அரசியல்

இட ஒதுக்கீடுகளின் நோக்கம் நிறைவேறி விட்டதா?

இட ஒதுக்கீடு என்பது விவாதத்துக்கு அப்பாற்பட்டது என்பது மாதிரியான மனப்பாங்கு சற்றுக் குறைந்திருக்கிறது.

நேற்று இண்டியா டுடே செய்தி அலைவரிசையில் கரண் தாப்பர் ஒருங்கிணைப்பாளராய் இருந்து நடத்திய விவாதம் சுவாரஸ்யமான விஷயங்களைத் தொட்டது. ஒதுக்கீடு பெற்றவர்கள் வசதி அடைந்து விட்டார்களா என்பதும் அவர்கள் தொட்டுப் பார்த்த சங்கதிகளில் ஒன்று. ஏழை பிராமணர்களுக்கும், ஷத்ரியர்களுக்கும் கூட ஒதுக்கீடு தரப்படலாமே என்றார் தாப்பர்.

 நல்ல சிந்தனை. ஆனால்,

 அங்கே எனக்கொரு சின்ன அபிப்ராய பேதம். இட ஒதுக்கீடு பொருளாதார மேம்பாட்டுக்கு மாத்திரம் தரப்பட்டது அல்ல. பொருளாதார மேம்பாட்டின் வழியே சமூக அங்கீகாரம் பெற்றுத் தருவதுதான் முக்கிய நோக்கம் என்று கருதுகிறேன். அந்த அங்கீகாரம் இன்னும் முழுமையாய்க் கிடைக்கவில்லை என்றும் கருதுகிறேன்.

கிடைக்கவில்லை என்பதுதான் சமீபத்தில் நடந்த கொலையும் சொல்லும் உண்மை. சம்பந்தப்பட்ட பெண்ணின் தகப்பனார்தான் கொலைக்குக் காரணம் என்று பரவலாகச் சொல்லப்படுகிறது. ஆனால் அவர் தானே முன்வந்து சரண் அடைந்திருக்கிறார். அவர் முகத்தில் ஆத்திரமோ, அவமானமோ, ஏமாற்றோ இல்லை. அவரை ஆதிக்க சாதிக்காரர் என்று குறிப்பிடுவதே தவறோ என்று கூடத் தோன்றுகிறது. வெறும் ஜாதியை மாத்திரம் வைத்துக் கொண்டு ஆதிக்கம் செலுத்த முடியுமோ?

எந்த ஜாதிக்காரராக இருந்தாலும் பணக்காரராக இருந்தால்தான் ஆதிக்கம் செலுத்த முடியும். அவரைப் பார்த்தால் அப்படி ஒன்றும் வசதியானவராய்த் தெரியவில்லை.

இந்தச் சம்பவம் குறித்து பா. ம. க வின் ராமதாஸ் ஏன் கருத்துக் கூற மறுத்திருக்கிறார்? நடந்த கொலையில் அரசியல் தலையீடு உண்டா என்கிற கோணத்திலும் போலிஸார் பார்க்க வேண்டும் என்று கருதுகிறேன்.

ஆரம்பித்த இடத்துக்குத் திரும்ப வருவோம். விவாதத்துக்கு அடிப்படைக் காரணம் ஆர். எஸ். எஸ் ஸின் சுரேஷ் ஜோஷி தெரிவித்த கருத்தே. அவரது கருத்து இட ஒதுக்கீடு நிறுத்தப்பட வேண்டும் என்பதாக இருப்பது போல விவாதித்தவர்கள் பேசினார்கள்.

இட ஒதுக்கீட்டால் பலன் பெற்று விட்ட குடும்பங்கள், தங்களைக் காட்டிலும் கீழான நிலையில் இருப்பவர்களுக்கு முன்னுரிமை தந்து விலகிக் கொள்ள வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டிருக்கிறார்.

எனக்கும் இது ஓரளவு சரிதான் என்றே தோன்றுகிறது. ஏன் ஓரளவு என்று சொல்கிறேன் என்றால், அவர் குறிப்பிடும் குடும்பங்களுக்கு சமூக அங்கீகாரமும் கிடைத்திருக்குமானால் அவர்கள் விட்டுக் கொடுக்கலாம்.

சமூக அங்கீகாரத்தைப் பொருளாதார மேம்பாட்டின் மூலம் மாத்திரம் பெற்றுவிட முடியாது என்று எனக்குத் தோன்றுகிறது. மக்களின் மனப்பாங்கு மாற வேண்டும். மக்கள் என்று நான் குறிப்பிடுவது தாழ்த்தப்பட்டவர்கள், தாழ்த்துபவர்கள் இரு சாராரையுமே.

விவாதங்கள் எழ ஆரம்பித்திருக்கின்றன. மாறுதல்கள் மெல்ல உருவாகலாம்.

 

கிங் மேக்கரா குயின் மேக்கரா?

எதிர்க் கட்சிகள் அத்தனையும் ஒரே அணியில் கூடினாலும் அ. தி. மு. க மார்ஜினலாய் வெற்றி பெரும் சாத்தியங்களே உள்ளன.

ஆனால் காங்கிரஸோடு கூட்டணி அறிவித்ததன் மூலம் தி. மு. க, பா. ஜ. க வுக்குக் கதவை மூடி விட்டது. பா. ஜ. க மாத்திரம் இல்லை, ஜி. கே. வாசன் அண்ட் கோவுக்கும் பை சொன்னது போலத்தான் அது.

