ஆசிரியர்

நரி மேலழகர் உரை

பத்தரை மாற்றுத் தங்கம் என்கிறோமே அது என்ன measure?

 தங்கத்தின் தரத்துக்கு இத்தனை கேரட் என்கிற கணக்கு இருக்கிறது. மாற்று என்கிற சொல் எப்படி வந்திருக்கும்?

 எனக்குத் தமிழாசிரியராக இருந்த பி. சோமசுந்தரம் என்பவர் அதற்கு ஒரு வேடிக்கையான விளக்கம் சொல்வார்.

 “தங்க வேலை செய்யற பத்தர்கள் எல்லாரும் பொதுவா ரொம்ப நல்லவங்கடா. தொழில் தர்மம் இல்லாதவங்க அந்த வேலையைச் செய்ய முடியாது. அவங்க எல்லாருமே ரொம்ப நாணயமானவங்க. அதனாலதான் நம்ம ஊர்ல பத்தர் கடைங்க எல்லாம் நாணயக்காரத் தெருவுல இருக்கு. அப்படிப்பட்ட நாணயமான பத்தரை மாற்றிவிடுகிற அளவு அழகாவும், தகதகப்பாவும் இருக்குமாம், அதனால பத்தரை மாற்றுத் தங்கமாம்” என்பார்.

 “சார், இதுக்கு வேற மாதிரி கூட விளக்கம் சொல்லலாமே” என்றேன்.

 “என்னது சொல்லு?” என்றார்.

 “திருடணும்ன்னு சின்ன சபலம் வந்தாக் கூட அவங்க மனசை மாற்றிடும். அதனாலதான் பத்தரை மாற்றுத் தங்கம்ன்னு சொல்றாங்க. ஏன்னா பத்தரை மாற்றுத் தங்கம்ன்னு அழகானவங்களைச் சொல்லல்லையே, நல்ல குணம் உள்ளவங்களைத்தானே சொல்றோம்”

 இதைக் கேட்டதும் பி.சோ என்னை உற்றுப் பார்த்து விட்டுச் சொன்னது,

 “பரிமேலழகர் மாதிரி நீ ஒரு நரிமேலழகரா வருவேடா”

Advertisements

பெண்கள் பலவீனமானவர்களா?

ஆனந்தத்துக்கு ஒரு மிஸ்ட் கால்

பதிவின் தலைப்பு பெண்ணுரிமை ஆர்வலர்களை முகம் சுளிக்க வைத்திருந்தால், அது வெளிவர இருக்கும் என் புதிய நூலுக்கு வெற்றி!

 அந்தக் கேள்விக்கு பதிலை நான் இங்கே சொல்லப் போவதில்லை. அதற்கான பதில் ‘ஆனந்தத்துக்கு ஒரு மிஸ்ட் கால்’ என்கிற அந்த நூலில் சுவாரஸ்யமாக, விளக்கமாகச் சொல்லப் பட்டிருக்கிறது.

 ஒரு சுய முன்னேற்ற நூலின் உபயோகமான கருத்துக்களும், ஒரு நாவலின் விறுவிறுப்பும் ஒரே புத்தகத்தில் இதுவரை கிடைத்ததில்லை. மூல நூலின் ஆசிரியர் திரு. சுரேஷ் பத்மனாபன் அதை நன்றாகச் செய்திருக்கிறார். நாவலைத் தமிழில் கொண்டு வரும் போது அதை நான் எப்படிச் செய்திருக்கிறேன் என்பதை மூல ஆசிரியர் சுரேஷ் பத்மனாபன் சொன்னார். அது என்ன என்பதைச் சொல்லிக் கொள்ள என் தன்னடக்கம் தடுக்கிறது!

 மேலும், இது ஒரு வரிக்கு வரி மொழிபெயர்ப்பு செய்த நூல் அல்ல. அப்படிச் செய்த நூல்களில் தமிழ்த்தனமே இருக்காது. மூல நூலின் கருத்துக்கள் மட்டும் எடுத்துக் கொள்ளப்பட்டு, தமிழ் புத்தக வாசகர்கள் விரும்பும் விதத்தில் எழுதப்பட்டுள்ளது. வழக்கமான பொழிபெயர்ப்பு நூல்கள் போல டெலிஷாப்பிங் நெட்வொர்க் பேச்சு போலவோ, டப்பிங் செய்த ஆங்கில ஆன்மிக நிகழ்ச்சி போலவோ இருக்கும் என்கிற அச்சம் தேவையில்லை. ஆங்கில மூல நூலைப் படித்தவர்களே இதை ஒரு புது நூலைப் படிப்பது போன்ற சுவாரஸ்யத்துடன் படித்தார்கள் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஒரே மூச்சில் இரண்டு மணி நேரத்தில் படித்து முடித்தார்கள்!

