒரு உயிருக்கு ஆசி வழங்கி ஆல் தி பெஸ்ட் சொல்லிட்டு வரணும்”

“ஓ.. மேடம் அவதாரம் எடுக்கறாங்களா? யாரை சம்ஹாரம் பண்ண?”

“சம்ஹாரம் பண்ண ஏகப்பட்ட பேர் இருக்காங்க. ஒரு அவதாரத்தில் அவ்வளவு பேரையும் தீர்த்துக் கட்டணும்ன்னா அணுகுண்டாத்தான் அவதாரம் எடுக்கணும்”

“வாஸ்தவம்தான். அதுக்கு அமெரிக்காக்காரன் கிட்டே பர்மிஷன் வாங்கணுமே” என்று அறுத்து விட்டு எமன் ஃபோனை வைத்து விட்டான்.

முற்பகல் செய்யின் முற்பகலே விளையும் போலிருக்கு. நான் போட்ட மொக்கை எனக்கே ரிட்டர்ன் ஆகுதே என்று நினைத்தபடி கொஞ்சம் டென்ஷனாக, பதினொன்றேகால் ஆகக் காத்திருந்தார். ஏதாவது யோசனையில் மறந்து விட்டால் என்ன செய்வது என்று மொபைலில் ரிமைண்டரும் போட்டு வைத்தார்.

மொபைலில் ரிமைண்டர் அடிக்கும் போது பார்வதி உள்ளே வந்து கொண்டிருந்தார்.

“என்ன ஆச்சு? ஐடியாவை டிராப் பண்ணிட்டியா?” என்றார் ஆச்சரியமாக.

“ப்ச்.. முடிஞ்சது” என்றார் பார்வதி.

வாயிலிருந்து கள்ளிப் பால் வழிந்து கொண்டிருந்தது. ஜனிக்கப் போகும் ஊர் மதுரை என்று சொன்னது ஞாபகம் வந்தது.

கூழுக்கும் ஆசை மீசைக்கும் ஆசைன்னா என்ன?

”கூழுக்கும் ஆசை, மீசைக்கும் ஆசை என்கிற பழமொழியை You can’t have the cake and eat it too என்கிற ஆங்கிலப் பழமொழிக்கு இணையாகச் சொல்லலாமா?” என்று கேட்டார் நண்பர்.

“முழுமையான இணை என்று சொல்ல முடியாது” என்றேன்.

“முழுமையான என்றால்?”

“கூழுக்கும் ஆசை மீசைக்கும் ஆசை என்கிற Dilemma வரும் போது எப்படி Decision எடுக்கணும்ன்னு நம்ம முன்னோர்கள் சொன்ன பழமொழி வழி காட்டுது. ஆனா ஆங்கிலப் பழமொழி இரண்டில் ஒன்றுதான் சாத்தியம் என்கிறதை மட்டும்தான் சொல்லுது”

“கூழுக்கும் ஆசை மீசைக்கும் ஆசைல எப்படி Decision எடுக்கணும்ன்னு சொல்லியிருக்கா?”

“ஆமாம்”

“எப்படி?”

“மீசையை சிரைச்சி எறிஞ்சிட்டு கூழைக் குடின்னு அர்த்தம்”

“எது கூழ் எது மீசைன்னு தெரியாததுதானே நிதர்சனம்?”

“நிதர்சனமும் இல்லை, சுதர்சனமும் இல்லை. கூழ் என்கிறது Need. பசிக்கு சாப்பிடுவது. மீசை என்கிறது Desire. அழகுக்காக வைப்பது. You have to choose between Need and Desire”

பெரியவரைப் போய் மரியாதையில்லாமல்….

பின் தெருவில் புதுசாக ஒரு அபார்ட்மெண்ட் கட்டுகிறார்கள்.

மிகச் சரியாக எங்கள் பின் சுவரை ஒட்டி இருக்கிறது அந்த இடம். அங்கே வேலை செய்கிற பணியாட்களில் யாரோ ஒருவன் தினமும் 1400 க்யூபிக் மீட்டர் பீடிப் புகை விடுகிறான். ஃபேனைப் பனிரெண்டாம் நம்பரில் வைத்தாலும் மூச்சடைக்கிறது. யார்தான் அது என்று பார்த்து விடுவதற்காக அங்கே போய் நின்றேன்.