மக்கள் நலக் கூட்டணி என்று ஒன்றை அமைத்ததன் மூலம் தங்களுக்கு தி. மு. க, அ. தி. மு. க இரண்டும் ஒப்புதல் இல்லை என்று வை. கோ அண்ட் திருமா சொல்லி விட்டார்கள். கம்யூனிஸ்டுகளும் டிட்டோ.

பா. ம. க என்ன நினைப்பில் தனித்து நிற்கிறது என்றே தெரியவில்லை. எங்களுக்கு யார் தயவும் தேவை இல்லை என்று சற்று இரக்கம் உண்டாக்கும் தொனியில் அன்புமணி கூவுகிறார். யாருக்காவது அவர்கள் தயவு தேவையா என்பதையும் எண்ணிப் பார்ப்பது நல்லது.

ஒருக்கால் தி. மு. க வோடு கூட்டணியில் வேறு கட்சி இணையலாம் என்றால் அது தே. மு. தி. க மாத்திரமே.

தே. மு. தி. க வுக்குத் தான் எந்தப் பக்கம் போகிறோமோ அந்தப் பக்கம் வெற்றி பெறும் என்கிற நினைப்பு சர்வ உறுதியாக இருப்பது தெரிகிறது. அதனால்தான் கிங்கா, கிங் மேக்கரா என்றெல்லாம் பேச்சு! பிரேமலதாவே பேசிக் கொண்டிருப்பதைக் கேட்டால் அவர்கள் குயின் மேக்கராய்த்தான் ஆக முடியும் என்று தோன்றுகிறது. பண்ருட்டி இல்லாத தே. மு. தி. க வெறும் மூச்சு விடும் உடம்புதான். Brain Dead.

கிங்கா, கிங் மேக்கரா என்கிற மாதிரி பேராசைகள் இருந்தால் கூட்டணி ஏற்படாது.

கூட்டணி ஏற்படா விட்டால் லாபம் தே. மு. தி. கவுக்கு இல்லை. அ. தி. மு. க வுக்குத்தான். நஷ்டம் தி. மு. க வுக்கு இல்லை, மக்களுக்குத்தான்.

அ. தி. மு. க ஏன் மாற வேண்டும் என்று கேட்பவர்களுக்கு என் பதில், இம்முறை அவர்கள் தப்பும் செய்யவில்லை, ரைட்டும் செய்யவில்லை. தப்பு பண்ணால் கூடப் பரவாயில்லை, ஏதாவது செய்கிற அரசாங்கம் வேண்டும் என்று தோன்ற ஆரம்பித்து விட்டது மக்களுக்கு.

 

 

 

நேருவும் மு. க. அழகிரியும்

”என்னடா, வேலை எதுவும் இல்லாம ஓபி அடிச்சிகிட்டு இருக்கே?” என்றபடி உள்ளே வந்தான் என் நண்பன்.

”உம் வாக்கியத்தில் பிழை இருக்கிறது” என்றேன்.

“எதில் குற்றம் கண்டீர் சொல்லிலா அல்லது பொருளிலா” என்றான் மூக்கருகே ஆள்காட்டி விரலை ஆட்டி.

“சொல்லில் குற்றமில்லை, இருந்தாலும் அது மன்னிக்கப்படலாம். பொருளில்தான் குற்றம். வேலை இருந்தாத்தான் ஓபி அடிக்க முடியும்”

“சரி, இப்ப எந்த வேலையை விட்டுட்டு ஓபி அடிக்கறே?”

“ஓபின்னா இது ஒரு மாதிரி இலக்கிய ஓபி. ஒரு புத்தகம் எழுதி முடிச்சிக் குடுத்தாகணும். அதுல ஒரு விஷயம் புரியாததால் காங்கிரஸோட வரலாற்றைப் படிக்க வேண்டியிருந்தது”

“வரலாறு என்ன சொல்லுது?”

“கோஷ்டிகள் காங்கிரஸுக்குப் புதிசில்லை. 1885 இல்  தொடங்கப்பட்ட காங்கிரஸ்  1907ம்  ஆண்டே  இரண்டாகப் பிளந்தது.  பாலகங்காதரத் திலகரின் தீவிர  கோஷ்டி  மற்றும்  கோகலேயின்  மிதவாத  கோஷ்டி  என்று ஆயிற்று”

“அட.. இண்ட்டரஸ்டிங்!”

“அதை விட இண்ட்டரஸ்டிங் ‘வெள்ளையனே வெளியேறு டைப் போராட்டத்தை திலகர் 1907 லேயே ஆரம்பிச்சாச்சு. அவருக்குத் தீவிரவாத முத்திரை குத்தி அனுப்பிட்டு 1942ம் வருஷம் நானே சிந்திச்சேன் போல காந்தி திரும்ப அந்த இயக்கத்தை ஆரம்பிச்சார்!”

“போப்பா.. சும்மா குறை சொல்லாதே 1907 ல காந்தி இந்தியாவிலயே இல்லை. தன்னாப்பிரிக்காவில் இல்ல இருந்தார்?”

”சரி அதை விடு. இன்னொரு சுவாரஸ்ய விஷயமும் உண்டு. 1920 இல் காந்தி தலைமை ஏற்ற போது கிலாஃபத் இயக்கம் என்கிற இஸ்லாமிய அமைப்புடன் கூட்டணி வைத்தது பிடிக்காம மோதிலால் நேரு உள்பட பலரும் வெளியேறி ஸ்வராஜ்ன்னு புதுசா கட்சி ஆரம்பிச்சாங்க”

“அட, நேருவும் மோதிலாலும் வெவ்வேறு அணியா!”

“ஆமாம். நம்ம மு. க., அழகிரி போல”

“அட.. அப்ப அழகிரி ஆதரிக்கிற சைடுதான் பெருசா வருங்கிறியா?”