 இவ்வளவு சிறப்பாக இந்த நூல் அமைந்துவிட்டதற்கு முக்கிய காரணம் சுரேஷ் பத்மனாபன் எனக்குத் தந்த அதீத சுதந்திரம்! உன் இஷ்டம் ராஜா, உன் ஸ்டைலில் விளையாடு என்று சொல்லிவிட்டார். பொதுவாக எந்த நூலாசிரியரும் இவ்வளவு சுதந்திரம் தருவதில்லை. அதை மாத்து, இதை மாத்து, இது அப்படி வந்திருக்கணும் என்று உயிரை எடுத்து விடுவார்கள்.

 நான் எழுதி வெளி வருகிற நாலாவது புத்தகம் இது. எல்லாம் ஒரே மாதிரியான புத்தகமாக இல்லாமல் நாலும் நாலு விதமாக இருப்பது சந்தோஷமாக இருக்கிறது. இதற்கு நான் நன்றி சொல்ல வேண்டியது மூல நூலின் ஆசிரியருக்கு மட்டுமில்லை, கிழக்கு பதிப்பகத்துக்கும்தான்!

 சில நாட்களுக்கு முன்னால் ஒரு ஒட்டகக் கதை போட்டு, On Cloud9 என்கிற அந்த ஆங்கில நூலின் தமிழ் வடிவம் வரப் போவதாக எழுதியிருந்தேன்.  (கட்டாததை எப்படி அவிழ்ப்பது?) அதுதான் இந்த நூல்.

 புத்தகத்தின் டைட்டில் பற்றி ஒரு சின்ன விஷயம் :

 பெரிய மனிதர்களுக்கு ஃபோன் பண்ணும் போது அவர்கள் அட்டெண்ட் செய்கிற நிலையில் இருக்கிறார்களா என்பது தெரியாததால் ஒரு மிஸ்ட் கால் கொடுத்து கட் செய்வது பலரின் வழக்கம். கொஞ்ச நேரம் கழித்து அவரே கூப்பிடுவார். ஆனந்தமும் ஒரு பெரிய விஷயம்தானே? அதையும் நாம் தேடிக் கொண்டுதானே இருக்கிறோம்? ஒரு மிஸ்ட் கால் கொடுங்கள், அதுவே உங்களை அழைக்கும்!

 சரி மிஸ்ட் கால் கொடுக்கிறேன், ஆனந்தத்தின் நம்பர் என்ன என்கிறீர்களா?

 அது, அந்தப் புத்தகத்தில் இருக்கிறது!

 புத்தகச் சந்தையில் இந்த நூல் கிடைக்கும். கிழக்கு ஷோ ரூம்களிலும் ஜனவரி-4 க்குப் பிறகு கிடைக்கும்.

 ஆனந்தத்துக்கு ஒரு மிஸ்ட் கால்

 ஆசிரியர் : சுரேஷ் பத்மனாபன், ஷான் சவான்

தமிழில்  : கே.ஜி.ஜவர்லால்

வெளியிடுவோர் : கிழக்கு பதிப்பகம் (http://nhm.in)

New Horizon Media Private Limited
177/103, First Floor, Ambal’s Building, Lloyds Road,
Royapettah.
Chennai – 600014
Tamil Nadu, India

Ph: 91 44 4200 9601

பள்ளிக்கூடப் பிள்ளைகளை தண்டிக்கலாமா?

இந்த வாரம் அனுஹாசனின் கண்ணாடி நிகழ்ச்சியில் சீஸனுக்கேற்ற டாப்பிக்.

பள்ளிக் குழந்தைகளுக்கு கார்பொரல் பனிஷ்மெண்ட் சரியா தப்பா என்பது தலைப்பு. வாத்யார்கள் பேச்சில் நிறைய பாசாங்கு இருந்தது. குழந்தைகள் பேச்சில் பெரிய மனிஷத்தனமும், அதிகப் பிரசங்கித்தனமும் இருந்தது. சொல்லிக் கொடுத்துப் பேசுவது மாதிரி பேசுகிறார்கள் குழந்தைகள்.

மனோதத்துவ நிபுணர் ஒருவரும், ஒரு பள்ளியின் முதல்வரும் வந்திருந்தார்கள். முதல்வர் ரொம்ப பிராக்டிகல். டீச்சர் டிரைனிங் முடிச்சதுமே ‘நான் கடவுள்’ என்கிற மாதிரி ஒரு உணர்வு வாத்யார்களுக்கு வந்து விடுகிறது என்றார். மனோதத்துவம் கொஞ்சம் ஏட்டுச் சுரைக்காய் ரகம். என்ன கேட்டாலும்  போனதரம் விட்ட இடத்திலிருந்து தொடர்கிறார். அவர் படித்ததை எல்லாம் சொன்னாரே ஒழிய அதை டாப்பிக்குடன் இணைக்க ரொம்ப சிரமப்பட்டார்.