ரெண்டு கன்னத்திலும் முக்கோணமாக டொக்கு விழுந்திருக்கிறது. கண்கள் ரெண்டும் குழி விழுந்து காதையும் தாண்டி ஆழத்தில் இருக்கின்றன. மார்பு உருண்டையாக இருக்கிறது. சுருக்கமாகச் சொன்னால் தயிர்வடை தேசிகனை ஒரு மாசம் பட்டினி போட்டது போல இருக்கிறார் அந்த ஆள். 235 வயசு இருக்கும் என்று தோன்றியது. ஏதாவது கேட்டால் 15 நிமிஷம் இருமி விட்டுத்தான் பதிலே சொல்கிறார். இருமி முடித்ததும் செத்து விடுவார் போல இருமுகிறார்.

“எவ்வளவு பீடி பிடிக்கிறீங்க தினமும்?” என்று கேட்டேன்.

“ஒரு அஞ்சாறு கட்டு இருக்குங்க” என்றார்.

“நானெல்லாம் இந்த மாதிரி பீடி பிடிச்சிருந்தேன்னா பத்து வருஷம் முன்னயே செத்திருப்பேன். நீங்க அந்தக் காலத்து உடம்புங்கிறதாலே இன்னும் உசிரு இருக்கு” என்றேன்.

என்னை ஒரு மாதிரியாகப் பார்த்தார்.

அப்போது ஒரு சித்தாள் வந்து, “இங்கே இன்னாடா பேச்சு? நாடார் கடையாண்ட போயி கேரியலை எடுத்துகிட்டு வா” என்றார். அந்தப் பெண்ணுக்கு இருபத்தைந்து வயது கூட இருக்காது.

“என்னங்க இது பெரியவரைப் போய் வாடா போடாங்கிறீங்க?” என்றேன் திகைத்து.

“என் தம்பிங்க அவன்” என்றார்.

நல்ல வேளை, அதைக் கேக்கல்லை

ஒரு மீன்பிடிப் படகு கரைதிரும்பும் போது வழி மாறி பாறையில் மோதி சேதமானது. விபத்துக்குக் காரணம் கலங்கரை விளக்கத்தின் ஆப்பரேட்டரின் பொறுப்பின்மைதான் என்று வழக்குப் பதிவு செய்தார்கள்.

தன் கட்சிக்காரர் எவ்வளவு பொறுப்பானவர் என்று நிரூபிக்க விரும்பிய அவரது வக்கீல் விசாரணையை ஆரம்பித்தார்.

“கலங்கரை விளக்கம் மீன்பிடிப் படகுகளுக்கு எந்த விதத்தில் உதவியாக இருக்கும்?”

“கரை எந்தப்பக்கம் என்பதைக் கண்டறிய உதவியாக இருக்கும்”

“எத்தனையோ விளக்குகள் இருந்தாலும் அதுதான் கலங்கரை விளக்கம் என்று எப்படித் தெரியும்?”

“கலங்கரை விளக்கத்தில் இருப்பது சுழல் விளக்கு”

“சம்பவம் நடந்த அன்று வேலைக்குப் போயிருந்தீர்களா?”

“போயிருந்தேன்”

“எத்தனை மணிக்கு?”

”மாலை ஐந்தரைக்கு”

“எப்போது ட்யூட்டி முடிந்தது?”

“காலை ஏழு மணிக்கு”

“சம்பவம் நடந்த நேரம் என்ன?”

“இரவு பனிரெண்டு மணிக்கு சற்று முன்னதாக இருக்கலாம்”

“எப்படித் தெரியும்?”

“மீட்புப் படகு கரை சேரும் போது மணி பனிரெண்டு”

“கலங்கரை விளக்கில் சுழற்சி வேலை செய்கிறதா?”

“வேலை செய்கிறது”

“அதில் என்ன பிழை வந்தாலும் உடனடியாக சரி செய்யப் போதுமான பயிற்சி உங்களுக்கு இருக்கிறதா?”