“நா எதுவும் சொல்லல்லை. நீதான் சொல்றே, ஆளை விடு”

கேஜ்ரிவாலின் எளிமையும் கிடாரங்காய் ஊறுகாயும்

அர்விந்த் கேஜ்ரிவாலுக்கு சின்ன வீடு தேடும் படலம் பற்றிய செய்தியை நண்பர் engalblog  Sriram Balasubramaniam  பகிர்ந்திருந்தார்.
எனக்கு நேர்ந்த அனுபவம் ஒன்று ஞாபகம் வந்தது.
இல்லத்தரசியின் தோழி ஒருவர் வீட்டுக்குப் போயிருந்தோம். ’ராத்திரி உணவுக்கு என்ன பண்ணட்டும்?’ என்று கேட்டார் தோழி.
‘ரசம் சாதம், சுட்ட அப்பளம், தயிர் சாதம், ஊறுகாய்’ அவ்வளவுதான் என்றேன்.
சொல்லி விட்டு என் எளிமையை நானே ஒரு தரம் பெருமிதமாக வியந்து அட…க்கமாகச் சிரித்தேன்.
அக்கடா என்று டிவி பார்த்துக் கொண்டிருந்த கணவரை மூஞ்சூர் மாதிரி சப்தம் செய்து உள்ளே அழைத்தார் தோழி. கரகாட்டக்காரன் செந்தில் கவுண்டமணி காதில் சொல்வது போல ஏதோ சொன்னார். அவர் சட்டையை மாட்டிக் கொண்டு ஸ்கூட்டரைக் கிளப்பிக் கொண்டு ஓடினார்.
முக்கால் மணி நேரம் ஆயிற்று.
ஒரு பையை வேட்டிக்குள் மறைத்து அசட்டுச் சிரிப்புடன் கிச்சனுக்கு எடுத்துப் போனார் அந்தக் கணவர். கொஞ்ச நேரத்தில் தோழி வந்து கையைப் பிசைந்து கொண்டு,
’அப்பளம் கிடைச்சிரிச்சு, ஊறுகாயும் வாங்கியாச்சு. குக்கர் வச்சிடறேன். புழுங்கரிசி சோறு பரவாயில்லையா? தயிர் கிடைக்கல்லைங்க’ என்றார்.
‘அடக் கிரகமே இதுக்கா அவரை விரட்டினீங்க? உங்களுக்கு சிரமம் தரக் கூடாதுன்னுதான் இதெல்லாம் கேட்டேன். வீட்ல என்ன இருக்கு?’ என்றேன்.
‘சப்பாத்தியும் குருமாவும் இருக்குங்க’ என்றார்.

இது அரசியல் கட்டுரை அல்ல!

ஆரம்ப காலத்தில் இருந்தே சரித்திரப் பாடம் எனக்கு ஆவதில்லை.

இதற்கு நிறைய காரணங்கள். முழுக்க முழுக்க டப்பா அடித்தே ஆக வேண்டும் என்பது முதல் காரணம். அடுத்தது சரித்திரத்தில் மூளைக்கு வேலை இல்லை. புரிந்து கொள்ளச் சிரமமாக அதில் எதுவுமில்லை. PV = rT என்று டிரைவ் செய்கிற போது வருகிற வெற்றி உணர்வு சரித்திரத்தில் கிடைக்காது. சில நிகழ்வுகளும் அவை நடந்த காலங்களும்தான் பெரும்பாலும் சரித்திரம் உள்ளடக்கி இருப்பது.

அசோகர் மரங்கள் நட்டதும், அக்பர் ராஜபுத்திரப் பெண்ணை மணந்ததும், சந்திரகுப்தரிடம் அஷ்ட திக்குக் கஜங்களாக எட்டு புலவர்கள் இருந்ததும்(சந்திர குப்தர்தானே?) நம் வாழ்க்கைக்கு என்ன விழுமம் சேர்க்கப் போகிறது? அல்லது நம் சிந்தனையைத்தான் அது தூண்டி விடப் போகிறதா? முதலாவது பானிப்பட் போர் ஒழுங்காக நடக்காததால்தான் இரண்டாவது நடந்ததோ என்கிற மாதிரி சிந்தனைகளைத்தான் சரித்திரம் எனக்குத் தந்திருக்கிறது.

உணர்வுகளுக்கு அப்பாற்பட்ட உண்மைகளும், புள்ளிவிவரங்களுமே சரித்திரத்தின் இலக்கணம் என்பதாக ஒரு பொதுவான நம்பிக்கை உண்டு. உணர்வுகள் சொற்களாகத்தான் வெளிப்பட வேண்டும் என்பதில்லை. விருப்பமில்லாதவைகளை ஒதுக்கி விட்டு எழுதுவது கூட உணர்வின் வெளிப்பாடுதான். சிலரைக் கொடுங்கோல் மன்னர்கள் என்று சரித்திரம் சொல்கிறது. இது போல ஜட்ஜ்மெண்டல் வெளிப்பாடுகளில் நிச்சயம் உணர்வு தெரிகிறது.

சரித்திரத்தில் இடம் பெற்றிருக்கும் நிகழ்வுகளைத் தனியான நிகழ்வுகளாகப் படிப்பது நிகழ்வின் பரிமாணத்தை உணரப் போதுமானதில்லை. அவற்றுக்குக் காரணமான சம்பவங்கள், அவை நிகழ்ந்த பின் அவைகளின் விளைவாக நிகழ்ந்த சம்பவங்கள் இவற்றுடன் சேர்த்துப் படிக்கிற போதுதான் நிஜமான பரிமாணம் கிடைக்கிறது. ஆனால் அவைகளுக்குப் பொதுவாக சரித்திரத்தில் இடமில்லை. அசோகர் பௌத்த மதத்தில் நாட்டம் கொண்டது போன்ற ஒன்றிரண்டு விதி விலக்குகள் உண்டு.