பொதுவாக எல்லாரும் பனிஷ்மெண்ட்டுகள் கூடாது என்கிற தொனியிலேயே பேசினார்கள்.

நான் கொஞ்சம் வேறுபடுகிறேன்.

தூக்குதண்டனை கூடாது என்று பேசுகிறவர்களுக்கும் என் பதில் இதேதான். தூக்குதண்டனை கூடாது என்பது ஏற்க முடியாத வாதம். ஃபர்ஸ்ட் டிக்ரீ மர்டருக்கு மட்டும்தான் தூக்குதண்டனை தருகிறார்கள். அதை கூடாது என்று சொல்வது மனிதாபிமானம் என்றால், கொல்லப்பட்டவன் மனிதன் இல்லையா? கொலை செய்வது தப்பு என்று கொன்று சொல்வது இல்லாஜிகல் என்று லாஜிக் பேசுகிறார்கள். யாரிடம் சொல்கிறோமோ அவந்தான் போய்ச் சேர்ந்துவிடப் போகிறானே, அப்புறம் என்ன லாஜிக்? அந்தத் தண்டனையே அவனை விட மற்றவர்களுக்குத்தான். கொலை பண்ணால் தூக்கு என்பது எல்லார் மனசிலும் பதிவாக வேண்டும் என்பதே நோக்கம்.

இல்லை என்று ஆகிவிட்டால், ஹையா… தூக்கு தண்டனை இல்லை என்கிற தைரியத்தில் கொலைகளுக்கான காரணங்கள் ரொம்ப சில்லியாக ஆகிவிடும். லேட் செய்யும் ஹோட்டல் சப்ளையர்கள், ஸ்டாப்பிங்கில் நிறுத்தாத டிரைவர்கள், லாக்டர் வீட்டில் நமக்கு முன்னால் புகுந்தவன், பீர் இல்லை என்று சொன்ன டாஸ்மாக் ஆசாமி என்று தலைகள் உருள ஆரம்பிக்கும். ராத்திரி ஒண்ணுக்குப் போக உட்கார்ந்தால் அங்கே ஒரு தலை இருக்கும்!

பள்ளிக் கூட விஷயமும் அப்படித்தான்.

அடிக்கக் கூடாது என்பது சட்டமும் ஆகி, அது பிள்ளைகளுக்கும் தெரிந்து விட்டால், போச்!

பொறுப்பு தெரிகிற வயசில்லை என்பதால்தான் பயத்தை கேபிடலைஸ் செய்தார்கள்.

என் பள்ளிக் காலத்தில் கண்ணு ரெண்டை மட்டும் விட்டுட்டு மீதியை உரிச்சாலும் சரி, பய ஒழுங்கா படிக்கணும் என்பார்கள் பெற்றோர். ஆனால் இப்போது தலையில் குட்டினாலே பேரண்ட் டீச்சர்ஸ் மீட்டிங்கில் கட்சி சேர்த்துக் கொண்டு கதறக் கதறக் கேள்வி கேட்கிறார்கள்.

இந்த ஜெனெரேஷன் உங்களை மாதிரி இல்லை. இப்ப பிள்ளைகளுக்கு அறிவு நிறைய வளர்ந்திருக்கு என்று ஒரு காரணம் சொல்கிறார்கள். ஜெனெரேஷனுக்கு ஜெனெரேஷன் அறிவோடு, துடுக்கும் வளர்கிறது என்பதை மறந்துவிடக் கூடாது. அந்தக்காலத்தில் ரேடியோ தவிர வேறு டைவர்ஷனே கிடையாது. இன்றைக்கு?

வாத்யார்களில் ஒரு சில சேடிஸ்ட்டுகள் இருக்கலாம். (மொட்டச்சிக்கு வாய்ச்சதெல்லாம்……….. என்று ஒரு அன்பார்லிமெண்ட்ரி பழமொழி உண்டு. அது மாதிரி எனக்கு வாய்த்த எல்லா வாத்யார்களுமே அப்படித்தான்!) அதற்காக இப்படி ஒரு சட்டம் வேண்டாம். அவர்களைத் திருத்தினால் போதும்.