“இருக்கிறது” (மேலும்…)

மாரல் ஆஃப் தி ஸ்டோரி

அம்புலிமாமா ஸ்டைலில் ஒரு கதை தோன்றியது.

ம்க்க்குக்கும்.

பரமசிவனும், பார்வதியும் பொழுது போகாமல் பூலோகத்திற்கு வந்திருந்தார்கள். அவர்கள் மாறுவேடத்தில் இருந்ததால் யாருக்கும் அடையாளம் தெரியவில்லை. பூலோகத்தில் இருக்கும் மக்களுக்கு ஏதாவது சோதனைகள் வைத்து யார் சிறந்தவர் என்று தங்களுக்குள் விவாதம் செய்து கொள்வது சிவனுக்கும் பார்வதிக்கும் பிடித்த பொழுது போக்கு. அந்த ஊரிலும் அதே விளையாட்டை விளையாடத் தீர்மானித்தார்கள்.

வழியில் எதிர்ப்பட்ட ஒருவரிடம் “உங்க ஊர்லயே பெரிய வள்ளல் யாருப்பா?” என்று கேட்டார் சிவன்.

“அண்ணாமலை ஐயாதானுங்க” என்றார் அவர்.

இன்னும் கொஞ்ச தூரம் போனதும் இன்னொருவரை பார்வதி கேட்க, அவர்

“பெரியண்ணன் ஐயாதானுங்கம்மா” என்றார்.

தொடர்ந்து கேட்டுக் கொண்டே போக மாற்றி மாற்றி இந்த இருவரின் பெயரையே எல்லாரும் சொன்னார்கள். யார்தான் சிறந்த வள்ளல் என்று பார்த்துவிட முடிவு செய்தார்கள். முதலில் அண்ணாமலை வீட்டுக்குப் போனார்கள். தாங்கள் ஒரு வண்டி நிறைய பணம் கொண்டு வந்திருப்பதாகவும் அதை ஒரு மணி நேரத்துக்குள் மக்களுக்கு தானம் செய்து விட வேண்டும் என்றும் மிச்சமிருந்தால் அவரே வைத்துக் கொள்ளலாம் என்றும் சொன்னார்கள். அண்ணாமலை ஒப்புக் கொண்டார். சிவனும் பார்வதியும் தங்களை மறைத்துக் கொண்டு கவனித்தார்கள்.

அண்ணாமலை வருவோர் போவோருக்கெல்லாம் ஒவ்வொரு கட்டாகக் கொடுத்துக் கொண்டிருந்தார். ஒரு மணி நேரம் கழித்து ஏகப்பட்ட பணம் மிச்சமாகி விட்டது.

அடுத்ததாக பெரியண்ணன் வீட்டுக்குப் போய் ஆக்‌ஷன் ரீபிளே செய்தார்கள்.

பெரியண்ணன் வந்தவர்கள் எல்லாருக்கும் கைநிறைய கட்டுக் கட்டாக பணத்தை வாரிக் கொடுத்தார். ஒரு மணி நேரம் கழித்து பத்துப் பதினைந்து கட்டுகள் மிச்சமிருந்தன.

பெரியண்ணன்தான் சிறந்த வள்ளல் என்று பரமசிவன் முடிவு செய்தார். இல்லை அண்ணாமலைதான் என்று பார்வதி சொன்னார். விவாதிக்க ஆரம்பித்தார்கள். தனக்கு நிறைய வேண்டும் என்றுதான் அண்ணாமலை ஒவ்வொன்றாகக் கொடுத்தார் என்பது சிவபெருமானின் வாதம். பார்வதி வாதிடவில்லை. ‘நாளைக்குச் சொல்கிறேன்’ என்று மட்டும் சொன்னார்.

மறுநாள் இருவரும் நகர்வலம் போனார்கள்.