தாஜ்மஹால் என்கிற கட்டிடம் நிறைய உணர்வுகளை உள்ளடக்கியது. அது ஒரு அரசனின் தனிப்பட்ட உணர்வுகளின் வெளிப்பாடு. இதனால் பொதுமக்களுக்கு எந்த நன்மையும் இருந்திருக்கப் போவதில்லை. ஆனால் அதில் அரசாங்கப் பணம் பெருமளவில் பயன்பட்டிருக்கும். இது குறித்த எதிர்மறை விமர்சனங்கள் எதுவுமே அந்தக் காலத்தில் இருந்திருக்காதா?

ஷாஜஹானுக்குப் பிறகு ஆட்சிக்கு வந்த ஔரங்கசீப் குறித்து சரித்திரம் அவ்வளவு உயர்வாகச் சொல்லவில்லை. மக்களின் வரிச்சுமை அதிகமாயிற்று என்று ஒரு கருத்து உண்டு.(அக்பர் நீக்கியிருந்த ஜிஸியா வரியை ஔரங்கசீப் திரும்பக் கொண்டுவந்து கெட்ட பெயர் வாங்கிக் கொண்டார்). தாஜ்மஹால் மாதிரி ஆடம்பர செலவுகளால்தான் அவருக்கு இந்த நிர்ப்பந்தம் வந்ததோ என்னவோ! தாஜ்மஹாலும் ஷாஜஹானும் சரித்திரத்தில் இடம் பெற்று விட்டார்கள். ஷாஜஹான் கலைப் பிரியர் என்று பேரெடுத்து விட்டார். ஔரங்கசீப் கொடுங்கோலன் பட்டம் வாங்கி விட்டார்.

முந்தைய ஆட்சியாளர்கள் கட்டிடம் கட்டிடமாகக் கட்டி ஊதாரித் தனமாக செலவு செய்து தங்கள் பெயரைச் சரித்திரத்தில் இடம் பெறச் செய்வதும், அடுத்து ஆட்சிக்கு வருகிறவர்கள் வருமானத்தை சரி செய்ய வரி விதித்தும் விலை ஏற்றியும் கெட்ட பெயர் தேடிக் கொள்வதும் சரித்திர காலத்தோடு நின்று விட்டனவா என்ன? (சரித்திர ஆசிரியர்கள் போலவே நானும் இங்கே ஒரு செலெக்டிவ் டிலீஷன் செய்திருக்கிறேன். என்னவென்று கண்டுபிடியுங்கள்)

அ.தி.மு.க – தே.மு.தி.க – உள்ளாட்சித் தேர்தல்

உள்ளாட்சித் தேர்தலில் தே.மு.தி.க, அ.இ.அ.தி.மு.க கூட்டணி ஏற்படாதது கலாகாரின் ராஜதந்திரம் என்று எழுதுகிறார்கள்.

அவருக்கே இது ஆச்சரியமாக இருக்கும்.

எங்களைக் கூப்பிடவே இல்லை என்கிறது தே.மு.தி.க. அவர்கள் வரவே இல்லை என்கிறது அ.தி.மு.க. பட்டியலை முன்னாலேயே வெளியிட்டார்கள் என்கிறது தே.மு., திருத்திக் கொள்ளலாம் என்றோம் என்கிறார்கள் அ.தி., எப்படி முடியும் என்கிறது தே.மு.,

கொஞ்சம் கூர்ந்து பார்த்தால் இது வெறும் ஈகோ கிளாஷ்தான். நான் பெரிய கட்சி, சீனியர், ஆளும் கட்சி, நீதான் வந்து கேட்கணும் என்பது ஒரு பக்கத்து ஈகோ. நான் முன்ன மாதிரி இல்லை, இப்ப எதிர்க் கட்சி அந்தஸ்துல இருக்கேன், கொடுத்த இடம் பூரா ஜெயிச்சி காமிச்சேன், கூப்பிட்டாதான் என்ன என்பது இன்னொரு பக்கத்து ஈகோ. வெற்றி இரு சாராருக்கும் ஈகோவை வளர்த்து விட்டிருக்கிறது. எதிர்க்கட்சி மீடியாக்கள் லேசாக ஊதி விட்டார்கள்,

அய்யோ பத்திக்கிச்சு, பத்திக்கிச்சு!

கூட்டணி அவசியம் என்று இரண்டு சாராருமே சீரியஸாக முனையவில்லை என்பதே நிஜம்.

எதிர் அணியிலும் கூட்டணிகள் இல்லை என்றால், கொண்டாட்டம் ஆளும்கட்சிக்குத்தான். யாருடைய பலம் எவ்வளவு என்று தெரிந்து கொள்ள இது ஒரு நல்ல சந்தர்ப்பம்.

இன்னொன்றையும் கவனிக்க வேண்டும். இதர தேர்தல்களில் கட்சிக்குத்தான் ஓட்டு விழும். உள்ளாட்சித் தேர்தல்களில் வேட்பாளரின் இன்ஃப்ளுயன்ஸும் ஒரு ஃபேக்டர். எங்கள் வார்டில் (குரோம்பேட்டை, லக்‌ஷ்மிபுரம்) கட்சி வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்ட மக்கள் அபிமானத்தை தி.மு.க வைச் சேர்ந்த திரு. ஜெயக்குமார் பெற்றிருக்கிறார். என்னைத் தேர்ந்தெடுத்தால் அது செய்வேன், இது செய்வேன் என்று பேசுகிறவர்கள் மத்தியில் ஏகப்பட்ட நன்மைகள் செய்து விட்டு எனக்கு ஓட்டுப் போடுங்க என்று கேட்கிறார்! யாரைப் பார்த்தாலும் நம்மை முந்திக் கொண்டு தானாக ஒரு குழந்தைச் சிரிப்பும், வணக்கமும் தருவார். இது தேர்தலுக்கு மட்டுமில்லை, பொதுவாக எப்போதுமே!

