அறியாமை

அதிகப் படிப்பு = அதிகக் குழப்பம்!

அதிகம் படித்தவர்கள்தான் எளிய விஷயங்களையும் ஜாஸ்தி குழப்பிக் கொள்கிறார்கள்.

இதற்கு நிறைய உதாரணங்கள் சொல்லலாம்.

என் நண்பன் ஒருவன் ஆட்டமோபைலில் போஸ்ட் கிராஜுவேட். கும்மிடிப்பூண்டியிலிருந்து வரும் போது அவன் பைக் நடுவழியில் மக்கர் செய்தது. அவன் கார்புரேட்டரைக் கழற்றி கிளீன் செய்கிறான், பாயிண்ட் செக் செய்கிறான், ஸ்பார்க் பிளக், ஏர் ஃபில்ட்டர்…..

ம்ம்ஹூம்.

மெக்கானிக் ஷாப்புக்குத் தள்ளிக் கொண்டு போனால் அவன் முதலில் பெட்ரோல் ட்யூபைப் பிடுங்கி செக் பண்ணிப் பார்த்துவிட்டு,

“வண்டில பெட்ரோல் இல்லைங்க” என்றானாம்.

காலையில்தானே ஃபுல் டேங்க் போட்டோம், அதெப்படி காலியாகும் என்கிற நினைப்பு. எவனோ பெட்ரோலைத் திருடிக் கொண்டு போயிருக்கிறான்! காலையில்தான் பெட்ரோல் போட்டோம் என்கிற நினைப்பு இருக்கிறவன், காலைவரை நன்றாகத்தானே ஓடியது அதற்குள் வண்டியில் இத்தனை டிஃபெக்ட் வருமா என்று யோசித்திருக்கலாம், ஆனால் எது அந்த யோசனையைத் தடுத்தது?

படிப்பு. நான் ஆட்டமோபைல் போஸ்ட் கிராஜுவேட் என்கிற கர்வம்.

அது போல, தொட்டியிலிருந்து பம்ப் செய்யும் பம்ப் ஒன்று வேலை செய்யவில்லை. ஒரு ஐ. ஐ. டி எஞ்சிநியரைக் கூப்பிட்டுக் காண்பித்ததில் அவர் ஒரு யு ட்யூப் மேனோ மீட்டர் வைத்து செக் செய்வதும் டிசைன் விவரங்கள் பார்ப்பதுமாக இருந்திருக்கிறார். செக்ஷன் ஆப்பரேட்டர் வந்து

“என்ன சார் ஆச்சு?” என்று கேட்கவும்

“Actually the available NPSH is less than the required NPSH. That is why the suction is high and consequently the vapor pressure is also lowering. Naturally water will evaporate to compensate this loss and hence there is vapor lock. We need to relook the NPSH condition…” என்று அவர் வியாக்கியானம் பண்ணிக் கொண்டிருக்க,

ஒரு அன் ஸ்கில்ட் ஆசாமி வந்து கொஞ்சம் சாணியைக் கரைத்து சக்ஷன் பைப்பில் ஊற்றி பிரைம் செய்து ஸ்டார்ட் செய்ததும் பம்ப் இரைக்க ஆரம்பித்து விட்டது.

இன்னொரு அனுபவம் ரொம்ப சுவாரஸ்யமானது. கோத்தாரி கெமிக்கல்ஸில் வேலை செய்யும் போது, குளோரின் நிரப்பும் நிலையத்தில் ஒரு காண்டிராக்ட் ஒர்க்கர் சிகரெட் பிடுத்துக் கொண்டிருந்தார். அந்தப் பக்கம் வந்த எக்ஸிக்யூட்டிவ் டைரக்டர் கே.எஸ்.ரங்கராஜன் கோபமாக அவரைப் பார்த்து,

“எந்தக் காண்டிராக்ட்டுடா நீ? உன் பேரென்ன?” என்று கேட்டார்.

அவன் எதுவும் சொல்லாமல் திரு திருவென்று விழித்தான்.

தெலுங்கு, ஆங்கிலம், ஹிந்தி, மலையாளம் என்று மாறி மாறிக் கேட்டு எதற்கும் பதில் வராததால் அருகிலிருந்த சுந்தர பாஷ்யம் என்ற காண்டிராக்டரிடம்,

“எனக்கு 12 லேங்வேஜ் தெரியும். இவன் எந்த லேங்வேஜ்காரன்?” என்றார் எரிச்சலுடன்.

“தமிழ்தான் சார்” என்றார் சுந்தர பாஷ்யம்.

“பின்ன ஏன் பதில் சொல்லல்லை?” என்றார் மறுபடி எரிச்சலாக.