பெரியண்ணனிடம் பணம் வாங்கியவர்கள் எவ்வளவு செலவு செய்தும் இன்னும் பணம் மீதமிருக்க பணத்தைக் குடிப்பதிலும், விபச்சாரத்திலும் செலவு செய்து கொண்டிருந்தார்கள். அண்ணாமலையிடம் பணம் வாங்கியவர்கள் பணம் கொஞ்சமாக இருந்ததால் தங்களுக்கும் பிள்ளைகளுக்கும் தின்பண்டங்களும், உடைகளும் வாங்கிக் கொண்டு சந்தோஷமாக இருந்தார்கள்.

இதைச் சொல்லி விட்டு ”மாரல் ஆஃப் தி ஸ்டோரி என்ன?” என்று இல்லத்தரசியிடம் கேட்டேன்.

“எப்பவுமே பொண்டாட்டி சொல்றதுதான் சரியா இருக்கும். இதான் மாரல்” என்கிறார்.

நானும் அங்கேதான் போறேன்

சீட் காலியாக இருக்கிறதே என்று மூன்றாம் வகுப்புப் பெட்டியில் காலை நீட்டிப் படுத்தபடி போய்க் கொண்டிருந்தாராம் காந்தி.

அசதியில் தூங்கியும் விட்டார்.

கொஞ்சம் கூட்டம் சேர ஆரம்பித்த பிறகு குடியானவர் ஒருவர் வந்து, “யோவ் பெருசு.. இதென்ன உங்கப்பன் வீட்டு வண்டியா? எழுந்து உக்காருய்யா” என்கிற ரீதியில் கடுப்படித்திருக்கிறார்.

காந்தி அமைதியாக எழுந்து இடம் கொடுத்து விட்டார். பின்னர் மெல்ல அந்த ஆளிடம், “எங்கே போறீங்க?” என்று கேட்டிருக்கிறார்.

“பேதியாங்கிற இடத்தில் மஹாத்மாஜியோட மீட்டிங். அதுக்குத்தான் போய்க்கிட்டிருக்கேன். நீ எங்கே (தூ என்கிற பதத்தை உபயோகித்தாராம்) போறே?” என்றார் அந்த ஆள்.

“நானும் அதே மீட்டிங்குக்குத்தான் போய்கிட்டிருக்கேன்” என்று மட்டும் சொன்னாராம் காந்தி.

இதைப் படிக்கும் போது Hilaire Belloc எழுதிய A Conversation with a Reader என்கிற கட்டுரை ஞாபகம் வந்தது. ரயிலில் போகும் போது எதேச்சையாய் எதிரிலிருக்கும் பிரயாணி இவரது புத்தகத்தை வாசித்துக் கொண்டிருக்க, ஆவலாய் அவரிடம் ’புத்தகம் எப்படி?’ என்று கேட்பார். ‘Silly Stuff’ என்று அவன் பதில் சொல்வானென்று தொடங்கும்.

அபிமான எழுத்தாளர்களின் எழுத்துக்களைப் படித்து அவர்களை நேரில் பார்க்காத வாசகர்கள் ஏராளம் பேர்கள் இருந்தார்கள் ஒருகாலத்தில். அப்போதெல்லாம் பொதுவாக எழுத்தாளர்கள் படத்தைப் பத்திரிகையில் போடுவது கிடையாது. எழுத்துக்களின் தன்மையின் அடிப்படையில் நாமே ஒரு இமேஜை உருவாக்கிக் கொள்வது பொதுவாக எல்லாருமே செய்வது. முதன் முதலில் நேரில் சந்திக்கும் போது கட்டாயம் நிறைய அதிர்ச்சிகள் இருக்கும். உருவத்தால் மட்டுமல்ல, குணங்களாலும். ஒருவரின் எழுத்துக்கள் அவரைப் பிரதிபலிப்பதில்லை என்கிற உண்மையைத் தாமதமாய்த்தான் நாமெல்லோரும் அறிகிறோம்.

ஹில்லரி பெல்லாக்கிற்கு நேர்ந்தது போன்ற அனுபவம் எனக்குக் கிடைக்க வேண்டும் என்பது என் நெடுநாள் ஆசை. அதற்கு முதலில் நான் எழுத்தாளர் ஆக வேண்டும், பிரபலமும் ஆக வேண்டும். முதலாவதை மட்டுமாவது இந்த ஆண்டுக்குள் செய்து விட ஆசை!