பல இடங்களில், பல கட்சிகளில் இப்படிப்பட்ட நல்ல உள்ளங்கள் இருக்கும். அவர்கள் நிச்சயம் ஜெயிப்பார்கள்!

லோக்பால்-சில சந்தோஷங்கள், சில பயங்கள்

லோக்பால் வெற்றியை எங்கள் தெரு சமூக ஆர்வலர்கள் பாலாஜியும், நாராயணனும் பட்டாஸ் வெடித்து ஃபைனலில் பாகிஸ்தானை இந்தியா ஜெயித்த மாதிரி கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள்.

 நிச்சயமாக இதில் சந்தோஷம் இருக்கிறது.

 ஆனால் இதை வெற்றி என்று வர்ணிப்பதில் எனக்குச் சம்மதமில்லை. இது வெற்றி என்றால் இந்திய அரசியல் சட்டத்துக்குத் தோல்வி என்றாகிறது. அதற்கு அப்புறம் வரலாம்.

 நாட்டின், நாட்டு மக்களின் நன்மையைக் கருதி தைரியமாக, விடாமுயற்சியுடன் குரல் கொடுக்க ஒரு மாமனிதர் கிடைத்திருக்கிறார் என்பது மிகப்பெரிய சந்தோஷம். அவரை ஆஃப் செய்ய அடக்குமுறையிலிருந்து அவதூறுப் பிரச்சாரம் வரை எல்லா முயற்சிகளும் செய்யப்பட்டும் அவை எடுபடாமல் போனது மிக மிகப் பெரிய சந்தோஷம்.

 சாந்திபூஷன் பெயரை ரிப்பேராக்குவதற்கு அரசியல் மாமாக்கள் உதவியுடன் முயற்சி நடந்தது. வெளியிடப்பட்ட ஒலித் தகடு ஜெனூயினானதுதான் என்று லேப்கள் சான்றிதழ் வழங்கும் அளவுக்குப் போனார்கள். அதையும் மக்கள் ஏற்றுக் கொள்ளாதது மிக மிக மிகப் பெரிய சந்தோஷம்.(எதிரிகளுக்கு ஆப்பு வைக்க எலக்ட்ரானிக் மீடியாவை பயன்படுத்தும் ஆபத்தான விஞ்ஞான வளர்ச்சி இந்த நாட்டில் பரவ ஆரம்பித்திருக்கிறது. பொதுநலச் சிந்தை இருக்கும் மின்னணுப் பொறியாளர்கள் இந்த மாதிரி விஷயங்களின் ஜென்யூனிட்டி இன்மையை எவ்விதம் கண்டறியலாம் என்கிற அவேர்னஸைப் பரப்பினால் நல்லது)

 அரசியல்வாதிகளை ஆட்டத்தில் சேர்த்துக் கொள்வதில்லை என்கிற உறுதியைப் பாராட்டியே ஆக வேண்டும். இதனால்தான் லட்சக்கணக்கான மக்களின் நம்பிக்கையைப் பெற முடிந்தது. பள்ளிப் பிள்ளைகள் முதல், ரிடையர் ஆனவர்கள் வரை எல்லாத் தரப்பினரும், நாட்டின் எல்லாப் பகுதிகளிலும் ஆதரவுக் குரல் தந்தது ஒரு சந்தோஷம்.

 ஆங்கில, செய்தித் தொலைக்காட்சிச் சேனல்கள் மிகப்பெரிய சேவை செய்திருக்கின்றன. நாடெங்கும் இந்த நல்ல முயற்சி பரவவும், ஆதரவு பெருகவும் இந்தத் தொலைக் காட்சி நிறுவனங்கள் முக்கிய காரணம். இவைகளின் முயற்சியின்றி இது நடந்திருக்கவே முடியாது என்று கூடச் சொல்வேன். இந்திய சுதந்திரப் போராட்ட காலத்தில் மீடியாக்கள் இவ்வளவு வளர்ச்சி பெற்றிருக்குமேயானால் ஆங்கிலேயர்கள் இருநூறு வருஷம் ஆண்டிருக்க முடியாது என்பது மட்டுமில்லை, இரண்டு வருஷம் கூடத் தாக்குப் பிடித்திருக்க முடியாது என்பது திண்ணம்!

 பிரபல தமிழ் செய்தி சேனல் இதுபற்றி அதிகம் அலட்டிக் கொள்ளாமல் லோக்கல் அரசியலின் குழாயடிச் சண்டைகளை ஒளிபரப்பிக் கொண்டு, படுதோல்விகளின் ஒரத்தில் ஒட்டிக் கொண்டிருக்கும் வெற்றித் துளிகளை வெளிச்சம் பொட்டுக் காட்டிக் கொண்டு, கொலைகாரர்களுக்கு மன்னிப்புக் கோரி உருக்கமாக வேண்டிக்கொண்டு நேரத்தை உபயோகமாகச் செலவு செய்து கொண்டிருந்தது.

 சந்தோஷங்களைச் சொல்லியாகிவிட்டது. இப்போது சில பயங்கள்.