ஒருவேளை சட்டம் போடுவதாக இருந்தால், அது பிள்ளைகளுக்குத் தெரியாமல் கான்ஃபிடென்ஷியல் ஜி.ஓ வாக வருவது உசித்தம். இல்லையென்றால் அவர்களும் சரிப்பட மாட்டார்கள், வாத்யார்களுக்கும் மரியாதை இருக்காது.

இளையராஜா பாட்டும் எஸ்.பி.பி. இசையும்

“அதெப்படி சார் இசையமைப்பாளர்கள் பாடற பாட்டுக்கள் எல்லாம் ஹிட் ஆகுது?”

“ஏன் சார் பொதுவா இசையமைப்பாளர்கள் நல்ல பாடகர்களா இருக்கிறதில்லை?”

இசையைப் பற்றி அரட்டை அடிக்கிற போது அநேகம் பேர் கேட்கிற கேள்விகள் இவை.

பார்க்கிற போது ஒன்றுக்கொன்று முரணாகத் தோன்றினாலும் இரண்டும் ஒன்றுக்கொன்று தொடர்புடையவை. தங்கள் லிமிடேஷன் தெரிந்ததால்தான் நிச்சயம் ஹிட் என்கிற ரகப் பாடல்களை இசையமைப்பாளர்கள் தாங்கள் பாடத் தேர்ந்தெடுக்கிறார்கள்.

ஏன் இசையமைப்பாளர்கள் நல்ல பாடகர்களாக இருப்பதில்லை என்கிற கேள்விக்கு விடை தேடலாமா?

நல்ல பாடகர்களால் நல்ல இசையமைப்பாளர்களாக வர முடியாததையும், நல்ல இசையமைப்பாளர்கள் நல்ல பாடகர்களாக இல்லாதிருப்பதையும் நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம்.

ஒரு தேர்ந்த திருடனுக்கும், திறமையான காவல் அதிகாரிக்கும் attitude மட்டும்தான் வித்யாசம். ஒன்றுக்கொன்று முரண்பட்ட, ஒன்று மற்றதாக மாறத் தகுந்த இது மாதிரி விஷயங்கள் இன்னும் சில இருக்கின்றன.

ஒரு நல்ல மாணவனால் நல்ல ஆசிரியனாக இருக்க முடியாது.

ஏனென்றால் அவனால் ஒரு புரியாதவனின் நிலையிலிருந்து சிந்திக்கவே முடியாது. நீங்களே பள்ளியில் உணர்ந்திருக்கலாம். எம்.எஸ்.சி. படித்த வாத்யார்களை விட செகண்டரி கிரேட் வாத்யார்கள் தெளிவாகவும், சுவாரஸ்யமாகவும் பாடம் சொல்லித் தருவார்கள். ஒரு டல் மாணவன் ஆசிரியரானால் பளிங்கு மாதிரி புரிய வைப்பான்.

ஒரு நல்ல தொழிலாளியால் நல்ல சூபர்வைசர் ஆக முடியாது.

நன்றாக வேலை செய்கிறவன் அவனே எல்லாவற்றையும் செய்ய நினைப்பான். வேலை தெரியாதவன்தான் நன்றாக வேலை வாங்குவான். ஆகவே வேலை தெரியாத தொழிலாளிதான் சூபர்வைசர் ஆக முடியும்.

இது மாதிரிதான் இசையமைப்பாளர் – பாடகர் சங்கதியும்.

இசையமைப்பாளர்கள்    ஒரு    பாட்டை    பெரியதொரு   சிஸ்டமாகப் 
பார்க்கிறார்கள். 
 
மொழி,மெட்டு,பக்க வாத்திய இசை,உணர்வு,ஒலிப்பதிவு மற்றும் அதன் நுணுக்கங்கள் என்று பல்வேறு விஷயங்களில் அவர்களது போகஸ் இருப்பதால் 
பாடகர் என்பது ஒரு மிகச் சிறிய அங்கமாகப் போய் விடுகிறது. பெரும்பாலும் பாடகரின் பங்களிப்பு இல்லாமலே நல்ல இசையை உருவாக்குகிற சாத்தியங்கள் அதிகமாக இருக்கின்றன. ஆகவே அவர் ஒரு பாடலைப் பாட நேர்கிற போது ஆறில் ஒரு பங்கு முக்கியத்துவமே கொடுத்து பாடுகிறார். ஆனாலும் முழுப் பாட்டாகப் பார்க்கிற போது குறைந்த பட்சம் நாற்பது மார்க் வந்து விடுகிறது.
 
பாடகர் இசையமைப்பாளராக ஆகிற போது பாடுவதில் பெரும்பான்மை கவனம் போய் விடுகிறது. ஆகவே இருபது மார்க் வாங்கவே தடுமாறுகிறார்கள்.
 
சரிதானா?