“அவனுக்கு காது கேக்காதுங்க”

Advertisements

முயலுக்கு மூணே கால்

”இந்த சுந்தரம் இருக்கானே ரொம்பப் பிடிவாதக்காரன். தான் பிடிச்ச முயலுக்கு மூணுகால்ன்னா மூணு கால்தான், கடைசி வரைக்கும் மாத்திக்க மாட்டான். விதண்டாவாதம் பன்ணிகிட்டே இருப்பான்”

“அதெப்படி உனக்குத் தெரியும்?”

 “அனுபவம்தான்”

 “என்ன அனுபவம்?”

 “அவன் கூட எதைப் பத்தியாவது விவாதம் பண்ணியிருக்கியா?”

 “இல்லையே?”

 “நான் பண்ணியிருக்கேன். நேத்து பாரு, முட்டாள்தனம் வேறே, அறியாமை வேறேன்னு சொல்றேன், ஒத்துக்கவே மாட்டேங்கிறான்”

 “ஈஸ் இட்? ரெண்டும் ஒண்ணுதான்னு சொல்றானா?”

 “ஆமாம். அறியாமைங்கிறது முட்டாள்தனத்தோட ஆரம்பமாம். செடிதானே மரமாகுது, செடி வேறே மரம் வேறயான்னு விதண்டவாதம் பண்றான்”

 “அதுக்கு நீ என்ன சொன்னே?”

 “அதெப்படிடா அதுவும் இதுவும் ஒண்ணாகும், மரம்ங்கிறது செடியோட வளர்ச்சிடா, முட்டாள்தனம் அறியாமையின் வளர்ச்சியான்னு கேட்டேன்”

 “அருமை, அதுக்கு அவன் என்ன சொன்னான்?”

 “ஆமாம்டா, அறியாமை இருக்குன்னு தெரிஞ்சி அதைப் போக்கிக்கிட்டா அப்பவே அறியாமை காணாமப் போயிடும். போக்கிக்காம இருக்கிறதும் யாராவது சொன்னாலும் ஒத்துக்காம, புரியாம அப்படியே தொடர்வதும்தானே கடைசியில முட்டாள்தனமா வந்து முடியுதுன்னான்”

 “சரியாத்தான் சொல்லியிருக்கான். நீ என்ன சொன்னே?”

 “அறியாமை இருக்குன்னு அடையாளம் கண்டுகிட்டாலே அடுத்தது அதைப் போக்கிக்கிற முயற்சிதானே. அறியாமை இருக்கிறதே தெரியாமப் போனாத்தான் பிரச்சினைன்னேன்”

 “ம்ம்ம்ம்”

 “அப்படின்னா தான் ஒரு செடின்னு தெரிஞ்சாத்தான் எல்லாச் செடியும் மரமாகுமா? அல்லது தெரிஞ்சாலும் தெரியல்லைன்னாலும் மரமாயிடுமான்னு கேட்டான்”

 “அடேடே.. அப்புறம்?”

 “எல்லாச் செடியும் மரமாத்தான் போகுது. ஆனா எல்லா அறியாமையும் முட்டாள்தனமா ஆகிறதில்லைன்னேன்”

 “சரியாத்தான் இருக்கு. அதுக்கென்ன சொல்றான்?”

 “எல்லாச் செடியும் மரமா ஆகுதுன்னா ஏன் கொத்தமல்லி மரம், புதினா மரம், முளைக்கீரை மரம், நெல்லு மரம், உருளைக் கிழங்கு மரம், முட்டைக் கோஸ் மரம், வெங்காய மரமெல்லாம் இல்லைங்கிறான்”

 “ஹா.. ஹா… ஹா “

 “என்ன ஹா.. ஹா.. ஹா? புடிச்ச முயலுக்கு மூணே கால்ன்னு பேசறான்னு சொல்றேன். வெட்டி விவாதம் பண்றான்னு சொல்றேன். இதுல சிரிப்பு என்ன வேண்டியிருக்கு?”

 “நான் சிரிச்சது வேறே விஷயத்துக்கு”

 “எதுக்கு?”

 “எவ்வளவு நேரம் பேசினே?”

 “ஒரு மணி நேரம்”

 “ஒன் அவர் பேசியும் நீ சொன்னதை அவன் ஒத்துக்கல்லை?”

 “ஆமாம்ப்பா.. அதான் பிடிவாதக்காரங்கிறேன்”

 “அவன் சொன்னதை நீ ஒத்துக்கிட்டியோ?”

 “இல்லையே?”

 “அப்ப நீ பிடிவாதக்காரன் இல்லையா?”