 இவ்வளவு பெரிய ஜனநாயக நாட்டில், ஊழலைக் கட்டுப்படுத்த, இருக்கிற சட்டங்கள் போதாது என்று உலகம் பூரா தமுக்கடித்து அறிவித்த மாதிரி இருக்கிறது. இருக்கிற சட்டங்கள் போல இதுவும் புஸ்வாணமாகிப் போகாது என்பதற்கு என்ன உத்திரவாதம்?

  1. லோக்பால் உறுப்பினர்கள் எல்லாரும் நியமன உறுப்பினர்கள். நியமிக்கும் அதிகாரம் யார் கையில் இருக்கிறதோ அவர்களின் நேர்மையைப் பொறுத்துதான் குழுவின் நேர்மையும் நம்பகத் தன்மையும் அமையும். அந்தப் பொறுப்பில் இருப்பவர்கள் ஆசை காட்டப்பட்டோ, மிரட்டப்பட்டோ, விளம்பரத்துக்கு ஆசைப்பட்டோ தவறான தேர்வுகளைச் செய்ய மாட்டார்கள் என்பது என்ன நிச்சயம்?
  2. உண்ணாவிரதத்துக்கே அரசாங்கத்துடன் பேரத்தில் இறங்கி, பரஸ்பரம் ஒப்புக்கொள்ளப்பட்ட இடத்தில், ஒப்புக்கொள்ளப்பட்ட கால அவகாசம் வரை, ஒப்புக்கொள்ளப்பட்ட எண்ணிக்கைக்கு மட்டும் மக்கள் கூட்டம் சேர்த்து போராடியவர்கள், அரசாங்கத்தின் இதர பேரங்களுக்கும் படிப்படியாக ஒப்புக்கொள்ளமாட்டார்கள் என்பதற்கு என்ன உத்தரவாதம்?
  3. அன்னா ஹஸாரேவும் அவர் ஆதரவாளர்களும், ஆசையினாலோ, மக்களின் வற்புறுத்தலாலோ, அரசியலின் நிலையின்மை காரணமாகவோ, வேறு ஏதாவது நிர்ப்பந்தம் காரணமாகவோ முழுநேர அரசியல்வாதிகளாக மாறமட்டார்கள் என்பதற்கு என்ன உத்திரவாதம்?
  4. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களைவிட, நியமன உறுப்பினர்களுக்கு அதிக அதிகாரம் இருப்பது ஜனநாயகத்துக்கு அச்சுறுத்தலாக, முசோலினி டைப் அரசாங்கம் இங்கே அமைய முன்னோடியாய் அமைந்து விடாதா?

 வழக்கமான Devil’s advocate வேலையைச் செய்துவிட்டேன். Devil க்கு தகுதியான விடை தரும் Angel களின் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.

அநீதியா? காலில் இருப்பதைக் கழற்றிக் கேளுங்கள்

துக்ளக் இதழில் அந்த விளம்பரத்தைப் பார்த்ததுமே ஒரு சுவாரஸ்யம் ஏற்பட்டது.

 

‘இந்தியக் குடிமக்களாகிய நாம்’ என்று ஒரு அமைப்பு தொடங்கப்பட்டிருக்கிறது. ஊழல் மற்றும் கறுப்புப் பணம் பற்றிய ஒரு அவேர்னஸ் நிகழ்ச்சிக்கான விளம்பரம் அது. என்னைக் கவர்ந்தது அந்த டீம் காம்பொசிஷன்தான்.

 

சி.வி.சி யின் முன்னாள் தலைவர் விட்டல் ஐ.ஏ.எஸ், பொருளாதார வல்லுனர் குருமூர்த்தி, சொற்பொழிவாளர் சுகி.சிவம், ஆவணப்பட இயக்குனர்-தயாரிப்பாளர் டாக்டர்.கிருஷ்ணஸ்வாமி என்று ஒரு துல்லியமான கிராஸ் ஃபங்க்‌ஷனல் டீம்!

 

திங்கட்கிழமை மாலை. ஆறரை மணிக்கு ஆரம்பம் என்றாலும் ஆறு பத்துக்கே வாணி மஹாலில் பத்துப் பனிரெண்டு இருக்கைகளே காலியாக இருந்தன. ஆறு இருபதுக்கு எல்லா இருக்கைகளும் நிரம்பி மக்கள் ஓரத்திலும், நுழைவாயிலிலும், நடைபாதையிலும் நிற்க ஆரம்பித்தார்கள். ஆறு இருபத்தைந்திற்கே தொடங்கி விட்டார்கள். எழுத்தாளர் சிவசங்கரியும், ராமகோபாலனும் பார்வையாளர்களாக முன் வரிசையில் வந்து உட்கார்ந்தார்கள். அப்பா வேஷ சங்கரன் உள்ளிட்ட சில துணை நடிகர்கள் எளிய பார்வையாளர்களாக வந்திருந்ததைப் பார்க்க முடிந்தது. வி சப்போர்ட் அன்னா ஹாஸாரே என்று மார்பிலும் முதுகிலும் எழுதி மாட்டிக் கொண்டு வந்த சில இளைஞர்கள்!

 

விட்டல் ஐ.ஏ.எஸ் பேசும் போது சில தமிழ்ப்பதங்களுக்கு சிரமப்பட்டாலும் பெரும்பாலும் தமிழிலேயே பேசினார். புள்ளி விவரங்கள், உணர்வுகளைத் தவிர்த்து விட்டு நேரடியாக ரூட் காஸ் அனாலிஸிஸில் இறங்கி, கரெக்டிவ் ஆக்‌ஷன்களையும் தெரிவித்தார். அவர் சொன்னதில் முக்கியமானது, அரசாங்கத்தில் முக்கியப் பொறுப்புகளில் இருக்கும் முதல்நிலை அதிகாரிகளை ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு இடமாற்றம், சஷ்பென்ஷன் உள்ளிட்ட விஷயங்கள் செய்ய முடியாதபடி ஆர்டினன்ஸ் வரவேண்டும் என்றார். (ஆர்டினன்ஸ் என்பது சட்டத் திருத்தத்தில் இருக்கும் தடங்கல்கள் இல்லாத ஒரு வழிமுறை என்றார்- அந்த ஐ.ஏ.எஸ் ஜார்கன் எனக்குப் புரியவில்லை) அப்படி ஒருவேளை அவர்கள் மேல் நடவடிக்கை எடுக்கும் சூழல் வந்தால் சி.வி.சி யின் ஒப்புதலோடுதான் செய்கிற மாதிரியும் இருக்க வேண்டும் என்றார். சி.வி.சி க்கு தாமஸ் மாதிரி ஆசாமிகள் தலைமை ஏற்பதை எப்படித் தடுப்பது என்பதை தெளிவாக விளக்கவில்லை!

 

குருமூர்த்தி சொன்ன புள்ளி விவரங்களைக் கேட்ட போது அஸ்தியில் ஜுரம் வரும் போலிருந்தது. இன்னும் ஓரிரு நாட்களில் இந்தியப் பிரஜைகள் எல்லாரும் பிச்சை எடுக்க ஆரம்பிக்க வேண்டுமோ என்ற பயம் ஏற்பட்டது. சுவிஸ் பாங்கில் இருக்கும் இந்தியக் கறுப்புப் பணம் வந்தால் இந்தியாவின் பொருளாதார நிலை உலகின் முதல் இடத்திற்கு உயரும் என்று உறுதியாகச் சொன்னார். லஞ்சம் வாங்கவும், கறுப்புப் பணம் சேர்க்கவும் வெட்கமே இல்லாமல் போய் விட்டது என்றார். முன்காலத்தில் ஊழல் அதிகாரிகள் பிச்சைக்காரர்கள் மாதிரி அழுக்காக வருவார்கள், ஆனால் இன்றைக்கு ரைட் ராயலாக மெர்சிடிஸ் வண்டியில் போகிறார்கள் என்றார். ஆட்டோ டிரைவர்களின் நாணயம் பற்றிக் குறிப்பிட்டார். ஐந்து லட்சம் பணத்தை காவல் ஆணையரிடம் ஒப்படைத்த ஆட்டோ டிரைவர் ஒரு நாளைக்கு இரண்டு வேளை கூடச் சாப்பிட முடியாத ஏழைக் குடும்பத்தைத் தாங்கி நிற்பவர் என்றார். இப்படிப்பட்ட ஆட்டிட்ட்யூட் எளிய மக்களிடம் இருப்பதால் விழிப்புணர்ச்சியும், எழுச்சியும் உண்டாக்குவது எளிது என்றார்.

 

சுகி.சிவம் ஒரு வெடிச்சிரிப்பை அரங்கத்தில் உண்டாக்கி கலகலப்பாக ஆரம்பித்தார். ‘திட்டம் போட்டு திருடுற கூட்டம் திருடிக் கொண்டே இருக்குது, அதை சட்டம் போட்டு தடுக்கிற கூட்டம் தடுத்துக் கொண்டே இருக்குது’ என்ற பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் பாட்டைக் குறிப்பிட்டு, அவர் காலத்துல ரெண்டு கூட்டமும் வேறே வேறேயா இருந்திருக்கு என்றார். சிலப்பதிகாரத்தில் கண்ணகி காலில் இருந்த சிலம்பைக் கழற்றி அடித்ததற்கு புது விளக்கம் சொன்னார். அரசாங்கம் அநீதி இழைத்தால் பிரஜைகள் காலில் இருப்பதைக் கழற்றி கேள்வி கேட்கலாம் என்று அதற்கு விளக்கம் சொன்னார்.
சுவாரஸ்யமான, விழிப்புணர்வு தரும் நிகழ்ச்சி.

 

அமைப்பின் செயல்பாடுகளுக்கு உறுப்பினராகவோ, வெளியிலிருந்தோ நம் ஆதரவை நல்குவோம்.

 

இந்தத் தீப்பொறியை ஊதிப் பரப்பி விடுங்கள் என்று கேட்டுக் கொண்டார்கள். ஊதி விட்டுவிட்டேன். இந்தப் பதிவை வலையாசிரியர்கள் எல்லாரும் தாராளமாக அவரவர் வலையில் வெளியிடலாம், வெளியிட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். நம்மால் சில ஆயிரம் பேர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படட்டும்.

 

ஜெய்ஹிந்த்.

மீடியாவுக்கும் தேர்தல் ஆணையத்துக்கும் வெற்றி!

திருமங்கலம் இடைத்தேர்தல் முடிவு வருவதற்கு முன்னாலே ஒரு பிளாக்கர்,

 பொதுத் தேர்தலையே பொங்கல் வைக்கும் ஆளும்கட்சிக்கு

இடைத் தேர்தல் எல்லாம் வடை

 என்று குறள் எழுதியிருந்தார். திருமங்கலம் மாடல் என்று ஒரு ஃப்ரேஸே வழக்குக்கு வந்து விட்டது. இதை மனதில் கொண்டு பார்க்கும் போது தேர்தல் ஆணையத்தின் சாதனை பிரமிப்பூட்டுகிறது. இவ்வளவு அமைதியாகவும், நேர்மையாகவும் தேர்தல் நடந்ததால்தான் தீர்ப்பு தெளிவாக இருக்கிறது.

 ஆகவே நமது முதல் பாராட்டு தேர்தல் ஆணையத்திற்கு!

 அடுத்தது மீடியா.

 2ஜி மேட்சில், ஓப்பனிங் பவுலராக ஒன்றிரண்டு மெய்டன் ஓவர்கள்தான் போட்டார் ஜெயலலிதா. ஆனால் ஆங்கில தனியார் சேனல்கள் அனைத்தும் அதிரடி பவுலிங்கைத் தொடர்ந்து ஏகப்பட்ட விக்கட்டுகளை வீழ்த்தினார்கள், இப்போது மேட்சில் ஜெயித்தும் ஆகிவிட்டது!

 நிச்சயமாக 2ஜி ஒரு டாமினண்ட் ஃபேக்டர்.

 கூடவே அனுகூலச் சத்துருக்கள் இருந்ததால் அஜித், விஜய் இரண்டு பேரையும் முறைத்துக் கொண்டார்கள். சினிமா டாமினன்ஸில் சில்லரை வந்தது, ஆனால் கூடவே ரசிகர்களின் வெறுப்பும் வந்தது.

 புது ஆட்சியாளர்கள், போனவர்களிடம் இரண்டு பாடங்கள் கற்றாக வேண்டும்.

 ஊழல் செய்தால் தூக்கி எறியப்படுவோம் என்பது முதல் பாடம். குடும்ப அரசியலை மக்கள் விரும்பவில்லை என்பது இரண்டாம் பாடம்.

வந்தாச்சு.. தேர்தல் முடிவுகள் வந்தாச்சு!

போன வாரம் ஹெட்லைன்ஸ் டுடே வெளியிட்ட கருத்துக் கணிப்பு முடிவுகளில் திமுக கூட்டணி 120 இடமும் அதிமுக கூட்டணி 105 இடமும் இருந்தன.

 நேற்று சிஎன்என் ஐபிஎன் வெளியிட்ட முடிவுகள் அதற்கு நேர் எதிரிடையாக இருந்தன. ந்யூஸ் எக்ஸ் (சேர்த்துச் சொன்னால் அர்த்தம் வில்லங்கமாக இருக்கும்!) அதிமுக கூட்டணி 172 இடம் பிடித்து ஸ்வீப் செய்யும் என்றார்கள். ஸ்டார் ஹிந்தி சேனல் திமுக வுக்கு தனிப் பெரும்பான்மை என்றது.

 ஆக மொத்தம் வாநிலை அறிக்கை மாதிரி எல்லா மாதிரியும் சொல்லி விட்டார்கள்!

 எல்லாரும் ஒத்துக் கொண்ட இரண்டு விஷயங்கள் காங்கிரஸ் ஒற்றை இலக்கத்தைத் தாண்டாது, திமுக இப்போது இருப்பதை விட மிகக் குறைவான எண்ணிக்கைகளை மட்டுமே பெற முடியும்.

 2ஜி, குடும்ப அரசியல், விலைவாசி உயர்வு, மின்வெட்டு, ஓட்டுக்குப் பணம் இத்தனை ஃபேக்டர்களைத் தாண்டி, தேர்தல் கமிஷனின் அதிரடிகளைத் தாண்டி, விஜயகாந்த்-ஜெயலலிதா என்கிற பலம் வாய்ந்த கூட்டணியைத் தாண்டி,

 திமுக 100 இடம் பிடிக்கிறது என்றால், அது ஏறக்குறைய வெற்றி மாதிரிதான்! நிஜ முடிவுகள் என்ன சொல்லப் போகின்றன என்று பார்ப்போம்.

 கருத்துக் கணிப்புகளில் நிறைய டிரா பேக்குகள் உண்டு.

 எல்லாரும் அவர்கள் ஆசைப் படுவதைச் சொல்வார்களே ஒழிய, ஆய்ந்ததைச் சொல்வதில்லை. இந்த சாம்ப்பிள் அளவு சரியா என்று சிக்ஸ் சிக்மா ஆசாமியான என்னைக் கேட்டால், ம்ம்ஹூம்! இரண்டு கோடிக்கும் அதிகமான வாக்காளர்கள் இருக்கும் இடத்தில் நாலாயிரத்திச் சில்லரை வாக்காளர்களின் கருத்து சரியாக இருக்க ஆயிரத்தில் ஒரு பிராபபிலிட்டிதான் இருக்கிறது. 234 தொகுதிகள் இருக்கும் இடத்தில் 70 தொகுதிகளைக் கேட்டால் முப்பது சதவீதத்துக்கும் குறைவான பிராபபிலிட்டியே இருக்கிறது.

 எல்லா கருத்துக் கணிப்புகளிலும் இப்படியும் இல்லாமல் அப்படியும் இல்லாமல் இருக்கும் கருத்துக்கள் 40% க்கு அதிகமாக இருக்கும். கோமதியின் காதலன் கதையில் வரும் பிரணதார்த்தி ஹர அய்யர் மாதிரி, தங்களுக்குப் பிடித்த முடிவு வரும் வரைக்கும் கணிப்பு செய்து கொண்டே இருக்கிறார்கள். வரும்போது நிறுத்தி விடுகிறார்கள்.

 அம்மா ஜெயிக்கும் சாத்தியக் கூறுகள் அதிகம். ஆனால், ராமதாஸ் இடுப்பில் கட்டிக் கொண்ட பூனை என்றால் கேப்டன் வேட்டியில் புகுந்த ஓணான்.

 எப்படி சமாளிக்கிறார் பார்க்கலாம்!